முழக்கமும் உழைப்பும்
இலக்கணம் என்றாலே சிலருக்குக் 'கருக்' என்கிறது. இலக்கணம் படிப்பவர்களைப் பார்த்து மிரள்கிறவர்களும் பரிதாபப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். கல்வித்தகுதிக்காக இலக்கணம் படிக்க நேர்கிறவர்கள் தடுமாறி நிற்பதும் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என முயல்வதும் நடக்கிறது. ஒருமுறை பார்த்தால் போதும்; விடைகள் வந்து குவிய வேண்டும். அப்படியொரு அற்புதம் நிகழ்த்துகிற 'எளிய உரை', நோட்ஸ் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் எனக் கூசாமல் கேட்கிற அப்பிராணிகளும் உண்டு. இலக்கணக் கல்வியின் நிலை இப்படி ஆனதற்குப் படிப்போர் மட்டும் காரணமல்ல. இலக்கணத்தைக் கற்பிப்போரும் ஒருவகையில் காரணம்.
இலக்கணப் பயிற்சி இப்படி இருக்கும் சூழலில் இலக்கணப் பதிப்பு பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஏற்கனவே அச்சிடப்பட்ட நூலின் ஆசிரியருக்கு 'ஓய்வு' கொடுத்துவிட்டுத் தம் பெயரை மட்டும் சேர்த்து வெளியிடுவது; போனால் போகிறதென்று தம் பெயருடன் ஆசிரியர் பெயரையும் சேர்த்துக்கொள்வது; பதிப்புணர்வே இல்லாமல் மூலப் பதிப்பாசிரியன் பல நாள் உழைத்துத் தொகுத்த முற்சேர்க்கை, பிற்சேர்க்கைகளைத் திருகி எறிந்துவிட்டு நூலை மட்டும் வெளியிடுவது; மூல நூலில், உரையில் காரணம் ஏதுமில்லாமல் தம் விருப்பம்போல் பிடுங்கி, செருகித் தம் கைச் சரக்கைக் கலந்து தருவது; கிடைத்தற்கரிய, முக்கியத்துவம் வாய்ந்த பழைய உரையைத் தூக்கிக் கடாசிவிட்டு சுருக்கமான முன்னுரை தெளிவுரையுடன் (?) வெளியிடுவது; எதுவும் ஆகாவிட்டால் நோட்ஸ் போடுவது என்று பதிப்புலகில் பல வித்தைகள் நடந்தேறுவது கண்கூடு.
மூல நூலாசிரியனின் நோக்கம் கெடாமல் நூலுக்கு வலுச் சேர்க்கும் பதிப்பாசிரியர்கள் இலக்கண உலகில் மிகவும் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலான அத்தகையோரில் ஒருவர்தான் தி.வே. கோபாலையர். தேவாரம், திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் என அவர் பதிப்பித்திருந்தாலும் இலக்கணப் பதிப்புக்காகவே அவர் போற்றப்பட வேண்டியவர். தமிழ் இலக்கண உலகில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
தொல்காப்பியச் சேனாவரையம் வினாவிடை விளக்கம், தமிழ் இலக்கணப் பேரகராதி ஆகியவற்றைக் கோபாலையர் உருவாக்கியுள்ளார். இருப்பினும், அவருக்குத் தனியொரு இடத்தைப் பெற்றுத் தந்திருப்பவை அவரது இலக்கணப் பதிப்புகளே.
11ஆம் நூற்றாண்டில் வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றி புத்தமித்திரரால் எழுதப்பட்டது வீரசோழியம். தமிழில் ஐந்திலக்கணம் கூறும் முதல் நூல் இதுவாகும். இந்நூல் வடதிசையிலிருந்து வந்து புத்தவிகாரையில் தங்கிக் கல்வி கற்றோர்க்கு உதவும் வகையில் இருமொழி இலக்கண மரபுகளை எடுத்துக் கூறும் ஒரு கையேடாகப் பயன்பட்டதாகக் கருதப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய நன்னூலுக்குப் பிறகு இது பயிற்சி குன்றியது.
