இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே...

   நிகழ்கால இடைநிலைகளில் ஆநின்று என்பது எப்போதோ மறைந்துவிட்டது. கின்று என்பதும் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. நிகழ்காலத்தைக் குறிக்க கிறு ஒன்று மட்டும் போதாதா? கின்றையும் சொல்லிக்கொடுத்துத்தான் தீரவேண்டுமா? என ஏக்கமாகக் கேட்டார் நண்பர். என்ன..., மக்கள் கின்றையும் கைவிடத் தயாராகிவிட்டார்களோ என்று அதிர்ச்சியாக இருக்கின்றதா? மொழியில் இதெல்லாம் நடப்பதுதான். ஆனாலும் கின்று அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.


இருக்கின்ற உலகம்


    இருட்டறையில் உள்ளதடா உலகம் / சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே... எனச் செய்யுளில் தளை கெடாமல் எழுத கின்று அவசியம் தேவை. செய்யுளை ஆராதித்த காலம் மலையேறிவிட்டது. சரி விடுங்கள். கின்று உரைநடைக்கும் தேவை. எடுத்துக்காட்டாக, அது வருகின்றது என்பதை அது வருகிறது என எழுதிவிடலாம். ஆனால்,  அவை வருகின்றன என்பதை அவை வருகிறன என கிறு இடைநிலை கொண்டு எழுத மொழியில் இடமில்லை. ஆம். அஃறிணைப் பலவின்பால் தெரிநிலை நிகழ்கால வினைமுற்றுகளில் இடைநிலையாக உள்ளது கின்று மட்டுமே. எனவே, அஃறிணைப் பலவின்பால் இருக்கும் வரைக்கும் தனித்து நிற்கும் கின்றும் நிலைத்து நிற்கும்.

   இப்படி மொழியில் பழையன கழிதலையும் புதியன புகுதலையும் நிலையின தொடர்தலையும் பதிவுசெய்வதுதான் இலக்கணம். மொழியைப் பயன்படுத்தும் அனைவருமே ஏதோவொரு வகையில் இலக்கணத்தை உள்வாங்கித்தான் உள்ளனர். தமிழில் இசைக்கும் நாடகத்திற்கும் இலக்கணம் இருந்தாலும் அனைவர்க்கும் பரிச்சயமானது இயற்றமிழ் இலக்கணம்தான்.

     நூல் என்றாலே அது இலக்கண நூல்தான் என்றொரு காலம் இருந்தது. அதற்குக் காரணம் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்வது நூல் என்னும் சிந்தனைதான். அகத்தியம், தொல்காப்பியம் போன்ற நூல்கள் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தன.

அகம் புறம்

   வரலாறு நெடுகப் புற வாழ்க்கையாகிய போர்களையும் போர் நிமித்தங்களையும் பார்க்கிறோம். ஆனால் இலக்கணங்களில் புற வாழ்க்கையை விட அக வாழ்க்கையே சிறப்பிடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத் தொகை நூல்கள் பதினெட்டில் எட்டுத்தொகையில் ஐந்து, பத்துப்பாட்டில் ஐந்து (நெடுநல்வாடை உட்பட) என அக நூல்களே அதிகம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் புற வாழ்க்கை பற்றிய பதிவாக புறத்திணையியல் என ஓர் இயல் மட்டும் இருக்க அக வாழ்க்கையை அறிய அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் எனக் குறிப்பாக நான்கு இயல்கள் வைக்கப்பட்டுள்ளன.

    பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என இரண்டு மட்டுமே புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல்களாக உள்ளன. அகப்பொருளுக்கோ இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள், களவியற்காரிகை, மாறனகப் பொருள் எனப் பட்டியல் தொடர்கிறது. திருக்கோவையார், பழனிக்கோவை ஆகிய நூல்களில் சில நூற்பாக்களும் அகப்பொருள் இலக்கணம் கூறுவனவாய் அமைந்துள்ளன. போரும் புறவாழ்வும் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட திருப்பங்களுடன், சூழ்நிலைகளுடன் கழிந்தன என்பதோ புற வாழ்க்கையில் அக வாழ்க்கையில் உள்ளது போன்ற நிலைத்தன்மையும் நீடித்த தன்மையும் இல்லாமல் போனதோ புறப்பொருள் இலக்கண நூல்கள் அதிகம் தோன்றாமைக்குக் காரணமாய் இருக்கலாம்.

யாப்புக்கடல்

    நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் எனத் தொல்காப்பியர் கூறியதாலோ என்னவோ வாழ்க்கைக்கான இலக்கணமாக இருந்த தமிழ் இலக்கணம் செய்யுளுக்கான இலக்கணமாகக் குறுக்கப்பட்டது. எழுதுவதெல்லாம் செய்யுளாக இருந்ததால் அவற்றுக்கெல்லாம் இலக்கணம் எழுத முற்பட்டனர். தமிழ் இலக்கண நூல்களில் அதிக எண்ணிக்கை கொண்டது செய்யுளுக்கான இலக்கண நூல்கள்தாம்.

    செய்யுள் நூல்கள் பெருகியமைக்குக் கற்றல் கற்பித்தல் முறைகளும் காரணம். அன்றைய காலத்தில் படித்தல் என்றால் அது கேட்டல்தான். ஓதலும் ஓதுவித்தலுமே கல்வியாக இருந்தது. அதனால்தான் நன்னூலில் பாடம் படித்தலின் வரலாறு எனப் பதிவு செய்யப்படாமல் பாடங் கேட்டலின் வரலாறு பதிவு செய்யப்பட்டது.

    ஏடும் எழுத்தாணியும் எல்லாராலும் கையாள இயலாத கருவிகளாய் இருந்தன. ஓலைச் சுவடிகளில் எழுதுவதன் தொழில்நுட்பச் சிக்கல் கேட்டலையே நிர்ப்பந்தம் செய்தது. கேட்டு நெட்டுருச் செய்து மீண்டும் சொல்வதற்கு செய்யுள்களே வசதியாக இருந்தன. வாய்ப்புக் கிடைத்தபோது (பல தலைமுறைகள் தாண்டிக் கூட) அவை ஏட்டில் எழுதி வைக்கப்பட்டன.

    பல்வேறு பாக்களும் பாவினங்களும் எழுத்தெண்ணிப் பாடப்பட்டதை யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, ஆகிய இலக்கண நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. புலவர் குழந்தையின் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியன தற்கால யாப்பிலக்கண நூல்கள்.

    மேலும், காக்கை பாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு, செய்யுளியல், செய்யுள் வகைமை, தக்காணியம், நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, நத்தத்தம், நல்லாறன் மொழிவரி, பரிமாணனார் யாப்பிலக்கணம், பல்காயம், பல்காப்பியம், பல்காப்பியப் புறநடை, பாடலம், மாபுராணம், பூதபுராணம் ஆகியவை மறைந்துபோன யாப்பிலக்கண நூல்களாக அறியப்படுகின்றன. மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, விருத்தப்பாவியல், வண்ணத்தியல்பு, அவிநயனார் கலாவியல், இந்திர காளியம், கல்லாடம், கல்லாடனார் கலாவியல், கல்லாடனார் வெண்பா, செய்யுள் வகைமை, திருப்பிறவாசிரியர் தூக்கியல், பொய்கையார் கலாவியல், மாமூலம், முள்ளியார் கவித்தொகை போன்ற செய்யுள் வகைமை கூறும் இலக்கண நூல்களும் இருந்துள்ளன.

