கனவுக்குள் வரவேண்டும் கல்வி


        புதிய கல்வியாண்டு தொடங்குகிறது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. தேர்ச்சி விகிதக் குறைபாடு / அதிகரிப்பு குறித்தும் மாநில / மாவட்ட அளவிலான இடங்கள் குறித்தும் அலசல்கள், ஆய்வுகள் நடக்கின்றன. எங்கு பார்த்தாலும் இது பற்றித்தான் பேச்சு. சுமார் இருபது லட்சம் குடும்பங்களின் அடிவயிற்றில் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பெருநெருப்பு.
 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து என்ன படிப்பது என்பது குறித்துக் குழப்பமோ குழப்பம். தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கோ எத்தனை பாடங்கள் உடனடித் தேர்வில் எழுதுவது என்கிற தெளிவற்ற தெளிவு. இந்த இரண்டிலும் சேராமல் தேர்வுக்கே வராத பிள்ளைகள் குறித்ததே எனது கலக்கம், கவலையெல்லாம்.
       இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் 45000 சொச்சம் பேருக்கு 1200 சொச்சம் பேர் தேர்வுக்கு வருகை தரவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏறத்தாழ இரண்டரை சதவீதத்திற்கு மேல் வருகிறது. பத்துப் பதினோரு லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள மாநிலத்தில் இதையே உத்தேசமாகக் கொண்டால் ஏறத்தாழ 25000 பேர் கணக்காகிறது. மாணவியரை விட மாணவர்களின் வருகை இன்மையே அதிகம் எனத் தெரிகிறது. நம் காலத்தில் பல அப்பா அம்மாக்கள் சொன்னது போல இத்தனை பேரின் பெற்றோர்களுமா பள்ளிக்குப் போகக் கூடாது படிக்கக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள்? 
    இத்தனைக்கும் அரசு இக்கால கட்டத்தில் எத்தனையோ சலுகைகளை வழங்குகிறது. அதில் ஒருசில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கக் கூடும். ஆனாலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் பள்ளி செல்லாக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும் அரசும் ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் எடுத்துவரும் முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. 
         அதே மாவட்டத்தில் ஈ.எஸ்.எல்.சி. எனப்படும் எட்டாம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்கள் அதே எண்ணிக்கை சுமார் 1200 பேர். இதில் பெண்கள் நூற்றுக்கும் குறைவு. பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் தம் பதவி உயர்வுக்காகவும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்ற சட்டப்பூர்வ நெருக்குதலுக்காகவும் இத்தேர்வை எழுதுகிறார்கள். படிக்க வேண்டிய பருவத்தில் படிக்காமல் இடைப்பட்ட வயதில் தேர்வெழுதும் இவர்கள் ஒரே தடவையில் முடிப்பது அபூர்வம். பருவத்தே பயிர் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது புலம்பித் தவிக்கிறார்கள். துள்ளித் திரிகின்ற காலத்தில் இவர்களின் துடுக்கை அடக்கிப் பள்ளிக்கு வைத்திராத தந்தையாகிய பாதகர்களை இவர்கள் மன்னித்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. 
       தன்னைப் பார்த்துப் பின்னைப் பார் என்பார்கள். சொல்வார் விவரங்களை விட சொந்த அனுபவங்களே கைவிளக்கு. வீட்டில் இம்சை தாங்கவில்லை என்று நாலரை வயதில் பள்ளிக்கு அழைத்துக் கொண்டுபோனார் அப்பா. கையைத் தலைக்குமேல் ஒட்டியவாறு காதைத் தொடச் சொன்னார்கள். எட்டவில்லை. அதனால் பள்ளிச் சேர்க்கை ஓராண்டு தள்ளிப் போனது. ஐந்து வயது முடிவடைந்தது. திடீரென ஒருநாள் பள்ளியில் சேர்ப்பதாகச் சொன்னார் அப்பா. நான் பள்ளிக்குப் போகமாட்டேன் என அழுது அடம்பிடித்தேன். தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார். தலைமையாசிரியர் அறைக்குள் சென்றதும் அழுகை நின்றது. நானாகவே காதைத் தொட்டுக் காட்டினேன். சிரித்துக்கொண்டே ஏதோ பேசினார்கள். பள்ளியோடு அன்று தொடங்கிய உறவு தொப்புள்கொடி உறவு போலத் தொடர்கிறது. 
