நீலகேசி
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும்
பௌத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு
மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப்போகின்றன. நீலகேசி
நூலின் சிறப்பு, அதன் பதிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்தான செய்திகள் மிகக் குறைவாகவே
உள்ளன. கிடைத்திருக்கும் தருக்க நூல்களில் சிறந்த ஒன்றான நீலகேசி சமயதத்துவ ஆய்விலும்
சொற்போரிலும் இறங்கிக் களம் கண்டது பெரிதும் அறியப்படாமலேயே போயிருக்கிறது.
நூல்
இங்ஙனம் இருக்க, இந்நூலின் முதல் பதிப்பாசிரியரான சக்கரவர்த்தி நயினாரின் - கடும் உழைப்பால்
விளைந்த - ஆங்கிலத்தில் அமைந்த அதன் ஆய்வு முன்னுரையும் தமிழ் உலகத்தால் அறியப்படவில்லை.
அதற்கு அப்பாத்துரைப்பிள்ளை தமிழாக்கம் தந்துள்ளார். அவைதிகத்தின் மீதான வைதிகத்தின்
தற்குறிப்பேற்றமாக அமைந்த அப்பாத்துரையார் செய்த தமிழாக்கத்தின் சாய்மானம் குறித்து
ஆய்வதே இக்கட்டுரை.
நீலகேசி
பதிப்பும் உரையும்
நீலகேசியை
ஓலைச் சுவடிகளில் இருந்து சமய திவாகர வாமன முனிவர் உரையுடன் முதன் முதலில் பதிப்பித்தவர்
கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் திரு. அ. சக்கரவர்த்தி
நயினார் ஆவார். 1936இல் வெளிவந்த இப்பதிப்பை 1984இல் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம்
நிழல்படப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
1964இல்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெருமழைப் புலவர் திரு பொ.வே. சோமசுந்தரனாரை புதிய
உரை எழுதச் செய்து நீலகேசி விளக்கவுரை என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது. ஆக, பதிப்பு
என்னும் வகையில் ஒன்றும் விளக்கவுரை என்னும் வகையில் ஒன்றுமாக இரண்டுமுறை நீலகேசி வெளிவந்துள்ளது.
நீலகேசி உரைநூல்
சக்கரவர்த்தி
நயினார் தம் பதிப்பில் திட்பநுட்பமுடைய சிறந்த ஆய்வு முன்னுரை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
அதைமட்டும் எடுத்துக்கொண்டு பன்மொழிப் புலவர் திரு கா. அப்பாத்துரைப்பிள்ளை தமிழாக்கம்
செய்திருக்கிறார். அதை நீலகேசி(உரைநூல்) என்னும் தலைப்பில் பூம்புகார்ப் பதிப்பகம்
மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.
தமிழாக்க
முயற்சி
பிற
மொழிகளில் இருப்பனவற்றைத் தமிழாக்கம் செய்து தமிழுக்கு வளம் சேர்க்க உதவும் அப்பாத்துரையாரின்
முயற்சி பாராட்டுக்குரியது. அவ்வகையில் நீலகேசியின் ஆங்கில முன்னுரையை வாசிக்கத் தடுமாறும்
தமிழ் வாசகர்களுக்கு இத்தமிழாக்கம் ஓரளவு பயன்படக் கூடியது. அதை வெளியிட்ட, வெளியிட்டுள்ள
பதிப்பகங்கள் செய்யவேண்டிய பணியையே செய்திருக்கின்றன. ஆனால் அப்பாத்துரையார் மற்றும்
பதிப்பகங்களின் பணி நிறைவானதுதானா என்பதைச் சிந்திக்கும்போது சிறிதும் தயக்கமில்லாமல்
ஆம் என்று துணிவுடன் ஒப்புக்கொள்ள முடிவதில்லை.
பதிப்புரை
பூம்புகார்ப்
பதிப்பகம் வெளியிட்டுள்ள நீலகேசி(உரைநூல்)யில் முதற்பதிப்பு செப்டம்பர் 2003 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பாத்துரையாரின் தமிழாக்கத்தில் பாரிநிலையம் ‘நீலகேசி(ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்)
அ. சக்கரவர்த்திநயினார் (மொழிபெயர்ப்பு) அப்பாதுரை’ என ஏற்கனவே இந்நூலை வெளியிட்டிருக்கிறது.
ஆனால் அதுபற்றிய எந்தத் தகவலும் பூம்புகார்ப் பதிப்பகத்தின் வெளியீட்டில் இல்லை. அப்பாத்துரையார்
தமிழாக்கத்தை பூம்புகார்ப் பதிப்பகம்தான் முதன்முதலில் வெளியிட்டுள்ளது போன்ற தோற்றத்தை
ஏற்படுத்துகிறது இது.