பாட்டியல்


      சிற்றிலக்கியங்களின் வகைமைகளுக்கு இலக்கணம் கூறப் பாட்டியல் நூல்கள் தோன்றின. வெண்பாப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், அகத்தியர் பாட்டியல், மாமூலர் பாட்டியல், பாட்டியல் மரபு, தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், தொல்காப்பியனார் பாட்டியல், பருணர் பாட்டியல், பாட்டியல் மரபு, பிரபந்த தீபம், பிரபந்தத் திரட்டு, வாருணப் பாட்டியல் போன்றவை சிற்றிலக்கியங்களின் இலக்கணம் பேசுபவை.

அணி


      செய்யுள்களில் உள்ள நயங்களை எடுத்துரைப்பது அணி இலக்கணம். தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திராலோகம், குவலயானந்தம் ஆகியன அணியிலக்கணம் கூறும் நூல்கள்.

ஐந்தும் அதற்கு மேலும்

     எழுத்துகள் இத்தனை எனவும் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் இத்தனை எனவும் எண்ணிக்கை குறிப்பிட்டு இலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய நிலைமை வந்தது; தம் காலத்திய வளர்ச்சியை ஓரளவுக்கேனும் உள்ளீடு செய்யவேண்டி வந்தது. இதனை எழுத்தும் சொல்லும் உணர்த்தும் இலக்கண நூல்கள் நிறைவு செய்தன. நேமிநாதமும் நன்னூலும் அவ்வகையில் முக்கியமானவை. இலக்கணக்கொத்து, தென்னூல், கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இனிய தமிழ் இலக்கணம் போன்ற இலக்கண நூல் முயற்சிகளும் உண்டு.

    ஐந்திலக்கணமும் உணர்த்தும் நூல்கள் தொல்காப்பியம், அவிநயம்,  வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் ஆகியன. தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் என்னும் நூல்களும் உண்டு.

உரைநடையில் இலக்கணம்

    செய்யுளில் இலக்கணம் எழுதும் முறை தாண்டி காலத்திற்கேற்ப உரைநடையில் தமிழிலக்கணத்தை எழுதும் முயற்சி தோன்றியது. விசாகப் பெருமாளையர் அணியிலக்கணம், இலக்கணச் சந்திரிகை, செய்யுள் இலக்கணம், சித்திரகவி விளக்கம், பஞ்சலட்சணம் ஆகியவை பழைய மரபிலான உரைநடை இலக்கண நூல்கள். தமிழ் இலக்கணம் (ஆறுமுக நாவலர்), தமிழ் இலக்கண நூல் (ஜி.யூ.போப்), கவிபாடலாம் (கி.வா. ஜகந்நாதன்), இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் சொற்படலம் (ச.பாலசுந்தரம்), நற்றமிழ் இலக்கணம் (சொ. பரமசிவம்) ஆகிய நூல்கள் தமிழின் மரபிலக்கணத்தை உரைநடையில் கற்பிக்கும் பாடநூல்கள் போன்றவை.

     மு.வை. அரவிந்தனின் உரையாசிரியர்கள் என்னும் நூலில் இருந்து இலக்கண வளர்ச்சிக்கு நூலாசிரியர்கள் மட்டுமல்ல; உரையாசிரியர்களும் பங்களித்துள்ளதை அறியலாம். உரையாசிரியர்கள் ஏதோ தற்காலத்திய துணைவன்களை(Guide/Notes) எழுதித் தருபவர் போன்றவர்கள் என்னும் பார்வைதான் நம்மிடம் உள்ளது. கோனார் உரையும் இன்னபிற உரைகளும் நமக்குள் உருவாக்கிவிட்ட மனப்பான்மை அது. உண்மையில் உரையாசிரியர்கள் தொல்காப்பியம் போன்ற இலக்கண இலக்கிய நூல்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த –உரைத்த- ஆசிரியர்கள். மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்காக அவர்கள் எழுதிவைத்த உரைக்குறிப்புகள்(Notes of Lesson)தான் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் உரைகள் எனலாம். பின்வந்த இலக்கண நூலாசிரியர்கள் அவற்றைத் தம் நூல்களில் சூத்திரங்களாக வைக்கும் அளவிற்கு அவை செல்வாக்குப் பெற்றன. நன்னூல் சூத்திரங்களில் இத்தகைய உரையாசிரியர்களின் செல்வாக்கை வெளிப்படையாகக் காணலாம்.

