முத்தொள்ளாயிரத்தில் அஃறிணை உயிர்கள்


     
Dr. N. ARULMURUGAN
முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் காலமாகப் படித்துப் பூரித்துப்போக முடியுமா? முடியும் என்பதற்கான உதாரணங்களுள் ஒன்றுதான்  முத்தொள்ளாயிரம். இலக்கியத்தில் புனைவு இருக்கலாம். ஆனால், புனைவே இலக்கியமாக இருப்பதும் புனைவிலக்கியமாக இருப்பதும் முத்தொள்ளாயிரத்தின் தனிச் சிறப்பு. முத்தொள்ளாயிரம் என்பது ஒரு தொகுக்கப்பட்ட நூல் என்பதும் அதில் கடவுள் வாழ்த்தோடு 109 பாடல்கள் கிடைத்துள்ளன என்பதுமான அதன் பெயர்க்காரணம் முதற்கொண்டு கட்டமைப்பு மற்றும் எண்ணிக்கை பற்றிய புனைவுகள் வரை இதில் அடக்கம்.


ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்   --தொல்.செய். 198

என்று தொல்காப்பியர் சொன்னாலும் சொன்னார். முத்தொள்ளாயிரம் முழுக்க செய்யுளியல் மரபு என்னும் பெயரால் அடுக்குகிற புனைவுகள் அநேகம். 
     
            மூவேந்தர்தம் நாடு நகரங்கள், அவற்றின் வளம், படைச் செருக்கு, போர்த்திறம், வீராவேசம், வெற்றிக் களிப்பு ஆகியவற்றை முத்தொள்ளாயிரப் பாடல்கள் பண்ணிப் பண்ணிப் பேசுகின்றன. மூவேந்தர் உலா வருவதும் அவர்கள் மீது ஒருதலைக் காதலால் பெண்கள் பித்துப் பிடித்து அலைவதும் வெகுவாக இனிக்க இனிக்க இடம்பெற்றுள்ளன.

           மூவேந்தரின்  வீர இலக்கியமாகவும் போர் இலக்கியமாகவும் களம்பாடும் இலக்கியமாகவும் விளங்கும் முத்தொள்ளாயிரம் கைக்கிளைக் காமம் வழியும் இலக்கியமாகவும் புனையப் பெற்றுள்ளது. பிண வாடையை விட புனைவு வாடை மிகுதியாக வீசுகிறது. தொட்ட இடமெல்லாம் புனைவு கட்டமைக்கப்பட்டிருப்பதால் இயல்பைத் தேடி அலுக்கிறது மனம்.

      உலகத்துப் பொருள்களை உயர்திணை அஃறிணை என இரண்டாகப் பகுத்துச் சொல்வது தமிழ் மரபு. அவற்றுள் மக்கள், நரகர், வானோர் உயர்திணை என்றும் அவை அல்லாத உயிருள்ளனவும் உயிர் இல்லாதனவும் அஃறிணை என்றும் தமிழ் இலக்கண நூல்களில் வகைப்படுத்தப்படும்.

      முத்தொள்ளாயிரத்தில் வரும் தலைவி, தோழியர், அன்னை, சேரன், சோழன், பாண்டியன், பகைமன்னர், அவர்களது மனைவியர் முதலான உயர்திணை உயிர்கள் எல்லார்க்கும் உவப்பதாகும். எனவே, அவற்றை விடுத்து வாயில்லா ஜீவன்கள் எனப்படும் அஃறிணை உயிர்கள் மட்டும் இங்குக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. 

           முத்தொள்ளாயிரத்தில் பின்வரும் அஃறிணை உயிர்கள் பற்றி மிகுதியான புனைவும் ஒருசில இடங்களில் யதார்த்தமும் காணப்படுகின்றன. 

           பறவை இனத்தில் புள்ளினம், நாரை, கழுகு, பருந்து, கூகை, காடை, மயில் ஆகியன இடம்பெற்றுள்ளன. 

