பறப்பதற்கு அனுமதிப்போம்


      கோடை விடுமுறை முடியப்போகிறது. மாணவர்களோடு பெற்றோர்களும் அடுத்த வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். பலர் அதே பள்ளிக்கும் சிலர் வேறு பள்ளிக்கும் போக இருக்கிறார்கள். பள்ளியை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்குக் கல்வி ஆண்டுத் தொடக்கம் ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

     மறுபடியும் வழக்கம்போல ஆயிற்று. தொடர்ந்து இனி அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டான். கடந்த வருட ஆரம்பத்திலேயே சொன்னான். வகுப்பு மாறினால் சூழல் மாறும் என எண்ணினோம். இந்த ஒரு கல்வியாண்டு மட்டும் போ. அதன் பிறகும் மாறத்தான் வேண்டும் என்றால் மாறிக்கொள்ளலாம் எனத் தேற்றி அனுப்பினோம். ஓர் ஆண்டு முடிந்தது. மகனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை.


     இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் என் அப்பா இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றவர். அடிப்பதற்குக் குச்சி ஒடித்துக்கொண்டு வரச்சொன்னார் ஆசிரியர். அடுத்தவருக்குத் தானே அடிவிழப் போகிறது என்று சந்தோசமாகக் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறார் அப்பா. இவர் என்ன குறும்பு செய்தார் என்று தெரியவில்லை. முதல் அடியே இவருக்குத்தான் விழுந்தது. அடித்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில் சக மாணவன் ஒருவனோடு சேர்ந்து ஆசிரியரை நோக்கிக் கல் எறிந்துவிட்டு வந்தவர்தான்.

        பகல் பள்ளிக் கூடம் சாத்தியமாகவில்லை. எனவே, இரவுப் பள்ளிக் கூடம் போகத் தொடங்கினர். ஒவ்வொரு மாணவனும் மாதம் கால் ரூபாய் ஆசிரியருக்குச் சம்பளமாகத் தர வேண்டும். மூன்று பேர் படிக்க மாதம் முக்கால் ரூபாய். ஏழ்மையில் சிக்கிய பெரிய குடும்பத்திற்கு அது மிகப்பெரும் சுமை. இருப்பினும் படிக்கவைக்க முயற்சி நடந்தது.

    அதுவும் ஓரிரு மாதங்கள்தான். இறுதியில் குடும்ப வறுமை வென்றது. வாத்யாரிடம் படிப்பது என்பது அத்தோடு முடிந்துபோனது.

     இப்போதும் தமிழ் நாளிதழ்களை, வெளியீடுகளைச் சரளமாகப் படிப்பார் அப்பா. ஓரளவு பிழையில்லாமல் எழுதுவார். ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டியேனும் வாசித்துவிடுவார். அவர் போடும் கணக்கே வேறு.

        ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ராமசாமி ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு பயமோ பயம். நெடுநெடுவென்று இருப்பார். மூன்றாவதுக்கு வகுப்பாசிரியர். பிள்ளைகளை மொத்தி எடுத்துவிடுவார். ஐந்தாம் வகுப்பிற்கும் ஏதோ ஒரு பாடம் எடுக்க வருவார். நாங்கள் பக்கத்தில் நாலாம் வகுப்பு. இடையில் தடுப்பு எதுவும் கிடையாது. 

   ராமசாமி வாத்யார் கூப்பிடுகிறார் என்றாலே சிலர் ஒன்றுக்குப் போய்விடுவார்கள். கையைப் பிடித்துத் துணியைப் பிழிகிற மாதிரித் திருகுவார். குனிய வைத்து முதுகில் குத்துவார். கையை நீட்டச் சொல்லி குச்சி, கோல், தடி எது கிடைக்கிறதோ அதுகொண்டு அடிப்பார். உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை. மாணவர்களை நிலைகுலைய வைக்கும் அவரது தாக்குதல். இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. நான் ஐந்தாவது போவதற்குள் அவரை மாற்றிவிட மாட்டார்களா என்று ஏங்கினேன்.

     எல்லாப் பிள்ளைகளும் அவர் சீக்கிரம் செத்துப்போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். ஜெகதாபி மாரியம்மனுக்கு விளக்குப் போட்டவர்களும் பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சிறுசிறு மரத்தடிச் சாமிகளுக்கெல்லாம் கற்பூரம் கொளுத்தியவர்களும் அநேகம். அவர்களது வேண்டுதல் ஓரளவுக்கே நிறைவேறியது. 

    கொஞ்ச நாட்களாகப் பள்ளியில் அவரைக் காணவில்லை. லீவில் இருப்பதாகச் சொன்னார்கள். பிள்ளைகள் சந்தோசமாகப் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மாதம் கடந்திருக்கும். அவர் அடுத்த நாள் வருவதாகச்  செய்தி பரவியது. மூன்றாம் வகுப்பே இழவு வீடுபோல ஆகிவிட்டது. 

       ஒரு வழியாக வந்தார். ஒரு கையில் கட்டுப்போட்டிருந்தார். விசாரித்த சக ஆசிரியர்களிடம் விபத்தில் கை உடைந்து எலும்பு நொறுங்கியிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாணவர்கள் மனசுக்குள் அவ்வளவு குதூகலம். அவரிடம் அடிவாங்கிய ஒருத்தன் இடைவேளையில் எங்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டான். நாங்கள் ஐந்தாம் வகுப்பு போவதற்குள் அவர் மாறுதலில் சென்றுவிட்டார். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

       ஏழாம் வகுப்பு. நான் போட்ட பெருக்கல் கணக்கு சரியாகவே இருந்தது. தப்புப் போட்டிருந்தார் கணக்கு டீச்சர். நான் செய்த ஒரே தவறு அவரிடம் சென்று ‘டீச்சர் நான் சரியாகத்தானே போட்டிருக்கிறேன். இது தப்பா டீச்சர்?’ என்று கணக்கு நோட்டை எடுத்துக் காட்டியதுதான். காமாட்சி டீச்சருக்கு வந்ததே கோபம். 

