’தேவன்’ யார்?


தேவன் உரைப்பத் தெளிந்தேன்



நீலகேசி அவையடக்கம்  ஐந்தாம் செய்யுளில் தேவன் என்னும் சொல் பயின்று வருகிறது. இது திருவள்ளுவரைக் குறிப்பதாகுமா? இதுபற்றிய பெருமழைப் புலவரின் ஆராய்ச்சி நுணுக்கம் எந்த அளவில் உள்ளது? என்பன பற்றி இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகிறது.

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நீலகேசி  சக்கர்வர்த்தி நயினார் பதிப்பாக1936இல் வெளிவந்தது. சமய திவாகர வாமன முனிவர் இதன் உரையாசிரியர் ஆவார். இதன் நூலாசிரியர் யார் எனத் தெரியவில்லை. இதை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரை உரையாசிரியராகக் கொண்டு நீலகேசி விளக்கவுரை என்னும் பெயரில் 1964இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

‘பழைய உரையாசிரியரால் உரையெழுதாமல் விடப்பட்ட செய்யுள் உட்பட எல்லாச் செய்யுட்களுக்குமே சொற்பொருள் உரை வகுத்தும் பழைய உரையாசிரியர் உரையிற்கண்ட நுணுக்கங்களைச் சிறிதும் எஞ்சாது தழுவிய விளக்கவுரை வகுத்தும்’ கழகம் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.


சோமசுந்தரனார் ஆராய்ச்சி முன்னுரை

சக்கரவர்த்தி நயினாரின் மூலப்பதிப்பில் உள்ள ஆங்கில ஆய்வு முன்னுரைக்குப் பதிலாக கழகப் பதிப்பின் நீலகேசி விளக்கவுரை நூலில் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் ஆராய்ச்சி முன்னுரை இடம்பெற்றுள்ளது. இதில் நூலின் தோற்றத்திற்குக் காரணம், நூலாசிரியர், திருவள்ளுவரும் நீலகேசியாசிரியரும், ஆசிரியரின் கனவு, நீலகேசி, பழையனூர் நீலகேசி, நூல் நுணுக்கம், நூல் நுதலிய பொருள் ஆகியன தொடர்பாகப் பல  செய்திகளைக் கூறுகிறார். அதன்பின் நூலில் உள்ள சருக்கங்களின் சுருக்கங்களை(பக். 29-73) உரைநடையாகத் தருகிறார். பின்பு தான் உரைவரைய நேர்ந்தது பற்றியும் தெரிவிக்கிறார்.

திருவள்ளுவர்: சமயம் சாராத பெருந்தகை

ஆராய்ச்சி முன்னுரையில் நீலகேசி நூலாசிரியரைப் பற்றிக் கூறவந்த பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் திருவள்ளுவர்மேல் ஒரு கை போடுகிறார். ‘பண்டைத் தமிழ்ச் சான்றோரின் சமயக் கொள்கைகளை ஒருசேரத் தொகுத்துத் தந்தவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரேயாவர். திருவள்ளுவனார் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறளினுங்காட்டிற் சிறந்த சமயநூல்தான் யாண்டுளது! திருக்குறளிற் காணப்படாத சமய நுணுக்கங்களை யாம் வேறெந்தச் சமய நூல்களிலும் கண்டதுமில்லை கேட்டதுமில்லை’ என்கிறார்(ப.13). இதன் மூலம் திருக்குறளைப் பண்டைத் தமிழரின் சமயம் பேசும் நூலாகவும் திருவள்ளுவரைச் சமயாச்சாரியராகவும் காட்ட விழைகிகிறார்.
    