            விலங்கினத்தில் காராடு, நரி, மான், பசு, காளை, யானை, குதிரை, புலி ஆகியன கால்நடையாய்ச் செல்லும்; ஓடவும் ஓடும். குழந்தைகள் உயர்திணை; எனினும் முதிரா இளமையால் அஃறிணை முடிவு பெறும். அரவு, எறும்பு, சிலந்தி ஆகியவை ஊர்வன. வண்டு ஊரும்; பறக்கும். கெண்டை மீனும் இப்பி, சங்கு ஆகியனவும் நீரில் வாழ்வன.  தேங்காய்த்தேரை நுண்கிருமியாகும். பேய் அருவுருவமாகும்.

        பறவைகள் 7; விலங்கு வகையில் காலால் நடப்பன 9, ஊர்வன 4, நீர்வாழ்வன 3, நுண்ணுயிர் 1, அருவுரு 1 என ஏறத்தாழ 25 அஃறிணை உயிர்கள் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ளன.

பறவைகள்
          இளமையான செங்கால் நாரையைத் தூது விடுக்கிறாள் தலைவி(38). பறவைக் கூட்டங்கள் நீர்நிலையில் பூத்திருக்கும் செவ்வாம்பல் மலர்களைக் கண்டு தம் கைகளாகிய சிறகுகளால் தம் குஞ்சுகளை ஒடுக்கி வைத்துக்கொள்ளும்(14). கழுகுகளின் கூட்டம் கிள்ளியினுடய யானை வரும்போது ஆரவாரம் செய்யும்; பருந்துகள் வழியில் பரவும்(50). கூகைகள் பகை நாட்டவரின் குழந்தைகள் தூங்கத் தாலாட்டுப் பாடும்(52). கோட்டான்கள் பகையரசர்களின் மாடங்களில் இருந்து பேய்களுக்காகப் பாட்டுப்பாடிக் களிக்கும்(105). 

        காடை கூட்டிலிருந்து பறந்துபோனது தெரியாமல் வேடன் வெறும் கூட்டைக் காவல் காக்கிறான். அதுபோல தலைவியின் நெஞ்சு பாண்டியனைக் கூடச் சென்றது தெரியாமல் அன்னையோ தலைவியின் வெறும் உடல்கூட்டுக்குக் காவலிருக்கிறாள்(55). மயில்(90)  வழக்கம்போல் முருகனின் ஊர்தியாக வருகிறது.

      வண்டுகள் மொய்க்கும் இடம் பெரும்பாலும் மலர்கள்(18,65,78,…). ஓரிடத்தில் மட்டும் தலைவனுக்கு உவமையாக யாமத்தில் வருகிறது(41). 

விலங்குகள்
               வெறியாட்டு நிகழ்த்தும் களத்தில் காராட்டு இரத்தம் தூவப்படுகிறது(11). காளை(91) சிவனின் ஊர்தியாகவும் புலி(39) சோழனின் கொடியிலும் இருக்கின்றன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரையோரம் அம்பு தைத்த பெண்மான் ஒன்று ஆற்றின் கரைபுரண்டு அடித்துக்கொண்டுபோய்விடுமோ எனத் தயங்கி நிற்கிறது. இது தலைவியின் செயலற்ற தன்மைக்கு உவமையாகிறது(60).

           கிள்ளியின் பிறந்த நாளில் அந்தணர் பசுக்களுடன் பொன் பெற்றனர்(46). மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் மாலையில் வீடு திரும்பும்(83). காட்டுப் பசுக்கள் பாண்டியனின் இடி போன்ற முரசொலியைக் கேட்டு மிரண்டு ஓடும்(98). பசுக்கள் பாண்டியனின் பகைவர் நாட்டிலிருந்து போர் தொடங்குவதற்கு முன் வெளியேற்றப்படும்(106). 

          சேரனின் பகைவரது நாடுகள் காடுகள் ஆக நரிகள் கூடிப் பரவின(21). குள்ள நரி சேரனது வேலின் புலால் வீச்சத்திற்கு மகிழும்(18). அது சேரனின் போர்க்களத்தில் இறந்துபட்ட மன்னர்களின் அணிகலன்களை வாயால் இழுக்கும். அதனால் வாயில் புண் ஏற்படுவதால் ஊளையிடும்(20). நான்கு திசைகளிலும் ஓடி நரிகள் ஊளையிட கிள்ளியின் ஆண் யானை வரும்(50). பாண்டிய மன்னனால் வீழ்த்தப்பட்டவர்களின் கண் புருவங்களைப் பார்த்த ஒரு நரி அவற்றை வில்லாக நினைத்து பயந்துபோய் மற்ற நரிகளை அழைக்கும்(103).

