30 / 11 / 2017


நெடுஞ்சாலைகள் நீள்கின்றன
நிரந்தரமாய்ப் போவதற்கான
ஏற்பாடுகளுடன்

கட்டிழந்த வாகனங்கள்
பயணிகள் மீது
அகாலம் விதைக்கின்றன

வசதிக் குறைவான
சவக்கிடங்குகளில்
உயிர்கள் கடந்துபோகின்றன

வரிசையில் குவியும் இறப்புகளை
எரிக்கத் தடுமாறி
மூர்ச்சை அடைகிறது
மின்மயானம்

கலங்கிக் கலங்கிக்
கருமுகில் கவியும்
இணைகளின் கேவல்
உறவுகளின் ஓலம்


வீடு முழுக்க
மரண வாசனை
ஆறுதல்கள் தேம்புகின்றன

அம்மாவை
அப்பாவை
பறிகொடுத்த குழந்தைகள்
திடீர் திடீரென
அழுதழுது விளையாடுகின்றன

கண்ணீரைத் துடைக்கத்
தெம்பில்லாத கைகள்
மனசுக்கு பாரம்

கூடிக்கொண்டே போகிறது
தந்தையானவள்
தாயுமானவன்
எண்ணிக்கை

தன் மறுப்பை
மேலும் உறுதிப்படுத்துகிறதாய்
பக்தர்களைக் காவுகொண்ட
கடவுள்



1 comment:

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்