     கல்வெட்டு உரைநடை, உரையாசிரியர்களின் உரைகள் போன்றவை செய்யுளின் ஓசையைப் பெற்றிருந்தாலும் செய்யுள் வேறு உரைநடை வேறு என்னும் உணர்வு அனைவர்க்கும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த பின்பு உரைநடை வளர்ச்சி சாத்தியம் ஆயிற்று. செய்யுளின் தாக்கம் குறைந்து பேச்சு ஊடகம் வளர்ந்தது; நல்ல செய்யுளைத் தேடிப்பார்க்கும் நிலை வந்தது. மொழியின் அளவில் இது சுருக்கம் என்றாலும் தமிழ்மொழி பரவலாக எழுதப்படும் ஜனநாயகத் தன்மை பெற்றது இப்போதுதான்.

ஆய்விலக்கணம்
  
  ஏராளமான நூல்கள் அச்சாக்கம் பெற்றன. தமிழ் மொழியின் அமைப்பையும் இலக்கணங்களின் வகைமைகளையும் ஆய்வு செய்யும் போக்கு எழுந்தது. தனி இலக்கண நூல்களைப் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் இருப்பினும் இலக்கண உள்ளடக்கத்தை முழுமை நோக்கில் எடுத்துச் சொல்லும் நூல்களும் உருவாயின. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், இலக்கண வரலாறு (சோம இளவரசு), இலக்கண வரலாறு (இரா. இளங்குமரன்), தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (சோ.ந. கந்தசாமி), தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி (ய. மணிகண்டன்), இலக்கண வரலாறு- பாட்டியல் நூல்கள் (மருதூர் அரங்கராசன்), அணியிலக்கண வரலாறு (இரா.கண்ணன்), தமிழ் அணியிலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் (இரா.அறவேந்தன்), தமிழ் வரலாற்று இலக்கணம் (ஆ. வேலுப்பிள்ளை), தமிழ்மொழி இலக்கண இயல்புகள் (அ.சண்முகதாஸ்) போன்ற நூல்கள் தமிழ் இலக்கணத்தை, இலக்கண நூல்களை வரலாற்று நோக்கில் அணுகியவை.
  
    மொழிநூல் (மு.வரதராசனார்), தமிழ்மொழி வரலாறு (தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்), தமிழ்மொழி வரலாறு (சு.சக்திவேல்), தமிழ்மொழி அமைப்பும் வரலாறும் (பெ.சுயம்பு) போன்ற நூல்கள் மொழியியல் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவை. இவ்வரிசையில் மேற்கத்திய மொழியியலைப் பிரதிசெய்ய நினைத்த பல முயற்சிகள் தோல்வியைத் தழுவின.

உரைநடைக்கான இலக்கணம்

       இது உரைநடைக் காலம். ஆனாலும் உரைநடைக்கான இலக்கணம் கூறும் நூல்கள் குறைவாகவே உள்ளன. வசனம் வந்த வழி (கு.அழகிரிசாமி), இக்கால எழுத்துத் தமிழ் (செ.வை. சண்முகம்), இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை (சு. சக்திவேல்), அயல்நாட்டவர்க்குத் தமிழ் கருத்துப் பரிமாற்ற இலக்கணம் (ஆ. கார்த்திகேயன்), சொல்லாக்கம் (இ.மறைமலை) முதலான நூல்கள் உரைநடை இலக்கணத்தைப் பதிவு செய்கின்றன. ஆனால் இவை போதுமானவை அல்ல. எம்.ஏ. நுஃமானின் அடிப்படைத் தமிழ் இலக்கணம் இந்த வகையில் ஒரு நல்ல முயற்சி.

