திருமயம் பாறை ஓவியங்களைப் பார்த்த பின்பு ஏதேனும் பாறையைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் அதே போன்ற ஓவியங்களைத் தேடத் தொடங்கிவிட்டன. சித்தன்ன வாசலிலும் இதுவரை அறியப்படாத ஓவியங்கள் இருப்பதைக் கண்டபோது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
சித்தன்ன வாசல் புதுக்கோட்டையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சித்தன்ன வாசல் நுழைவாயிலின் இருபுறமும் பெருங்கற்கால(கி.மு.1500 – கி.பி. 500) கல்திட்டைகள், கல் பதுக்கைகள், கல்கிடை, கல்குவை, புதைகுழிகள் எனத் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. தற்போது சித்தன்ன வாசல் நுழைவாயில் வரவேற்பு வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. படகுக் குழாம், சிறுவர் பூங்கா, இயற்பியல் தத்துவப் பூங்கா, சிற்பக்கூடம், இசை நீரூற்று, தமிழன்னை சிலை ஆகியன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அறிவர் கோயில் ஓவியங்கள்
சித்தன்ன வாசல் பூங்காவைத் தாண்டிச் சென்றால் வடக்குப் பாறையின் மேற்குப் பக்கத்தில் அறிவர் கோயில் உள்ளது. இது குடைவரையாக அமைந்துள்ளது. அறிவர் கோயில் ஓவியங்களே உலகப் புகழ் பெற்ற சித்தன்ன வாசல் ஓவியங்களாக இதுவரை அறியப்பட்டு வந்துள்ளன.
அறிவர் கோயிலில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் Fresco-Secco முறையில் அமைந்தவை என்பர். கருங்கல் பரப்பைக் கொத்திப் பொலிவு செய்து சமப்படுத்தப்பட்டுள்ளது. பின்பு சுண்ணாம்புக் காரையால் மெழுகி வழுவழுப்பாகத் தேய்த்து வெள்ளைச் சுண்ணச் சாந்து பூசி அதன் மீது கண்கவர் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கான வண்ணங்கள் இயற்கைப் பொருள்களில் இருந்து பெறப்பட்டவை என்பர். இளங்கௌதமன் என்னும் சமண முனிவரால் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இவை புதுப்பிக்கப்பட்டதாகக் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். எனவே புதுப்பிக்கப்பட்டதற்கு முன்பு இருந்த மூல ஓவியத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தியது எனக் கூற வேண்டும்.
ஏழடிப்பட்டம் குகை
சித்தன்ன வாசல் மலையின் கிழக்குப் பக்கம் உள்ளது ஏழடிப்பட்டம் குகை.
ஏழடிப்பட்டம் குகையின் கீழ்ப்பகுதியில் 17 இருக்கைகள் வழுவழுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகளின் ஒருமுனையில் சற்று மேடாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள பிராமி எழுத்துகள் கி.மு. 2 - 3 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பர். கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இங்குத் தங்கி இருந்ததாகக் கூறுவர். இருக்கையைப் படுக்கை எனவும் சொல்வது உண்டு.
இந்த குகைக்குப் பாறையின் குறுக்கே மேற்கிலிருந்து கிழக்காக ஏறி இறங்கி வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும்.
ஏழடிப்பட்டம்: ஓவியங்களின் இருப்பிடம்
இதுவரை இந்த இருக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் மட்டுமே பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளின் மேல் விதானத்தில் ஓவியங்கள் இருப்பது யார் பார்வைக்கும் தென்படவில்லை. ஓவியங்கள் மங்கிய நிலையில் இருப்பதே அதற்குக் காரணம். ஏழடிப்பட்டம் சமணத் துறவிகளின் இருக்கையாக மட்டுமல்ல; ஓவியங்களின் இருப்பிடமாகவும் இருந்துள்ளது. நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என்பன அவை.
பிரிப்புப் பட்டை ஓவியம் (Dividing Band Paintings)
ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் தரைத்தளத்தில் பிரிப்பு இடைவெளிகள் உள்ளன. அதுபோலவே இருக்கைகளின் நேர்மேல் விதானத்திலும் பிரிப்புப் பட்டை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இருக்கைகளின் எல்லைகளை வரையறுப்பது போல இங்கு பலவண்ணப் பட்டை ஓவியங்கள் உள்ளன.