இதன்
பதிப்புரையில் மூலநூலின் பதிப்பாசிரியர் சக்கரவர்த்தி நயினார் பற்றியும் அவரது முன்னுரை
பற்றியும் குறிப்பிடப்படுகிறது. இது ஒருபுறம்
இருக்க, நூலின் முதல் பக்கத்தில் ‘ஆங்கில உரை பேராசிரியர் திரு. A. சக்கரவர்த்தி M.A., தமிழாக்கம்
பன்மொழிப்புலவர் திரு. கா. அப்பாத்துரைப் பிள்ளை
M.A.,L.T.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்தவுடன் நீலகேசிக்குச் சக்கரவர்த்தி
நயினார் ஏதோ ஆங்கிலத்தில் பதவுரை பொழிப்புரை எழுதியிருப்பது போலவும் இங்கு அது தமிழாக்கம்
செய்து தரப்படுவது போலவுமான தோற்றம் ஏற்படுகிறது.
ஆனால்,
சக்கரவர்த்தி நயினார் ஆங்கிலத்தில் முன்னுரை மட்டுமே எழுதியுள்ளார்; அதை அப்பாத்துரைப்
பிள்ளை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை. எனவே, இதை ‘உரைநூல்’ என்பதே தவறானது.
மேலும் சக்கரவர்த்தியுடன் நயினாரைக் காணவில்லை; ஆனால் அட்டையிலுள்ள வெறும் அப்பாத்துரை
மட்டும் உள்ளே பிள்ளை என்னும் பின்னொட்டுப் பெறுகிறார்.
‘நீலகேசியின்
ஆசிரியரைப் பற்றி உண்மையாகவே நாம் யாதொன்றும் அறியக்கூடியதாக இல்லை. நூலில் அவரது பெயர்,
இடம், காலம் பற்றி யாதொரு குறிப்பும் இல்லை. இவை குறித்து இதன் உரையாசிரியரும் முழுமையாக
மௌனம் சாதிக்கிறார் ’. இது நீலகேசியின் ஆசிரியர் பற்றி நூலாசிரியர் என்னும் பகுதியில்(மூல
முன்னுரை ப.12) சக்கரவர்த்தி நயினார் தரும்
தகவல். ஆனால், அப்பாத்துரையார் மொழிபெயர்ப்பில் வந்துள்ள நீலகேசி(உரைநூல்) பதிப்புரையின்
முதல் பத்தியில்(ப.3) ‘இது …சமய திவாகர வாமன முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பெற்றது’
எனத் தடித்த எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே
நூலின் நூலாசிரியர் பற்றிய பகுதியில்(ப.12) ‘நீலகேசியின் நூலாசிரியரைப் பற்றி நாம்
எதுவுமே அறியக் கூடாத நிலையில் இருக்கிறோம்.
ஆசிரியர் பெயர், இடம், காலம் எதுவும் தெரியவில்லை. உரையாசிரியரும் இவைபற்றி எதுவும்
குறிப்பிடவில்லை’ என அப்பாத்துரையார் சரியான தகவலைத் தெரிவிக்கிறார். நீலகேசியின் உரையாசிரியராகிய
சமய திவாகர வாமன முனிவரை நூலாசிரியர் எனப் பூம்புகார்ப் பதிப்பகம் பிழையாகக் குறிப்பிட்டுள்ளது.
விடுபடல்கள்
மூல
நூலின் ஆங்கில முன்னுரையை அப்பாத்துரையார் தமிழில் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்க
ஒன்றுதான். என்றாலும் அவரது தமிழாக்கத்தில் காணப்படும் விடுபடல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக
உள்ளன. பன்மொழிப் புலவரான அப்பாத்துரையார், மொழிபெயர்ப்பில் நேர்மையையும் நம்பகத்தன்மையையும்
வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறியாதவர் அல்லர். அப்படியிருக்க, நீலகேசி ஆய்வு முன்னுரையில்
உள்ள செய்திகள் சிலவற்றை மறைக்கவும் சிலவற்றைத் தொடாமலேயே விட்டுவிடவும் அவரைத் தூண்டிய
அல்லது நெருக்கடிக்கு உள்ளாக்கிய காரணி எது? மூல முன்னுரையின் தமிழாக்கத்தில் அப்பாத்துரையார்
செய்துள்ள பணியைப் பற்றி ஆய்வு செய்தால் இதற்கு
விடை கிடைக்கும்.
தலைப்புப் பொருத்தம் தொடர்பானவை
நீலகேசியின் தலைப்புப் பொருத்தம் என்பதை அப்பாத்துரையார்
நூன்முகம் எனத் தமிழாக்கம் செய்துள்ளார். இப்பகுதியில் அவரால் விடப்பட்ட செய்திகள்
வருமாறு: ‘சிவஞான சித்தியார் என்னும் சைவதத்துவ நூலில் அதற்கு உரை வரைந்தவர்களுள் ஒருவரான
ஞானப்பிரகாசர் நீலகேசி மற்றும் அதன் மூல உரையிலிருந்து ஏராளமான மேற்கோள்களைத் தருகிறார்.
