வல்லிக்கண்ணன் கடிதங்கள் 9

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 11-9-2001

         அன்பு நண்பர் ....., வணக்கம். உங்கள் 2ஆம் தேதிக் கடிதம் கிடைத்தது. அது அனுப்பப்பட்ட பிறகு எனது 1ஆம் தேதிக் கடிதம் உங்கள் பார்வைக்கு வந்திருக்கும். 10ஆம் தேதி ‘முகம்’ இதழ்கள் 2, ‘கலை’ ஆகிய பத்திரிகைகள் அனுப்பினேன். கிடைத்திருக்கலாம். நான் நலம். உங்கள் நலம் அறிய மகிழ்ச்சி.

         கல்யாண்ஜியின் ‘நிலா பார்த்தல்’ தொகுப்பை நானும் படித்தேன். இனிய மனப்பதிவுகள். கவிதை பற்றிய எண்ணங்களை அழகாக எழுதியிருக்கிறார். படித்து, ரசித்து, பாராட்டப்பட வேண்டிய எழுத்து. பாலா கவிதைகள் படிக்கவில்லை. 

    நீங்கள் படித்து ரசித்த புத்தகங்கள், கவிதைகள் பற்றி எழுதியிருப்பது சந்தோஷம் தந்தது.

     நீங்கள் தாமரை, சதங்கை இதழ்களுக்கு கவிதை அனுப்ப எண்ணுவது வரவேற்புக்கு உரியது. அனுப்புக. ஆனந்த விகடனுக்குக் கூட அனுப்பலாம். வித்தியாசமான ஒன்றை. மிக நீண்டதாக இருக்கக் கூடாது. சும்மா முயன்று பார்ப்பதில் தவறில்லை.

          எங்கள் வட்டாரத் தொலைபேசிகள் ஒரு வாரமாக ‘செத்துக் கிடக்கின்றன’. ‘DEAD’. இதுவரை அண்ணா சாலை எக்ஸ்சேஞ்சுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த வட்டாரத் தொலைபேசிகள் நிர்வாக வசதி கருதி ஐஸ் ஹவுஸ் எக்ஸ்சேஞ்சுக்கு மாற்றப்படுகின்றன. ஏதோ டெக்னிக்கல் குறைபாடுகள் காரணமாக இவை இயங்கவில்லை. இதுவரை சீர் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டு ஃபோன் எண் 8516251 ஆக இருந்தது இனி 8476252 எனப் புது எண் பெறுகிறது.

       சென்னையில் நேற்று இரவு நல்ல மழை. இடியுடன் கூடிய கனத்த மழை. இன்றும் மூடாக்காகவே இருக்கிறது. 

    பெங்களூரில் இருந்து வந்த ‘பயணம்’ மதுரையில் அச்சாவது. அதன் ஆசிரியர் சுரா(சுந்தர ராஜ்). ‘வடக்கே’ மிலிட்டரிப் பணியில் இருந்தவர் சில மாதங்களாக, பணி முடிப்பு பெற்று விருதுநகர் அருகில் உள்ள கிராமத்துக்கு வந்துவிட்டார். ‘பயணம்’ அங்கிருந்து தான் வரும். அது மார்க்சிய நோக்குடைய தரமான இதழ். ‘பயணம் புதிது’க்கு அது வருகிறதோ என்னவோ. இவ்வாரம் வெளிவர இருக்கிற ‘பயணம்’ இதழில் வ.க. எழுதும் ‘சிறுகதைச் சுவடுகள்’ தொடர் கட்டுரை ஆரம்பமாகிறது.

       ஒரு சந்தோஷமான செய்தி. டாக்டர் ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் வெளியிட ஏற்றிருந்த எனது சுயசரிதை ‘வாழ்க்கைச் சுவடுகள்’ 288 பக்க அழகான புத்தகமாக வெளிவந்துவிட்டது. பத்திரிகைகள், பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்நாட்டு நிலைமை பற்றிய ஒரு ஆவணம் அது. 
                                                                                                                              -வ.க. 

9 comments:

  1. அய்யா வணக்கம்.
    சொந்தச் செய்தியுடன், சுற்றிலும் நிகழும் செய்திகள் மற்றும் அவ்வப்போதைய தமிழிலக்கியப் போக்குகளையும் தனது கடிதத்தில் பதிவு செய்வதை வ.க.வழக்கமாகக் கொண்டிருந்தார். தங்களுக்கு அவர் எழுதிய கடிதமும் அவ்வாறான வரலாற்றுப்பதிவாகவே உள்ளது பெருமைப்படத் தக்கது. தங்களிடம் உள்ள கடிதங்களை யெல்லாம் தொகுத்தாலே ஒரு புதிய நூல் கிடைக்கும்போல உள்ளதே!

    ReplyDelete
  2. தமிழகத்தின் ஒரு பெரும் இலக்கிய ஆளுமையின் இயல்பை வெளிப்படுத்தும் பதிவுத் தொடர்
    கடித இலக்கியம் எவ்வளவு இனிமை..!

    ReplyDelete
  3. வல்லிக்கண்ணன் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்...அவரை வாசித்து பார்க்க வேண்டும், அவரது சிறந்த நூலாக நீங்கள் கருதுவதை பரிந்துரை செய்யவும்.... நன்றி..

    ReplyDelete
  4. கடித இலக்கியம் இனிமைதான்
    தொடருங்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  5. இனிமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா
    கடித இலக்கியம் இன்றும் இனிமையான அனுபவமாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அய்யா. இருவருக்கும் இடையேயான நட்பு எழுத்துகளின் மூலம் எங்களின் கண்களுக்கு காட்சியாக அமைகிறது அய்யா. தொடர்ந்து இன்னபிற கடிதங்களையும் வெளியிடுங்கள். மின் நூலாக முதலில் வெளியிடலாம். பிறகு அச்சு நூலுக்கான அடுத்த அடியை எடுத்து வைப்போம். பகிர்வுக்கு நன்றிகள் அய்யா..

    ReplyDelete
  7. அருமையான இனிய அனுபவம்...மறைந்த காலத்தை அசை போட வைக்கும் அற்புதம்.... எழுத படிக்க தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்குமான தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக இருந்த நினைவுகளை....வாழ்க்கை முறையை நினைவூட்டும் நிகழ்வுகள்.... தொடரட்டும் தங்களை போன்றோரின் ஆளுமையின் மேன்மையில்.....

    ReplyDelete
  8. அருமையான இனிய அனுபவம்...மறைந்த காலத்தை அசை போட வைக்கும் அற்புதம்.... எழுத படிக்க தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்குமான தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக இருந்த நினைவுகளை....வாழ்க்கை முறையை நினைவூட்டும் நிகழ்வுகள்.... தொடரட்டும் தங்களை போன்றோரின் ஆளுமையின் மேன்மையில்.....

    ReplyDelete
  9. அருமையான இனிய அனுபவம்...மறைந்த காலத்தை அசை போட வைக்கும் அற்புதம்.... எழுத படிக்க தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்குமான தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக இருந்த நினைவுகளை....வாழ்க்கை முறையை நினைவூட்டும் நிகழ்வுகள்.... தொடரட்டும் தங்களை போன்றோரின் ஆளுமையின் மேன்மையில்.....

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்