   நூலாசிரியர் என்னும் தலைப்பில் இப்படிக் கருத்துக் கூறிய அவர், திருவள்ளுவரும் நீலகேசியாசிரியரும்(ப.21) என்னும் பகுதியில் நீலகேசியின் பழைய உரையாசிரியராகிய சமய திவாகர வாமன முனிவர் ‘ஆசிரியர் திருவள்ளுவனாரை ஆருகதர் என்றே கொண்டனர் என்று தெரிகின்றது. இங்ஙனம் கொள்வதில் வியப்பொன்றுமில்லை. என்னை? ஆசிரியர் திருவள்ளுவனாரைப் பெரும்பாலும் எல்லாச் சமயக் கணக்கர்களும் தத்தம் சமயத்தைச் சார்ந்தவராகவே காட்டமுயல்கின்றனர் அல்லரோ? அங்ஙனமே இவரும் முயன்றுள்ளார். ஆனால் வாய்மையில் ஆசிரியர் திருவள்ளுவனாரோ சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாச் சால்புடைய ஒரு பெருந்தகைமையாளர் என்பது தேற்றம்’ என்கிறார்.

இங்கு திருவள்ளுவரைத் தமது சமயத்தவராகக் காட்ட முயல்வதாகச் சமய திவாகர முனிவர்மேல் குற்றம் சுமத்தும் சோமசுந்தரனார் திருவள்ளுவரைத் தமிழரின் சமயக் கணக்கராக முன்பு தானே காட்ட முயன்றதை வசதியாக மறந்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல்  திருவள்ளுவரை ஒரு பொதுமனிதராகக் காட்டுவதன் மூலம் தன் கருத்தோடு தானே முரண்படுகிறார்.

திருவள்ளுவர் தம் சமயத்தவர் என்று சோமசுந்தரனார் சொந்தம் கொண்டாடினால் திருக்குறள் பண்டைத் தமிழர்தம் சமய நூல்களின் மணிமுடியாகக் கருதத் தக்கது! பிற சமயத்தவர் அவரைத் தம்மவர் என்று சொல்ல முயன்றால் திருவள்ளுவர் சமயம் சாராத பெருந்தகை! என்னே சோமசுந்தரனாரின் ஆராய்ச்சி!

தேவன் - திருவள்ளுவரா?

நூலின் அவையடக்கத்தில் ஐந்தாவது செய்யுள் ‘தேவன் உரைப்பத் தெளிந்தேன்…’ எனத் தொடங்குகிறது. இதில் வரும் ‘தேவன் என்னுஞ் சொல் ஆசிரியர் திருவள்ளுவனாரைக் குறிக்கும் ஆதலால் இந்நூலாசிரியர்(நீலகேசியின் ஆசிரியர்) திருவள்ளுவனாரிடத்தே பயின்ற மாணவர் என்று கருத இடனுளது. இக்கருத்தை ஏற்றுக்கொள்ளின் நீலகேசி ஆசிரியர் திருவள்ளுவர் காலத்தவர் என்று கொள்ளலாம்’ என்று கூறுகின்றார்(சக்கரவர்த்தி நயினார்) என எடுத்துக் காட்டியபின் ‘தேவன் என்று குறிப்பிடுஞ்சொல் மேற்காட்டிய பதிப்பாசிரியர் கூறுமாறு திருவள்ளுவரைக் குறிப்பதன்று’ என மறுக்கிறார் சோமசுந்தரனார். இதை, ‘இந்நூலில் அவையடக்கத்திற்கு யாம் கூறிய உரையினை ஓதியுணர்வோர் தெற்றெனத் தெளிந்துகொள்ளலாம்’ என்கிறார்(ப.22).

சோமசுந்தரனார் சொல்வதை நம்பி தெற்றெனத் தெளிவதற்காக நூலின் அவையடக்கம் ஐந்தாம் செய்யுளுக்குப் போய்ப் பார்த்தால் அங்கு அவர் ‘தேவன் என்பது யாரோ ஒரு தேவன் என்பதுபட நின்றது’ என எந்தத் தெளிவும் இல்லாத உரையைத் தருகிறார். நீலகேசியின் வரலாற்றை ‘ என் கனவில் ஒரு தேவன் தோன்றி உரைப்பத் தெளிந்தேன்’ என நீலகேசி ஆசிரியர் கூறுவதாக மூன்றாம் செய்யுளின் ஈற்றடியையும் ஐந்தாம் செய்யுளின் முதல் அடியையும் கொண்டுகூட்டிப் பொருள்கொள்கிறார் அவர்.