இவை பட்டுக் கம்பளம் அல்லது ஜமுக்காள முனைகளின் வண்ணக் கரைகளை நினைவுபடுத்துவனவாக உள்ளன.
இரவில் வெளிச்சம் தருவதற்காகவோ அதிகக் குளிர் மற்றும் வெப்பத்தைத் தடுப்பதற்காகவோ விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவோ விலங்குகளைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவோ உடல்நலம் பேணுவதற்காகவோ இவ்வாறு மேல்விதானத்தில் வண்ணப்பட்டைகள் வரையப்பட்டிருக்கலாம். வானவில்லின் வடிவத்தை நினைவுபடுத்தும் இந்தப் பிரிப்புப் பட்டைகளுக்கு இடையிலும் ஓவியங்கள் வரையப்பட்ட சுவடுகள் உள்ளன.கம்பித் தடுப்பு இருப்பதால் உள்ளே அருகில் சென்று பார்க்க இயலவில்லை.
இவை பட்டுக் கம்பளம் அல்லது ஜமுக்காள முனைகளின் வண்ணக் கரைகளை நினைவுபடுத்துவனவாக உள்ளன.
புள்ளி ஓவியம் அல்லது ஓவியக் கம்பளம் (Dotted Paintings)
இங்குள்ள இருக்கைக்கு மேல்விதானத்தில் புள்ளிகளால் ஆன ஓவியம் தென்படுகிறது. இது சமணரின் ஸ்வஸ்திகம் என்னும் பிறவிச் சக்கரத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது அறிவர் கோவில் அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள புள்ளிகள் இடையே பூக்கள் வரையப்பட்ட ஓவியக் கம்பளம் போன்றதாக இருந்திருக்க வேண்டும். இதன்மீது எழுதப்பட்டுள்ளதால் தெளிவற்றுக் காணப்படுகிறது.
கோண ஓவியம் (Multy Angular Drawings)
குகையின் இடைப்பகுதியில் பார்ப்பதற்கு மனித உருவம் போலவும் கோணங்கள் இணைந்தது போலவும் ஓர் ஓவியம் உள்ளது. இதன்மீதும் ஓவியத்தை மறைக்குமாறு யாரோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள். இது சமண சமயத்தின் ஏதோவொரு கொள்கையைச் சுட்டுவதாக இருக்கக் கூடும்.
சக்கர ஓவியம் அல்லது ஓவியச் சக்கரம் (Lotus Wheel Paintings)
கடைசி இருக்கைப் பகுதியில் வட்டமாக அமைந்த சக்கர ஓவியங்கள் பல உள்ளன. ஒன்று மட்டும் மிகத் தெளிவாக அடர்த்தியான செந்நிறத்தில் அமைந்துள்ளது.அறிவர் கோவில் கர்ப்பக்கிரக விதானத்தில் உள்ள தர்மச் சக்கரம் போல உள்ளது இது. கூர்ந்து நோக்கினால் இதில் பல தாமரை அடுக்குகள் தெரியவருகின்றன.
ஏழடிப்பட்டம் குகைக்குக் கீழிறங்கும் வழிக்குத் தென்புறம் செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் முதலையின் வாயைப் பிளந்து வைத்தது போல ஒரு குகையும் இதிலிருந்து சற்று மேல்நோக்கிச் சென்றால் ஒரு சாய்தளக் குகையும் வருகின்றன.
இரண்டு குகைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. ஏழடிப்பட்டம், முதலைவாய்க் குகை, சாய்தளக் குகை ஆகியவை மட்டுமல்லாது வேறு பல குகைகளும் சித்தன்ன வாசலில் இருந்திருப்பதாக, இருப்பதாகத் தெரிகிறது. இவற்றிலும் ஓவியங்கள் இருக்கக் கூடும்.
