இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா கிடக்கும் டயரை எடுத்து ஓட்டிப்பார்த்து ஆகா நாம் கூட சைக்கிள் விடுகிறோமே என்று மகிழ்ந்து போகிற பிஞ்சுப் படைப்பாளர்கள்தாம் அதிகம். நிஜக் காரைப் பார்த்து பொம்மைக் காரில் வலம்வரத் துறுதுறுக்கும் ஆர்வலர்களே மிகுதி. இங்கு படைப்புக்கான உங்கள் விதிகள் செல்லாது. புதுமைப்பித்தன் சொன்னதுபோல உங்கள் அளவுகோல்களை இங்கு வைத்து அளக்க முடியாது. எங்கள் படைப்புகளில் இருந்து நீங்களே விதிகளைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
கண்கூச வைக்கும் ஒளிச்சேர்க்கைகள் இங்கு இல்லை. படைப்பாளர்கள் தமது அனுபவங்களுக்கு ஏற்றவாறு வெளிச்சப் புள்ளிகள் வைக்க முனைந்திருக்கிறார்கள். பயந்து பயந்து எழுத எத்தனிக்கும் ஒவ்வொருவரையும் நீங்க கவிஞர், நீங்கதான் கவிதாயினி, உங்களுக்கு எழுத வரும், நீங்க தொடர்ந்து எழுதுங்க என உற்சாகமூட்டி சில நல்ல தருணங்களைப் படைப்பாக்க உதவிய களம் இது. இங்கு வந்த பின்பு யாரேனும் தன்னை ஒரு படைப்பாளராக உணர்ந்திருந்தால் அதுவே இதன் வெற்றி. அவர்களுக்கு ஆகா, நமக்குக் கூட எழுத வருகிறதே எனத் தூங்கவிடாத நாட்களைப் பரிசளித்திருந்தால் அதுவே இதன் கொடை.
இங்கு, எறும்பு ஆனாலும் யானை ஆனாலும் அதனதன் கண்களுக்கு அதனதன் அனுபவங்கள் பிரமாண்டம்தான். நிலவைப் பின்தொடர்பவன் என்னும் கவிதையில் மா.செல்லத்துரை கூறுவது போல இவர்களின்,
பிரமாண்டத்தில்
மலைகள்
அசைவற்றுப்போகின்றன..
இரட்டைமுகம் கொண்ட கடவுள்
தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறான்
இரவைத் தேடி.
வீதியின் வேர்களில் ஒருவரும் ஆசிரியருமான கவிஞர் வைகறை தான் மறைந்தபோதும் இன்னும் வீதியின் அடையாளச்சின்னமாய் வாழ்கிறார். அவரது கிளையெல்லாம் இசை மீட்டுகின்றன. சமூகத்தில் அவலங்கள் அரங்கேறினாலும்,
புன்னகைக்க முடிகிறது
புத்தரால்
விழி மூடியிருப்பதால்
என்னும் அவர் காட்டும் காரணம் நம் கண்களைத் திறக்கிறது.
நனைய மறுக்கும்
நம்மைப் பார்த்து
அழும் குடை
என வறுமையின் பொத்தல்களைக் கவிதையால் அடைக்கும்போதும்
கோடைமரம்
கொஞ்சம் இலை
நிறைய வானம்
என மரத்தின் இழப்பை ஆகாய வெளியால் ஈடு செய்யும்போதும் கூட்டுப்புழுக்கள் கங்கை கொண்டானுக்குப் பின்- ஆத்மாநாமுக்குப் பின்- நல்ல கவிதை வாசிக்க வேண்டும் என்பதற்காக, மரணம் வைகறையையும் அழைத்துக்கொண்டு விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
எலிப்பொறியில் சிக்கிய எலி சாக்கிற்குள் திறந்துவிடப்படுகிறது. இக்காட்சியைப் பதிவுசெய்யும் வைகறை,
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள்!
என்கிறார். எது மரணம், எது வாழ்க்கை எனத் எரியாமல் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருக்கும் மனித எலிகளுக்கான குறியீடு இதைவிட வேறென்ன இருக்க முடியும்?
மாலதியின் பள்ளிப்பறவைகள் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்; விருட்சமாக இருக்கும் விதைகள்; நம்மை சீண்டிப் பார்க்கும் சிற்றுளிகள். அவரது கவிதைகளும் அப்படித்தான். சின்னச் சின்ன மின்னல்களால் பாதி இரவிலும் புரையேறுகிறது பவல்ராஜுக்கு. அதனால் தன்னை நினைப்பவளைப் பேசாமல் தூங்கச் சொல்கிறார். மேலும் அவர்,
பேரம் படிந்து
வாங்கப்படுகிறது
தஞ்சாவூர் பொம்மைகள்
எனப் பணத்திற்காக, சபலத்திற்காக பொம்மைகள் ஆகிவிட்டவர்களையும் பொம்மைகள் வாங்குபவர்களையும் சாடுகிறார்.