'திருவள்ளுவர் காலத்தோடு இந்நீலகேசியாசிரியர் காலத்தை இணைப்பது ஒருசிறிதும் பொருத்தமில்லை என்பதற்குச் சான்றுகள் பற்பல காட்டுதல் கூடும்’ எனக் கூறும் சோமசுந்தரனார்(ப.22) தம் கருத்தை நிறுவ எந்தச் சான்றையும் காட்டவில்லை. ஏனய்யா காட்டவில்லை என்று நமக்குள் கேட்டுக்கொண்டு தொடர்ந்தால் அதற்கு ஓர் அரிய விளக்கம் தருகிறார். அவர் தரும் விளக்கம் இதுதான்: ‘அங்ஙனம் (சான்று) காட்டுதல் மிகையென்று கருதுகின்றோம்’.

தேவன் உரைப்பத் தெளிந்தேன்

பெருமழைப் புலவர் ஆராயாமல் விட்டுச்சென்ற இந்த இடத்தில் நாம் சிலவற்றைத் தெளிவாக்கிக் கொள்வது நல்லது.
·        தேவன் என்னும் சொல் நிச்சயமாக இந்திரன் முதலான தேவர்களுள் ஒருவரைக் குறிப்பிடுவதாக இருக்க முடியாது. ஏனெனில் இச்சொல்லை எடுத்தாள்பவர் ஒரு சமணர்; எடுத்தாளப்படும் நூல் ஒரு சமண நூல்; எடுத்தாளப்படும் இடம் சமண நூலின் அவையடக்கம்.

    தேவன் என்பது திருவள்ளுவரைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம் எனச் சக்கரவர்த்தி நயினார் அனுமானமாகவே காட்டுகிறார். பல்வேறு நிபந்தனைகள் பூர்த்திசெய்யப் பட்டால்தான் இச்சொல் திருவள்ளுவரைக் குறிப்பதாக ஏற்றுக்கொள்ள முடியும் என அவரே ஒப்புக்கொள்கிறார்.
·      திருவள்ளுவர் காலத்தையும்    நீலகேசி தோன்றிய காலத்தையும் ஒப்பிட்டு நோக்க, இலக்கிய வரலாறுகளில் நீலகேசியின் கால ஆராய்ச்சிகளை நோக்க நீலகேசி ஆசிரியர் திருவள்ளுவர் காலத்திற்கு வெகுவாகப் பிந்தித் தோன்றியிருக்க வேண்டும் என்றே தெரிகிறது.
·             
    பொதுவாக திருவள்ளுவரின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கி கி.பி. முதல் நூற்றாண்டு வரையான எல்லைக்கு உட்பட்டதாக இருக்க நீலகேசி ஆசிரியரின் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையான எல்லைக்கு உட்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
·          
                   நீலகேசியின் முதல் இரண்டு செய்யுள்கள் கடவுள் வாழ்த்தாக உள்ளன. இவற்றில் வணங்கப்படுபவர் சமணரின் இறைவனாகிய அருக தேவன்.
·       
      அடுத்து மூன்றாவது செய்யுள் அவையடக்கச் செய்யுளாக இருந்தபோதிலும் அதிலும் அருக தேவன் பற்றிய குறிப்பு வருகிறது. இச்செய்யுளின் மூன்றாவது அடியில், ‘தண்டா மரைமேல் நடந்தான் தடந்தாள் வணங்கிக்… கிடந்தேன்’ என நீலகேசி ஆசிரியர், குளிர்ந்த தாமரை மலரின்மேல் நடந்தவனாகிய அருகக் கடவுளின் திருவடிகளை வணங்கி உறங்கிக் கிடந்ததாகத் தெரிவிக்கிறார்.