        அப்போது நாங்கள் ஜெகதாபியில் இருந்தோம். அக்கா ஐந்து முடித்து ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தது. எது செய்தாலும் எனக்கு இடது கைதான் முதலில் வரும். இதனால் என்னை நொட்டாங்கைப் பண்டாரம் எனக் கேலி செய்வர். வீட்டிலிருக்கும் நேரங்களில் அக்காவின் சிலேட்டில் நொட்டாங் கையால் ஆனாவும் ஈயன்னாவும் போடப் பழகியிருந்தேன். பள்ளியில் சேர்ந்தவுடன் சோத்துக் கையால்தான் எழுத வேண்டும் என்றார்கள். கொஞ்ச நாட்கள் சிரமப்பட்டேன். பின்பு சரியாகி விட்டது. ஒன்னாப்பு அந்தோணிசாமி வாத்தியாரால் படிப்பின்பால் ஈர்க்கப்பட்டேன். 
       அப்பா நடத்திவந்த ஓட்டலை யாருக்கோ விற்றுவிட்டார். தோட்டம் போட பொம்மனத்துப்பட்டிக்கு இடம் பெயர்ந்தோம். ரெண்டாப்பு முடித்திருந்தேன். அக்காவை ஏழாப்புடன் நிறுத்திவிட முடிவு செய்திருந்தார் அப்பா. மூனாப்புக்கு நான் மட்டும் தனியாகப் போகவேண்டி வந்தது. அஞ்சு கிலோமீட்டர் நடக்க வேண்டும். பயந்துகொண்டே நடந்தேன். ஒரு கிலோமீட்டர் தாண்டி கொத்தம்பட்டியார் வீட்டிற்கு முன்னால் போகும்போது நாய் துரத்தத் தொடங்கியது. அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். அடுத்த நாள் தனியாகப் போக முடியாது என அழுததால் அக்காவையும் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தார் அப்பா. என்னால் அக்காவுக்கு ஓராண்டுப் படிப்பு நீட்டிக்கப்பட்டது. 
         மூனாப்புப் படிக்கும்போது சுதந்திர தினத்தன்று காந்தித் தாத்தா நம்தாத்தா கருணை மிக்க பெருந்தாத்தா என்னும் பாட்டை மைக்கில் பாடினேன். பள்ளிக்கு வெளியே கடைவீதியை நோக்கிக் கட்டப்பட்டிருந்த குழாய் ஒலிபெருக்கி வழியாக என் மழலைக்குரல் காற்றில் தவழ்ந்தது. மிகவும் பெருமையாக இருந்தது. அதுமுதல் அன்றாடப் பாடங்களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் மிகுதியானது. வகுப்பில் நாந்தான் ஃபர்ஸ்ட். வாசிக்கச் சொல்லும் எந்தப் பாடத்தையும் வாசிக்க நான்தான் முந்திரிக்கொட்டையாய் முதலில் ஓடுவேன். மற்றவர்கள் என்னிடம் வாய்பாடு ஒப்பிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் அவ்வளவு செல்வாக்கு. 
      நான்காம் வகுப்பின் பாதியில் எனக்குக் கண்ணில் பிரச்சினை வந்தது. எழுத்துக்கள் மங்கலாகவே தெரியும். சில நாள்கள் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும். எழுத்தே தெரியாது. மண்டை வலிக்க ஆரம்பிக்கும். குமட்டல் வருவதுபோல் இருக்கும். அப்படியே படுத்து விடுவேன். பெரும்பாலும் ரெண்டு பாட வேளைகள் முடிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கும். சில நாட்களில் சாயங்காலம் வரும். அறிவியல் பாடம் எடுத்த செல்லையா சார் எனக்கு வகுப்பாசிரியர். என்னுடன் படித்து வந்த நரிகட்டியூர் சுப்பிரமணி என்னைவிட ரெண்டுமூனு வயசு மூத்தவன். செல்லையா சார்  என்னை அவனோடு அனுப்பி வீட்டில் பத்திரமாக விட்டுவிடச் சொல்லுவார். சில நாட்கள் பாதையே தெரியாது. அவன்தான் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டுப் போவான். 
