வாயுறை வாழ்த்து

    அண்மைக் காலத்தில் ஒருசில ஆசிரியர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகளைப் பற்றி அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறார்களோ என உங்களைப் போலவே நினைக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், அவர்களைப் பற்றிய ஊடக முன்வைப்புகள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. சம்பவங்களால் நகரும் நாட்கள் சந்தன மரங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.

மாணவர் எண்ணிக்கையை அதிகரித்த ஆசிரியர், உள்ளூர் வளத்தைப் பயன்படுத்திப் பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்திய ஆசிரியர், கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆசிரியர், பொம்மலாட்டம் மூலம் பாடஞ்சொல்லும் ஆசிரியர், விரல்களை வைத்தே வாய்பாடு கற்பிக்கும் ஆசிரியை, குழந்தைத் தொழிலாளியாக இருந்து ஆசிரியராய் முன்னேறிய ஆசிரியை, தன் சொந்தப் பணத்தைக் குழந்தைகளுக்காகச் செலவிடும் ஆசிரியர், சனி ஞாயிறு விடுமுறைகள் பார்க்காமல் கற்பித்தலே தவமென்று கிடக்கும் ஆசிரியர் என இப்படி ஆசிரியப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்கள்தான் அதிகம். ஆனால்  அவர்கள் பெறும் ஊடக முக்கியத்துவம் குறைவு. சொல்வாக்கு இல்லாதவர்கள்தான் செல்வாக்கைத் தேடி ஓடுவார்கள். நமக்கு அது தேவை இல்லை என்பது அவர்களது நிலைபாடு. 
       தெய்வங்களின் பாதத்தில் சூடம் கொளுத்திச் சாமி கும்பிடுவதுதான் வழக்கம். மாதா, பிதா, குரு தெய்வம் என்னும் வகையில் தெய்வமே குழந்தைகளின் பாதங்களில் சூடம் கொளுத்திச் சுட்டது கண்டு அனைவரும் அதிர்ந்து போனோம். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை அறியாத சாத்தான் ஏறிய தெய்வங்களைச் சகிப்பது எப்படி? அர்ப்பணிப்புடன் அன்புப் பணி செய்யும் ஆசிரியச் சமூகத்திற்கு ஏதோ திருஷ்டி பட்டுவிட்டது போல. சூடம் காட்டிச் சுற்றிப் போடுங்கள்.
  தனிமனித ஒழுக்கம் பேணுவதே நமது ஆதார பலம். அதை இழக்க யாருக்கும் சம்மதம் இல்லை. இருப்பினும் பண்படுத்த வேண்டிய நேரத்தில் படிப்பும் பகுத்தறிவும் கண்ணுறங்கும்போது உள்ளிருக்கும் மிருகம் வேட்டைக்குக் கிளம்பிவிடுகிறது. அன்பும் அறனும் மிருகத்தைக் கொல்லச் சக்தியற்றுப் போகும்போது பெற்ற பட்டங்கள் பிணந்தின்னும் சாத்திரங்களாகின்றன. பொருட்களைக் கையாளும்போது உணர்வு ஒரு துருவத்தில்தான் செயல்படுகிறது. மனிதர்களைக் கையாளும்போது இருபுறமும் உணர்வு உறவாடுகிறது. தனது எல்லை எதுவென குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஆசிரியன் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். நாம் இன்னும் நம் உடல மிருகத்தின் இரைதான் என்றால் நம் படிப்பும் சிந்தனையும் சமூகத்தின் வேரழுகல் நோய்தானே.
             நீங்கள் தவறு செய்தால் பதின்பருவ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். நீங்கள் காமம், வெகுளி, மயக்கம் கொள்வதால் உங்களுக்கு போதித்த ஆசிரியச் சான்றோர்களின் நாமம் கெடும். உங்கள் கேடும் பெருக்கமும் அன்பான ஆசிரியச் சமூகத்திற்கு அணி செய்யா. பணியால் நீங்கள் குழந்தைகள் வசமாகாதபோது பிணியன்றோ உங்கள் பீடுநடை? நீங்கள் வாலறிவன் என்றாலும் உங்களைக் கண்டதுமே குழந்தைகள் மனத்தில் கும்மிருட்டு சூழும் எனில் நீங்கள் கற்றதனால் ஆய பயனென்கொல்? அவர்கள் உங்கள் நற்றாள் தொழாஅர். உங்களை வானுறையும் தெய்வத்துள் வையார். 