·        அதன்பின் தான் ஒரு கனவு கண்டதாகவும் அதில் பேய் நீலகேசி முனிச்சந்திர முனிவரின் அறம் கேட்டுத் தனது தீய உள்ளத்தை மாற்றிக்கொண்டு உலகமெங்கும் நல்வழிப்படுத்திய மாண்புடையவளாக விளங்கியதாகவும் நான்காம் செய்யுளில் தெரிவிக்கிறார்.

·            கனவில் இதை தேவன் உரைப்பத் தெளிந்தேன் என ஐந்தாவது செய்யுளில் முடிக்கிறார்.

மேற்கண்டவற்றிலிருந்து ‘அருகதேவனின் திருவடிகளை வணங்கி உறங்கிக் கிடந்தபோது கண்ட கனவில் நீலகேசி வரலாற்றை அருக தேவன் சொல்ல உறக்கம் தெளிந்தேன்; உறக்கம் தெளிந்து எழுந்த நான் கனவில் கண்டவற்றை ஒரு நூலாகச் செய்தேன்’ என நீலகேசி ஆசிரியர் கூறுவதாகக் கொள்ளவே எல்லாவித நியாயங்களும் இருக்கின்றன. 

தத்தம் சமய நூல்களைப் படைக்கத் தத்தம் கடவுளரே துணை இருந்ததாகப் பாடும் மரபு தமிழுக்குப் புதியதன்று. திருக்குறளின் ஆதிபகவன் முதற்கொண்டு சங்க காலத்தில் நாமகள், இறையனார் உடனிருந்து செய்யுள் இயற்றியதாகவும் பின்பு கடவுள் வாழ்த்தாக தத்தம் சமயச் செய்யுள்களை வைக்கத் தொடங்கியதாகவும் நம் இலக்கிய வரலாறுகள் பேசும். படிப்படியே அவரவர் பாடிய நூல்களின் தலைமைக் கடவுளரே வந்து அடியெடுத்துக் கொடுத்ததாக(இறையனார் களவியல், சுந்தரர் திருத்தொண்டத்தொகை, சேக்கிழார் பெரியபுராணம், கச்சியப்பர் கந்தபுராணம், அருணகிரியார் திருப்புகழ்) பாடுவது பாடல் சான்ற புலனெறி வழக்கம் ஆயிற்று என்பதையும் நாம் இங்கு சிந்தித்துப் பார்க்க முடியும்.

இவற்றிலிருந்து நீலகேசி அவையடக்க ஐந்தாம் செய்யுளில் குறிப்பிடப்படும் தேவன் என்பது ‘யாரோ ஒரு தேவன் என்பதுபட நின்றது’ என அனாமதேயமாக உரை வரைவது எவ்வளவு நம்பகத்தன்மை அற்றது என்பது சொல்லாமலே விளங்கும். அதே நேரத்தில் இங்குச் சுட்டிக் காட்டப்படும் தேவன் என்னும் சொல் திருவள்ளுவரைக் குறிக்காது; சமணக் கடவுளாகிய அருக தேவனையே குறிக்கும் என முடிவு செய்வதில் தவறில்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

தேவன் என்னும் சொல்லுக்கான பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் ‘ஆராய்ச்சி’ முன்னுரையைப் பார்க்கும்போது நீலகேசி நூலுக்கு உள்ளே இன்னும் என்னென்ன ஆராய்ச்சிகளை எப்படிச் செய்துள்ளாரோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
-------------

துணை நூல்கள் 

  •   நீலகேசி விளக்கவுரை பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, முதல் பதிப்பு டிசம்பர்1964

