வல்லிக்கண்ணன் கடிதங்கள் 4

வல்லிக்கண்ணன்                                                                            சென்னை 4-7-2001
........,

   வணக்கம். உங்கள் 27-6-2001 கடிதம்… நலம் அறிந்து மகிழ்ந்தேன். நான், அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் நலம்.


   நீங்கள் பெரியார் பல்கலைக் கழகம் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பது சந்தோஷமான விஷயம். அந்தப் பணி கிடைக்கக் காலம் உதவட்டும். வாழ்த்துகள். என் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டிருப்பதில் தவறு ஒன்றுமில்லை.


       புதுமைப்பித்தன் யாருக்குச் சொந்தம் என்பது ஜெயமோகன் போக்கினால் எழுந்த பிரச்சினை இல்லை. ‘காலச்சுவடு’ கும்பலின் பணத் திமிர் – வியாபார மோகம் பண்ணுகிற வேலை அது. பு.பி. எழுத்துக்களின் முழு உரிமையையும் ‘காலச்சுவடு’ பெற்றிருக்கிறதாம். பு.பி. எழுத்துக்களை புத்தகங்களாக அச்சிட்டு ரூ.250/- 200/- என்று விலை வைத்து வெற்றிகரமாக வியாபாரம் பண்ணுகிறது. இளையபாரதி என்பவர் புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பெயரில் நண்பர்கள் துணையோடு, புத்தகங்கள் வெளியிடுகிறார். இதுவரை 18 புத்தகங்கள் பிரசுரித்திருக்கிறார். அவற்றில் ஒன்று பு.பி. மனைவிக்கு எழுதிய கடிதங்கள் ‘கண்மணி கமலாவுக்கு’ 2-ம் பதிப்பு. முதல் பதிப்பு வெளியிட்டவரும் இளையபாரதி தான். அதற்கு கமலா விருத்தாசலத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்றிருக்கிறார். இப்போது 2-ம் பதிப்பு வெளியிட்டிருப்பது சட்டப்படி குற்றம்; அது கூடாது. அச்சிட்ட புத்தகங்களை அழித்து விட வேண்டும் என்று ‘காலச்சுவடு’ கும்பல் (சுந்தர ராமசாமி மகன் கண்ணனும் பிறரும்) வழக்கு தொடுத்திருக்கிறார்கள். பு.பி. மகள் தினகரி சொக்கலிங்கத்தை தூண்டிவிட்டு, ‘பு.பி. எழுத்துக்களை இளையபாரதி வெளியிடக் கூடாது. பு.பி. பெயரை வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்துவது குற்றம். இதுவரை வெளியிட்ட புத்தகங்களை அழித்துவிட வேண்டும்’ என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பு.பி. பெயரை உபயோகிக்கக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார் என்பது தான் இப்போதைய பிரச்சினை. பு.பி. படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்படுகிறது.  அன்பு – வ.க. 

7 comments:

 1. அய்யா வணக்கம்.
  தாங்கள் வெளியிடும் வ.க வின் கடிதங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். காலச்சுவடு என்ற பதிப்பகத்தை அதன் பதிப்புகளைப் படித்தவன் என்ற முறையில் மட்டுமே அறிவேன் என்பதைத்தவிர வேறெந்தத் தொர்பும் கொள்ளாதவன். காலச்சுவடு வெளியிட்ட புதுமைப்பித்தன் படைப்புகளைப் படித்திருக்கிறேன். திரு . வெங்கடாசலபதி அவர்களின் முன்னுரை ஒன்று போதும் அப்பதிப்பின் சிறப்பு என்ன என்பதை உணர்த்த!
  இளைய பாரதி அவர்களின் பதிப்பிற்கும் காலச்சுவடு பதிப்பிற்கும் உள்ள வேறுபாடு, உவேசா பதிப்பிற்கும் புலியூர் கேசிகன் உரையெழுதும் பதிப்பிற்கும் உள்ளது என்று சொல்வது சற்று குறைவான ஒப்பீடாகவே மனதுக்குப் படுகிறது. இரு பதிப்புகளுக்கும் வெவ்வேறு தேவை உள்ளது , முயற்சியுள்ளது , வாசகர் உள்ளனர் என்பதைக் காட்டவே இதைக் கூறினேன். தமிழில் படைப்புகளைப் பெரும்பாலானோர் கைக்காசைச் செலவழித்துத்தான வெளியிட வேண்டி உள்ளது. பெரும்பாலானவர்கள் அதன்பின் புத்தகம் வெளியிடுவது பற்றிக் கனவிலும் நினையார். இச்சூழலில் காலச்சுவடைப் பொருத்தவரையில், யாருடைய படைப்புகளையும் வெளியிடலாம் என அவரகளின் பதிப்புக்குழு பரிந்துரைக்குமானால், புத்தகங்களின் விற்பனைக் கேற்ப ராயல்டி வழங்கும் பதிப்பகங்களில் ஒன்று என்பதை எனது ஆசிரியர் வாயிலாக அறிந்திருக்கிறேன். புத்தகத்தின் உரிமையைக் கொடுப்பதில் இரு முறைகள் உள்ளன. ஒருமுறைப் பதிப்பிக்க மட்டும் உரிமை வழங்குவது. ஒட்டுமொத்தமாய்ப் பதிப்பிக்கும் உரிமை அனைத்தையும் பதிப்பகத்தாருக்கு வழங்கி விடுவது.
  இளையபாரதி அவர்கள் முதலிற் கூறிய முறையில் ஒரே ஒரு முறை பதிப்பிக்க உரிமைபெற்றிருக்க வேண்டும். ( இது என் யூகம் தான்) இல்லாவிட்டால் காலச்சுவடு அதற்கான உரிமையை தினகரி சொக்கலிங்கத்திடமிருந்து பெற்றிருக்க முடியாது. காலச்சுவடு அதற்குரிய மதிப்பூதியத்தை உரியவர்க்குக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். அதைவிட அதிகமாக இளையபாரதி கொடுக்க முன்வந்திருப்பாரானால் நிச்சயம் அந்த உரிமையை அவரே தக்க வைத்திருக்க முடியும். வணிக நோக்கில் இப்படி உரிமையைப் பெற்றபின் மறுபதிப்பை இன்னொரு பதிப்பகம் வெளியிடக்கூடாது என அவர்கள் கோருவது நியாயமானதே! வ. க அவர்கள் கோபப்படவேண்டுமானானல் இளையபாரதிக்கு மறு உரிமையைக் கொடுக்காமல் காலச்சுவடிற்குக் கொடுத்த தினகரி சொக்கலிங்கத்திடம் தான் கோபப்பட வேண்டும். தயவு செய்து இதன் உள்ளோடும் சாதி அரசியலைக் கவனிக்க வேண்டுகிறேன். புதுமைப்பித்தன் , வ.க., இளையபாரதி இவர்கள் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். இளையபாரதி அவர்களின் பெரும்பாலான பதிப்புக்கள் எச்சமூகம் சார்ந்தவர்களுடையது என அவதானிப்பவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். நிற்க, வ.க வின் கனவு நிறைவேறி விட்டது. புதுமைப்பித்தன் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டுக் காமாசோமா பதிப்பகங்களின் வெளியீடாக வந்துவிட்டன.
  இந்நிலையில் ,புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு நல்ல பதிப்பொன்றை வேண்டுவோருக்கு எந்தப் பதிப்பகத்தின் பதிப்பைப் பரிந்துரைக்கத் தமிழ்ப் படிப்பாளிகள் முன்வருவார்கள் என்ற வினாவை முன்வைத்து நிறைகிறேன்.
  நன்றி.
  ( பின்னூட்டம் நேரடியாகவே பதிவாகி விடுகிறது. அருள்கூர்ந்து கருத்துகள் எவர்மனதையும் புண்படுத்துவதாகக் கருதினால் நீக்கிவிட வேண்டுகிறேன்.)

  ReplyDelete
  Replies
  1. தோழர் ஜோ.வி என்ன ஒரு ஆழமான அலசல்..

   இதில் யார்மனமும் புண்பட விசயங்கள் இருப்பதாக தெரியவில்லை ..

   இவ்வளவு ஆழமான ஆட்கள் வந்தபின்னர் இனி நான் தொடர்ந்து பதிவராக இருக்கவேண்டுமா என்ன என்கிற கேள்வி வேறு எழுகிறது.. அருமை தோழர்

   Delete
  2. நண்பரின் ஆய்வுக்கு நன்றி. இதற்கு முந்தைய 29.5.2001 தேதியிட்ட வல்லிக்கண்ணன் கடிதத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதத்தைக் கொள்ள வேண்டும். அதில் அவர் புதுமைப்பித்தன் யாருக்குச் சொந்தம் என்னும் விவகாரம் குறித்து மூன்றாம் நபராகவே தகவல் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்தில் அதே பிரச்சினையைத் தன் கருத்தாகத் தொடங்கியவர் கடிதத்தை முடிக்கும்போது மூன்றாம் நபரின் கருத்தாக முன்வைக்கிறார்.எனவே, இப்பிரச்சினையில் வ.க. கோபப்பட்டிருக்கிறார் என்று முழுமையாகக் குற்றம் சாட்ட முடியாது.அப்போதைய பிரச்சினையைப் பதிவருக்குத் தெரிவிக்க முனையும்போது அவருக்கு இருந்த இளையபாரதி மீதான சாய்வு பிரதியில் வெளிப்படுகிறது எனலாம்.

   Delete
 2. அய்யா,
  தமிழ் இலக்கிய உலகின் போக்கினை ஒரு வராலாற்றுப் பின்னணியுடன் பதிவிட்டிருக்கிரீர்கள் - நன்றி

  அய்யா பெரியார் பல்கலைக் கழகம் கொடுத்து வைக்கவில்லை.. அவ்வளவே ..
  கல்வித்துறை கொடுத்துவைத்திருகிறது..

  ReplyDelete
 3. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

  ReplyDelete
 4. தங்கள் பதிவினைக் கண்டேன். அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்