வல்லிக்கண்ணன் கடிதங்கள் 16

வல்லிக்கண்ணன்                                              சென்னை 27-2-2002

அன்பு மிக்க ......, வணக்கம். 
         உங்கள் 16-2-2002 கடிதம் 20ஆம் தேதி வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சலட்டை வரவேயில்லை.
     உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோதனைகள், மாறுதல், உங்கள் முயற்சிகள், நம்பிக்கை பற்றி அறிந்தேன். வெற்றி கிடைக்கட்டும். வளர்ச்சி பெற்று முன்னேறுவதற்கு  காலம் துணைபுரியட்டும். வாழ்த்துகள்.      

       விண்ணப்பத்தில் என் பெயரை ‘ரெபரன்சுக்காக’ குறிப்பிட்டிருப்பது சரியே. தகவல் கேட்டு வந்தால், எழுதி அனுப்புவேன்.
    நீங்கள் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்ததை அறிய மகிழ்ச்சி. கவிதாசரண், பத்திரிகை நடத்த, பண உதவி கேட்டு அறிக்கை விட்டிருந்ததை சிற்றிதழ்களில் பார்த்தேன். எதிர்பார்க்கிற அளவுக்கு பணம் சேராவிட்டாலும் ஏதோ கொஞ்சம் வரக்கூடும். 
                    நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள்.
  புதுமைப்பித்தன் பதிப்பகத்தின் துணையான சந்தியா பதிப்பகம் (இளையபாரதி தொடர்பு உள்ளது) எனது பழங்கால மொழிபெயர்ப்பு நூல்களை புதுசாக, அழகாக வெளியிட்டிருக்கிறார்கள், இம்மாதம்.
   
              கார்க்கி கதைகள், கார்க்கி கட்டுரைகள் எனும் இரண்டு புத்தகங்கள்- 1950ல் திருநெல்வேலி, நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் பிரசுரித்தவை. ராபர்ட் ரூ ஆர்க் எழுதிய ‘தாத்தாவும் பேரனும்’ 1960ல் சென்னை பேர்ள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டது. இம் மூன்றும் வெளிவந்திருக்கின்றன.
       1952ல் ‘செவ்வானம்’ என்ற நாவல் – கோரநாதன் எழுதியது – துறையூர் எரிமலைப் பதிப்பகம் வெளியீடு ஆக வந்தது. அது இப்போது வல்லிக்கண்ணன் பெயரோடு, பத்மா பதிப்பகம் வெளியீடு ஆக வந்துள்ளது.
         1974ல் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த ‘கல்பனா’வில் ‘ஒரு வீட்டின் கதை’ என்ற நாவல் வெளியாயிற்று. அது இப்போது, இன்னும் இரண்டு குறு நாவல்களுடன், புத்தகமாக (பூங்கொடி பதிப்பகம் வெளியீடு) வந்துள்ளது.
              ‘சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்’ தொகுப்பு நூலை வெளியிட்ட ஞானியாரடிகள் மன்றம் அ.நா. பாலகிருஷ்ணன் இம் மாதம் ‘எழுத்து – சி.சு. செல்லப்பா’ என்ற தொகுப்பை (32 பக்கங்கள்) வெளியிட்டிருக்கிறார். தொகுப்பாசிரியர் - வ.க. நூறு ரூபாய் விலை வைக்க வேண்டிய நூலுக்கு 60 ரூபாய் தான் வைத்திருக்கிறார்.
                        ஆகவே, சந்தோஷங்களுக்குக் குறைவில்லை!
                                                                                                                                 அன்பு 
                                                                                                                                     வ.க. 

1 comment:

  1. கவிதாசரன் ?!
    தொடரட்டும் பதிவுகள்

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்