அமிர்தா வரைந்துள்ள எதிர்வீட்டு அக்காவின் கோலத்தில் மீன்களை வரையும்போது கடலாய்த் தோன்றும்; மான் கோலம் போட்டால் காடாய் மாறும். அவள்,
வாசலில் ஒருநாள்
சூரியனை வரைந்து
வெயிலில்
காயவிட்டிருந்தாள்.
அப்படிப்பட்ட கோலங்களை வரைந்த அக்கா தன் ரசிகனை இழந்துவிட்டபின்பு வெறுமையாய்க் கிடந்தது வாசல். அதில் இன்று ஒற்றை நட்சத்திரம் வந்து அவளை மீண்டும் கோலமிட வைத்திருக்கிறது. அதன் சூட்சுமம் அமிர்தாவுக்குக் கவிதையாய்ப் பிடிபட்டிருக்கிறது.
தனி எழுத்துக்குச் சொந்தக்காரர் ஸ்டாலின் சரவணன். அவரது நின்று கொல்லும் தெய்வ மகள் ஆணின் குருதி, பற்கள், தோல், குடல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றைத் தன் போக்கில் பயன்படுத்திக் கொண்டாள்.
இதயத்தை மட்டும்
நன்கு துவைத்து
அடுப்பங்கரையில்
எடுப்புத் துணியாக்கிப்
பயன்படுத்துகிறாள்
மூளையைப்
பழைய காகிதக் கிழிசல்களுடன்
வெந்தயம் கலந்து
ஊறவைத்துக் கூழாக்கி
குப்பைக் கூடைகள் செய்தாள்
இந்தப் பகை வரலாறு அறியாத நவீன உடையணிந்த ஒருத்தி வந்து நேரம் கேட்கும்போது,
கைக்கடிகாரத்தில் ஏறி ஓடும்
அவன் பிடரியைக் காலம்
உலுக்கத் தொடங்கிற்று.
நாமெல்லாம் ஒளிரும் இந்தியாவில் வாழ்பவர்கள்; வெறும் பளபளப்புக் காட்டுவதோடு சரி என்பதை இந்துமதி,
பக்கத்து நாடெல்லாம் ஒலிம்பிக்ல பதக்கங்கள் பலப்பல..
நாம ஒன்னு வாங்கறதுக்கே சுத்துது தல..
என நோய்முதல் நாடிச் சொல்கிறார்.
“சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு கலைஞனின் இறப்பின் இடைவெளி நிரப்பவியலாப் பெருவெளி. அவரின் பணி அளப்பரியது. இனி எந்தக் குரல்நாணும் ஆத்தாவின் சேலையை அவரைப் போல் நெய்ய முடியுமா என்பது ஐயமே.. ஒரு சமூகக் கலைஞனுக்கு, ரௌத்திரம் பழகிய புரட்சியாளனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” -
இது அண்மையில் காலமான மக்கள் கலைஞன் கரிசல் திருவுடையானுக்கு குருநாதசுந்தரம் எழுதிய இரங்கல் உரை. இது முற்றிலும் இவருக்கும் பொருந்தும்.
2016 செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள் குறித்த கவிதையில் தன் ஆசிரியப் பணியின் நோக்கம் வழிவிலகிச் செல்வதை ஆதங்கத்துடன் இப்படிப் பதிவு செய்துள்ளார்.
உனது மீசை வைக்கும்
எனது எத்தனிப்புகள் மட்டும்..
தினந்தோறும் தோற்றே போகிறது.
.......
உடற்கல்விப் பாடவேளையில்
இலக்கணம் கற்பிக்கும் அவசரத்தில்
உன் ஓடி விளையாடும் பாப்பாக்களை
ஒளித்து வைத்தேன்..
மைதானத்தை விட
மதிப்பெண்கள் தானே முக்கியம் இங்கு !
என எழுதிய அவர் சிறந்த சிறுகதையாசிரியர்; சிந்தனையாளர். தனது கவிதையில் அவர் பாரதிக்குச் சொன்னார்:
நினைவுகளில் என்றும்
உயிர்த்திருக்கிறாய்.
என் நொடிகளில் என்றும்
பயணிக்கிறாய்..
என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு நன்றி !!
இதையே நாமும் அவரை நினைத்துச் சொல்லவேண்டி வந்தது சோகம்.