பெருந்தேவனார் உரையுடன் கூடிய வீரசோழியத்தின் முதற்பதிப்பு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் 1881இல் வெளியிடப்பட்டது. 1942இல் கழக வெளியீடாக வந்தது. விரிவான விளக்கங்களுடன் கோபாலையர் இந்நூலைப் பதிப்பித்தார். இவரது முதற்பதிப்பு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்சிரம வெளியீடாக 2005இல் வெளிவந்துள்ளது.
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறனலங்காரம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் எழுதியது. இதற்கு உரை எழுதியவர் இவரது மாணவர் காரிரத்தினக் கவிராயர். வடமொழி மரபில் அணியிலக்கணம் கூறும் இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1920இல் முதற் பதிப்பாக வெளியிட்டது. இதைப் பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களையும் சேர்த்து கோபாலையர் பதிப்பித்தார். இதுவும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்சிரம வெளியீடாகும். கோபாலையரின் இம்முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு 2005.
வீரசோழியத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றிய ஐந்திலக்கண நூல் இலக்கண விளக்கம் ஆகும். 'குட்டித் தொல்காப்பியம்' என அழைக்கப்பட்ட இந்நூலை 17ஆம் நூற்றாண்டில் வைத்தியநாத தேசிகர் எழுதினார். தொல்காப்பியம், நன்னூல் போன்ற முந்தைய இலக்கண நூல்களில் உள்ள நூற்பாக்களை அப்படியே எடுத்தாண்டுள்ளதால் இலக்கணத் தொகுப்பாகத் தோற்றமளிக்கிறது இந்நூல். சைவ மடங்களுக்கு இடையேயான உயர்வு-தாழ்வு பற்றிய கௌரவப் பிரச்சினையில் இந்நூல் பந்தாடப்பட்டது சுவாரசியமானது.
இலக்கண விளக்கம் தருமபுர ஆதீன மடத்தைச் சேர்ந்தவரால் எழுதப்பட்டதால் இதைத் திருவாவடுதுறை ஆதீனத்தார் பரிகாசம் செய்தனர். இதற்கென சிவஞான முனிவரைக் கொண்டு இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் கண்டன நூலை எழுதுவித்தனர். இந்த மறுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது 'இலக்கண விளக்கச் சூறாவளியென்று ஓர் அநியாய கண்டனம்' எழுதப்பட்டதாக சி.வை. தாமோதரம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இவர்தான் இலக்கண விளக்கத்தை முதன்முதலில் (1889இல்) பதிப்பித்தவர்.
வைத்தியநாத தேசிகர் வழிவந்த சோமசுந்தர தேசிகர் 1941இல் இலக்கண விளக்கப் பொருளதிகாரத்தை மட்டும் வையாபுரிப்பிள்ளை முன்னுரையுடன் பதிப்பித்தார். எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்கள் 1973இல் சேயொளி என்பாரைக் கொண்டு கழகத்தால் வெளியிடப்பட்டன. இப்படி குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் தனித்தனி ஆசிரியர்களால், தனித்தனி நிறுவனங்களுக்காக, வெவ்வேறு முறைகளில் வெளியிடப்பட்ட இலக்கண விளக்கத்தைக் கோபாலையர்தான் தரப்படுத்தி முழுவதுமாகப் பதிப்பித்தார். இது தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக 1970-74 காலப் பகுதியில் வந்தது.
