பாட்டனின் முதுகில் உப்புமூட்டை ஏறி
காதுகடித்துக் கிச்சுக் கிச்சு மூட்டி
கண்ணைப் பொத்தி விளையாடியதில்லை.
பாட்டியின் மடியில் பழங்காலத்து
ராஜாக் கதைகளை ரசித்தபடியே
தூங்கிப் போன அனுபவமில்லை.
தாத்தாவின் தடியை ஒளித்துவைத்து
மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கிப் போட்டு
முகஞ்சுழித்துக் காட்டி வாங்கிக் கட்டிக்கொண்ட
மகிழ்ச்சி கிட்டியதில்லை.
அம்மாயி அருகமர்ந்து
குழிவிழுந்த கன்னந்தாங்கிய
பொக்கைவாய்ச் சிரிப்புப் பொக்கிஷத்தால்
ஒரு முத்தச் சுகம் பெற்றதில்லை.
மாமாவோ மாமியோ
அத்தையோ மாமனோ
மடியில் தூக்கிவைத்துத்
தலைகோதி விட்டதில்லை.
சித்தப்பா பெரியப்பாவோ
சின்னம்மா பெரியம்மாவோ
தளர்ந்த நேரத்தில் தட்டிக் கொடுத்து
தைரியம் ஊட்டியதில்லை.
எல்லாரும் முகமற்றுப் போய்
உறவறுந்த அநாதை பூமியில்
பெற்றுப் போட்டு
எல்லாமாய் இருந்து
தத்துவம் கற்பித்தவள்
தாய்
சத்தியம் கற்பித்தவன்
தந்தை.
வணக்கம் அய்யா.
ReplyDeleteமனதை நெகிழ வைக்கும் கவிதை. அத்தனையும் அருமை அய்யா.
தாயும் தந்தையும் வாழும் போதும் வாழ்ந்து முடிந்த போதும் தெய்வம் தான். இதை எந்த ஒரு நாத்திகவாதியும் வேறொரு வடிவிலாவது ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எளிய நடையில் அழகான உறவுகளுக்கு வணக்கம் கூறியது சிறப்பு. நன்றி அய்யா..
நிறய பேசத் தூண்டும் கவிதை...
ReplyDeleteதாய்க்கும் தந்தைக்கும் ஒரு கவிதை அதன் தலைப்பு கடவுள் வணக்கம் என்பது உணர்வுகளின் உற்றுக்கண்ணை திறப்பது போல இருக்கிறது..
அருமை..
கருத்துள்ள வரிகள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மனம் நெகிழவைத்த கவிதை.நன்று.
ReplyDeleteஒவ்வொரு குழந்தைக்கும் அப்பா அம்மாதான் எல்லாரையும் அறிமுகப்படுத்துவதன் வழி, எல்லாருமாக இருக்கிறார்கள். மாதா பிதாவைக் காட்ட, இருவரும் குருவைக் காட்ட இவர்கள் மூவருமே தெய்வமாகிறார்கள் என்றாலும் முதலிருவர்தான் எல்லார்க்கும் தெய்வம். மூன்றாவது தெய்வம்.. அமைஞ்சாத்தான் உண்டு! தாயுமானவர் என்பார்கள்... தாயே எல்லாருமானதை நேர்த்தியான காட்சிக் கவிதையாக்கியிருக்கிறீர்கள்... கவிதையும் தொடர, இடையிடையே கனமான ஆய்வுகள்! வித்தியாச-விததியாசமான உங்கள் படைப்புகளைத் தந்துகொண்டே இருங்கள் அய்யா! நன்றி.
ReplyDelete