மேற்கோள்களின் இறுதியில் …. இவ்வாறு நீலகேசி கூறுகிறது, ….. இவ்வாறு நீலகேசியில் காணப்படுகிறது என்றே எப்போதும்
முடிக்கிறார்’.
மூல
முன்னுரையில்(ப.3) உள்ள இச்செய்தி அப்பாத்துரையார் மொழிபெயர்ப்பில் இல்லை.
சிவஞான
சித்தியார் பரபக்கம் நிகண்ட வாதத்தின் 4, 5, 8 ஆகிய செய்யுள்களுக்கு உரைவரையும் பகுதியில்
ஞானப்பிரகாசர் நீலகேசியின் 454, 288, 188,
199 ஆகிய நான்கு செய்யுள்களை எடுத்தாண்டு உரைவரைவதாக நீலகேசி முன்னுரை கூறுகிறது(பக்.
440, 441, 444, 445). இதை அப்பாத்துரையார் தவிர்த்துவிடுகிறார். சைவ வாதியான ஞானப்பிரகாசரிடம் இருக்கும்
சமய நேர்மை தமிழரான அப்பாத்துரையாரிடம் ஏனோ இல்லை.
நூலாசிரியர் தொடர்பானவை
‘கிறித்துவ
சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் ஓர் அரசின் புகழ்மிக்க தலைநகராக விளங்கிய உறையூர்
- தற்போதைய திருச்சிராப்பள்ளியின் ஒரு நகரம் - முற்காலத்தில் குகுட்ட நகர் என அழைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வூருக்கு அருகிலிருந்த சமதண்டம் என்னும் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் ஆசீவகர்தம்
குரு மற்றும் அவர்தம் சீடர்கள் வாழ்ந்து வந்ததாக நீலகேசி ஆசிரியர் குறிப்பிடுகிறார்’.
மூல
முன்னுரை குறிப்பிடும் இச்செய்தி அப்பாத்துரையார் மொழிபெயர்ப்பில் இல்லை. சோழரின் தலைநகராக
விளங்கிய இவ்வூரைப் பற்றிய செய்தியை மறைப்பானேன்?
மேலும்
‘பாணரின் ஹர்ஷ சரித்திரத்தில் அப்போதிருந்த பல்வேறு சமயப் பிரிவுகளைப் பற்றிய குறிப்பு
காணப்படுகிறது. ஹர்ஷர் தன் தங்கையைத் தேடிச்செல்லும்போது பௌத்தர், சமணர், பாகவதர்,
வேதாந்திகள் போன்ற பல்வேறு சமயப் பிரிவுகளைச் சேர்ந்த குழுக்களைச் சந்திக்கிறார். அங்கு
திவாக மித்திரரின் வனாசிரமத்திற்குள் நுழைகிறார். இந்தக் குழுவில் மற்கலிகளைக் காண்கிறார்’
என்பது மூல முன்னுரைச் செய்தி.
இது
சுருக்கப்பட்டு ‘ஹர்ஷ சரித்திரத்தில் பிற சமய வகுப்பினருடனே மஸ்கரி வகுப்பினரைப் பற்றிய
செய்தியும் கூறப்படுகிறது’(ப.16) என உரைநூலில் மேலோட்டமாகச் சொல்லப்படுகிறது.
நீலகேசி
வரலாறு தொடர்பானவை
சமண
சமயத்தைச் சேர்ந்த நீலி பௌத்தக் குடும்பத்தின் மருமகளாக வந்தபோது கறி சமைப்பதில் பிக்குவிற்குக்
களங்கம் செய்துவிட்டதாக மாமனாரும் கணவனும் கருதி அதற்கு வஞ்சம் தீர்க்க நீலி கற்பிழந்துவிட்டதாகக்
கதை கட்டினர். இதிலிருந்து அவளை விடுவிக்க தேவதை ஒன்று உதவ முன்வந்தது. ‘நகர வாயில்
மூடப்பட்டிருக்கும். அதை யாராலும் திறக்க முடியாது. இவ்வாறு நகர மக்கள் அந்நகருக்குள்
அடைக்கப்பட்டிருப்பர். அந்நகர மக்கள் பெரிதும் இடர்ப்படுவர். தேவதை அரசனின் கனவில்
தோன்றும். கற்புக்கடம்பூண்ட பொற்புடைப் பெண்ணொருத்தி வரும்போதுதான் கதவுகள் திறக்கும்.
அவளால் மட்டுமே அவ்வாயிலைத் திறக்க முடியும் எனத் தெரிவித்து மறையும். இதன்படியே தேவதை
அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. எல்லாப் பெண்களும் தொட்டுத் திறக்காத வாயில்கதவு நீலி
தொட்டதும் திறந்தது’ என்கிறது மூல முன்னுரைச் செய்தி(ப.17).
‘நீலியின்
கற்புத் திறத்தை நிரூபிக்க தேவதை உதவியது’ என்ற அளவில் மட்டும் அப்பாத்துரையாரால் குறிப்பிடப்படுகிறது.