   சில நேரம் பள்ளிக்குப் போகும் வழியில் புருவத்துக்கு மேலே வலி வந்துவிடும். என் தங்கை சின்னப்பிள்ளை நடுவழியில் கந்தக் கவுண்டர் குடிசை அருகில் வேப்பமர நிழலில் என்னைப் படுக்க வைத்துவிட்டுத் தனியாக பள்ளிக்குப் போகும். நான் வலியில் சோர்ந்து தூங்கி விடுவேன். மாலையில் பள்ளி முடிந்து வரும்போது வீட்டிற்குச் சேர்ந்து போவோம். இப்படியாக நாலாம் வகுப்பும் அஞ்சாம் வகுப்பும் நரக வேதனையில் கழிந்தது. இருந்தாலும் படிப்பை விட மனசில்லை. 
         ஆறாம் வகுப்பு வரும்போதுதான் விவசாயக் குடும்பத்தின் பாரம் தெரிந்தது. காலை மாலை இருவேளையும் மாடு கன்றுகளிடம் சாணி எடுக்கும் வேலை. சில நாள் கழிந்த சாணி தட்டுக் கூடையில் ஒழுகும். தரை மண்ணோடு வழித்துத்தான் எடுக்க வேண்டும். ஆடுமாடுகளை மேய்ப்பது, பராமரிப்பது  என வயது ஏற ஏற வேலைகள் அதிகரித்தன. வகுப்பு உயர உயரப் பாடங்கள் அதிகம் படிக்க, எழுத வேண்டியிருந்தது. பெரும்பாலும் பள்ளியிலேயே எழுதி முடித்து விடுவேன். பங்குத் தோட்டம் என்பதால் முறைப் பாசனம்தான். ஆளுக்கொரு வாரம் இரவு, பகல் என மாறி மாறி வரும். இரவில் அம்மாவுக்குத் துணையாகச் சென்று வயக்காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுவோம். சில நாட்கள் அங்கேயே  தூங்கிப் போய் விடுவேன். 
       அம்மாவுக்கு இடது பாதத்தில் கட்டை ஏறிச் சீழ் பிடித்துக் கொண்டது. பெரிய புண்ணாகி மூன்று நான்கு மாதங்கள் பெரும் அவஸ்தைப் பட்டது. அப்போது சமையல் வேலையும் நாங்களே செய்ய வேண்டி வந்தது. நெல் நடவு முதல்கொண்டு களத்திற்குக் கட்டுத் தூக்கிக் கதிர் அடித்து மூட்டை போட்டு அடுக்குவது வரையான வயல் வேலைகளும்  கரை போடுதல், பாத்தி நிரவுதல், காய்கறிச் செடி மற்றும் கடலை நடுதல், கம்பு, சோளம் விதைத்தல் முதலான தோட்ட வேலைகளும் இணைந்து செய்வோம். எள், காட்டுச் சோளம், துவரை போடுதல், தட்டை அறுத்தல், போர் வேய்தல், களத்தில் தவச தானியங்களைக் காய வைத்தல், சோளக்காட்டில் பரண் அமைத்து ஓட்டை டின் கட்டி அடித்தல், கவண்கல் எறிந்து பறவைகளை விரட்டுதல் எனப் பல வேலைகளும் சேர்ந்து செய்ய வேண்டியிருக்கும். எத்தனை வேலைகள் செய்தாலும் பள்ளிக் கூடம் போக நேரம் ஆகி விட்டால் சில நேரம் முறைத்துக்கொண்டு நிற்பேன். குட்டிச்சுவராட்டம் நிக்கிறான் பாரு என்ற வசையோ சம்சாரிக்குப் பொறந்தவனாடா நீ என்ற கேள்வியோ செவியின் சுவையுணரும். 
      பள்ளிக்குப் போவதற்கு முன், பள்ளிக்குப் போய் வந்தபின் எனவும் விடுமுறை நாட்களுக்கு எனவும் வேலைகளைப் பிரித்துக் கொண்டேன். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சும்போது நான்கைந்து பாத்திகளுக்கு ஒருசேர வெட்டி விட்டு ஒரு கேள்விக்கான விடையைப் படித்து முடிப்பேன். இப்படி அங்கங்கே கரைகள் கொத்தப்பட்டிருக்கும். மறுமுறை அப்பா பகலில் தண்ணீர் பாய்ச்சும்போது கண்டுபிடித்து விடுவார். தண்ணீர் பொத்துக்கொண்டு போய்ப் பாய்ந்து விட்டது என்று சமாளிப்பேன். வீட்டின் மேற்குப் பக்கம் இருந்த தோட்டத்தில் கிணறு வெட்ட ஆரம்பித்தோம். ஆயில் மோட்டார் இயக்கும் வேலையும் சேர்ந்து கொண்டது. பெல்ட் போட்டு ஓட்டும் பம்ப்செட் என்பதால் பெல்ட் தேய்ந்து அடிக்கடி அறுந்துவிடும். சரிசெய்து ஓட்டுவதற்குள் உடல் சோரும்.
 பெரும்பாலானோர் புதிய பாடப் புத்தகங்களுடன் நோட்ஸ் வாங்கிப் படிப்பார்கள். எங்களுக்குப் பெரும்பாலும் பழைய புத்தகங்கள்தான் கிடைக்கும். பத்தாம் வகுப்பு முதல் அடிக்கடி டெஸ்ட் வைப்பார்கள். ஒருபக்கம் எழுதி வீணான காகிதத்தையே மறுபக்கம் பயன்படுத்துவேன்.  பள்ளிக்குப் போகும் வழியில்தான் மொங்காமூட்டுப் பெரியசாமி வீடு. போம்போதும் வரும்போதும் கந்தக் கவுண்டர் சாலையும் பெரியசாமி தோட்டமும்தான் எங்களுக்கான வேடந்தாங்கல். பெரியசாமி வீட்டில் ராணி காமிக்ஸ், ராணிமுத்து, குங்குமச்சிமிழ், முத்தாரம், கல்கண்டு, குமுதம் முதலான புத்தகங்கள் வாங்குவார்கள். ராஜேஷ்குமார், ராஜேந்திரக்குமார், சாண்டில்யன் போன்றோர் எழுதிய நாவல்கள் கிடைக்கும். இவற்றைத் தினம் ஒன்றாக எடுத்துப்போய் வாசித்துவிட்டுத் திரும்பக் கொடுத்துவிடுவோம். ஆடுமாடுகள் மேய்க்கும் இடத்திலும் காடுகரையில் வேலை செய்யும் நேரத்திலும் என் கவனம் எல்லாம் படிப்பின் மீதே இருந்தது. 