பழைய கிழிந்த பத்துரூபாய்த் தாளில்
காதலின் காதலி பெயர்கள்,
செல்லுபடியாகியிருக்குமா அந்தக் காதல்?
எனக் கிழிந்த காதல்களில் சந்தேகம் கிளப்பும் சுகுமாறன் சின்னையா,
மீன்பிடித்த குளம்
தான் வெடித்தது கண்டு
கொக்கின் நெஞ்சில் மீனின் முள்
எனக் காட்சிப்படுத்தும்போது இயற்கை நம் நெஞ்சில் குத்துவதை உணரமுடிகிறது.
வீதியின் நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் கவிஞர் கீதா, மீரா செல்வக்குமார் ஆகியோரும் குறிப்பிடத்தக்க படைப்பாளர்கள்.
இம்மலரில் கவிதைகளைப் போலவே சில சிறுகதைகளும் முத்திரை பதிக்கக்கூடியவை. அகவை ஐம்பது சிறுகதை கிராமத்தை விட்டுப் போக முடியாத முதியவளின் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறது. மையக் கரு அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும் காலத்திற்கேற்ப அலைபேசி வழியே ஓரங்க நாடகமாய் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சோலையப்பன். சார்வாகனின் கதை ஒன்றில் உயிரற்ற யானை பொம்மையை உயிருடையதாகக் கருதி விளையாடும் குழந்தை தன் தந்தையையும் அப்படியே கருத வைக்கும். அதுபோல பொம்மை போனை வைத்து யதார்த்த உலகத்தை மறக்க வைக்கும் இக்கதை நமக்கு நடக்கவிருக்கும் நாடகம் என்னவோ என நமது முதுமையை நோக்கி பயம் காட்டுகிறது.
சோலையப்பன் கதையில் வரும் பாட்டியைப் போலவே சொந்த ஊரை விட்டுப் போகாத கவிமதி சோலச்சியின் மோகன் வாத்தியார் கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்ட அவலத்தின் சாட்சியாக நிற்கிறார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியரான அவர் தன் மாணவர்களிடம், "இந்த அதிகாரத்தைப் பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். அதிகாரம் தங்கள் கைகளுக்கு கிடைத்துவிட்டால் இந்த மக்களுக்கு எவ்ளோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யிங்கய்யா..."என்று அடிக்கடி சொல்லி வந்தார்.
தன் மாணவப் பிள்ளைகளின் கைகளுக்கு அதிகாரம் வந்தபோது மகிழ்ந்த அவர் ஒரு திருமண நிகழ்வில் கண்ட சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்தார்.
"எம்புள்ளைங்க தப்ப திருத்திக்கிட்டு மாத்திக் காட்டுவீங்கனு நம்புறய்யா." கனத்த குரலோடு, இருக்கையில் அமரச் சென்றதுவரை நினைத்துப் பார்த்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு அந்த மாலை வேளையில் வீதியைப் பார்த்தார்.
இக்கதையில் லட்சியவாதக் கதைகளுக்கே உரிய சுற்றிவளைத்தல்கள் இருந்தாலும் லட்சியங்களுக்கு அழிவில்லை; அவை சொல்லப்படத்தான் வேண்டும்.
பரிசோதனைக் கதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் அண்டனூர் சுரா. அவர் பாரதியின் கவிதைகளைச் சிறுகதையாக மாற்றிப் பார்த்திருக்கிறார். கண்ணம்மாவைத் தேடும் சுப்பையாக்களுக்கு இது இனிக்கக் கூடும்.
குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன என்பதைத் தன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் ஒளி ஓவியர் புதுகை செல்வா. குழந்தைகளின் உளவியலைச் சுற்றியே வட்டமிடும் அவரது சிந்தனைகள் கவனிப்பிற்கு உரியவை. அதேபோல பெண்குழந்தைகளை வழிநடத்துவதில் அம்மாக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் திவ்யபாரதி தங்கப்பாவின் கட்டுரை குறிப்பிடத்தக்கது.
அரசியலற்ற தலைமையும் கூடப் போராட்டத்தை வழிநடத்த முடியும் என்பதைப் பதிவு செய்திருக்கிறது ரோஸ்லின் கட்டுரை. இவர் மறைந்த வைகறையின் துணைவியார். எந்த நிகழ்வும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்கிறார். நமது ஜனநாயகத்தில் எங்கோ, ஏதோ குறைபாடு உள்ளது. அதை நீக்க வேண்டிய பெரும் பொறுப்பும் நம் கையில்தான் உள்ளது என்கிறார் அவர்.