தேவதையின் முன்னேற்பாடுகளோ அரசன் கண்ட கனவோ பற்றி விளக்கம் இல்லை.
‘திருவாலங்காடு
அல்லது பழையனூரைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் தேவார மூவர் அங்குள்ள அம்மனை வண்டார்
குழலி என அழைக்கின்றனர். இது சமஸ்கிருத நீலகேசிக்கு இணையான தமிழ்த்தெய்வமாகத் தோன்றுகிறது.
விலங்குகள் பலியிடப்பட்ட காளி கோயில் சமணர்தம் செல்வாக்கின் விளைவாக அகிம்சையைப் போதிக்கும்
வழிபாட்டிடமாக மாற்றப்பட்டது. …. நீலகேசிக் கதை இதுபோன்ற மாறுதல்கள் பற்றித் தெளிவாகக்
கருத்துரைக்கிறது. உயிருள்ளவற்றைப் பலியிட்டு ரத்தம் சிந்துவதற்குப் பதிலாக மண்ணால்
செய்யப்பட்ட விலங்குகள், ஆடுகள், எருமைகள், குதிரைகள் போன்றவற்றை மன நிறைவுக்காகக்
கோயிலில் பலியிடலாம் என அக்காலகட்டதைச் சேர்ந்த சமண முனிவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.
…… அகிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்து வந்த சமணர்களால் மாற்றம் செய்யப்பட்ட பழையனூர்
நீலி கோயில் சைவ சமயச் சீர்திருத்தவாதிகளால் கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த பெண்தெய்வம்
சிவனின் மனைவியாக உயர்த்தப்பட்டாள்’.
மூல
முன்னுரை(ப.19) குறிப்பிடும் சமயங்களுக்கிடையேயான சர்ச்சைக்குரிய இவ்வுண்மைகள் அப்பாத்துரையாரால்
கவனமாகக் கைவிடப்பட்டுள்ளன. தொண்டை மண்டலத்தில் இருந்த சமணர், சமணச் சங்கம் தொடர்பான
செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளன. தொண்டைநாடு சமணச் செல்வாக்கால் பல நூற்றாண்டுகள் புகழின்
உச்சியில் இருந்தது என்பதும் அவரால் சொல்லப்படவில்லை.
நீலகேசி
நூல் தொடர்பானவை
மூல
முன்னுரையில் காணப்படும் உளவியல் தொடர்பான ஆய்வுரை அப்பாத்துரையார் தமிழாக்கத்தில்
இல்லை. மேலும், சம்பந்தர் ‘இயற்கையிறந்த நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி முதலில் அரசனை
மதம் மாற்றியதன் மூலம் பாண்டிய நாட்டில் சமணத்தின் வீழ்ச்சியைக் கொணரும் குறிக்கோளில்
வெற்றி பெற்றார். …….. சம்பந்தர் தனது தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு செய்யுளை
கிஞ்சித்தும் மாற்றமில்லாமல் சமணரையும் பௌத்தரையும் வசைபாடுவதற்காகவே ஒதுக்கியுள்ளார்.
இவ்விரு மதத்தாரைக் குறிப்பிடும்போதெல்லாம் தகாத வார்த்தைகளையும் நாக்கூசும்படியான
கேலிப்பெயர்களையும் வெகு சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்’.
சம்பந்தரின்
வல்லாண்மை பற்றிய இக்கருத்தை அப்பாத்துரையார் தொடவே இல்லை (மூல முன்னுரை ப.27). இதற்குப்
பதிலாக ‘தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்திலும் புத்தருடன் சமணரையும் சேர்த்து வசைபாடும்
சம்பந்தரின் வசைச் சொற்களை ஊன்றிக் கவனித்தால் அவ்வசையிலும் சமண சமயத்தின் அடிப்படை
உயர்வு விளங்காமலிராது’ என்கிறார் அப்பத்துரையார். வசைபாடுதல் என்று வந்துவிட்ட பின்பு
அங்கே எதிராளியின் உயர்வு பற்றியா பேசுவர்?
‘சைவராவதற்கு
முன்பு சமணராக இருந்த சம்பந்தரின் சகோதர சீர்திருத்தவாதி அப்பர் தன் பாடல்கள் அனைத்திலும்
சம்பந்தருக்கு மாறுபட்ட மனோபாவத்தைப் பேணுவது புதுமையானதாக வியப்புக்குரியதாக இருப்பது
குறிப்பிடத்தக்கது. வேதப் பலியிடலை எதிர்ப்பதற்காக அவர் சமணர்களைக் குற்றம் சாட்டவில்லை.
……. சம்பந்தர் தேவாரத்தில் இத்தகைய மனோபாவத்தைத் தேடினாலும் கண்டெடுக்கச் சாத்தியமே
இல்லை’ என்ற மூல முன்னுரைச் செய்தி தெளிவுற விளக்கப்படவில்லை; மொழிபெயர்க்கப்படவில்லை.
