வல்லிக்கண்ணன் கடிதங்கள் 10

வல்லிக்கண்ணன்                                                                     சென்னை 17-9-2001

அன்பு மிக்க ......,
   வணக்கம். உங்கள் 12ஆம் தேதிக் கடிதமும் இணைப்புகளும் பெற்று மகிழ்ந்தேன். 

        நான் 10ஆம் தேதி ‘முகம்’ 2 இதழ்களும் ‘கலை’ ஒன்றும் அனுப்பினேன். 11ஆம் தேதி இன்லண்ட் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும். 

    ‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ பற்றிய 2 விமர்சனங்களையும் படித்தேன். திரு. ராமசாமி, தான் படித்த வேறு சில கவிஞர்களையும் நினைவு கூர்ந்தும் ஒப்பிட்டும், சகாரா கவிதைகளை ரசித்ததை விரிவாக எழுதியிருக்கிறார். ரசமாக இருக்கிறது. கவிஞர் புதுமதியன், சகாரா கவிதைகளை பட்டியலிடுவது போல் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு வியந்திருக்கிறார்.
      
       இரண்டு பேரும், சிரமம் எடுத்து, சிரத்தையோடு இவ்வளவு விரிவாகக் கருத்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

       நீங்கள் பல சிற்றிதழ்களிலும் ரசித்தது பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ‘நந்தன்’ இதழில் வந்த விமர்சனங்களைப் படித்தேன். செப். 1-15 இதழில் சூத்திரன் என்ற பெயரில் தாக்குதல் கட்டுரை எழுதியிருப்பது சு.சமுத்திரம் தான். ஏற்கனவே பல இடங்களிலும் பல சமயங்களில் சொன்ன விஷயங்களை தொகுத்துத் தந்திருக்கிறார். ‘சதங்கை’யில் களந்தை பீர் முகம்மது கதை ‘மனவிழி’யை நானும் ரசித்தேன்.

        உங்கள் கவிதை நூலை பலருக்கும் அனுப்பி வைத்தது நல்ல காரியம் தான். கவிஞர் அப்துல் ரகுமான் முகவரி ‘கவிக்கோ’ இதழ் முகவரி தான். அது அவரே நடத்திய பத்திரிகை.

        Dr. S. Abdul Rahman, 20, Ist Seaward Road, Valmiki Nagar, Chennai – 61.(600061)

கவிஞர் ஈரோடு தமிழன்பன்
லாயிட்ஸ் காலனி, லாயிட்ஸ் ரோடு,
சென்னை – 600014

    லாயிட்ஸ் காலனியில் அவரது வீட்டின் எண் தெரியவில்லை. பிரபலமானவர் என்பதால் வீட்டு எண் இல்லாமலேயே தபால் சேர்ந்துவிடும். கவிஞர் மேத்தா முகவரி தெரியாது.
  
      சென்னையில் ‘சீசன்’ மோசம். கோடை காலம் போல் கடுமையான வெயிலும் புழுக்கமும் தான். மழை வருவது போல் வானம் படம் காட்டி விட்டு இளிக்கிறது! தமிழ் நாடு நெடுகிலுமே இந்த வறட்சி நீடிக்கிறது.

      உலகம் பூராவையும் முஸ்லிம் நாடு ஆக்கிவிடக் கனவு வளர்க்கும் வெறியர்கள், பயங்கரவாதிகள் என்று பெயர் பண்ணி, அமெரிக்காவில் பெரிய கட்டிடங்களைத் தகர்த்து, அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்கள். இம் முயற்சியில் அவர்களில் சிலரும் செத்தொழிந்தார்கள். ஒரு ‘மகத்தான லட்சியத்துக்காக’ உயிர்த் தியாகம் செய்து வீர மரணம் அடைந்ததாக வெறியன் பின்லேடனின் கூட்டம் கொக்கரிக்கலாம். இதனால் உலக யுத்தம் வெடிக்கக் கூடிய அபாய நிலை கவிந்து தொங்குகிறது. அமெரிக்கா வெறித்தனமாகப் பழி வாங்கத் தயாராகிறது.

           பார்க்கப்போனால், உலகத்தில் என்றுமே அமைதி நிலையும் ஆனந்தமும் இருந்ததில்லை. மாபெரும் உலகயுத்தம் 1940களுக்குப் பிறகு நடைபெறவில்லை என்றாலும், சிறுசிறு யுத்தங்கள், போர்கள் நிரந்தரமாக உலகப் பரப்பில் பல இடங்களில் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இந்தியாவின் பல இடங்களிலும் கூட. இலங்கையில் முடிவில்லாத போர் நடந்தவாறு இருக்கிறது – வருடக்கணக்கில். அப்பாவி மக்கள் தான் அல்லல் படுகிறார்கள். அமெரிக்காவின் செயலால் பெரிய யுத்தம் வெடிக்குமானால், மிகப்பெரும் துயரங்கள் சிரமங்கள் எல்லா நாடுகளிலும் ஏற்படும்.

                                                                                                                                        அன்பு -வ.க. 

5 comments:

  1. வணக்கம்

    உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உலக சண்டை வருவதுஎன்றால் மதத்தால்தான்... இலங்கையில் உள்ள மக்களின் நிலை மிகவும் கவலைதான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் அலுவலகத்திற்குத் தரச் சான்று கிடைத்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
    தங்களின் பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. உங்களின் நூல்களைத் தான் படித்ததோடு, இன்னாருக்கெல்லாம் அனுப்புங்கள் என்று வழிநடத்தவும் செய்த அந்தப் பெருந்தகையின் இலக்கிய வழிகாட்டுதல் இப்போது மிகவும் அரிதாகிவிட்டது அய்யா. இவ்வளவுக்கும் மத்தியில் உலகஅமைதிபற்றிய கவலையையும் அவர் விடவில்லை பாருங்கள்.. அவர் அவர்தான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஐயா... சிறப்புகள் மேலும் சிறக்கட்டும்....

    ReplyDelete
  5. தம +
    கடிதங்கள் காலயந்திரங்கள்..

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்