    ஜெகதாபியில் படித்தபோது ஒருமுறை க்ரூப் போட்டோ எடுத்தார்கள். லந்தக் கோட்டையில் எட்டாம் வகுப்பில் போட்டோ எடுத்தார்கள். மூனு ரூபாயோ என்னமோதான். இரண்டையுமே வாங்கக் காசு கிடைக்கவில்லை. இப்போது பலரது படங்களின் தவிர்க்க முடியாத விருந்தினன் நான். இருந்தாலும் அந்த ஏக்க நிழல் எப்போதும் படமாய்க் கூட வரும்.
         கொடுத்த கடனை வாங்க முடியாமல் பால்வார்பட்டி பாலகிருஷ்ணனிடம் ஜெகதாபியில் இருந்த எலக்ட்ரிக்கல்ஸ் கடையை வாங்கினார் அப்பா. இதனால் ஏழாம் வகுப்பின்போது கடையைப் பார்க்கும் வேலையும் வந்தது. அப்போது லந்தக்கோட்டையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவோடு கடைக்கு வந்து திறந்து வியாபாரப் பொருட்களை எடுத்து வெளியில் வைத்துவிட்டு அவரிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு பள்ளிக்கூடம் போவேன். மாலையில் பள்ளி விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொண்டே வீட்டுப்பாடம் தொடரும். மாலையில் சில நாள் சைக்கிளை அப்பாவிடம் கொடுத்துவிட்டு நடந்தே வீடு சேர்வேன். அக்கா திருமணம் முடிந்து போன பின்பு மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன்.  
     காலையில் காட்டிற்குப் போய்விடுவதால் அம்மா சாயங்காலம்தான் சமைக்கும். இட்டிலி பணியாரம் பண்டிகைக்கு மட்டும். அரிசிச் சோறு அபூர்வமாகத்தான் கிடைக்கும். அம்பிளியைத் தவிர காலை மதியம் இருவேளையும் பெரும்பாலும் பழையதுதான்.  பழைய சோற்றில் பருப்புக் குழம்பு ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். பருப்புச் சட்டிக்குப் பொறந்த பய என்று அம்மா அன்பாய்த் திட்டும். தூக்குப் போணியில் கம்மஞ்சோறோ சோளச் சோறோ கொண்டு போவோம். தயிர் கொஞ்சம் ஊற்றிக் கொண்டால் புளித்தாலும் குடித்து விடலாம். களிம்பேறிய பித்தளைப் பாத்திரம் சில நாட்கள் வாடை வீசும். எவர்சில்வர் தூக்குப் போணி வந்தபின்பு கொஞ்சம் தேவலை.
           மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக மாறியது. கொஞ்ச நாட்கள் சத்துணவு சாப்பிட்டேன். லந்தக்கோட்டைக்கு ஹாஸ்டல் வந்தது. வீட்டுத் தொல்லையிலிருந்து விடுபட ஹாஸ்டலில் சேர்ந்தேன். ஓரிரு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அரையாண்டு வாக்கில் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டேன். பதினொன்றாம் வகுப்பிற்கு உப்பிடமங்கலம் போனபோதுதான் என் பாதங்கள் செருப்பையே பார்த்தன. அங்கு மதிய உணவு இடைவேளையில் தோப்பிற்குப் போய் சாப்பிடுவோம். எனது சோற்றை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காகச் சற்றுத் தாமதமாகப் போவேன். தனியாகப் போய் உட்கார்ந்துகொள்வேன். அரிசிச் சோறு, பலகாரம் கொண்டு போனால் எல்லாரோடும் சேர்ந்து கொள்வேன். 
      பலர் பேண்ட் சட்டைகளை தினமும் தேய்த்து மடிப்புக் கலையாமல் போட்டுக்கொண்டு வருவார்கள். என்னுடையதோ துவைத்துத் துவைத்துச் சாயம்போய் வெளுத்துக் காணப்படும். சிலர் சாடைமாடையாய்க் கேலி பேசுவார்கள். எல்லாவற்றுக்கும் காசு வேண்டும். நான் படிக்க வருவதே அப்பா காட்டியிருக்கும் பெரிய சலுகை. இதில் காலரைத் தூக்கி விட்டு பந்தாப் பண்ண ஏது வழி?  கழிவிரக்கம் மீதூர யாரோடும் கலந்து பழக முடியாமல் மனசு தவிக்கும். அத்தனை வேலைகளுக்கு இடையிலும் ஒருநாள்கூட மட்டம் போடாமல் பள்ளிக்குப் போனேன். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி நடந்த 170 நாட்களும் பள்ளிக்கு வந்தற்கான வருகைச் சான்றிதழை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