‘அரசியல்
மற்றும் சமூக மறுகட்டமைப்பு, அகிம்சைக் கொள்கையின் பரந்த மற்றும் உயர்வான மதிப்பீட்டை
உறுதியாகக் கோருகிறது. …….. அகிம்சா தர்மத்தைப் பின்பற்றும் ஒருவன் தனக்குக் கீழான
விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் எதிரான வன்முறையைத் தவிர்க்கலாம். ஆனால், விலங்குகளைவிடக்
கேவலமாக நடத்தப்படுகின்ற தனிமனித ஆளுமைக்கோ ஒரு சமூகத்திற்கோ தீங்கிழைக்கப்படுவதற்குத்
தானும் ஒரு காரணகர்த்தாவாக அவன் வாழ்ந்திருக்கலாகாது’.
சமூக,
சாதீய ஒடுக்குமுறைகளைக் களைவது பற்றிய சக்கரவர்த்தி நயினாரின் இக்கருத்து அப்பாத்துரையாரின்
தமிழாக்கத்தில் இல்லை. ஆனால், இதை விடவும் சொல்லியே தீரவேண்டியது ஒன்று இருக்கின்றது.
மேற்கண்ட கருத்தைத் தொடர்ந்து வரும் சக்கரவர்த்தி நயினாரின் அடுத்த அடி ‘அகிம்சைக் கொள்கையின் கைவிடப்பட்ட இப்போக்கு’ எனத் தொடங்குகிறது. ஆனால், இதை ‘வைதிக(இந்து) இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்பும் மறுமலர்ச்சியும் சமணர் நெறிக்கு ஊக்கமளிப்பவை’ எனத் தொடங்குகிறார் அப்பாத்துரையார். வைதிக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி அதற்கு முற்றிலும் எதிரான சமண நெறிக்கு எப்படி ஊக்கம் அளிக்க முடியும்? தான் யார் என்பதையும் மேற்கண்டவாறெல்லாம் தமிழாக்கம் செய்வதில் விடுபடல்களை மேற்கொண்டதற்கான காரணங்களையும் ஒருவழியாக இங்கு வெளிப்படுத்தி விடுகிறார் அப்பாத்துரையார்.
‘அகிம்சைக்
கொள்கையை எடுத்துரைப்பது இந்தியாவை ஒருங்கமைத்து முன்னேற்றப் பாதையில் முன்னெடுத்துச்
செல்லத் தேவையானது மட்டுமன்று; பொருளாதார வலிமை பெருக்குவதற்காக ஒன்றை ஒன்று சின்னாபின்னமாக்குவதை
வழக்கமாகக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைக் கொண்ட பரந்த இவ்வுலகம் பிறரது வாழ்வுரிமையை
அங்கீகரிக்கவும் நாடுகளிடையே உலகளாவிய அமைதியை, ஒருங்கமைவை மேம்படுத்தவும் இந்த அகிம்சைக்
கொள்கை மிகத் தேவை’. சக்கரவர்த்தி நயினாரின் ஆக்கப்பூர்வமான வேண்டுகோள் இது.
இதை
அப்பாத்துரையார் வாயிலாகக் கேட்டால் ‘வைதிகர் மேற்கொள்ளும் வேத உபநிடதங்களின் அடிப்படைக்
கொள்கையால் பல இக்கட்டுகளிடையேயும் தூய்மைகெடாது காத்துவரும் சமணர் நெறி இத்தறுவாயில்
இந்தியருக்கும் உலக மக்களுக்கும் வழிகாட்டியாயும் ஒற்றுமைப்படுத்தும் உயர் ஆற்றலாயும்
விளங்கவல்லது’ என வைதிகச் சாயத்துடன் துவைத்துக்
காயப்போடப்படுகிறது.
‘புதிய
மனிதக் கருத்தியலின், உலகளாவிய புதிய மதத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படையை இப்பரந்த
புரிதலுடன் கூடிய அகிம்சை நிச்சயமாக வடிவமைக்கக் கூடும்’ எனக் கனவு காணும் சக்கரவர்த்தி
நயினார், ‘ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிறித்துவத்தைத்
தமது நாடு தழுவிய சமயமாகப் பின்பற்றும் பேர்பெற்ற மேற்கத்தியக் கிறித்துவ நாடுகள் இவ்வடிப்படை
உண்மையைப் புரிந்துகொண்டிருக்கவில்லை’ என வருந்துகிறார்.
இவ்வருத்தம்
அப்பாத்துரையாருக்கு இல்லை. ‘உலகளாவிய அன்பினாலான இக்கொள்கை தற்போதைய உலகை ஆட்டிப்படைக்கும்
அனைத்துத் தீமைகளுக்குமான ஒரே சஞ்சீவி மூலிகையாகத் தோன்றுகிறது’ எனச் சக்கரவர்த்தி
நயினார் பரிந்துரைக்கும் மூலிகை அப்பாத்துரையார் உரை நூலாகிய தோட்டத்தில் காணப்படவில்லை.
