வல்லிக்கண்ணன் கடிதங்கள் 15

வல்லிக்கண்ணன்                                                        சென்னை 12-2-2002

                    அன்பு மிக்க ...., 
            வணக்கம். மீண்டும் சில மாதங்கள் ஓடிவிட்டன, கடிதம் எழுதி. நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நான் நலம்.

              ஜனவரி 8ல், எச்.ஜி.ரசூல் கவிதைகள் பற்றிய பாராட்டுரைகள் கொண்ட ‘சின்ன புறாக்களும் சில துப்பாக்கிகளும்’ என்ற சிறு பிரசுரம் அனுப்பினேன். ரசூலின் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்காக மத ரீதியான எதிப்பும் கண்டனங்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிப்ரவரி 9ல் ‘தமிழ்ச் சிறகு’ 2 இதழ்கள் அனுப்பினேன்.
           பாரிஸ் இதழ் ‘எரிமலை’யோடு தொடர்பு கொள்ள எண்ணியிருப்பதாக முன்பு சொன்னீர்கள். கடிதம் எழுதினீர்களா? நீங்கள் அப்படிச் சொன்னதற்குப் பிறகு 3-4 இதழ்கள் வந்துவிட்டன.
          பள்ளி வேலைகளும் பத்திரிகை அலுவல்களுமாக வேலைகள் நிறையவே இருக்கும். சிற்றிதழ்களும் அதிகம் அதிகமாக வந்து கொண்டேயிருக்கின்றன. புத்தகங்களும் கூட.
        சென்னையில் ஜனவரி மாதம் 15 நாட்கள் புத்தகச் சந்தை(BOOK FAIR) நடைபெற்றது. இந்த வருடம் மிகுந்த கூட்டம் என்றும், புத்தக விற்பனையும் மிகுதி என்றும் பத்திரிகைகள் தெரிவித்தன. அநேகமாக, ‘பெரிய பத்திரிகைகள்’ எல்லாம் புக் ஃபேர் பற்றி பிரமாதமாக எழுதி மகிழ்ந்தன.
       வள்ளியூர் தென்றல்’ என்ற சிறுபத்திரிகை தன் உருவத்தையும் உள்ளடக்கப் போக்கையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. ‘கணையாழி’ மாதிரி ‘ஹைப்ரோ’ இலக்கிய சஞ்சிகையாக வெளிவர ஆசைப்படுகிறது. அது எடுபடாது!
           நீங்கள் வழக்கம்போல் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பீர்கள். ஆனந்த விகடனுக்கு அனுப்பினீர்களா?
       ‘சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்’ என்ற தொகுப்பு நூல் வெளியிட்ட ‘ஞானியாரடிகள் மன்றம்’ பாலகிருஷ்ணன் இவ்வருடம் ‘எழுத்து செல்லப்பா’ பற்றி ஒரு தொகுப்பு நூல் பிரசுரிக்கிறார். இந்த மாதம் வந்துவிடும்.
வெயில் கடுமை பெற்று வருகிறது. கோடை வெகு கடுமையாகத் தான் இருக்கும்.
       நான் வழக்கம் போல் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறேன். எழுதுவது இந்த ஸீசனில் ‘அணிந்துரை’கள் என்றாகிவிட்டது. ஜனவரி பிப்ரவரியில் 10 புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டியதாயிற்று.
                                                                                                                        அன்பு – வ.க. 

3 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  2. பணிவான வணக்கங்கள்
    மீண்டும் மீண்டும் பார்த்தேன்

    என்னது இன்னொரு பதிவா என?
    ஹைப்ரோ என்பது high profile இலக்கியம் என்றே கருத வேண்டியிருக்கிறது..

    இம்மாதிரிப் பதங்களை அவர் பயன்படுத்தினார் என்பதே எனக்கு பல உணர்வுகளை தருகிறது..

    வல்லிக்கண்ணன் என்கிற ஆளுமை உங்கள் கடிதத்தின் மூலம் என்போன்ற புதியவர்களுக்கு அவரது உயரத்தினை, சித்திரத்தினை உருவாக்குகின்றது...

    ஏன் இவ்வளவு இடைவெளி ...

    புதிய இலக்கிய வருகைகளுக்கு இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்யலாமே அய்யா...

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்