வல்லிக்கண்ணன் சென்னை 22-7-2001(ஞாயிறு)
.....
வணக்கம்.
நீங்கள் அனுப்பிய புத்தகங்களும் கடிதமும் கிடைத்து பல நாட்கள் ஆகின்றன. நான் கடிதம் எழுதுவதில் தான் தாமதம்.
கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நிகழ்ந்து மகிழ்ச்சியும் மன நிறைவும் தந்ததை அறிந்து சந்தோஷம் கொண்டேன். இயற்கையும் அன்று துணைபுரிந்ததும் ஆனந்தமான விஷயம் தான்.
கவிதை நூல் இனிதாக, அழகாக அமைந்துள்ளது. கவிதைகளை எழுத்தில் படிப்பது சந்தோஷமானது தான். அவற்றையே அழகான புத்தகமாகப் படிக்கிற போது சந்தோஷம் அதிகரிக்கிறது. புதிய புத்தகங்களை நான் நேசிக்கிறேன். புதுப் புத்தகத்தின் மணம் எனக்குப் பிடிக்கும் விஷயங்களில் ஒன்று. கவிதைகளை மீண்டும் படித்தேன். ரசித்தேன். பாராட்டுக்கள்.
புத்தகங்கள் வழங்கும் வள்ளலாகிற வாய்ப்பை தந்திருப்பதற்காக நன்றி. மகிழ்ச்சி. அநேக நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் கருத்து தெரிவித்தால் உங்களுக்கு அறிவிப்பேன்.
புத்தக விற்பனை என்பது உற்சாகம் தராத, சிரமமான காரியமே. தெரிந்த புத்தக விற்பனையாளர்கள் இருந்தால், சிறிதளவு பிரதிகளை கொடுத்து, விற்றுத் தரும்படி கேட்டுக்கொள்ளலாம். தெரிந்தவர்களானாலும் விற்ற பணத்தை கைவரப் பெறுவது மிகச் சிரமமான வேலையாகவே இருக்கும். விஜயா பதிப்பகம், மு. வேலாயுதம், ராஜ வீதி, கோயமுத்தூருக்கு எழுதி விற்று உதவி புரிய இயலுமா என்று கேட்டுப் பார்க்கலாம்.
நலமாக இருக்கிறேன். நலம் தானே?
அன்பு
வ.க./..
வணக்கம் அய்யா,
ReplyDeleteதமிழ் இந்து நாளிதழில் கடித இலக்கியப் பகுதியில் தங்களின் கடிதம் பற்றி படித்தேன்...கடிதங்கள் தந்த மனநிறைவை இப்போதுள்ள கைபேசி தரவில்லை என்பதே உண்மை...!நன்றி!
வணக்கம்
ReplyDeleteஐயா.
புத்தகத்தின் மேல் உள்ள காதலை நான் நன்கு அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புத்தக விற்பனை என்பது என்றுமே கடினம்தான்
ReplyDeleteவணக்கம் ஐயா. கடந்த சனிக்கிழமை அன்று தமிழ் இந்து நாளிதழில் கடித இலக்கியம் பற்றி முனைவர். சௌந்தர பாண்டியன் அவர்கள் எழுதிய கடித இலக்கியம் கட்டுரையை வாசித்தேன். தங்களின் வலைப்பூவில் வலம் வருகின்ற வல்லிக்கண்ணன் கடிதங்கள் பகுதி சிறப்பாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. பண்டித ஜவஹர்லால் நேரு, பேரறிஞர் அண்ணா , மு.வ. வண்ணதாசன் இவர்களைத் தொடர்ந்து வல்லிக்கண்ணன் அவர்களின் கடிதங்கள் தங்களால் உலகிற்குக் கிடைத்த இலக்கியக் கொடை.
ReplyDeleteவல்லிக்கண்ணன் ஐயா அவர்கள் குறிப்பிடுகின்ற புதுப் புத்தக வாசனை வெள்ளை மனம் கொண்ட பிள்ளையின் மனத்தை நினைவு படுத்துகிறது. அவர் யாவர்க்கும் புத்தகங்களைப் பரிசாக வழங்கும் பண்பு வெளிப்படுகின்றது. ஒவ்வொரு பதிவிலும் அவர் தம் பண்புகள் பதிவாகின்றன. அருமையான பதிவிற்குப் பின்னூட்டம் தருவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.
அய்யா
ReplyDeleteவணக்கம்.
வள்ளலாக இல்லாமல் இடப்பற்றாக்குறை காரணமாகப் படித்த புத்தகங்களைக் கொடுக்கின்றவர்களுள் நானும் ஒருவன். சில தருணங்களில் மீள் பார்வைக்காய் அவை தேவைப்பட்ட போது இல்லாமல் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
எல்லாப் புத்தகங்களையும் அப்படிக் கொடுத்து விடுவதில்லை.
எஞ்சிய ஒரு சிலவே இப்போது என்னிடத்திருக்கின்றன.
வ.க விற்குப் புதிய புத்தகங்களின் வாசம் பிடிப்பது போல எனக்குப் பழைய புத்தகங்களின் வாசனை மிகப்பிடிக்கும். உ.வே.சா வின் சீவக சிந்தாமணி முதற்பதிப்பு நல்ல நிலையில் என்னிடத்திருந்தது. கண்டிப்பாக ஐயரின் கை அதன் மேல் பட்டிருக்கும்.
பாதுகாப்பவர்களுக்கு உதவட்டும் என அதைக் கொடுத்துவிட்டேன்.
புத்தகம் சேர்ப்பதை விட அதைப் பாதுகாத்து வைப்பவர்களுக்கே அதிக சிரமம்.
புத்தக விற்பனை என்பது பதிப்பாசிரியரின் கவலை என்றால், புத்தக வெளியீடென்பது என்பது சாமானியர்களுக்குச் சாத்தியப்பட்டதாய் அன்றும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது.சற்று வசதி படைத்தவர்கள் தாமே வெளியிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு, கையில் உள்ள பிரதிகளைத் தெரிந்தவர்களுக்கும், (புத்தகத்தின் அருமை ) தெரியாதவர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட வேண்டியதுதான்!
படைப்புகளின் தரத்தைப் பார்க்காமல் படைப்பாளிகள் யாரென்று பார்ப்பது மாறாத வரை புதியவர்கள் இன்றும் இச்சிக்கலை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் போலும்.
வ.க. வின் கடித வரிசையில் இக்கடிதம் மிகமிக என்னைக் கவர்ந்தது.
பகிர்விற்கு நன்றி!
இனி ஐ போனில் படிக்கிற விலைகுறைவாக வெளியிடும் வழிதான் மிகச் சிறந்தவழி என்று தொடருகிறது விஜு ..
Deleteஅய்யா
ReplyDeleteஇந்தக் கடிதங்கள் பல்வேறு புரிதல்களைத் தருகின்றன..
மகிழ்வு ...