       எங்கோ ஓரிருவர் தன்னிலை கடப்பதால் ஒட்டுமொத்த ஆசிரியச் சமூகமும் பழிச்சொல்லுக்கு ஆளாகிறது. இந்நிலை தொடர நமக்கு உடன்பாடில்லை. ஆசிரியச் சமூகத்தின்மீது படியும் கறை துடைத்தெறியப்பட வேண்டும். நடுநிலைக் கரைசலாக இருக்க வேண்டிய உங்களின் வேதிச் சமநிலை குலைந்ததால் ஏற்பட்ட இடமாறு தோற்றப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும். உங்கள் பண்பாட்டு இடைவெளிகள் நீங்கள் பெற்றுள்ள அறிவால், பயிற்சியால் நிரப்பப்பட வேண்டும். நீங்கள் குடல்வாலோ பித்தப்பையோ அல்ல; மனித சாரத்தின் நாடி நரம்புகள். நீங்கள் எதைச் சுவாசித்து வாசித்துக் கைமாற்றித் தருகிறீர்களோ அதையே சமூகத் தமனிகள் பிறருக்குக் கடத்துகின்றன. 
        ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் பிரிவு விருந்தின் காலைக் குதூகலம் மாலையில் கனத்த மௌனமாய்க் கவியுமே. அது ஏன் இப்போது பெரும்பாலும் இல்லை? ஆசிரியர் அறைகளுக்குள் ஏற்படும் விரிசல்களே மாணவ மனங்களைப் பிளவுபடச் செய்கின்றன. குழு மனப்பான்மை பூசல்களையும் வீண் விவாதம் அக்கப்போர்களையும் உண்டாக்கும். கற்றதோ கையளவு. மலையளவு தலைக்கனத்தின் மமதை எதற்கு? நீங்கள் ஆசிரியர் வருகைப் பதிவேட்டின் எத்தனையாவது இடத்தில் இருந்தாலும் சரி. குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்பது உங்களுக்கும் சேர்த்துத்தான். அமாவாசையில் நடந்த குருபெயர்ச்சியின் அழுக்குகள் ஆடிப் பெருக்கில் அடித்துக்கொண்டு போகட்டும். 
        குழந்தைகள் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவைகள் அல்ல. அவர்கள் படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியிருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவரின் அசைவையும் துல்லியமாகக் கணிக்கும் இயற்பியல் தராசுகள் அவர்கள்; நம் ஊடாட்டங்களை உள்வாங்கிப் பதிவு செய்யும் கண்காணிப்புக் கேமராக்கள் அவர்கள். தெரியாததை எக்ஸ் என்க என வைத்துக் கொள்வதுபோல அவர்கள் ஆசிரியர் உடனிருந்து குறைந்த பட்சம் ஓராண்டு கற்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அப்படியொரு நிலை வந்தால் நம்மில் எத்தனை பேரின் வாழ்க்கை அவர்களுக்குத் திறந்த புத்தகமாக வாசிக்கக் கிடைக்கும்? 
      மலர் வாய்பாடு மட்டும் சொல்லித் தந்து பயனில்லை. குழந்தைகள் மனிதராய் மலரும் வாய்பாட்டையும் சொல்லித் தந்தாக வேண்டும். உடல், உறவு, சமூகம், பொருளியல் எனப் பல சிக்கல்களோடு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஏதோ பகைநாட்டு மன்னர்களாய்ப் பாவித்து சரிக்குச் சரியாக நின்று போரிட்டுக்கொண்டிருக்கிறோம். உங்கள் அறிவுக்கும் வயதுக்கும் எள்ளளவும் இணையானவர் இல்லை அவர்கள். அவர்களிடம் தோற்றுப் போவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. மன்னிப்புதான் மாபெரும் தண்டனை. அந்த அரிய குணம் வற்றாத சுனையாய், வலிபோக்கும் நீரூற்றாய்ப் பொங்கட்டும்.
      குழந்தைகளின் நடைக்கும் பாவனைக்கும் முதல் நாயகன் / நாயகி நீங்கள்தான். நீங்கள் இல்லாத வேளையில் அவர்கள் அதிகம் விளையாடிப் பார்ப்பது டீச்சர் விளையாட்டைத்தான். உண்மையான ஆசிரியத்துவம் உள்ளவர் என்றால் அந்தச் சேட்டையை நீங்கள் ரசிக்காமல் இருக்கமாட்டீர்கள். உங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களுக்காக குழந்தைகளின் இயற்பெயரை விடுத்து ஏதேதோ பெயர்வைத்துப் பரிகசிக்காதீர்கள். உங்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் வைக்காத பெயர்களா என்ன? பட்டப் பெயர்களில் உள்ள பண்புப் பெயர்களையும் தொழிற்பெயர்களையும் வினையாலணையும் பெயர்களையும் எடுத்துக்காட்டி சுட்டிக்குழந்தைகளின் மனவானில் விண்மீனாய்ச் சிறகடிப்போம்.  