ஓவியம் தீட்டும் முறை
ஏழடிப்பட்டம் குகை, முதலை வாய்க் குகை, சாய்தளக் குகை ஆகியவற்றில் என்னால் கண்டறியப்பட்டுள்ள ஓவியச் சுவடுகள் அறிவர் கோயிலில் உள்ள ஓவியங்களின் சாயல் கொண்டவையே. ஓவியப் பாணியும் அதே முறையில் அமைந்ததுதான். காரைச் சுதையைப் பூசி அதன்மேல் வண்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்டும் முறை இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது.(படம் 8) முதலாவது அடுக்கான காரை பெயர்ந்து விழுந்தபின் வெண்சுதை மீது பாறையால் ஈர்த்துக் கொள்ளப்பட்ட வண்ணச் சாந்தின் நிறம் மட்டும் ஒட்டிக்கொண்டுள்ளது.
வண்ணங்கள்
ஏழடிப்பட்டம் குகையில் உள்ளவை பல வண்ண ஓவியங்களாக உள்ளன. சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காவிக் கற்கள், தாவரங்களின் சாறு முதலானவற்றில் இருந்து வண்ணங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
தாமரைகளே மிகுதியாக வரையப்பட்டுள்ளன. விலங்கு உருவங்களோ மனித உருவங்களோ வரையப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. அறிவர் கோயில் ஓவியங்கள் அளவிற்கு நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காண்பதற்கில்லை. எனவே, இவை அறிவர் கோயில் ஓவியங்களுக்குச் சற்று முந்தையது ஆகலாம். முதலாம் அடுக்கான காரை பெயர்ந்து விழுந்த நிலையில் மஞ்சள் வண்ணம் பாறையால் ஓரளவு ஈர்க்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. சிவப்பு வண்ணம் மட்டும் நன்கு ஈர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. பிற வண்ணங்களில் இளஞ்சிவப்பு(ரோஜா நிறம்) ஓரளவு தெரிகிறது. மற்ற நிறங்கள் எதுவும் அறியும்படியாகத் தெளிவாக இல்லை.
உதிர்ந்த ஓவியப்பூக்கள்
ஏழடிப்பட்டம் குகையில் தீட்டப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் சிதைந்துள்ளன. முதலாவது அடுக்கு வரை காரைபேர்ந்து அழிந்துள்ளது. ஓவியங்கள் மூலிகைத் தாவரங்களின் வண்ணங்களால் தீட்டப்பட்டதால் அவற்றின் சாறு அல்லது சாந்து மட்டும் பாறையில் சிதைவுகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளது.
இவ்வாறு இந்த ஓவியங்கள் சிதைந்துபோனதற்குப் பின்வரும் காரணங்களை யூகிக்கலாம்.
வண்ணங்களை நேரடியாகப் பாறையில் தீட்டாமல் காரையைப் பூசி அதன்மீது ஓவியங்கள் வரைந்ததால் காலப்போக்கில் பாறைக் கனிமங்களின் வளர்சிதை மாற்ற அசைவுகளால் காரை பெயர்ந்து விழுந்திருக்க வேண்டும். தண்ணீரைத் தெளித்து ஓவியங்களைக் காண முயன்றபோது ஈரத்தில் தொட்டாலே ஓவியச் சுதைகள் கையில் ஒட்டிக்கொண்டன. இதிலிருந்து பெருமழை பெய்தபோது தண்ணீர் விதானத்தில் வழிந்து ஓவியங்கள் ஊறி அழிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மழையில் ஊறியபின் வெயில் அடித்தால் காய்ந்து விடும். இவ்வாறு மழையில் ஊறும்போது புடைத்தும் வெயிலில் காயும்போது சுருங்கியும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் சுருங்கி விரிந்து ஓவியங்கள் உதிர்ந்து போயிருக்கலாம்.
சமண சமயத்தின் கோட்பாடுகளை - நெறிமுறைகளை விளக்குவனவாக இந்த ஓவியங்கள் இருந்ததால் வேற்று மதத்தவரின் சமயக் காழ்ப்புணர்ச்சியால் இவை அழிக்கப்பட்டிருக்கக் கூடும். பிற சமயத்தை ஆதரித்த அரசர்கள் சமண சமய ஓவியங்களான இவற்றின் அடையாளங்களை அழித்தொழிக்கும் வேலையைச் செய்திருக்கலாம்.