     கல்வி வளர்ச்சியும் பத்திரிகைகளின் வளர்ச்சியும் எழுத்து மொழியைப் பரவலாக்கம் செய்தன. எழுதுவோர் எண்ணிக்கை பிழைகளையும் சேர்த்து அதிகரித்தது. எனவே, பிழைகளைக் களையும் நோக்கில் அ.கி. பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, மா. நன்னனின் தவறின்றித் தமிழ் எழுதுவோம், தமிழண்ணலின் வளர்தமிழ்:உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் முதலான நூல்கள் தோன்றின. சொல்வழக்குக் கையேடு, தமிழ்நடைக் கையேடு, மயங்கொலிச் சொற்பொருள் அகரமுதலி (ஹேமலதா), பயன்பாட்டுத் தமிழ் (அரங்க ராமலிங்கம், ஒப்பிலா மதிவாணன்), தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் (பொற்கோ), மொழித்திறம் (மகுடேசுவரன்) போன்றவை தற்காலத் தமிழ்நடையின் பிழைகளைச் சரிசெய்யும் நோக்கில் எழுந்த கைநூல்கள். இவை முழுமையான இலக்கண நூல்கள் அல்ல.

கணித்தமிழ்

    காலத்திற்கு ஏற்ற வகையில் பயன்பாட்டுத்தமிழ் இலக்கண நூல்கள் எழுதப்படவேண்டியுள்ளன. தமிழும் கணிமையும் (இராம.கி.), கணினித் தமிழ் (இல.சுந்தரம்), தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் (துரை. மணிகண்டன், த. வானதி), கம்ப்யூட்டராலஜி (காம்கேர் கே. புவனேஸ்வரி) போன்ற நூல்களும் சில கருத்தரங்கக் கட்டுரைகளும் கணித்தமிழ் பயன்பாடு குறித்து வெளிவந்துள்ளன. கணினித் தொழில்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் செய்துள்ள இத்தகைய முயற்சிகள் தவிர கணினிப் பயன்பாடு பரவலாகியும் அதற்கேற்ற இலக்கண நூல்கள் முழுமையாய் இல்லை.

    கையால் எழுதினால் அப்படியே பதிவாகவும் எழுதப்பட்ட நூல்களைக் கணினிக் குரலால் கேட்கவும் படிக்கவும் மொழிவழித் தொழில்நுட்பம் வந்துள்ளது. பேசினால் அப்படியே எழுத்தாக, சொல்லாகப் பதிவாகும் தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. எனவே, மொழி வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான புதிய தடத்தில் மரபிலக்கணங்களை உள்வாங்கி, காலத்திற்கேற்ப இலக்கண நூல்  எழுதப்பட வேண்டியுள்ளது.

இருக்கின்ற தமிழ்

     இன்றைய கதைக்கு, கவிதைக்கு, உரைநடைக்கு, அலைபேசி மொழிக்கு, அயல்மொழி உள்ளீடுகளுக்கு எந்த இலக்கண நியாயமும் செய்யாமல் நல்ல நூல் என்பதற்காக நன்னூலையே இன்னும் சர்வரோக நிவாரணியாகச் சந்திக்கு இழுக்கிறோம். நவீன வடிவத்தில் எது வந்தாலும் அதையும் ஏற்கனவே உள்ள இலக்கணப் போதாமைக்குள் அடக்கிக்காட்டி, அது இருக்கின்றது; இது இருக்கின்றது; எனவே, எல்லாம் எம்மிடம் இருக்கின்றது எனப் பிறரை வாயடைக்கச் செய்து தற்காலிகமாக நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் புதிய பரிமாணங்களுக்குத் தமிழ்மொழி தயாராகவே இருக்கின்றது. நாம் தயாரா? என்பதுதான் நம்மைக் கழிவிரக்கம் கொள்ள வைக்கும் கேள்வி.

விகடன் இயர்புக் 2018

1 comment:

  1. சிந்திக்க வைக்கும் பதிவு... அருமை ஐயா...

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்