வீரசோழியம் சோழர் காலத்தில் ஏற்பட்ட வடமொழிப் பரவலை ஓரளவுக்கே விளக்குவதாக அமைந்தது. வடமொழி மரபில் எழுதப்பட்ட தொல்காப்பியச் சேனாவரையர் உரை, சைவ சித்தாந்த சாத்திரங்கள், மணிப்பிரவாள நடையில் அமைந்த வைணவ உரைகள் போன்றவற்றைப் பயிலப் புதிய வகை இலக்கண நூல்கள் தேவைப்பட்டன. இத்தேவையை ஒட்டி 17ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்துத் தோன்றிய இலக்கண நூல்களே பிரயோக விவேகமும் இலக்கணக் கொத்தும்.
வடமொழிச் சொல்லிலக்கணத்தைத் தமிழுக்கு மாற்ற சுப்பிரமணிய தீட்சிதரால் எழுதப்பட்டது பிரயோக விவேகம். இவரே உரையாசிரியரும் ஆவார். இவருக்கு நூல்களாகத் தெரிந்தவை தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார், (அவர் காலத்தில் பயிற்சியில் இருந்ததால்) நன்னூல் ஆகியன மட்டுமே. எனவே, இவற்றை மட்டுமே மதித்துத் தம் உரையில் மேற்கோள் காட்டினார். வடமொழி மரபைப் பின்பற்றும் சேனாவரையரைப் பல இடங்களில் ஏற்றுப் போற்றி, தமிழ் மரபைப் பின்பற்றும் நச்சினார்க்கினியரைப் பல இடங்களில் மறுதலிக்கிறார் சுப்பிரமணிய தீட்சிதர்.
பிரயோக விவேகம்போலவே சைவ மடங்களின் கல்விப் பயிற்சியில் இருந்த மற்றொரு நூல் இலக்கணக் கொத்து. இது ஈசான தேசிகர் என்னும் சாமிநாத தேசிகரால் எழுதப்பட்டது. நூலாசிரியரான இவரே உரையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய இலக்கண உலகில் பெரும் புயலைக் கிளப்பியது இலக்கணக் கொத்து.
'பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புவதுபோல' 'இறையனார் அகப்பொருள் முதலான இலக் கணங்களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக் கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர்' எனச் சாடியது இலக்கணக் கொத்து.
சாமிநாத தேசிகர் தமிழைப் பற்றிப் பேசும்போது இன்னும் ஒருபடி மேலே போய், எண்ணற்ற தமிழ் நூல்களில் ஒன்றுகூடத் தனித்தமிழ் இல்லை; 'ஐந்தெழுத்தால் ஒரு பாடை (மொழி) என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே' என்று கூறினார்.
மேற்கண்ட இரண்டு நூல்களையும் முதலில் பதிப்பித்தவர் ஆறுமுகநாவலர் ஆவார். நாவலரின் பதிப்புகள் அவர் காலத்திற்குப் போதுமானவையாக இருந்தன. ஆனால், இதே நூல்கள் பெருமளவில் இக்காலத்தவர் வாசிக்கச் சிரமம் தருவனவாக உள்ளன.
19ஆம் நூற்றாண்டுவரை வடமொழிக் கல்வி பயிற்சியில் இருந்தது. எனவே 'வடமொழி வல்லார் தென்மொழி (தமிழ்) இலக்கணம் அறிய உதவுவது இலக்கணக் கொத்து; தென்மொழி வல்லார் வடமொழி இலக்கணம் அறிய உதவுவது பிரயோக விவேகம்' எனச் சொல்லப்பட்ட கருத்து பொருத்தமாக இருந்தது. பிற்காலக் கல்வியில் வடமொழிப் பயிற்சி குறைந்ததால் இவற்றைப் பயில்வது சிரமமானதாயிற்று. கோபாலையரின் பதிப்பிற்குப் பின்னரே இந்நூல்களைப் புரிந்து பயில்வது சாத்தியமாகியுள்ளது.