        குதிரை ஏறிச் செல்லும் ஊர்தியாக மட்டும் 5 பாடல்களில் காட்டப்படுகிறது. ஒரு பாடலில் ஊர்தியாகிய குதிரை பாண்டியனைக் காணும் வகையில் மெல்ல நடக்குமாறு தலைவியால் கேட்டுக்கொள்ளப்படுகிறது(74). பாண்டியனின் கனவட்டம் என்னும் குதிரையின் கால்குளம்பில் பட்ட தெருப்புழுதியை எடுத்து மகிழ்ச்சியால் ஆடுவேனா? நீறாகச் சூடிக்கொள்வேனா? நறுமணப் பொருள்களோடு குழைத்துப் பூவிதழ்களால் உடலில் சித்திரம் வரைவேனா? எனத் தலைவி ஒருத்தி தனக்குத் தானே பேசிக் கொள்ளும்படியாக உலா வருகிறது ஒரு குதிரை(75). 

          ஓரிடத்தில் கம்சன் அனுப்பிய குதிரை வடிவ அரக்கனைக் கண்ணன் கொன்ற செய்தி பாண்டியன் மீது ஏற்றிச் சொல்லப்படுகிறது(93). பகை மன்னரது கிரீடங்களை உதைத்ததால் பாண்டியனது குதிரைகளின் கால்குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக் கல் போல இருந்தன(95). இங்கு குளம்புகளாகிய பன்மைப் பொருளுக்கு கட்டளைக் கல்லாகிய ஒருமை உவமையாய் வருகிறது.

       யானை என்றால் நம் கண்முன்னால் நிற்பது அதன் பிரம்மாண்டம். கீழ்க்காணும் 6 இடங்களில் மட்டும் யானையின் இயல்பான குணம் ஓரளவு வெளிப்படுத்தப்படுகிறது.

           வஞ்சிமா நகரத்தில் கள் குடியர்கள் கள்ளின் நுரையை வழித்தெறிய அதை யானைகள் மிதிப்பதால் அவ்விடம் சேறாகும்(15). செய்தியை மக்களுக்குப் பறையறைந்து சொல்ல சோழனிடம் யானைகள் இருந்தன(36). யானைகள் கிள்ளியால் பரிசிலர்க்கு வழங்கப்படும்(42). மந்தர மலையைப் போன்ற ஆண் யானைகளைக் கிள்ளியிடம் கொடையாகப் பெற்ற புலவர்கள் அதன்மேல் ஏறிச் சென்றனர்(46). பாண்டிய நாட்டின் மலைச் சாரல்களில் யானைகள் கிடைக்கும்(87). பாண்டிய நாட்டில் இளம் பெண் யானை தனது பெரிய ஆண் யானையின் மீது மலைச் சாரலில் வழியும் அருவி நீரைத் துதிக்கையால் உறிஞ்சித் தெளிக்கும்(109). 

ஊர்வன
        கிள்ளி பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக மக்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தினர். அதனால், சிலந்திப் பூச்சிகள் தம் கூடுகளை இழந்தன(46).  கிள்ளி வளவனுக்காக ஏங்குகிறது ஒரு பெண்ணின் நெஞ்சம். அதற்கு இருபக்கமும் எரியும் மூங்கில் குழாயினுள் சிக்கிக்கொண்ட எறும்பு உவமையாகக் காட்டப்படுகிறது(29).

         அரவகல் அல்குல்(34) தோழியுடையது. உயர்ந்த தலையைக் கொண்ட படமெடுத்து ஆடும் நாகம் வானத்து இடியோசைக்கு அஞ்சி புற்றுக்குள் மறைந்துகொள்ளும். அதுபோல் பாண்டியனின் சினவேலைக் கனவில் கண்டு பிற மன்னர்கள் அஞ்சுவர். காட்சிப் பொருளான பாண்டியனின் வேலுக்கு இடியோசையாகிய கேள்விப் பொருளை உவமை காட்டுவது கவனிக்கத்தக்கது(96). பாண்டியனின் இடிபோன்ற முரசொலியைக் கேட்டுப் பாம்புகள் மாறுபட்டு பயந்து ஓடும். அதுபோல் முரசொலி கேட்டு அஞ்சும் பகையரசர்கள் மலைக்கு அப்பால் தலைதெறிக்க ஓடி ஒளிவர்(98).

