சுவாசித்தலுக்கான நியாயங்கள்


Meaning to Breathe

அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில்கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா?


ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த
பறவை / விலங்கு இறந்த வேளையில்
நெருங்கிய உறவை இழந்ததுபோல
துக்கப்பட்டதுண்டா?

அறிமுகமில்லாத ஒருவர்
முகவரிக் குழப்பத்தில் திண்டாடிய போது
தெரிந்த வரைக்கும் சரியாக
வழிகாட்டியதுண்டா?


நலிந்தவர் ­மூத்தவர்
நிற்கத் தடுமாற
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை
விட்டுக் கொடுத்ததுண்டா?

விபத்தில் சிக்கி
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக
நெஞ்சு கிடந்து
அடித்துக்கொண்டதுண்டா?

பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா?

அப்படியானால்
வாழ்த்துக்கள்
இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்

14 comments:

  1. மனிதராகவே தொடர்வோம்
    மனிதம் காப்போம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. அய்யா,
    வணக்கம்.
    “யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை!
    யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை!
    யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி!
    யாவர்க்குமாம் பிறர்க்கொரு இன்சொல்லே!
    எனும் திருமந்திரத்தை நினைக்கிறேன் உங்கள் கவிதையூடே..!
    அனைவராலும் ஆகக்கூடியது தான் இவை எல்லாம்! என்னால் ஆகிறதா என்பதுதான் கேள்வி!
    படிக்கும் மனங்களில் நிச்சயம் நானும் மனிதனாய் இருக்கிறேனா எனுங் கேள்வியை நிச்சயம் எழுப்பும் தங்களின் கவிதை!
    பதிவினுக்கு நன்றி!

    ReplyDelete
  3. கவிதை
    மனிதத்தின்
    அளவுகோல்...
    கவிதையின் அசல் எதிர்
    காலதச்சனின் கடவுளாகுதல்
    வலியில் இருக்கும் மனிதனை வலிக்காமல் கடக்கும் மனிதர்களை தச்சன் நீங்கள் கடவுளாகிவிட்டீர் என்பார்..
    உங்கள் கவிதைக்கு நேர் எதிர் அவர் கவிதை.

    ReplyDelete
  4. எளிய, எதார்த்தமான, அடடே நாம் இதையெல்லாம் செய்திருக்கிறோமே என்று மகிழ்ச்சியை ஊட்டும்போதே, ஆகா இதையெல்லாம் நாம் செய்யவில்லையே என்று நினைவூட்டவும் செய்யும் நேர்த்தியான கவிதை. ஒரு நல்ல கவிதை இதைத்தானே செய்யவேண்டும். செயல்தூண்டலைக் கொண்ட இது போலும் கவிதைகளை அவ்வப்போ பதிவேற்ற வேண்டுகிறேன் அய்யா.

    ReplyDelete
  5. அட, இதைச் செய்திருக்கிறோமே என்று மகிழ வைத்து, மேலும் செய்யத் தூண்டும் நேயமிக்க கவிதை..அருமை ஐயா.

    ReplyDelete
  6. அவசர வாழ்க்கையில் மனிதம் தொலைந்துவிடுகிறது.எல்லாமே மறத்துவிடுகிறது.சமயங்கள் மனிதம் தெய்வ நிலைக்கு உயரவேண்டும் என்கிறது. நமக்கு இதயம் இருக்கிறது என்பதையே மூளை மறக்கச் செய்கிறது. இந்நிலையில் மனிதம் மீட்கும் தங்களின் கவிதைப் பதிவு அருமை ஐயா..!

    ReplyDelete
  7. மனிதநேயம் இருந்தால் ஆச்சரிய படும் அளவுக்கு ஆகிவிட்டோம்...ஏனெனில் இதைப் படித்ததும் அடடே நல்ல மனிதநேயர் என்று தோன்றியது. அப்படியானால் இது போன்றவைகளைக் கண்டு விய்க்கும் கால மிது

    ReplyDelete
  8. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும் வாயெல்லாம் செயல்
    இந்தக் குறள் நடைமுறை அறத்தை நமக்குப் போதிக்கின்றது. தங்களின் கவி வரிகள் இக்கருத்தை நளினப்படுத்தி உள்ளன. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. நிறைவு வரிகள் மிக அருமை. சிந்திக்க வைத்த கவிதை

    ReplyDelete
  10. மனிதனை நினைவூட்டியமையறிந்து மகிழ்ச்சி. தற்போதைய தேவை அதுவே. நன்றி.

    ReplyDelete
  11. சிறுவயதில் மட்டுமல்ல...இப்போதும் தாவரங்களிடமும்,விலங்குகளிடமும் பேசும் பழக்கம் உண்டு....ஆடை பிடித்து இழுக்கும் தூதுவளைச்செடியை செல்லமாக கடிந்து கொள்வதும் உண்டு....மனிதராய் மட்டுமல்ல...உயிர்ப்புடன் வாழ உயிரற்றவைகளையும் நேசிக்கும் மனம் வேண்டும்....கவிதை என்னை எனக்கு உணர்த்தியது நன்றி.

    ReplyDelete
  12. மனிதநேயம் விளிம்பில் ஊசலாடுகிறது அய்யா, என்னை போன்ற இளைஞர்கள் மீண்டும் உச்சிசேர்ப்போம் அய்யா... ஸ்ரீ மலையப்பன்

    ReplyDelete
  13. வணக்கம் அய்யா.. உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்