      ஐந்தாம் வகுப்பு வரை இரவு அப்பாவுடன் படுப்பது வழக்கம்.  அவர் வாய்பாடு சொல்லித் தருவார். மதுரை வீரன் கதை, நல்ல தங்காள் கதை, பொன்னர் சங்கர் கதை, காக்காக் கதை, நரிக் கதை எனக் கதைகள் சொல்வார். மாரியம்மன் பாடல்கள் பாடுவார். எனது அப்பன், பாட்டன், முப்பாட்டன் வகையறாக்கள் எல்லாரும் தற்குறிப் பயலுகள்; கைநாட்டுப் பேர்வழிகள் என்றும் நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது உசுப்பேற்றுவார். அதே அப்பா எட்டாம் வகுப்போடு அனைவரையும் நிறுத்திவிடுவது என முடிவெடுத்தபோது கலங்கிப் போனேன். எட்டாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும் மேல் படிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தேன். அப்பாவுக்குப் பிடித்தும் பிடிக்காத இக்குற்றத்திற்கு என் ஆசிரியர்கள் செய்த சிபாரிசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கும் வரை எனக்கு நிழல் தந்தது. 
         பரம்பரைச் சொத்து சுகம் இல்லாமல் சுய சம்பாத்யத்தில் மேடேற முயலும் ஒரே குறிக்கோளுடன் செயல்படும் குடும்பத்தின் மூத்த மகனாக, முதல் தலைமுறைக் கற்போராக ஒரு பிள்ளை சந்திக்கும் அத்தனை சவால்களும் எனக்கும் இருந்தன. பள்ளியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான அத்தனை சூழல்களும் என் கழுத்தைப் பிடித்துத் தள்ளின. அதையும் தாண்டிக் கல்வியறிவற்ற நெடிய தலைமுறையின் ஜீன்கள் படிப்பை ஓர் இச்சா சக்தியாய் என்னுள் தூண்டிக்கொண்டே இருந்தன. இப்போதும் எனக்குள் இருக்கும் மாணவன் என்னை உந்திக் கொண்டே இருக்கிறான். அதனால் கிடைத்ததுதான் இந்த உயரம். என்னுடையது மட்டுமல்ல; என்னைப் போன்ற பலரது நிலைமை இதுதான்.
      பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுவதற்கு வராத ஆயிரத்து இருநூற்றுச் சொச்சம் பேருக்கும் என்னைப் போலவே ஆயிரத்து இருநூற்றுச் சொச்சம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒருத்தருக்குக் கூடவா என்னைப் போல மேலே படிக்க வேண்டும் என்ற வெறி இருந்திருக்காது? 
         கல்விதான் என்னைக் கடைத்தேற்றும் என வெறிகொண்டு நின்றதொரு காலம். இன்று படிப்பை விடப் பணமே பிரதானம். என்னதான் குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இன்றைய பிள்ளைகள் கிடைக்கும் சிறுசிறு வேலைகளில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பணம் தவறான பழக்கங்களுக்கு சிநேகிதங்களுக்கு இட்டுச் செல்கிறது. பணம் பார்க்கும் பிள்ளைகள் அந்தக் கணத்துச் சந்தோசங்களில் மூழ்கி எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். 
    தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரித்ததில் இவர்களில் விருப்பமில்லாமல் பள்ளிக்கு வரும் - பெற்றோர் கட்டாயத்திற்காகப் படிக்க வருபவர்களே அதிகம் என்றும் ரொம்ப வற்புறுத்தினால் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். படிக்கச் சொல்லும் பெற்றோர்களைத் துன்புறுத்தும் - தாக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்கின்றனர். சில பெற்றோர்கள் நிலையாக ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கிடைக்கும் தொழிலை / கூலி வேலையை முன்னிட்டு இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். இதனால் குழந்தைகள் தொடர்ந்து ஒரே பள்ளிக்குப் படிக்க வருவது பாதிப்படைகிறது. தாங்கள் செய்யும் வேலைக்கு ஒத்தாசையாகத் தங்கள் பிள்ளைகளை இழுத்துப் போகிற பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்துப் பேச பெற்றோரைக் கூட்டி வரச் சொன்னால் அவர்கள் வருவதில்லை. 