பிரேம்சந்த்தின் ஆளுமை உள்ளிட்ட வீதியில் வலம் வந்த படைப்பாளர்கள், படைப்புகள் தனித்துச் சொல்ல வேண்டியவை. முதுமைக்குப் பாடம் போதிக்கும் இளைஞர் பொன்.க. அய்யா, சிறந்த திரைப்படங்கள், பிறமொழிப் படைப்புகளின் விமர்சகரும் படைப்பாளருமான கஸ்தூரிரங்கன், எதையும் தனக்கே உரிய பாணியில் விரியும் காட்சியாய் விமர்சிக்கவும் மாற்றுகளை முன்மொழியவும் தயங்காத ராசி. பன்னீர்செல்வன் முதலியோரின் படைப்புகள் வீதிக்கு வலு சேர்த்தவை. முகநூல், வலைப்பக்கம் முதலான சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடப்பட்ட விமர்சனம் குறித்த விமர்சனங்களும் இம்மலரில் உள்ளன. அவையெல்லாம் வாசித்துக் கொள்ளத்தக்கவை.
வீதிக்கு வந்தபின் தன்னை ஒரு விமர்சகராய் அடையாளம் கண்டிருக்கும் ஸ்ரீ மலையப்பன், எள்ளல் தொனிக்க மாற்றுச் சிந்தனைகளுடன் வாசகனைக் கட்டிப்போடும் வசீகரம் தெரிந்த கவிஞர் மீரா செல்வக்குமார், எதையும் தீவிரத் தன்மையுடன் அணுகுதல், தேர்ந்த திட்டமிடல், ஆவணப்படுத்துதல், அனைவரையும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் சிறந்த கவிஞர் கீதா போன்ற வீதியின் விழுதுகள் இக்களத்தை இன்னும் செப்பனிடக் காத்திருக்கிறார்கள்.
மெரினா எழுச்சிபோல இங்குத் தலைவர்கள் இல்லை; தொண்டர்கள் இல்லை; அனைவரும் சகபயணிகளே. அத்தகு சகபயணிகள் அனைவரது படைப்புகளும் இம்மலரில் இடம்பெற வேண்டும் என்பதே மலர்க் குழுவினரின் பேராவல். இருப்பினும் பலரால் தங்களது பணிப்பளு, இடமாற்றம் போன்றவை காரணமாக அனுப்பித் தர இயலவில்லை. அதனால் சில தேர்ந்த படைப்புகள் விடுபட்டுப் போயின. இது மலருக்கான இழப்பு மட்டுமல்ல; வீதிக்கான இழப்பும் கூட.
எப்போதும் என்னை முன்னிலைப்படுத்தி, தொடரோட்டத்தின் கடைசி ஆளாய் மூச்செடுத்துத் தன் சகாக்களை வெற்றிபெற வைக்கும் - பலதிறப்பட்டவர்களையும் அரவணைப்பதில் என்னை எப்போதும் வியப்புக்குள்ளாக்கும் - கவிஞர் முத்துநிலவன், சோர்ந்து கிடக்கும் குருதிக்கு உணர்வுக் கொடையளிக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி போன்ற முன்னத்தி ஏர்களின் விடாப்பிடியான கைகோப்பும் வழிகாட்டலுமே 50ஆவது நிகழ்வுக்கு வீதியை அழைத்துவந்திருக்கிறது.
வீதி ஐம்பதின் இம்மலர் தற்போது உங்கள் கைகளில். இது குறைந்தபட்சம் நூறை நோக்கிப் பயணிக்கும் என நம்பலாம். அந்த நம்பிக்கையை எம் இளவல்கள் நிறைவேற்றித் தருவார்கள். நூறைத்தாண்டியும் பயணிக்க வேண்டும் என்னும் பேராசை உங்களைப் போலவே எனக்கும் உண்டு. அது வீதிக்கு வந்து கைகோக்கும் உங்களின் பிடிவாத்தில் உள்ளது; உங்களுக்கு அடுத்துவரும் இளம் படைப்பாளர்களைப் போட்டியாளர்களாகப் பார்க்காமல் அவர்களைக் கைதூக்கிவிடும் பண்பாட்டுத் தொடர்ச்சியில் உள்ளது. வளர்வோம்; தொடர்வோம். வாழ்த்துகள்.
உங்கள் வீதியில் ஒருவன்
நா. அருள்முருகன்
கவி வரிகள் அனைத்தும் அருமை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்...
வீதி பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி. முடிந்தால் வீதி மின்னஞ்சல் பகிரவும்.
ReplyDeleteஅருமை ஐயா...வாழ்த்துகள்..
ReplyDeleteதொடர்க
ReplyDeleteபணிச்சுமை அறிவோம்
இருப்பினும் தங்களுக்கா சொல்ல வேண்டும் நேர நிர்வாகத்தை