வல்லிக்கண்ணன் கடிதங்கள் 2


      தமிழின் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரோடான நட்பு மிக இனியது. நம் கை பிடித்து அழைத்துப்போவது. இன்று அவர் பருவுடலாய் இல்லை. ஆனால், அவரின் எழுத்துகளும் எண்ணங்களும் நம்மோடு உலவுகின்றன. 

    அவர் எழுதிய கடிதங்கள் தனி வகையிலானவை. புதிதாக எழுத வருவோர்க்கு ஆர்வத்தையும் தொடர் தூண்டலையும் தருபவை. பெரும்பாலும் அஞ்சலட்டையை அழகுபடுத்தியவை அவரின் கடிதங்கள்.  என் போன்ற எத்தனையோ பேருக்கு அவைதான் தமிழில் வாசிக்க, எழுத வழிகாட்டிய பாடப்புத்தகங்கள். 


    அவர் என் உடன் இருப்பது போன்ற உணர்வு கொஞ்ச நாட்களாகவே நிலவுகிறது. எனக்கு அவர் எழுதியவற்றை வாசிக்கும்போது அவை எனக்கு மட்டும் அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனால், அவற்றை வெளியிடத் துணிந்தேன். நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு கடிதமாகப் பதிவிட எண்ணம். என் செயல் தவறெனில் அன்பர்கள் பொறுத்தருள்வாராக. 
----

வல்லிக்கண்ணன்                                                                                  சென்னை 28.5.2001

அன்பு நண்ப, வணக்கம். கார்டுகள் இரண்டு சும்மா கிடக்கின்றனவே என்பதால் எழுதுகிறேன். இன்று     ஒன்றும், நாளை ஒன்றுமாக. ஜூன் 1 முதல் கார்டு விலை  50 பைசா ஆகிறது. 3 ரூபாய் கவர் இனி 4 ரூபாய். இப்படி கட்டணங்கள் உயர்கின்றன. இப்படிப் பலவகைகளிலும் விலைவாசிகள் உயர்கிறபோது, சிற்றிதழ் நடத்துகிறவர்களின் சிரமங்கள் மேலும் அதிகரிக்கும். சிற்றிதழ்கள் நடத்துகிறவர்களில் சிலபேர் வெற்றிகரமான   தொழிலாக அதை நடத்துகிறார்கள். ‘பல்சுவை இதழ்’    என்று கூறிக் கொண்டு, மசாலா பத்திரிகை மாதிரியே தயாரிப்பதோடு, கணிசமான அளவு விளம்பரங்களும் சேகரித்து விடுகிறார்கள். அவ்வப்போது சிலர் கவிதைத் தொகுப்பு வெளியிடுகிறோம்; ஹைக்கூ தொகுப்பு தயாரிக்கிறோம்; கவிதைகளோடு நூறு ரூபாய் பணமும் அனுப்புக என்று அறிவிக்கிறார்கள். தங்கள் கவிதை (ஹைக்கூ) புத்தகத்தில் இடம்பெற்றால் சரிதான் என்று கவிதை(ஹைக்கூ) உடன் பணமும் அனுப்பி வைக்கிறார்கள் இளைஞர்கள் பலர். அன்பு – வ.க,/..

10 comments:

 1. வணக்கம் ஐயா
  புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) எழுதிய அதே கரங்கள் தங்களுக்கு கடிதமும் எழுதியிருப்பதைக் காணும் போது ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. கடிதத்தில் வல்லிக்கண்ணன் ஐயா அவர்களின் எதார்த்தமான இலக்கிய பார்வையைப் பார்க்க முடிந்தது. குறிப்புகள் மற்றும் கடிதங்களின் மூலம் நாம் பெரும் தகவல்கள் ஏராளம், உதாரணம்:அனந்தரங்கர் குறிப்புகள், நேரு கடிதங்கள். இவைகளை எல்லாம் ஆவணப்படுத்துவது என்பது சிறப்பான பணி ஐயா. தொடருங்கள்.

  திரு.அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் 72 என்றும் அவர் குறிப்பிடாத நூல்களும் இருப்பதாகவும் செய்தி அறிந்த போது வியப்பாக தான் இருந்தது. அவர்கள் எழுதிய அளவிற்கு நான் இன்னும் படிக்கக் கூட இல்லை என்ற மனக்குறையும் தவிர்க்க முடியவில்லை. சான்றோர்கள் நட்பு தங்களுக்கு கிடைத்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

  ReplyDelete
 2. திரு. வல்லிக்கண்ணன் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 3. வணக்கம்

  திரு. வல்லிக்கண்ணன் பற்றிய தகவலை அறந்தேன் பல புத்தகம் எழுதிய கையால் தங்களுக்கு கடிதம் எழுதியமை எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 4. வணக்கம் அய்யா
  வல்லிக்கண்ணன் எழுத்துக்களின் ஆளுமை. அவரைப்பற்றி மேலும் அறிய ஆவலுடன் இருக்கின்றேன்நன்றி