வீரசோழியம், மாறனலங்காரம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகியன வெளிப்படையாகவே வடமொழி இலக்கண மரபில் வந்தவை. இலக்கண விளக்கம் வெளிப்படையாகத் தொல்காப்பியம், நன்னூல் இலக்கணங்களைப் பின்பற்றினாலும் மொழி என்று வரும்போது 'விண்ணிற்கும் புவனாதிக்கும் பொதுவாய்' வரும் உலகப் பொதுமொழி வடமொழியே என வடமொழியை உயர்த்திப் பேசுவதாக உள்ளது. ஆக, கோபாலையர் பதிப்பித்த இலக்கண நூல்கள் அனைத்தும் வடமொழி என்னும் புள்ளியில் மையம் கொண்டுள்ளன.
தமிழோடு வடமொழியும் அறிந்தவர் கோபாலையர். எனவே, வடமொழிச் சொற்கள், வடமொழி இலக்கண மரபு என்று வரும் இடங்களில் எல்லாம் அவருடைய விளக்கம் படிப்பவனுக்கு வெளிச்சம் தந்து கைபிடித்து அழைத்துச் செல்வதாய் உள்ளது.
கோபாலையருக்கு முன்பே பதிப்பிக்கப்பட்டு அச்சில் வந்தவற்றை அவர் அப்படியே வெளியிட்டுவிடவில்லை. ஒவ்வொரு நூலைப் பதிப்பிக்கும்போதும் அதற்கு முன்பு வெளிவந்த அச்சுப்படிகளை அவற்றின் ஓலைச் சுவடிகளுடன் ஒப்புநோக்கிச் சரிபார்த்தே தன் பதிப்புக்கான மூலத்தை இறுதிசெய்துள்ளார். இன்று அருகிப்போயுள்ள சுவடி வாசிப்புக் கலையில் அவருக்கிருக்கும் பயிற்சியால் நூல்களைச் செழுமைப்படுத்திப் பதிப்பித்திருக்கிறார். அச்சில் வந்ததை வாசிக்கவே தடுமாறும் இன்றைய தமிழ்ச் சூழலில் அவருடைய பணி இணையற்றதாகும்.

கோபாலையர் தன் பதிப்பில் சில நுட்பங்களைக் கையாண்டிருக்கிறார். இதற்குத் தஞ்சை சரசுவதி மகால் கௌரவக் காரியதரிசியாய் அப்போதிருந்த பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளை சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துத் தந்ததே காரணம் என இலக்கணக் கொத்து முன்னுரையில் மறவாமல் குறிப்பிட்டுள்ளார். இது கோபாலையரின் நேர்மையைக் காட்டுவதாக உள்ளது.
இலக்கணக் கொத்து பதிப்பில் பல அடிகளால் அமைந்த நூற்பாத் தொடர்களை முதலில் அப்படியே தருகிறார் கோபாலையர். பின்பு அவை பொருள் பொருத்தமுள்ள சிறுசிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குரிய உரைகளும் ஆங்காங்கே பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நூற்பாக்களும் உரைகளும் வாசிப்பவர்க்கு உதவும் வகையில் சந்தி பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. இவற்றை அடுத்து கோபாலையரின் விளக்கவுரை அமைந்துள்ளது.
பிரயோக விவேகம் பதிப்பில் நூலுக்கு முன்பாக அவர் தரும் செய்திகளின் தொகுப்பு நூலைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு முன்னோட்டமாக அமைகிறது. நூலுக்குள் சந்தி பிரித்துக் காரிகைகளை அச்சிட்டுள்ளார். முன்பகுதியில் மூலத்தை அப்படியே தந்துள்ளார். பிரயோக விவேகத்தை அதன் உரையில் எடுத்தாளப்படும் தொல்காப்பியம், சேனாவரையம், நச்சினார்க்கினியம், திருக்குறள், திருக்கோவையார், நன்னூல் ஆகியவற்றுடனும் இலக்கணக் கொத்துடனும் ஒப்பிட்டு நூலாராய்ச்சி என்னும் தலைப்பில் தொகுத்து விளக்குகிறார். இவ்வகையில் பிரயோக விவேக முன்பகுதி 203 பக்கங்களில் அமைந்துள்ளது.