    தொடர் வருகையற்ற பிள்ளைகளை ஒருசில ஆசிரியர்கள் அன்பால் வரவைத்து விடுவார்கள். ஒருசிலர் விசாரணை செய்யும் தோரணையே வேறு. அதற்குப் பிறகு அவர்கள் ஒருநாளும் வருவதே இல்லை. ஒருசிலர் பொதுத் தேர்வின்போது மட்டும் தவறாமல் வந்து அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள். ஆசிரியர்கள் சிலர் மெனக்கெட்டு வீட்டிற்கே போய்க் கூப்பிட்டாலும் பலர் தொடர்ந்து வருவதில்லை. போங்கடா நீங்களும் ஒங்க வெளங்காத படிப்பும்… என்று இடையிடையே மட்டம் போட்டு விடுகிறார்கள். 
          செல்வந்தன் வீட்டுப் பிள்ளை மேலும் செல்வந்தன் ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறது. உயர்கல்வி பெற்றவர் வீட்டுப் பிள்ளைகள் எப்படியும் ஏதொவொரு தொழிற்கல்வியைக் கற்று முடிக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்க எப்படியும் இடம் கிடைத்துவிடுகிறது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கடனோ சலுகையோ பெற்றுக் கடைத்தேற்றம் அடைந்துவிடுகிறார்கள். பெற்றோர் இல்லாத குழந்தைகள், குடும்ப உறவுகள் சிதைந்த விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
       எத்தனையோ பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தியும் பிரச்சாரங்கள் செய்தும் கண்ணெனத் தகும் கல்வியின் தேவை அவர்களின் கவனம் பெறவில்லை. கற்பிப்பதில் ஆர்வமுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் சோர்ந்து போகிறார்கள். அறிவு ஒன்றே அற்றம் காக்கும் கருவி என்பதையும் எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்பதையும் அவர்களுக்கு உணரவைக்க முடியாமல் நாளும் தோற்றுக் கொண்டிருக்கிறோம் நாம். கண்டும் காணாமல் போவதற்கு இவர்கள் விரல் விட்டு எண்ணிவிடுகிற அளவா என்ன? மானிடப் பரப்பில் ஒரு கணிசமான எண்ணிக்கை.
        கல்வியால் முன்னேற முடியும் என்பதற்குக் கண்கண்ட சாட்சிகளாய் இருக்கும் பலபேர் நம் பள்ளிகளில் படித்தவர்கள். எத்தனை குறைகள் இருப்பினும் இத்தனை மேம்பாடும் வளர்ச்சியும் இதுவரை பெற்ற கல்வியால் விளைந்ததே. நம்மை எழுதவும் பேசவும் வைத்திருப்பது இந்தக் கல்விதான். இந்தக் குறைந்தபட்ச அடிப்படைக் கல்வியைக் கூடக் கைவிட்டுப் போகிற துயரினைத் தீர்க்க ஒரு வழி காணாமல் துஞ்சி மடிதல் எப்படி?
          நவீன அறிவொளி இயக்கம் முதலில் நமக்குள்ளே நடத்தியாக வேண்டும். குழந்தைகளால் வரும் வருமானம் தன் தலைமுறைக்கே அவமானம் எனப் பெற்றோர்கள் நினைக்க வேண்டும். பெற்றோரின் நிலையான வருமானத்திற்கு வழிகாண வேண்டும். மாணவர்களின் வெளிநடப்பு ஆசிரியப் பணியிடங்களை உபரி ஆக்குவது மட்டுமல்ல; சமுதாய வளர்ச்சியைத் தடுக்கும். சேரும் பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியேற எந்தச் சூழ்நிலையிலும் தான் காரணம் ஆகிவிடக் கூடாது என ஒவ்வொரு ஆசிரியரும் எண்ண வேண்டும். 
      யார் கைவிட்டாலும் கல்வி என்னைக் கைவிடாது; நான் தொடர்ந்து படிப்பேன்; கல்விதான் என் கம்பீரம் என வெறிகொள்ளும் பிள்ளைகளை வேண்டி நிற்கிறோம். நமது அப்பன், பாட்டன், முப்பாட்டன் காலத்தைப் போலக் கனவாகிவிடக் கூடாது கல்வி. வரும் ஆண்டிலாவது குழந்தைகளின் கனவுக்குள் வரவேண்டும் கல்வி.

