உறக்கம் கலைத்த

முன்பனிக்கால நள்ளிரவு

நடுங்க வைக்கும்

வாடைக்காற்றில்

தூங்கு மூஞ்சி மரங்களும் 

விழித்துக்கொண்டன


புழுக்கத்தின் கதவைத் திறந்து

பலகணி வழியே

எட்டிப் பார்க்கிறது மனம்


விண்மீன்களைத் தின்று

ஏப்பம் விட்டிருந்தது வானம்


எத்தனையாவது எண்

எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுவது

எனத் தெரியாமல்

வானிலை அறிக்கையைத்

தூக்கிக்கொண்டு

தென்மேற்கில் அலைகின்றன

மறதி மேகங்கள்


கரோனா காலத்துக்கு முந்தைய

வழக்கமான நிறுத்தத்தில்

நின்று செல்ல முடியாத ஆதங்கத்தில்

கூவிக்கூவித் தேய்கிறது ரயில்


பதிலுக்கு 

உடைந்த கனவின் 

நம்பிக்கை போல

இந்த அகால நேரத்திலும்

கரைகின்றன காகங்கள்


ஆளரவமற்ற சாலையில்

தெரு நாய்களின் நடமாட்டம் கூட

காணோம்


தூக்கிச் சுமக்க முடியாத

துக்கத்தின்

ஈர பாரம் இறக்கி வைக்க

விழியில் நனையும் தூக்கத்தையும்

இழுத்துக்கொண்டு வரக்கூடும்

நிறைவேறா விருப்பமழை


சென்னை

21.12.2020

2 comments:

  1. கனம் பொதிந்த, செறிவான வரிகள் அய்யா.

    ReplyDelete
  2. அருமையான சொற்களில் கவிதை வானம் விரிகிறது ஐயா....💐💐💐💐

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்