பிரயோக விவேக நூலின் இறுதியில் காரிகை, உரை நூற்பா, பிற இலக்கணங்களின் நூற்பா, இலக்கியச் செய்யுள் ஆகியவற்றின் அகர நிரல்களும் நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள சொற்கள், தொகைகள், இருமொழித் தொடர்கள், பன்மொழித் தொடர்கள் ஆகியவற்றின் அகர வரிசைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் வடமொழி இலக்கணச் செய்திகள், வடமொழி ஆசிரியர்கள், அவர்தம் நூல்கள், வடசொல் எடுத்துக்காட்டுகள், வடமொழி இலக்கண மரபுச் சொற்கள் ஆகியனவும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிற்சேர்க்கைப் பகுதி 127 பக்கங்களில் அமைந்துள்ளது.
தனது விளக்கவுரையும் சேர்த்து 348 பக்கங்களில் அமைந்துள்ள நூலுக்கு 330 பக்கங்களில் நூலை அணுகுவதற்கு வேண்டிய தொடர்புள்ள இலக்கணச் செய்திகளைப் பகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார் கோபாலையர். ஆக, கோபாலையரின் பதிப்புச் செயல்பாடு மூல நூலுக்கு இணையானதாக அமைந்துள்ளது.
ஒரு நூலைத் தமது பதிப்பின் மூலம் ஆவணப்படுத்துவதில் (documentation) தேர்ந்த அறிஞர்களாக சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர், எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடுவர். இவ்வகையில் கோபாலையரும் தம் இலக்கணப் பதிப்புகளைச் சிறந்த ஆவணங்களாக ஆக்கியிருக்கிறார். நூலின் முன்பகுதியில் நூலைத் தொடுவதற்கு அருகதை உள்ளவனாக வாசகனை ஆயத்தப்படுத்துகிறார். பின் பகுதியில் ஆய்வாளர்க்கும் வாசகர்க்கும் துணைசெய்யும் அகரநிரல்களைப் பட்டியல் பட்டியலாகத் தந்து செல்கிறார். உதாரணமாக, இலக்கண விளக்கப் பதிப்பில் அணியியலின் இறுதியில் தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம் முதலான பிற அணியிலக்கண நூல்களிலிருந்து பல அணிகளைப் பிற்சேர்க்கையாகத் தந்துள்ளார். இவை இலக்கண விளக்கத்தால் குறிப்பிடப்படாதவை. கோபாலையர் இவ்வாறு நூலில் சொல்லப்படாதவற்றையும் சேர்த்துத் தந்திருப்பது எல்லா அணிகளையும் ஒருங்கே தொகுத்து ஒப்பிட்டுப் பயில்வார்க்குப் பேருதவி புரிவதாக உள்ளது.
கோபாலையரின் பதிப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, நூல்களுக்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரை. அவரது பதிப்பிற்கான நூல்களில் பெரும்பாலானவை உட் தலைப்புகள் முதற்கொண்டு வடமொழிச் சொற்களால் ஆனவை. மேலும் சில, உரைகளின் இடையே உரைச் சூத்திரங்கள் கொண்டவை. இலக்கணத்திற்கான உரையைக் கச்சிதமான சொற்களால் சுருக்கமாக விளக்கும் எளிய செய்யுள் வடிவத்தை உரைச் சூத்திரம் அல்லது உரை நூற்பா எனலாம். இன்றைய நிலையில் வாசிப்புத் தடை ஏற்படுத்தும் இவற்றைக் கடப்பதற்கு விளக்கவுரை அமைந்த கோபாலையரின் பதிப்புகள் மட்டுமே உதவுவனவாக உள்ளன.