(நன்றி: காக்கைச் சிறகினிலே ஜூன் 2016)

5 comments:

  1. கண் கலங்குகிறது அய்யா ... என் பிள்ளைப்பருவம் என் விழித்திரையில் அணிவகுக்கிறது ...

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்.
    நம் உலகம், “வெற்றி”யாளர்களின் பின்னால்தான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது - அவர்களின் வெற்றி எத்தகைய கேவப் பின்னணியைக் கொண்டிருந்தாலும்!
    ஆனால், தோல்வியாளர்களைக் கூடப் பல ஆய்வுகளின் வழி அறிய முடிகிறது. வெற்றி - தோல்வி இரண்டுக்கும் இடையில் அல்லாடுவோரைப் பற்றிய தங்கள் பார்வை வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
    இதுபற்றி -தேர்வே எழுதாமல் போகும் நம் குழந்தைகளின் பின்னணி பற்றி- யாருமே இதுவரை யோசித்ததில்லை. தங்களின் புதிய இச்சிந்தனை, தமிழகக் கல்வி முறையில் பெருத்த மாற்றங்களை நிகழ்த்துமென்று நம்புகிறேன்.
    இந்தக் கட்டுரையை வெளியிட்ட காக்கை இதழாளர்கள், வெளியிட்டிருக்கலாம். எட்வின் கடைசிப்பக்கங்களில் தனக்குத் தோன்றியதை யெல்லாம் எழுதிவருவதைக் குறைத்து, இந்தக் கட்டுரையை முழுவதுமாக வெளியிட்டிருந்தால் அந்த இதழின் மீது மரியாதை கூடியிருக்கும். தாங்கள் முழுவதுமாக வெளியிட்டமைக்கு எனது நன்றியும் வணக்கமும்.

    ReplyDelete
  3. அய்யா மீண்டும் வணக்கம். தங்களின் இந்த அரிய பதிவை, எனது வலைப்பக்கத்தில் மறுபதிவு செய்திருக்கிறேன் -தாங்கள் திட்டமாட்டீர்கள் என்னும் உரிமை உணர்வோடு!

    ReplyDelete
  4. அப்பாட இன்னுமோர் தரமான தமிழ்மண வாக்குப் பதிவிற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ..

    காத்திரமான பிரச்னை ஒன்றை விவாதிக்கும் வழி உங்கள் இணையற்ற சாதனையையும் அறிந்துகொள்ள முடிந்தது..

    ஆயிரம் கேள்விகளை உங்கள் வாழ்வில் இருந்தே எழுப்பலாம் ..
    தூங்கும் நேரம் பணி நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் வாசிக்கும் விவாதிக்கும் ஒரு மனிதரின் பால்யத்தில் கண் பிரச்னை இருந்தது என்ன மாதிரியான முரண்.

    சமீபத்தில் நலங்கிள்ளி எனும் கல்வியாளர் ஒருவரை சந்தித்தபொழுது கற்பித்தல் செயல்பாடுகள் மாணவரை மகிழ்வூட்டும் வண்ணம் இருக்க வேண்டும் என்றார்.