அகிம்சை,
பௌத்தம் தொடர்பானவை
புத்தர்
ஊன் தின்னலை அனுமதித்தாரா இல்லையா என்ற வாக்குவாதம் இலங்காவதார சூத்திரத்தில் இடம்பெற்றுள்ளது.
‘புத்தர் (இத்)தாமிர வேலைக்காரனிடமிருந்து சூகர(பன்றி) மாமிசத்தை ஏற்றுக்கொண்டார்.
அதுவே அவரது உயிருக்கு உலை வைக்கும் பிணி ஆயிற்று’ என ஒரு சாராரும் ‘இது விஷமத்தனமான
கண்டுபிடிப்பு; மீச்சிறு நுண்ணுயிருக்குக் கூடத் துன்பம் நினைக்காத அகிம்சைக் கோட்பாட்டை,
வன்முறையின்மையை போதிப்பதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த அப்பேராசான் யாரிடமிருந்தும்
பன்றியிறைச்சியைப் பெற்றிருந்திருக்க முடியாது. ……சூகரமாதா என்ற சொல் சாதாரண அரிசிக்
கஞ்சியைத் தவிர வேறெந்தப் பொருளும் தரவில்லை’ என மற்றொரு சாராரும் வாக்குவாதம் செய்கின்றனர்.
பௌத்த
அமைப்புக்குள்ளேயே ஏற்பட்ட இருவேறு உணவுப் பழக்கங்கள் அவற்றைக் கடைபிடிப்போரால் புத்தர்
மேல் ஏற்றிக் கூறப்படுகின்றன. பௌத்தர்கள் தத்தம் பழக்கத்திற்குத் துணையாகுமாறு இலங்காவதார
சூத்திரத்திலிருந்து வெவ்வேறு பகுதிகளை மேற்கோள் காட்டுகின்றனர். மூல முன்னுரையில்
விவாதிக்கப்படும் இவை முழுவதுமான(பக். 128 - 135) ஏழு பக்கங்கள் நீலகேசி உரைநூலில்
விடுபட்டுள்ளன. பௌத்தத்தையே மறுவாசிப்புக்கு உட்படுத்தத் தூண்டும், புத்தர் நேரடியாகப்
பேசுவதாக உள்ள இலங்காவதார சூத்திரம் எந்தக் கணக்கில் விடுபட்டது என்பது சிந்திக்க வேண்டிய
ஒன்றாகும்.
ஆசீவகர்
தொடர்பானவை
‘ஒரு
துறவி பெண்ணுடன் உடலுறவு வைத்திருக்கிறான் எனில் அவன் செய்வதில் எத்தகைய பாவமும் இல்லை’
எனப் போதிக்கும் ஆசீவகத் தலைவனை மகாவீரர் குற்றம் சாட்டுகிறார். அவர் அவனது சீடர்களை
‘பெண்களின் அடிப்பொடிகளாக இருப்பவர்கள்; அவர்களால் கற்புக்கடம் பூண்ட வாழ்வை நடத்த
முடியாது’ எனக் குறிப்பிடுகிறார். ஆசீவக சமயத்தவர் ஒருசிலரின் பாலியல் தூய்மையின்மை
பற்றிய இத்தகைய செய்திகள் அப்பாத்துரையார் மொழிபெயர்ப்பில் இல்லை.
‘13ஆம் நூற்றாண்டில் சில கோயில் ஆவணங்களில் தென்னிந்தியாவில்
அப்போது உண்மையிலேயே ஒரு பிரிவாக இருந்த ஆசீவகர்களைப் பற்றிய குறிப்பை நாம் பெறுகிறோம்.
விருஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பொய்கைப் பெருமாள் கோயிலின் சுவர்கள் மீது இந்த ஆவணங்கள்
கல்வெட்டுக்களாக உள்ளன’ (தென்னிந்தியச் சாசனங்கள் (i) 88, 89, 92, 108) எனக் கூறுவதோடு
நின்றுவிடாமல் அக்கல்வெட்டுச் சாசனங்களையும் தருகிறார் சக்கரவர்த்தி நயினார். ஆனால்,
அப்பாத்துரையார் அவற்றை விட்டுவிட்டார்.
சாங்கியம்,
பூதவாதம் தொடர்பானவை
சாங்கிய
வாதம் ஒரு குறிப்பு என்னும் பகுதியில் மாடலனைப் பற்றிய முழுமையான செய்திகள் அப்பாத்துரையார்
மொழிபெயர்ப்பில் இல்லை. சாங்கிய காரிகையின் மாடல விருத்தியுரையை ஒலி பெயர்ப்பாகத் தந்து
பின்னர் அதன் மொழிபெயர்ப்பையும் தருகிறார் சக்கரவர்த்தி நயினார். இது முழுவதும் அப்பாத்துரையார்
மொழிபெயர்ப்பில் இல்லை.
பூதவாதம்
பற்றிய குறிப்பில் சர்வ தரிசன சங்கிரக மேற்கோள்களை சக்கர்வர்த்தி நயினார் குறிப்பிடுகிறார்.