நீர்வாழ்வன 
            மீன்களில் கெண்டை பெண்களின் கண்களுக்கு உவமையாக ஓரிடத்தில் வருகிறது(28). மீன்கள் கரையில் காற்றை உறிஞ்சிய பின்பு நீரினுள் துள்ளும். சோழனின் காவிரி வளத்தைக் காட்டும் இந்த ஓரிடத்தில் மட்டும் மீனின் இயல்பு வெளிப்படுத்தப்படுகிறது(38).

        சிப்பி முத்துகளை ஈனும்(68). கடல் அலையால் உயர்மணல்மேல் ஏறி முத்தை ஈன்ற சங்கு மீண்டும் கடலுக்குள் போவதற்காக அலையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அதுபோலத் தலைவியின் மனம் பாண்டியனது காதல் வாசகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது(81). வெண்சங்குகளும் முத்துகளும் நீருக்குள் அகப்படும்(87). சங்கின் முதிராத முட்டைகள் சிதறிக் கிடக்கும் காட்சி முத்துகள் சிந்திக் கிடப்பதுபோல் தோற்றம் அளிக்கும்(88).

      தேரை என்னும் நுண்கிருமி இளம் தேங்காய்க்குள் சிக்கி ஓட்டைத் துளைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் துயரப்படும். அதுபோலத் தலைவி மனதிற்குள் துயரப்படுகிறாள்(27).

குழவி
         மகவு, குழவி என்பன உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும் என்பார் தொல்காப்பியர் (தொல். கிளவியாக்கம் 57). இதன் அடிப்படையில் முத்தொள்ளாயிரத்தில் வரும் குழந்தைகளும் இங்கு அஃறிணையாகக் கொள்ளப்படுகின்றன.

    சோழனின் பகைநாட்டவரின் பெண்கள் இலைச்சருகுகளின் மேல் ஈன்றெடுத்துப் படுக்கவைத்திருக்கும் குழந்தைகள் நள்ளிரவில் கூகைகளின் குழறலைத் தாலாட்டாய்க் கொண்டு தூங்கின(52). போர்த்தொழில் பழகாத பாலகனைப் பாண்டியனின்  முன்பு நிறுத்தி அவனது பகை மன்னரது மனைவியர் தங்கள் நாடுகளைத் தருமாறு வேண்டிக்கொண்டனர்(108).

பேய்கள்
       பால்பிரிந்து இசையா உயர்திணை குறித்துத் தொல்காப்பியம் கூறும்(தொல். கிளவியாக்கம் 58). இவ்வகையில் சேரும் பேய்கள் முத்தொள்ளாயிரத்தில் 5 இடங்களில் வருகின்றன. கடுங்குளிர் வீசும் பனிவாடைக் காற்று பேயோ என்னுமாறு தலைவியை வருத்துகிறது(40).  கிள்ளியின் களிறு பேய்மகளிர் ஆட வரும்(50). சோழனது மகன் போர் செய்த களத்தில் பகைவர்களின் மண்டையோடுகளை அகலாகவும் மூளையை நெய்யாகவும் குடலைத் திரியாகவும் கொண்டு பேய்கள் விளக்கேற்றின(51). பாண்டிய மன்னனிடம் தோற்ற அரசர்களது உயர்மாடங்களில் உள்ள கூகை, பேய் படுத்துத் தூங்கப் பாட்டுப் பாடிக் களிக்கும்(105). பாண்டிய மன்னனுக்கு உரிய முறையில் திறை செலுத்தாதவர்களின் நாடுகள் தாய்ப் பேய்கள் ஈன்றெடுத்த குழந்தைப் பேய்கள் வாழும் இடங்களாயின(106).

உவமையாய் வருதல்
       அரவு அல்குலுக்கும்(34) பகையரசர்களுக்கும்(96,98) உவமையாய் வருகிறது. பேய் பனிவாடைக் காற்றுக்கும்(40) குதிரை பாண்டியனின் பகையரசனுக்கும் உவமையாய் வருகின்றன. எறும்பு(29), பெண்மான்(60) ஆகியவை தலைவிக்கும் காடை(55), தேரை(27) ஆகியவை தலைவியின் மனத்திற்கும் வண்டு தலைவனுக்கும்(41) மீன் பெண்டிரின் கண்களுக்கும்(28) உவமையாகின்றன.