  ReplyDelete
 5. அய்யா,
  வணக்கம்.
  தமிழகத்தில் என்றுமே இலக்கிய எழுத்தாளனாய், எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியாது. சுந்தரராமசாமி மறைவு குறித்துச் செய்தியறிந்து கேரளப்பத்திரிக்கைகள், நாகர்கோவிலில் உள்ள பிரபல தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
  யார் அவர்? எனக் கேட்டு ஜவுளிக் கடைக்காரராக அவரை இனம்கண்டது தான் தமிழ்ச்சூழல். எழுத்துலகிற்குத் தன் அரசுப்பணியை உதறிவிட்டு வந்த வல்லிக்கண்ணன் போன்ற படைப்பாளியை, விமர்சகரை தமிழகம் வைத்திருக்கும் இடம் பிழைக்கத் தெரியாதவர் என்றோ, ஏமாளி என்றோதான் இருக்கலாம். அவரது மிகச் சில படைப்புளை மட்டுமே படித்துள்ள எனக்கு நீங்கள் காட்டும் வல்லிக்கண்ணனின் இன்னொரு பரிணாமம் நிச்சயம் அறியப்படவேண்டியதே. ஏனெனில், பழ. அதியமான் அவர்கள் சொன்னதைப்போல,
  வல்லிக்கண்ணனைப் பாராட்டியவர்களின் பட்டியலில் பெரும் இடத்தை அடைத்துக்கொள்பவர்கள், அவருடைய எழுத்தின் ஒரு வரியைக்கூடப் படிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இச்சூழலில், அவரைக்குறித்து நன்கறிந்த, தொடர்பு வைத்துக் கொண்ட
  உங்களைப் போன்ற சிறுபான்மையினரின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய காலக்கட்டாயம் இருக்கிறது.
  நன்றி!

  ReplyDelete
 6. வல்லிக்கண்ணன் அவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். இந்த அஞ்சலட்டைப் பதிவு மூலம் சாதாரண நிகழ்வை மிகவும் யதார்த்தமாக அவர் பதிந்துள்ள விதம் அருமையாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 7. ஆர்வத்துடன் தொடர காத்திருக்கிறேன்.
  வல்லிக்கண்ணன் குறித்து அறிந்துகொள்ள ..
  ஜோசப் விஜூ அய்யாவின் பின்னூட்டத்தில் சுந்தர ராமசாமி குறித்த தகவல் வேதனை..
  ஒரே தளத்தில் சிந்திக்கும் மாற்றங்களை விரும்பும் ஒரு புதிய தலைமுறை படைப்பாளிகள் உங்கள் மூலம் அறிமுகமானது மகிழ்வே..
  உங்களை எனக்கு அறிமுகம் செய்த நிலவன் அண்ணாவிற்கும் நன்றிகள்
  தகவல்கள் தொடரட்டும்..

  http://www.malartharu.org/2014/06/rural-children.html

  ReplyDelete
 8. வ.க. மற்றும் தி.க.சி. இருவரும் நம் காலத்து இலக்கிய-இயக்கத்தின் இரட்டையர்கள் அல்லவா? இருவருமே கடித இலக்கியத்த்தால் புதிய எழுத்தாளர்களை இனம்கண்டு வளர்த்தவர்கள். (கார்டு இலக்கியவாதி என்று சில மேதாவிகளால் கிண்டல் செய்யப் பட்டாலும் அந்தக் கடிதத்தைப் பெற்றவர்களுக்குத்தான் அந்த மகிழ்ச்சியின் பரிமாணம் தெரியும் அவரது கடிதங்களை வெளியிடுவதன்வழியாக அடுத்த தலைமுறைக்கு முந்திய தலைமுறையை அறிமுகப்படுத்தும் அரிய பணியைத் தாங்கள் செய்கிறீர்கள் அன்புகூர்ந்து தொடருங்கள் அய்யா.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தி.க.சி குறித்த தகவல்கள் தெரியும்

   ஆனால் வ.க தெரியாது
   இப்படித் தெரிந்துகொள்வதில் மகிழ்வே

   Delete
  2. வ.க.-வல்லிக்கண்ணன், திகசி-தி.க.சிவசங்கரன் இருவரும் ஒட்டிப்பிறக்காத இரட்டை இலக்கிய வாதிகள். தமிழில் இவர்களுக்கு முன், புபி என்றும் புதுமைப்பித்தனையும், கு.ப.ரா.-எனும் கு.ப.ராஜகோபாலனையும் சொல்வார்கள். இவர்கள்தான் -பாரதிக்குப்பிந்திய நமது இலக்கிய வழிகா்ட்டிகள்

   Delete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்