அறிவர் கோயில் ஓவியங்கள் பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஏழடிப்பட்டம் குகையில் இருந்த ஓவியங்கள் புதுப்பிக்கப்படாமலேயே விடப்பட்டுவிட்டன. அறிவர் கோயில் ஓவியங்களில் சமண சமயத்தின் நேரடித் தன்மை குறைவாக உள்ளது. யானை, மீன், அன்னப் பறவை, தாமரைத் தடாகம், மான், நடன மாது, அரசன், அரசி எனப் பொதுத் தன்மை மிகுந்த ஓவியங்களாக அவை உள்ளன. அல்லது அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டன. எனவே அவை புதுப்பிக்கப்பட்டன. ஏழடிப்பட்டம் குகையில் சமண சமயமே ஆட்சி பெற்றிருந்தது. சமண சமயத்தின் தத்துவ விளக்கங்களே ஓவியங்களாக இருந்ததால் இவற்றைப் புதுப்பிக்க யாரும் முன்வரவில்லை எனவும் கருதலாம்.
காலம்
அறிவர் கோயில் குடைவரையாக அமைக்கப்பட்டது. இதன் ஓவியங்கள் இளங்கௌதமனால் புதுப்பிக்கப்பட்ட காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. எனவே அவற்றுக்குரிய மூல ஓவியங்களின் காலம் அதற்கும் முந்தையது ஆகிறது. ஏழடிப்பட்டம் குகை இயற்கையாய் அமைந்தது. இங்குள்ள கல்வெட்டுகளின் காலம் கி.மு.2-3 மற்றும் கி.பி. 1, 3, 5, 7, 10 ஆகிய நூற்றாண்டுகளில் அமைகிறது.
இயற்கை என்பது செயற்கைக்கு முன்னர் தானே. இதன்படி ஏழடிப்பட்டம் ஓவியங்கள் அறிவர் கோயில் ஓவியத்திற்கு முந்தியவை ஆகின்றன. ஆக, இவை ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் முந்தியவை. இக்கருத்துடன் கல்வெட்டுகளின் காலத்தை ஒப்புநோக்க ஏழடிப்பட்டம் ஓவியங்களின் காலம் கி.பி. 5 – 7 ஆம் நூற்றாண்டு என அறுதியிடலாம். ஏழடிப்பட்டம் ஓவியங்கள் வரையப்பட்ட பின்பு அவற்றின் இருப்பும் அழிப்பும் அறிவர் கோயிலைக் குடைந்து ஓரளவு பாதுகாப்பான இடத்தில் ஓவியம் வரையத் தூண்டியிருக்க வேண்டும்.
ஏழடிப்பட்டம் குகையின் உருக்குலைந்த ஓவியப் பிரதிகள் தம் இருப்பை இன்னும் முற்றிலும் இழந்துவிடவில்லை. இந்தக் குகைக்குக் கம்பித் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் இவை இன்னும் முழுவதுமாக அழிந்துவிடாமல் உள்ளன எனலாம். இதற்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்த தொல்லியல் துறைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
எப்படி இருப்பினும் சித்தன்ன வாசல் ஓவியம் என்றால் அறிவர் கோயில் ஓவியம் மட்டுமல்ல; ஏழடிப்பட்டம் குகை ஓவியங்களையும் இனி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழடிப்பட்டம் சமணர் இருக்கைக்கு மட்டுமல்ல; ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது ஆகும். தொல்லியல் துறையானது தொழில்நுட்ப நிபுணர்கள், சமணம் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் தேர்ந்த ஓவியக் கலைஞர்களைக் கொண்டு மேலும் ஆய்வு செய்து இவற்றின் மூல ஓவியங்களை மீட்டுருவாக்கம் செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது ஆசை.
திருமயம், சித்தன்ன வாசல் ஆகியவற்றை அடுத்து பாறை ஓவியங்களை வெளிப்படுத்தும் எனது ஆய்வுப் பயணம் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் தொடரும்போல்தான் தெரிகிறது.
நன்றி:
THE HINDU, NEW INDIAN EXPRESS, nakkeeran.net, kalviseithi, தி இந்து, தினமலர், தினத்தந்தி, தினமணி, புதிய தலைமுறை
நன்றி:
THE HINDU, NEW INDIAN EXPRESS, nakkeeran.net, kalviseithi, தி இந்து, தினமலர், தினத்தந்தி, தினமணி, புதிய தலைமுறை
வணக்கம் அய்யா
ReplyDeleteமேம்போக்கான ,ஆடம்பரம் நிறைந்த இக்கால வாழ்க்கைச் சூழலில் தங்களின் இந்த முயற்சி தமிழரின் தொன்மையைமேலும் அடையாளப்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது .கல்லூரியில் காட்சி படுத்தியதை காண இயலவில்லை என்ற குறையை நீக்கியுள்ளது.நன்றி .