புனைவு நவிற்சி
       முத்தொள்ளாயிரப் பாடல்களில் இயல்பு நவிற்சியை விடப் புனைவு நவிற்சியே மிகுதி. 

கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும் 
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே                      நன்னூல் பொதுவியல் 409

என்னும் நன்னூல் நூற்பாவிற்குத் தொல்காப்பியத்துடன் முத்தொள்ளாயிரப் பாடல்களும் மூல காரணம் ஆகலாம். 

         யானையைப் பற்றிய புனைவுகள் உயர்வு நவிற்சி என்பதைவிடவும் புனைவு நவிற்சி என்னுமாறு தெறித்து ஓடச்  செய்வனவாக உள்ளன. கொல்யானை, மால்யானை, களியானை, மணியானை, கோட்டானை, எழில்யானை…. என யானைக்கான அடைமொழிகள் நீள்வதே இதற்குச் சான்று. முத்தொள்ளாயிரத்தில் பெண் என்னும் பேருயிர் எப்படியெல்லாம் புனைவுகளால் சீரழிக்கப்படுகிறதோ அத்தனை சீரழிவும் யானை என்னும் அஃறிணைக்கும் உண்டு. ஏறத்தாழ 27 இடங்களில் ஆண் யானையும் 4 இடங்களில் பெண் யானையும்(37,72,73,104) மொத்தம் 31 இடங்களில் புனைவுச் சேற்றில் சிக்கிக் கொண்டு பிளிறுகின்றன.

         பாண்டியனது போர்யானையின் தோற்றம் பின்வருமாறு புனைந்து சொல்லப்படுகிறது(101). ஆண் யானையின் தோற்றம் மலை; அதன் பிளிறல் கடல் ஒலி; மதநீரோ மேகம்; அதன் விரைவு காற்றை விடவும் அதிவேகம்; கொல்லும் தன்மையில் எமனே அதனிடம் கடன் வாங்க வேண்டும். இப்படி முத்தொள்ளாயிரப் பாடல் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மலை எப்படிக் காற்றைவிட அதிவேகமாய்ச் செல்லும் என எதிர்க்கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் அது இலக்கியம் ஏற்றுக்கொண்டுள்ள மரபு.

          மற்றொரு காட்சியைப் பாருங்கள்… பாண்டியன் உலா வரும் பெண் யானை தான் கண்குளிரப் பார்க்குமாறு மெதுவாகச் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால் அந்த யானையின் பெண் தன்மையே சந்தேகத்துக்கு உரியது என்கிறாள் ஒரு தலைவி(73). இன்னொரு தலைவியோ சோழன் உலாவரும் பெண்யானை சிறிதுகூட வெட்கம் இல்லாமல் நடந்து போகிறது; சோழ நாட்டில் பிறந்திருந்தும் அந்த யானைக்குப் பெண்தன்மையே இல்லை என்கிறாள்(37). 

              ஒரு யானை காற்றை விட வேகமாகச் செல்லும். இன்னொரு யானை நடக்கும்போது கூட மெதுவாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் பாலினம் சந்தேகத்துக்குரியது. என்னே ஒரு முரண்பாடான இலக்கிய மரபு! யானையில் கூட (மலை போன்று இருந்தாலும்) ஆண் என்றால் காற்றினும் வேகமாகச் செல்லும் என நம்ப வேண்டும்; பெண் என்றால் மெதுவாகச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அதன் பெண்தன்மை நம்ப முடியாதது; ஐயத்திற்குரியது!

          பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்ற சோழனின் ஆண் யானையும்(48) பிடிமுன்பு அழகழிதல் நாணி முடியுடை மன்னர்களின் குடல்களால் தன்னை மறைக்கும் பாண்டியனின் ஆண் யானையும்(102) தத்தம் பெண் யானைகளின் முன்பு வெட்கப்படுகின்றன என்று காட்டப்படுகிறது. 