       எங்கள் ஆசிரியருக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்பது அவர்களின் அசாத்ய நம்பிக்கை. உங்களிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவுபெறும் குழந்தைகள் அந்த இறுமாப்புடன்தான் வளைய வருகின்றன. உங்களின் ஒளிவிலகல் அவர்களின் மெய்பிம்பங்களை மாயபிம்பங்களாய்ச் சிதறடித்துவிடக் கூடாது. தகு பின்னங்களாகவும் தகா பின்னங்களாகவும் வந்து சேரும் அவர்களை முழுக்கள் ஆக்குவதே ஆசிரிய மகிமை. வெட்டுக் கணங்களை விட்டொழித்து வெற்றுக் கணங்களைப் பொறுத்தருளி சேர்ப்புக் கணங்களுக்கு வந்தனை செய்வோம்.
    பதினெட்டு வயதுக்குக் குறைந்த கோடிக்கணக்கான பள்ளி வயதுக் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர்களாகிய நீங்கள்தான். முகமற்ற, குரலற்ற குழந்தைகளின் முகவரி நீங்களே. அப்பா அம்மாக்கள் சொல்லும் உண்மையை விட நீங்கள் வாய்மையிடத்துச் சொல்லும் பொய்மையையே அதிகம் நம்புகின்றன குழந்தைகள். நீங்கள் வரையும் அதிபரவளையங்களில் சிக்காமல் அநாயாசமாய் எக்ஸ் அச்சில் ஏறி ஒய் அச்சுக்குத் தாவும் அவர்களது காலக் கோடுகளின் வரலாற்றுத் திருப்பங்களைத் தீர்மானிப்பது நீங்கள் அல்லவா? 
        மூப்பும் பிணியும் உற்று நலிவெய்தும் பிறரைக் காட்டிலும் பொலிவும் புத்துணர்வும் உள்ளவராக நாம் இருப்பதற்குக் காரணம் நம்மைச் சுற்றிலும் உள்ள மழலை மலர்கள்தான். ஆண்டுதோறும் நம் வகுப்பறைத் தோட்டத்தில் பறந்து திரியும் அந்தப் பூஞ்சிட்டுகளின் குறுகுறுப்பும் குதூகலமும் நம்மைத் தொற்றிக்கொள்ளும். நம் வாழ்நாள் முழுக்கக் கூட வரும். பொதுவெளியில் உங்களுக்குக் கிடைத்த கௌரவத்திற்காக பிள்ளைகளின் கைதட்டலில் அரங்கமே அதிருமே அதுதான் உங்களின் அழியாத சாசனம். 
     நீங்கள் பணியிட மாறுதல் / பணி நிறைவு பெற்றுச் செல்வதைக் கேள்விப்பட்டு எத்தனை குழந்தைகளின் விழிகளில் ஈரம் கசிந்திருக்கும்? எங்களை விட்டுப் போகப்போறீங்களா டீச்சர் என எத்தனை மழலைகளின் ஏக்கப் பெருமூச்சில் உங்கள் குரல் உடைந்து அழுதிருக்கும்? நீங்களும் போய்ட்டா இனி எங்களுக்கு யார் இருக்கா? நீங்க போகாம இருக்க முடியாதா சார் எனக் கேட்கும் அந்தப் பிஞ்சுகளின் அப்பாவித்தனமான கேள்வி உங்களை உலுக்கவில்லையா? இந்தச் சவ்வூடு பரவல் நம் காலம்வரை கூட வருமே.
          தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் உங்கள் இயக்குவிசைதான் கைபிசைய வரும் மழலையைக் கைகூப்பும் மாமணியாய் உச்சிக் கோணத்திற்கு உயர்த்துகிறது.  உங்கள் அட்சரேகை தீர்க்கரேகைத் துருவங்களின் நிலப்படம்தான் குழந்தைகளின் ஆயுள்ரேகையைத் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்கள் மீதான மதிப்பகம் வீச்சகமாக மாறுவதில் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. கல்விக்கும் செல்வத்துக்கும் இடையே நடக்கும் போர் நம்மைக் காவுகொண்டுவிடக் கூடாது. உலகப் புகழ்பெற்ற தலைவர்களும் அறிஞர்களும் தங்கள் பணிநிறைவுக்குப் பின்னர் ஆற்ற விரும்பும் பணி ஆசிரியப் பணிதான்.
 அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலியன கைவிட்டுக் கொள்வோர் கொள்வகை அறிந்து மனம் கொள்ள ஒழுக்கமுடன் கல்வி ஒளிச்சேர்க்கை நடந்தால் நிறைகுடங்கள் உங்களுக்குப் பொல்லாங்கு இல்லை; நீணிலத்தில் நீங்கள் வெல்லாததில்லை. எப்போதோ எழுதிய ஆத்திசூடியை இன்னும் எழுத்தறியாத மழலைகளுக்காகச் சொல்லிச்சொல்லி நல்வழிப்படுத்தும் அவ்வையின் அவ்வை ஒவ்வொரு செப்டம்பர் ஐந்தாம் தேதியும் நம் சிந்தையில் ஓதும் மந்திரம் இதுதான்:  எவ்வழி நல்லவர் எம் ஆசிரியர், அவ்வழி நல்லை வாழிய நிலனே.
                                                                                நன்றி: காக்கைச் சிறகினிலே செப்.2016