‘வானமோ மோட்சமோ ஆத்மாவோ இன்னொரு உலகமோ இல்லை. வர்ணாஸ்ரமத்தின்படியான ஒழுக்கம் எந்தக்
கனியையும் கொடுக்கும் ஆற்றலுடையதாக இல்லை. தீப்பலி, முவ்வேதங்கள், முத்தண்டங்கள், நீறு
பூசுதல் போன்றவை பிழைப்பு வாதத்தைத் தோற்றுவிக்கும் அறிவுக் கேடான மனிதரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பவை
- பொய்யர்தம் பொய்கள். ஜோதிஸ்டமா பலியில்(தீப்பலி) கொல்லப்படும் விலங்குகள் சொர்க்கத்திற்குச்
செல்லும் எனில், பலியை நடத்தும் குரு தனது சொந்தத் தந்தையை சொர்க்கத்திற்கு அனுப்பும்
நோக்குடன் அவரைப் பலியிடாமல் இருப்பது எப்படி?’ எனப் போகிறது மூலநூல். ஆனால், அப்பாத்துரையார்
பகுத்தறிவைத் தூண்டும் இப்பகுதியைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.
கவனக்
குறைவுகள்
அப்பாத்துரையார்
சமணக் காப்பியத்தை - குறிப்பாக அதன் முன்னுரையைத் தனது சாய்மானத்துடன் மொழிபெயர்த்திருப்பது
ஒருபுறம் இருக்க, சில பெயர்களின் மொழிபெயர்ப்பில் கூட கவனம் செலுத்தவில்லை என்பதும்
தெரியவருகிறது. MASKARI, MADARAN என்பன முறையே மற்கலி, மாடலன் என மொழிபெயர்க்கப்பட
வேண்டும். ஆனால் இவை ஆங்கிலத்தில் உள்ளது போலவே மஸ்கரி, மாதரன் என ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
மத்துவரை மாதவர்(ப.29) எனவும் மாத்துவர்(ப.49) எனவும் திரிக்கிறார்.
‘பண்டாகமத்துட் பயிலாவுரை’ என மூன்றாவது பாடலின்
முதலடி தொடங்க, அது இரண்டாவது பாடல் என பிழையாகக் குறிப்பிடப்படுகிறது(ப.16). இது அச்சுப்
பிழையோ அப்பாத்துரையார் பிழையோ?
தொகைநோக்கு
நீலகேசி
முதல் பதிப்பில் சக்கரவர்த்தி நயினாரின் 339 பக்க ஆங்கில முன்னுரை இடம்பெற்றுள்ளது.
அதைப் பன்மொழிப்புலவர் அப்பாத்துரைப் பிள்ளை மொழிபெயர்க்க முயன்றிருக்கிறார். அவரது
முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், இது செம்மையான மொழிபெயர்ப்பாக இல்லை.
சமண
சமயம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள் மேலோட்டமாகச் சொல்லப்படுகின்றன அல்லது சொல்லாமல்
விடப்படுகின்றன; வைதிக சமயத்திற்கு எதிரான கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது விடுபட்டுள்ளன.
இவை மொழிபெயர்ப்பாளானின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன; ஆய்வு முன்னுரையின்
மெய்த்தன்மையை நீர்த்துப்போகச் செய்கின்றன; நீலகேசி உரைநூலின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.
திருக்குறளுக்குப்
பரிமேலழகர் எழுதிய உரையே விவாதத்திற்கு உள்ளானது. உலகப் பொதுமறை எனக் கருதப்படும் நூலின்
மேல் வைதிகக் கருத்துக்களை ஏற்றிக் கூறிய அவரது உரை அதன் இலக்கியப் பங்களிப்பிற்காகப்
போற்றப்பட்ட போதிலும் ஒருவகை வைதிக உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அதே சமயம் நச்சினார்க்கினியர்
வைதிகக் கண்ணோட்டத்துடன் பிற நூல்களைப் பார்த்த போதிலும் சீவக சிந்தாமணிக்கு உரையெழுதும்போது
தனது வைதிகக் கண்ணோட்டத்தைத் துறக்க வேண்டியதாயிற்று. பல்வேறு சமய நூல்களைப் பதிப்பித்தபோது,
தான் அப்பட்டமான வைதிகராக இருந்தபோதிலும் சிற்சில விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும்
உ.வே.சா. பெரும்பாலும் நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார் என அறிய முடிகிறது.
இப்படிப்பட்ட
முன்வரலாறுகள் இருக்க, சமண சமயக் கருத்தியலை அதன் கண்ணோட்டத்தில் பார்ப்பதே மொழிபெயர்ப்பாளனுக்கு
அழகு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், வைதிக(சைவ) சமயத்தைச் சேர்ந்த அப்பாத்துரைப்பிள்ளை
குறைந்தபட்ச நேர்மையையே கடைபிடிக்க முயன்றிருக்கிறார். வைதிகத்திற்குள் ஊறிய அகம் மற்றும்
புறம் சார்ந்த நெருக்கடிகள் அவரைத் தோற்கடித்திருக்கின்றன. அதன் விளைவு மொழிபெயர்ப்பிலும்
வெளிப்பட்டிருக்கிறது.