    வெட்கம் என்னும் உணர்வு பெண் யானைக்கு உரியது; வெட்கப்படாவிட்டால் அது பெண்ணே இல்லை என்று வேறு இடத்தில் சொல்லப்பட்டதே! இங்கு ஆண் யானை எப்படி வெட்கப்படுகிறது என்று நீங்கள் கேட்கக் கூடாது. அது வேறு வெட்கம். இது வேறு வெட்கம். இப்படிப் புனைவுகளை - அதன் முரண்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில், எல்லாமே கேள்விக்கு அப்பாற்பட்ட சுவையான சித்திரங்கள். 

            புறத்திரட்டு நூலில் காமத்துப்பால் என்னும் பகுப்பில்  காட்டப்பட்டுள்ள பாடல்கள் மொத்தம் 65. அவை அனைத்தும் முத்தொள்ளாயிரப் பாடல்களே. பாடாண் திணையுள் புறப்புறக் கைக்கிளை என்னும் வகையைச் சார்ந்தவை இவை. மூவேந்தர் மீதான ஒருதலைக் காதலால் உருகும் உயர்திணை உயிரான தலைவி நாணிக் கோணி நிற்பதான செயல்பாடுகள் முத்தொள்ளாயிரம் முழுக்க வியாபித்துள்ளன. இதில் அஃறிணை உயிரான யானையின் பேருருவும் வெட்கப்பட்டு நிற்பதாகப் பாடுவது புனைவின் உச்சம். இது பிழைப்புக்காக வித்தை காட்டும் கோமாளி யானையை நினைவுபடுத்துவதாக ஆகிச் சிரிப்பை வரவழைக்கிறது.

        கைக்கிளையாகப் புனைந்து பாடும் இலக்கிய வகைக்குச் சரியான உதாரணம் முத்தொள்ளாயிரம் என்பதை நூலைப் புரட்டும் யாரும் அறிவர். ஒரு கிலோ கரும்பை ஒரே மூச்சில் தின்னலாம். ஆனால், ஒரு கிலோ சர்க்கரையைத் தின்ன முடியாது. அதுபோல்தான் முத்தொள்ளாயிரப் புனைவுகளும். 

             இயல்பு அலாதன செய்வதே நூலில் மிகுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அஃறிணை உயிர்களும் அதிலிருந்து விலக்கி வைக்கப்படவில்லை. அஃறிணை உயிர்களின் இயல்பை உவமையாகவேனும் பயன்படுத்திவிடுவது என்ற தீவிரத்துடன் செல்கிறது நூல். அவற்றின் இயல்பைச் சொல்லும் இடங்களும் இல்லாமல் இல்லை. இருப்பினும் அவை சிறுபான்மையே.
---

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை இணைந்து நடத்திய தமிழ் இலக்கியத்தில் முத்தொள்ளாயிரம் பெறும் இடமும் முத்தொள்ளாயிர மரபும் பயிலரங்கம்  


முதன்மை ஆதாரம்

முத்தொள்ளாயிரம் தெளிவுரையுடன் முனைவர் செ.உலகநாதன்  முதற்பதிப்பு 2000; மறுபதிப்பு 2006, சென்னை: முல்லை நிலையம்

துணைநூல்கள்

1. முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் முனைவர் கதிர்முருகு, முதற்பதிப்பு ஜூன் 2010; சென்னை: சாரதா பதிப்பகம்

2. புறத்திரட்டு எஸ். வையாபுரிப் பிள்ளை முதல்பதிப்பு 1938, இரண்டாம் பதிப்பு 1939, மறு அச்சு 2001 சென்னைப் பல்கலைக்கழகம்

3. முத்தொள்ளாயிரம் கட்டுரை ஆடத் தெரியாத கடவுள் விகடன் பிரசுரம்

4. தமிழ் இலக்கண நூல்கள் மூலம் முழுவதும் முதல்பதிப்பு 24 மார்ச் 2007 சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம் 

பின்னிணைப்பு

முத்தொள்ளாயிரத்தில் வரும் அஃறிணை உயிர்கள் பட்டியல்

1. பறவை
புள்ளினம் 14
2. நாரை 38 
3. கழுகு, பருந்து 50
4. கூகை, கோட்டான் 52, 105
5. காடை 55
6. மயில் 90

