வல்லிக்கண்ணன் கடிதங்கள் 7

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 1-8-2001
   ...... வணக்கம். ஜூலையும் போய்விட்டது. காலம் அதன் இயல்புப்படி செல்கிறது. நான் நலம். நீங்கள் நலம் தானே?

        ஜூலை 16ல் கலை, நந்தவனம், தூரிகை எனும் சிற்றிதழ்கள் அனுப்பினேன். 25ல் ‘கவிக்கோ’ காலாண்டிதழின் முதல் இதழ் அனுப்பினேன். பழசு தான்.
       சகாரா கவிதை நூல் பெற்றவர்களில் ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். மணலி, அரசு மேனிலைப் பள்ளி தமிழாசிரியர் – நல்லாலம் மு. இளவரசு. – ‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ படித்து மகிழ்ந்தேன். அச்சு, அமைப்பு, கருத்து அனைத்துமே அசத்துகின்றன.  கவிஞர் சகாராவின் ஆழ்மனத்து உணர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன. என்னைப் பொறுத்த வரையில் அண்மையில் படித்த கவிதை நூல்களில் இந்த நூல் தான் நெஞ்சத்தைக் கொஞ்சம் அசைத்து உள்ளது. கொச்சைச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஒரு முறைக்கு இரண்டு முறை படித்தால் தான் ரசிக்க முடிகிறது. அது தவிர்க்க முடியாதது தான். கவிஞருக்குப் பாராட்டுகள்’.
          திருச்சி ‘கவிக்காவிரி’ திருவைகுமரன், ‘நதிக்கரையில் தொலைந்த மணல் கவிதைத் தொகுதி கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. கவிஞர் சகாரா உங்கள் மூலமாகத் தான் எனக்கு அறிமுகமாகிறார்’ என்று மட்டும் எழுதி முடித்துக் கொண்டார்.
               இப்போது தபால் வந்தது. (11.30 மணி). அதில் உங்கள் கடிதமும் உள்ளது. உங்கள் கவிதை நூல் நல்ல வரவேற்பையும் கவனிப்பையும், பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டிருப்பது சந்தோஷ சமாச்சாரம். நல்ல விஷயங்கள் உரிய கவனிப்பைப் பெறுவது இனிய காரியம் தான். வாழ்த்துகள்.
       அப்துல் ரகுமானின் காலாண்டு இதழ் ‘கவிக்கோ’வின் 1,2 இதழ்கள் மட்டுமே எனக்கு படிக்கக் கிடைத்தன. அதன் பிறகு அவர் அனுப்பி உதவவில்லை. இப்பவும் இதழ் வெளிவருகிறதா என்பது தெரியவில்லை. நன்றாகத் தான் தயாரித்திருக்கிறார். புதிய விஷயங்கள், அயல் மொழிக் கவிதைகளின் தமிழாக்கம், கவிதை பற்றிய சர்ச்சைகள் என்று. தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தால் நல்லது தான். 
      அழகிய சிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ பார்த்திருக்கிறீர்களா? 17 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டிதழ். கவிதைகள் – அவர்கள் நோக்கில் புதுமைப்போக்கு கொண்டவை – இடம்பெற்றிருக்கும். அன்பு -வ.க. 

2 comments:

  1. வணக்கம்
    வாழ்த்துக்கள் நல்ல முயற்சி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சகாராவின் கவிதை வரிகளில் இன்னும் என்னை துரத்தும் வரிகள் துணிகளுக்கு சாயமேற்ற... என்கிற வலி தரும் வரிகளே..

    சுந்தர் அய்யாவின் வீட்டில் படித்தது..

    வல்லிக்கண்ணன் அய்யாவே இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறார் என்றால் சும்மா இல்லை..
    மகிழ்வு

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்