6 comments:

  1. நல்ல பகிர்வு. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. i remember all the teachers name with initials who taught me from first standard to eleventh standard

    ReplyDelete
  3. i remember all the teachers name with initials who taught me from first standard to eleventh standard

    ReplyDelete
  4. பாடக் கலைச்சொற்களால் கட்டுரையை மெருகேற்றியிருக்கிறீர்கள் ஐயா. தங்களின் ஆசிரியத்துவத்தை உள்வாங்கும் ஆசிரியன்களில் நானும் ஒருவன் என்பதில் பேறடைகிறேன் ஐயா. இனிய ஆசிரிய தின வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  5. நல்ல ஆசிரியாக எனை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் குழந்தைகளின் அம்மாவாக வாழ்கின்றேன்....தங்களின் கட்டுரை மேலும் செயல் பட ஊக்கமளிக்கின்றது அய்யா...நன்றி.

    ReplyDelete
  6. “ஆசிரியப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்கள்தான் அதிகம்” உண்மைதான் அய்யா. வளமான படிப்பின் சாரத்தை வரிகள்தோறும் கண்டேன். இந்தப் படிப்புத்தான் இன்றைய ஆசிரியர்களிடம் குறைந்து வருகிறது அய்யா. எனினும் இன்னும் ஆசிரியர்களிடம்தான் நாம் நம்பிக்கை வைக்க வேண்டியுள்ளது. சமூகம் அப்படிக் கீழ்நோக்கிப் பாய்கிறது. இதை நிமிர்த்த ஆசிரியர்களின் கையும் மனமும் உயரவேண்டும். உயரும். மீண்டும் நல்லதொரு கட்டுரைக்கு நன்றி அய்யா.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்