This comment has been removed by the author.
ReplyDeleteஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் தொல்லியல் ஆய்வுப் பயணம் வரலாற்றில் புதுத் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக உள்ளது. சித்தன்ன வாசல் சிலை அழகு என்று தற்போது ஏதோ ஒரு திரைப்பாடலின் இடையில் வரும் வரி சித்தன்ன வாசலில் சிலைகள் உள்ளனவா என்று வினா எழுப்புகின்றன. சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன. சிலைகள் ??? அருமையான ஓவியங்கள், ஓம் என்று ஒலிக்கும் தியான அறை சித்தன்ன வாசலில் மறக்க இயலாப் பதிவுகள். இவற்றுடன் தங்களது தேடலில் கிடைத்த புதிய ஓவியங்கள் வரலாற்றில் முக்கியஇடத்தைப் பெறுகின்றன. எட்டாம் வகுப்பில் சித்தன்னவாசல் ஓவியங்களுடன் தற்போதைய கண்டுபிடிப்பு உங்களின் வலைப்பக்க வழியாக எம் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு விருந்தாவது எண்ணி மகிழ்கின்றேன். உங்களின் ஆய்வுப் பணி தொடர வாழ்த்துகள் ஐயா. நன்றி.
ReplyDelete”நமது முந்திய வரலாற்றைத் தெரிந்துகொள்ளாவிட்டால், அதில் மீண்டும் வாழ, சபிக்கப்படுவோம்” என்று ஒரு பொன்மொழி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களால் உயிர்பெறுவது ஓவியங்கள் மட்டுமல்ல, நமது சமூகத்தின் முந்திய வரலாறும்தான். ஆக, புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை இனி எழுதும் யாரும் சங்க காலத்திற்கும் முந்திய பாறை ஓவியங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அந்த நீட்சியை உங்கள் தேடல் சாத்தியமாக்கி, சரித்திர சாட்சியுமாக்கியிருக்கிறது. தொடரட்டும் அய்யா உங்களின் தேடல், நாங்களும் தொடர்வோம். நன்றி வணக்கம்.
ReplyDeleteபீடு மிகு ஆய்வு...
ReplyDeleteபுகைப்படங்களை எடுத்த கோணத்தில் நீங்கள் யாரும் அணுக அஞ்சும் சரிவுப் பக்கங்களில் சென்று வந்திருகிறீர்கள் என்பது புரிகிறது...
ஐயாவிற்கு வணக்கம்
ReplyDeleteதங்களது கல்விப்பணியோடு வரலாற்றில் இடம்பெறப் போகும் இது போன்ற ஆய்வுப்பணிகள் காண்போரின் இமை மூட மறந்து அகன்ற பார்வையால் அசந்து நிற்கின்றனர். இத்தனை நுணுக்கமான ஆய்வு உண்மையாகவே வியக்க வைக்கிறது ஐயா. ஒரு அலுவலராய் இத்தனை நெருக்கடியிலும் இது போன்ற தேடல்கள் இன்றைய இளைய சமுதாயம் தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஐயா. இது போன்று ஆய்வுகள் விரியட்டும். புதையுண்ட வரலாறுகள் மீட்டுருவாக்கம் பெறட்டும். பகிர்வுக்கு நன்றி ஐயா.
ஐயா தங்களின் ஆய்வுகள் விரியட்டும். புதையுண்ட வரலாறுகள் மீட்டுருவாக்கம் பெறட்டும். பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : கடந்து சென்ற காலங்கள்
அன்பின் அய்யா,
ReplyDeleteமிக நீண்ட நாளுக்குப் பிறகு புதுகை பற்றிய அர்த்தமுள்ள பதிவைப் படித்தேன். இன்றிலிருந்து உங்கள் பதிவை நான் தொடர்கிறேன். இதுவரைத் தெரியாமல் இருந்தது எனக்கு இழப்பே.
நன்றி