  •   நீலகேசி அ. சக்கரவர்த்தி நயினார் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு, சூலை 1984
  •   தமிழ் இலக்கிய வரலாறு மு.வரதராசன், சாகித்ய அகாடமி வெளியீடு, பதினாறாம் பதிப்பு 2001
  •   தமிழ் இலக்கிய வரலாறு ச.வே. சுப்பிரமணியன் , மணிவாசகர் பதிப்பகம் சென்னை, மூன்றாம் பதிப்பு  சூலை 2002
  •    தமிழில் இலக்கிய வரலாறு, கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை, முதல் பதிப்பு மார்ச் 1988, மறுபதிப்பு மே 2007

    ( நன்றி: உலகத் திருக்குறள் பேரவை புதுக்கோட்டை – குறள் மணம் கட்டுரைத் தொகுப்பு பிப். 2013)



4 comments:

  1. வணக்கம் அய்யா.
    பழுத்த பலாவை நோக்கியே ஈக்கள் மொய்ப்பது போல திருவள்ளுவரை ஒவ்வொரு மதத்தினரும் சொந்தம் கொண்டாடுவதில் வியப்பில்லை. இருப்பினும் அதற்காகவே திட்டமிட்டு அவரது வரலாறு அழிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது..அவரவர் எண்ணங்களில் தோன்றிய உரையைப் படிப்பதை விட மூல நூலைப் படித்து தெளிந்து கொள்ள வேண்டும் என நீங்கள் கூறிய வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..

    ReplyDelete
  2. மிக செழுமையான நடை ....
    தமிழில் பாண்டித்யம் உள்ளவர்களுக்கே பதிவிட்டமாதிரி...

    ரொம்ப தம்கட்டி படித்தேன் ... இடைசெருகல்கள் ஏராளம் உண்டு நம் இலக்கியத்தில், தமிழ் தொண்டிற்காவே இன்றுவரை நினைவுகூரப்படும் பலரும் இந்த சில்லுண்டி வேலையை பார்த்தது இப்போது கல்வி மறுக்கப் பட்ட சமூகங்களின் புதிய தலைமுறை கற்போர் தமது ஆய்வுகளின் மூலம் வெளிக்கொண்டுவந்திருகிறார்கள்.

    மொத்ததில் நல்ல பதிவு...
    திட்டமிட்டு சராசரிகளை கழட்டவே இந்த நடை என்பது எனது அவதானிப்பு
    சமூகம் இன்னும் படிக்க வேண்டியது நிறய இருக்கிறது...
    வரிகளுக்குள்ளே ஒளிந்து கொண்டு ரொம்ப க்ரூரமாய் சிரிக்கும் வர்ணத்தை பார்க்கிற திறன் எல்லோர்க்கும் வந்துவிட்டால் அது பெரிய வெற்றியாக இருக்கும்..

    அந்த வெற்றியை நோக்கிய ஒரு எளிய முதல் அடி இது என கருதுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பார்வைக்கு நன்றி.

      Delete
  3. அருமையான ஆய்வு. தத்தம் தவறான முடிவுகளை வள்ளுவர்மேல் திணிக்கும் “ஆய்வு” போக்கு, திருக்குறளுக்கே கேடு சேர்க்கும் என்று அறிந்தே செய்த ஆய்வாளர்களை அடையாளம் காட்டும் ஆய்வு. உங்கள் நடை எளிமையாகத் தான் இருக்கிறது. ஆனால், இடையிடையே மிகஅதிகமாக எடுத்தாளப்பட்ட “ஆய்வுநடைகள்“தாம் சோர்வுதட்ட வைக்கின்றன. அவற்றின் சாரத்தை மட்டும எடுத்து உங்கள் நடையில் தந்துவிட்டு, மேற்கோள்வரிகளைப் பின்இணைப்பில் தந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதுபோலவே முதல்குறள் ஆய்வுகள் ஏராளம், ஆதி பற்றியும், பகவன் பற்றியும், மலர்மிசை ஏகினான் யார் எனவும், முதல் அதிகார பாடல்கள் முறைவைப்புப் பற்றியுமான ஆய்வுகளும் ஏராளம். அதில் ஒன்றாகத் தங்களின் ஆய்வும் நிலை நிற்கும். பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்