7. கால்நடையாய்ச் செல்வன ஓடுவன 
காராடு 11 
8. நரி 18, 20, 21, 50, 103
9. மான் 60 
10. பசு 46, 83, 98, 106 
11. காளை 91
12. யானை 15, 21, 36, 42, 46, 87, 109, 13, 17, 19, 23, 37, 40, 43, 48, 49, 50, 56, 61,                                              63, 70, 72, 73, 74, 76, 77, 84, 93, 94, 95, 99, 100, 101, 102, 104, 106, 107
13. குதிரை  2, 3, 26, 53, 74, 75, 92, 93, 95
14. புலி 39
15. குழந்தைகள் 52, 108
16. ஊர்வன 
அரவு 34, 96, 98
17. எறும்பு 29 
18. சிலந்தி 46
19. வண்டு 18, 41, 65, 78

20. நீர்வாழ்வன கெண்டை 26, 38
21. இப்பி,சங்கு 68, 81, 87, 88
22. நுண்கிருமி - தேங்காய்த்தேரை 27
23. அருவுரு - பேய் 40, 50, 51, 105, 106


8 comments:

  1. என்னே சிறப்புகள் ஐயா... நன்றிகள் பல...

    ReplyDelete
  2. இவ்வளவு நுணுக்கமாக ஒரு நூலை படிக்கமுடியுமா!?
    இல்லாவிட்டால் முரண்களை தொகுத்தல் அவ்வளவு எளிதா !?
    //யானையில் கூட (மலை போன்று இருந்தாலும்) ஆண் என்றால் காற்றினும் வேகமாகச் செல்லும் என நம்ப வேண்டும்; பெண் என்றால் மெதுவாகச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அதன் பெண்தன்மை நம்ப முடியாதது; ஐயத்திற்குரியது!//
    பெண்ணியம் பேசிய இவ்வரிகள் அருமை சார்!

    ReplyDelete
  3. முத்தொள்ளாயிரத்தின் அருமை அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஐயாவிற்கு அன்பு வணக்கம்
    ஒரு நூலை இவ்வளவு நுட்பமாக ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க முடியும் என்பதற்கு இப்பதிவு எடுத்துக்காட்டு. ஆய்ந்து படித்து எங்களைப் போன்றொரையும் பதிவின் வழியாகப் படிக்க வைக்கும் உங்கள் பணி மகத்தானது ஐயா. தொகுத்து வ்ழங்கிய பாங்கு மிகவும் கவர்கிறது. தொடருங்கள் ஐயா உங்கள் தேடல் பயணத்தை. உங்கள் அடிச்சுவட்டில் உடன் பயணிக்க நாங்களும் இருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. ஒரு நூலை எப்படி பகுத்து நுண்மையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை உணர்கிறேன்.முத்தொள்ளாயிரத்தில் உயர்திணைகள் குறித்து அறிய மனம் விழைகின்றது.முயற்சிக்கின்றேன்.நன்றி ஐயா.

    ReplyDelete
  6. சிறப்பான பதிவு அய்யா..

    ReplyDelete
  7. அய்யா என்னங்கய்யா?
    தமிழின் பழந்தமிழ் இலக்கியம் ஒவ்வொன்றையும் இப்படி நுணுகிப் பார்த்து ஒரு பெரு நூலை நீங்கள் எழுதவேண்டும் அய்யா.
    ”முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் காலமாகப் படித்துப் பூரித்துப்போக முடியுமா? முடியும் என்பதற்கான உதாரணங்களுள் ஒன்றுதான் முத்தொள்ளாயிரம்” - எனும் கூர்மையான இலக்கியவிமர்சனக் குரல் தமிழிலக்கியம் முழுவதற்கும் வேண்டும். அடுத்த பதிவு எப்போது அய்யா? அலை எப்போது ஓய? தலை எப்போது குளிக்க? அப்படியப்படியே குளித்துக்கொள்ள வேண்டும்தானே அய்யா? பேனாவைக் காயப் போட்டுவிடாதீர்கள். விரைவில் எழுதுங்கள்.. படிக்க நாங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete
  8. தங்கள் மேலான பார்வைக்கு ..
    http://kuzhalinnisai.blogspot.in/2014/12/blog-post_14.html

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்