நேர்மையான
மொழிபெயர்ப்பும் அதற்கான ஊக்குவிப்புமே அவைதிக நூல்களில் படிந்திருக்கும் வைதிகக் கண்ணோட்டங்களை
அகற்றும். ‘அந்தந்தச் சமயங்களை அதனதன் பார்வையில் அணுகுதல்’ என்னும் அடிப்படையில் நோக்கும்போது
அப்பாத்துரையாரின் நீலகேசி உரை நூல் அதற்குத் தகுதியானதாக இல்லை. எனவே, சக்கரவர்த்தி
நயினாரின் ஆங்கில முன்னுரையைச் சரியான புரிதலுடன் மீண்டும் மொழிபெயர்ப்பதே நூலுக்கும்
அவரது மூல முன்னுரைக்கும் நியாயம் செய்வதாக அமையும்.
-----
துணை
நூல்கள்
1.
நீலகேசி
அ. சக்கரவர்த்தி நயினார் பதிப்பின் நிழற்படப்
பதிப்பு, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு, சூலை 1984
2.
நீலகேசி
விளக்கவுரை பொ.வே.சோமசுந்தரனார்
உரை, கழக வெளியீடு, முதல் பதிப்பு டிசம்பர் 1964
3.
நீலகேசி(உரைநூல்)
– தமிழாக்கம் – பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரைப்பிள்ளை எம்.
ஏ., எல்.டி. பூம்புகார்ப் பதிப்பகம், செப். 2003
பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் பற்றி தாங்கள் கூறும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன ஐயா.
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்க பகிர தூண்டும் பதிவு...
ReplyDeleteசாய்மானங்கள் சமனாகட்டும்...
அய்யாவிற்கு வணக்கம்.
ReplyDeleteஒரு மொழிப்பெயர்ப்பை இப்படியெல்லாம் ஆழ்ந்து நோக்க முடியுமா!என்ற எண்ணமே என்னுள் உதயமாகியது. நீலகேசி நூலைப் பற்றிய பல செய்திகள் மறைந்து போனதற்கு இது போன்ற கவனமின்மை, சமயம் சார்ந்த உரைகள் மூலமாகக் கூட இருக்கலாம். உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் நடுவுநிலை தவறாதவராக இருந்தால் தான் அந்த இலக்கியத்தின் கருத்துக்கள் எதிர்கால சந்ததியினருக்கு சற்றும் குறையாமல் சென்றடையும் எனும் தங்கள் ஆதங்கம் புரிகிறது. நிறைய மேற்கோள்கள் கூறி ஆய்வினை ஆழமாக செய்திருப்பது மகிழ்வளிக்கிறது. சமய போட்டிகளின் காரணமாகவே நமது இலக்கியங்கள் மறைந்து போய்விட்டதை நினைக்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது (அனல்வாதம், புனல்வாதம்).. பன்மொழிப்புலவர் அப்பாத்துரை அவர்களே நேர்மையில் இருந்து விலகியிருப்பது வியப்பளிக்கிறது. இவ்வளவு நுட்பமாக ஆய்ந்து கட்டுரை தந்தமைக்கு நன்றீங்க அய்யா..
அய்யா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஆய்வு என்பது நடுவுநிலைமையுடன் அமைய வேண்டும்.அதே சமயம் மொழிபெயர்ப்பிலும் அதே சமநிலை நிலவ வேண்டும். சமய ரீதியில் எழுந்த நூல்கள் யாவும் ஒன்றை ஒன்று விமர்சித்துக் கொண்டதில் என்னமோ தமிழன்னை நிறைய இலக்கிய அணிகளை அணிந்து கொண்டாள். ஆனால், பிற்காலத்தே அந்நூல்களைப் பதிப்பித்தவர்களும் முறை பிறழ்ந்தனர். உ.வே.சா மட்டும் இதில் விதி விலக்கு என்பதை உங்களின் செறிவான ஆய்வு காட்டுகிறது. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கூற்றுடன் நம் மொழியில் உள்ள- இன்னமும் இருட்டிலேய இருக்கின்ற பதிப்புப் பெறாமல் உள்ள நூல்களை நடுவு நிலை தவறாமல் வெளிக்கொணர வேண்டும்.உங்களின் எழுத்துகள் மொழிபெயர்ப்புக் களத்திற்கு முழங்கு முரசு ஆக ஒலிக்கிறது. உங்களின் அடுத்த இடுகையை நோக்கி ஆர்வமுடன் பயணிக்கிறேன் தமிழ்ப் பணியில். நன்றியுடன், கொ.சுப. கோபிநாத், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, இலந்தைக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி 8870034950 எனது வலைப்பூ . www.ilakkanatheral.blogspot.com
ReplyDelete