    ரொம்பவே சிந்திக்க வைத்த விசயம் அது. பல்வேறு வகைகளில் கல்விச் செயல்பாடுகள் மேம்பட வேண்டியிருக்கிறது.

    ஒருமுறை மேல்நிலை தேர்வுக்கு அறைக்கண்காணிப்பாளராக சென்றிருந்த பொழுது காலியிருக்கைக்கு அருகே இருந்த மாணவரை எங்கே இந்தப் பையன் என்று கேட்ட பொழுது
    அவனா சார் பஸ்டாண்டில் காம்பௌண்ட்டில் உட்கார்ந்திருப்பான் சார்

    எப்பவும் அப்படிதான் என்றான்

    தேர்வு பயத்தில் அவன் அவன் காய்ச்சலில் கிடப்பதை மட்டுமே பார்த்த எனக்கு இப்படி ஒரு மாணவர் அதிர்ச்சியை கொடுத்தார். ஆண்டு 1999.

    இந்த பதினைத்து ஆண்டுகளில் பள்ளியை, வகுப்பறையை ஒரு சாய்ஸ்ஸாக வைத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிர்வூட்டும் வகையில் கூடியிருக்கிறது.

    செயல் முறைகளில் மாற்றம் கொணர விரும்பும் தங்களைப் போன்றோர் இந்த புள்ளியில் கவனத்தை குவித்திருப்பது ஆறுதல் தருகிறது.

    நிர்மல் என்ன சொல்கிறார் என்றும் பார்க்க வேண்டும்.
    தவறிப் போன ஆடுகளை குறித்து வருந்தி சிந்திக்கும் மேய்ப்பர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.

    மிக சிக்கலான காரணிகளை கொண்டது இந்த தப்பிய ஆடுகளின் பிரச்னை.

    தன்னார்வ தொண்டமைப்புகள் இந்த மாணவர்களை மீட்பதை தங்கள் இலக்காக கொள்வது நலம்.

    எனக்குத் தெரிந்து இம்மாதிரிப் பிரச்சனைகளில் களத்தில் ஆய்வு அனுபவம் உள்ள முன்னோடிகள் சிலரே. (முனைவர் வின்சென்ட் டி பால் அவர்களில் ஒருவர்)

    இந்த பிரச்னைகள் குறித்த தொடர் பதிவுகள் அவசியம்.
    பயணத் தொடர் எளிதாக இருந்தது பதிவர்களுக்கு, கனவில் வந்த காந்திகூட எளிதாகத்தான் இருந்தது.

    எனவே
    கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு இந்த பின்னூட்டத்தின் மூலமே ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன்.

    ஏன் இந்தப் பிரச்னை குறித்த தொடர் பதிவுகளை ஆய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் பதிவுகளுக்கு ஒரு பரிசுப்போட்டி நடத்தக் கூடாது?

    என்போன்ற ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமே அது.

    உங்களது ஜெகதாபி வீட்டில் எந்த வித தொ.கா தொல்லைகளும் இல்லாமல், புதிய டி.வி.டிகளும் இல்லாமல் நகர்புற நரக சத்தங்களில் இருந்து அடர் அமைதியில் படிக்கும் வாய்ப்பு இன்றுள்ள குழந்தைளுக்கு இல்லை.

    பெருவாரி ஆண்கள் எப்படி குடி அடிமைகளோ அதே போல் குழந்தைகள் இன்று தொ.கா அடிமைகள். எங்கே வாசிப்பார்கள்.

    மேலும் அவர்களின் உலகில் பணம் செய்த, வெற்றி பெற்ற மனிதர்கள் யாருமே படித்திருக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம்.

    கல்வி ஒரு தேவையில்ல சுமை என அவர்கள் முடிவெடுத்துவிடுகிறார்கள்

    பெற்றோரின் மனவெழுச்சிகள், சார்புகள், ஒழுக்கங்கள் எச்சமாக வெளிப்படுகின்றன. பல விசயங்களை திறந்த விவாத்தில் பேச முடியாது.

    இருப்பினும் தேர்ச்சியுற்ற மாணவர்களுக்காக மகிழ்வது அர்த்தமில்லாமல் போய்விட்டது காணமல் போன அந்த ஆயிரத்து இரநூறு மாணவர்களால்.

    எப்படியோ உங்களை அழுத்தி பதிவில் வெடிக்க வைத்திருகிறது இந்த பிரச்னை.

    தொடர்ந்து பேசுங்கள் பதிவுகளில்.

    நன்றி

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்