வல்லிக்கண்ணன் கடிதங்கள் 11

வல்லிக்கண்ணன்                                                          சென்னை 6-10-2001

அன்பு மிக்க நண்பர் .... அவர்களுக்கு,

    வணக்கம். உங்கள் 28-9-2001 கடிதம் அக்-1ஆம் தேதி வந்தது. ‘கதை சொல்லி’ இதழ் அக். 3ஆம் தேதி கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. ‘கதை சொல்லி’யை இன்னும் படிக்கவில்லை.

             முந்திய 20-9-2001 கடிதமும் உரிய நாளில் கிடைத்து விட்டது.

     நீங்கள் படித்த பத்திரிகைகள், கவிதைகள் பற்றிய உங்கள் கருத்தை எழுதியது சந்தோஷம் தந்தது.

       ‘தமிழ் அமிழ்தம்’ வந்து பலப்பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் தமிழ் இன உணர்வுப் பத்திரிகையாக வந்தது. பிறகு, ‘முற்போக்கு இலக்கிய’ ஆதரவை மேற்கொண்டது. பின்னர், வடிவத்தை பெரிதாக்கி ‘போஸ்ட் மாடர்னிச’ – அறிவு ஜீவி – இதழாகப் பரிணாமம்  பெற்றது. திடமான, ஆழ்ந்த, நோக்கும் போக்கும் பெற்றிராதவர்கள் நடத்துகிற இதழ்.

       (பெங்களூர்) ‘பயணம்’ சில தினஙளுக்கு முன் வந்து விட்டது. ‘சுரா’வுக்கு சகாரா கவிதை நூல் அனுப்பினேன். ‘பயணம்’ இதழில் ‘வரப்பெற்றோம்” பட்டியலில் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

     கலைஞன் பதிப்பகம் தயாரித்த ‘மணிக்கொடி களஞ்சியம்’ வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘சரஸ்வதி களஞ்சியம்’ தொகுப்பும் வெளிவந்து விட்டது. இதற்கு வெளியீட்டு விழா விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஏற்பாட்டில் கோவையில் நடைபெறும் என்று தெரிகிறது. 

      சென்னையில் மழை நாட்கள். சில தினங்களாக சுமாரான தூறல் தலை காட்டியது. இரண்டு நாட்களாக, ‘பரவால்லே’ என்று சொல்லும்படியான மழை பெய்கிறது.

    ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நாள் இரவு 8 மணி வாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைவாசிகளை பயம் பிடித்து ஆட்டியது. வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் நின்று ‘என்ன ஆகுமோ’ என்று குழம்பித் தவித்தார்கள். கவலைப்படும் படியாக எதுவும் நிகழவில்லை. 

      கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் நூற்றாண்டை கவிஞர்கள் ஞானக் கூத்தன், ராஜகோபாலன், அழகியசிங்கர் முதலியவர்கள் கொண்டாடினார்கள் – ஆரம்ப விழா நடத்தியும், முடிவில் ‘நிறைவு விழா’ நடத்தியும். ந.பி.யின் சிறுகதைகள், கவிதைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இப்போது ‘ந. பிச்சமூர்த்தி நினைவாக’ என்று 2 தொகுதிகள் வந்துள்ளன. பலபேர் ந.பி. பற்றிய நினைவுகளைச் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு. முதல் தொகுதியில் என்
கட்டுரைகள் 2 இருக்கின்றன.

         நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள். நீங்களும் குடும்பத்தாரும் நண்பர்களும் நலம் தானே? 
    
          திருநெல்வேலியில் தி.க.சி. நலமாக இருக்கிறார். கடிதங்கள் வருகின்றன.

      சிற்றிதழ்களும் புதுசு புதுசாகத் தோன்றியவாறு இருக்கின்றன. உற்சாகம் மிகுந்த இளைஞர்கள் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

                                                                                                                                                 அன்பு 
                                                                                                                                                   வ.க. 

5 comments:

  1. அய்யா வணக்கம். தங்கள் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை
    "கணினித் தமிழ்ச்சங்கம்" தற்போது, தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015ஐ நடத்தும் முனைப்பில் உள்ளது. தங்கள் வாழ்த்தும் வழிகாட்டுதலும் தேவை. நெடுநாள் கழித்து தங்களின் வலைப்பதிவு பார்த்து மகிழ்கிறோம். அன்புகூர்ந்துதொடர்ந்து எழுத வேண்டுகிறோம். வணக்கம்.

    ReplyDelete
  2. வணக்கம்.
    பள்ளிகாலத்தில் கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் தந்த மகிழ்வை உங்கள் மடல் நினைவு படுத்தி விட்டது.....வல்லிக்கண்ணன் கடித்தில் சென்னையின் தட்ப வெப்ப நிலையையும்,பதிவு செய்துள்ளதை அறிந்தேன்...கடிதங்கள் காலம் காட்டும் கண்ணாடியாக உள்ளதையும்...
    வலைப்பதிவர் சந்திப்பில் தங்களின் மேலான வருகையை அனைவரும் வரவேற்கின்றோம்...நன்றி அய்யா.

    ReplyDelete
  3. கடும் பணிப்பளுவுக்கு இடையே வலைப்பூ தொடர்ந்து மலர்வது ஆறுதலாக இருக்கிறது..
    எதுமாதிரியும் இல்லா புதுமாதிரியாக கடிதங்களை பகிர்வது அருமை.
    வக போன்ற ஆளுமைகளோடு தொடர்பில் இருந்தது வளர விரும்பும் இலக்கிய ஆளுமைகளுக்கு பல செய்திகளைச் சொல்கிறது
    நன்றிகள் அய்யா

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்