உதாரணமாக, பிரயோக விவேகம் 12ஆம் காரிகைக்கு ஏறத்தாழ 4 பக்கங்களில் கோபாலையர் விளக்கவுரை வரைந்துள்ளார். மேலும் அவர் ஒவ்வொரு நூலிலும் இலக்கணம், அதன் உரை ஆகியவற்றைத் தொடர்ந்து தேவையான இடங்களில் எல்லாம் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களிலிருந்தும் உரைகளிலிருந்தும் தொடர்புள்ள இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்கள் தந்துள்ளார். இலக்கண ஒப்பீட்டு முறையிலான இவரது விளக்கவுரையால் நூலைப் புரிந்து கொள்வது எளிதாகிறது. கோபாலையரின் இந்த உழைப்பு இல்லையென்றால் இன்றைய நிலையில் வீரசோழியம், பிரயோக விவேகம் முதலான நூல்களை விளங்கிக்கொள்ள இயலாது.
கோபாலையர் பதிப்பாசிரியராக மட்டுமன்றி (விளக்க) உரையாசிரியராகவும் இருக்கிறார்தான். ஆயினும் இவர் பழைய உரையாசிரியர்களைப் போல நூலாசிரியரின் கருத்தை அப்படியே பொன்னேபோல் போற்றும் எண்ணம் உடையவராகவோ சுற்றி வளைத்துச் சமாதானம் கூறுபவராகவோ இல்லாமல், 'தன் துணிபு' உரைப்பவராகவே செயல்பட்டுள்ளார்.
வடமொழி, தமிழ் மொழி இரண்டுக்கும் இலக்கணம் ஒன்றே எனச் சாமிநாத தேசிகர் கூறுவது பொருந்தாது என்பதை சிவஞான முனிவர் சூத்திரவிருத்தி மேற்கோளை எடுத்துக்காட்டி மறுத்துள்ளார் கோபாலையர். தொல்காப்பியருக்குப் பாணினீயமும் ஐந்திரமுமே முதல் நூல்கள் எனச் சொல்லும் சுப்பிரமணிய தீட்சிதரின் கருத்தை ஏற்காமல் தொல்காப்பியப் பாயிர விருத்தி, பல்காப்பியப் புறனடை, பன்னிருபடலப் பாயிரம், புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் முதலானவற்றிலிருந்து சான்றுகள் தந்து 5 பக்கங்களில் மறுப்புரை வரைகிறார்.
கோபாலையர் போன்றோர் பதிப்பித்த நூல்களை அடுத்தடுத்து வெளியிடும்போது அவற்றை வெளியிடுவோர் செய்யும் தவறுகள் பதிப்புப் பற்றிய அறியாமையைக் காட்டுவனவாக உள்ளன. இலக்கணக் கொத்துக்கு கோபாலையரின் முதற்பதிப்பு 1973ல் வெளிவந்தது. இது பற்றிய செய்திகள் இரண்டாம் பதிப்பில் இல்லை. ஆறுமுகநாவலர் பதிப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டாலும் வெளிவந்த ஆண்டு (1866) பற்றிய விவரம் குறிப்பாக இல்லை. பிற்சேர்க்கையில் இலக்கணச் செய்தி அகரவரிசை என இருக்க வேண்டிய தலைப்பு 421, 425, 427, 429 ஆகிய பக்கங்களில் எடுத்துக்காட்டுச் சொல் அகரவரிசை என்று பிழையாக உள்ளது. இதைவிட நம்ப முடியாத ஒன்று நடந்திருக்கிறது.
பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளை இறந்தது 18.6.1977இல். அவர் கோபாலையரைக் கொண்டு இலக்கணக் கொத்து இரண்டாம் பதிப்பை 26.9.1990இல் வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோன ஒருவர் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்கு வந்து ஒரு இலக்கண நூலை வெளியிட்டுச் சென்றுள்ளார். பதிப்புலகில் எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இலக்கணக் கொத்து இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றுள்ள வெளியீட்டாளர், பதிப்பாளர் முன்னுரைகள் முதற்பதிப்பினுடையவை. முதற்பதிப்பின் முன்னுரை என்னும் குறிப்பு இல்லாமலே அவை எடுத்தாளப்பட்டுள்ளன. வெளியீட்டாளர் பக்கத்தில் இருந்த தேதியை மட்டும் மாற்றிவிட்டு அப்படியே போட்டுவிட்டது சரசுவதி மகால் நூலகம். இதனால் இம் முன்னுரைகள் இரண்டாம் பதிப்பினுடையவை என்பதாகவே தோற்றமளிக்கின்றன. இரண்டாம் பதிப்பிற்கென்று தனியாக முன்னுரை எழுதாததும் இந்தக் குளறுபடிக்குக் காரணமாகிவிட்டது. சரசுவதி மகால் நூலகம் போன்ற அரசு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளாகத் தமிழோடு சிறிதும் சம்பந்தமில்லாதவர்களை நியமிப்பதும் இது போன்ற தவறுகளுக்குக் காரணம்.
வெளியீட்டாளர் செய்யும் தவறுகள் மூலப் பதிப்புகளுக்குக் களங்கம் ஏற்படுத்துவனவாக உள்ளன. கோபாலையர் பதிப்பித்த நூல்களின் அடுத்தடுத்த வெளியீட்டில் நேர்ந்துள்ள குறைபாடுகளுக்கு வெளியீட்டாளர்கள், பிரதியைச் சரிபார்த்தவர்கள் ஆகியோரே பொறுப்பு.
இன்றைய நிலையில் தொல்காப்பியச் சேனாவரையம், சைவசித்தாந்த சாத்திரங்கள் மற்றும் அவற்றின் உரைகள், மணிப்பிரவாள நடையில் அமைந்த சமண நூல்கள், வைணவ உரைகள், வடமொழி இலக்கண மரபுகள் போன்றவற்றைப் பயில்வோர்க்கும் ஆய்வுசெய்வோர்க்குமான தேவைகளைப் பூர்த்திசெய்வனவாக இருப்பவை கோபாலையரின் இலக்கணப் பதிப்புகளே.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கோபாலையர் தம் பதிப்பிற்குள் அங்குலம் அங்குலமாக இயங்கியிருக்கிறார். மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயலாற்றியிருக்கிறார். மெச்சத் தகுந்த அவரது அபார நினைவாற்றல் நூல் முழுக்க வியாபித்துள்ளது. இதனால், பதிப்பாளுமை மிக்க ஒரு பேராசிரியராக அவர் மிளிர்கிறார்.
இலக்கிய வரலாறு என்னும் தலைப்பில் நிறையப்பேர் அரைத்த மாவையே அரைத்து புளிச்சேப்பம் வரவைக்கிறார்கள். இதை விட்டுவிட்டுத் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்பவர்கள் கொஞ்சம் உழைக்கவும் தயாராகி, பதிப்பு வரலாறு எழுதுவதில் கவனம் செலுத்தினால் அது தமிழுக்குப் பயனுள்ளதாக அமையும். இலக்கண வரலாறு என ஏற்கனவே வெளிவந்துள்ள சோம. இளவரசு, இரா. இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் இலக்கணப் பதிப்புகள் பற்றி அறியப் போதுமானவையாக இல்லை. எனவே, இலக்கணப் பதிப்புகளுக்கென 'இலக்கணப் பதிப்பு வரலாறு' ஒன்று எழுதப்படுமானால், கோபாலையர் போன்றவர்களின் பணியைத் தமிழ் உலகம் அறியும். பதிப்பு நேர்மையும் பதிப்பு நுட்பமும் மிக்க புதிய பதிப்பாசிரியர்கள் உருவாக வழி பிறக்கும்.
நன்றி: காலச்சுவடு ஜனவரி 2007
http://www.kalachuvadu.com/issue-85/pathippu06.asp