      இருக்காதா பின்னே? அவர்தான் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் இல்லாதபோது அவர்தான் பொறுப்பு. அவர் தண்டிக்கும் முறையே வேறு. வயிற்றைப் பிடித்துக் கிள்ளுவார். வலி உயிர் போகும். நான் கேட்டதற்கு எனக்குக் கிடைத்த பரிசும் அதுதான். மேலும், நான் டீச்சரா? நீ டீச்சரா? என்றுவேறு கேட்டு அவமானப்படுத்திவிட்டார்.  

   அதென்னவோ தெரியவில்லை…. ஆசிரியர் என்றாலே அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் போல. அவர்களின் தகவல் பிழைகள், எழுத்துப் பிழைகள், கருத்துத் தடுமாற்றங்கள் எல்லாவற்றையும் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை ஆசிரியர்கள் வேண்டுமென்றே செய்யாத எதேச்சையாக நிகழும் பிழைகள்தான். கவனப் பிசகாக நடந்துவிட்டது சாரிப்பா…என்றுகூடக் கேட்க வேண்டாம். ‘நீ கவனிக்கிறாயா இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகவே அப்படிச் செய்தேன்’ என்றாவது சொல்லிச் சமாளிக்கிற ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்றால் அது மிக மிகக் குறைவு.

         டீச்சர் அதை அப்போதே மறந்துவிட்டார். ஆனால், எனக்கோ ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து போவது சிரமமாக இருந்தது. அவர் நான் கேட்டதற்காகத் தண்டித்துவிட்டாரே என்பதைவிட சரியாகப் போட்ட கணக்குக்குத் தப்புப் போட்டுவிட்டாரே என்னும் மனச் சுருக்கம். ஆசிரியர் என்றாலே அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதுவும் எனது ஆசிரியர்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்னும் இறுமாப்பு எனக்குள் இருந்தது. ஆனால், என் நம்பிக்கை இப்படிப் பொய்த்துப் போவதை சின்னஞ்சிறு மாணவ மனசால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

        பக்கத்து ஊரான லந்தக்கோட்டைக்கு உயர்நிலைப் பள்ளி வந்தவுடன் அங்கு சேர விரும்புபவர்களைக் கணக்கெடுத்தார்கள். முதல் ஆளாக என் பெயரைக் கொடுத்தேன். லந்தக்கோட்டை பரிச்சயமான ஊர் என்பதால் என் அப்பாவும் சம்மதித்தார். ஜூலையோ ஆகஸ்டு மாதமோ. அப்பாடா என்று ஏழாம் வகுப்பில் போய்ச் சேர்ந்தேன். பள்ளிக்கு நடந்து  போய்க்கொண்டிருந்தவனுக்கு சைக்கிள் கிடைத்தது. மன அவசம் ஓரளவு குறைந்தது. 

       மங்கையர்க்கரசி என்றொரு டீச்சர். கணக்கு நடத்துவார். அடிக்கடி அவர் வாயிலிருந்து வரும் நாயும் பன்றியும் எங்கள் காதுகளில் உறுமிப் போகும். டீச்சர் வகுப்பில் பிள்ளைகளை அவலட்சணமாகக் குத்திக் காட்டுவார். லட்சணமான அவரது முகத்தில் அருவருப்பு ரேகைகள் படர்வது என்னவோ போல இருக்கும்.

       பாண்டியன் என்றொரு தமிழாசிரியர். எட்டாம் வகுப்பின் பின்பாதியில் வந்து சேர்ந்தார். தமிழின் ழகர எழுத்தை வகுப்பில் நான் மட்டுமே ஒலிப்பு முறை பிசகாமல் உச்சரிப்பேன். விநோதமாய்ப் பார்ப்பார். வேண்டுமென்றே அடிக்கடி வாசிக்கச் சொல்வார். எப்போதாவது வார்த்தை தடுமாறி விட்டால் குத்திக் காட்டுவார். மாணவர்களைக் கேலிப்பெயர்களால் அழைப்பார். அவரது மகளும் எங்களோடு படித்தார். அவரது மகளைவிட வேறு யாரும் அதிக மதிப்பெண் வாங்கிவிடக் கூடாது. நானும் ஆறுமுகமும் நாகராஜனும் தமிழைத் தவிர வேறு பாடங்களில் அவரது மகளை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவது வழக்கம். இதனால், அவரது கேலிக்கும் குத்தல் பேச்சுக்கும் ஆளானோம். ஒன்பதாம் வகுப்பின் தொடக்கத்தில் அவர் மாறுதலாகிச் சென்றபின்னர்தான் நிம்மதி கிடைத்தது.  

   நான் பதினொன்று, பன்னிரண்டு படிக்க வேறு வழியில்லாமல் உப்பிடமங்கலம் சேர்ந்தேன். வேதியியல் ஆசிரியர் தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவர்க்கு மட்டுமே சலுகை காட்டுவார். மற்றவர்களை டீஸ் பண்ணுவார். அவர் சுபாவம் அப்படி. முதல் பெஞ்சுக்கு மட்டுமே பாடம் நடத்துவார். அதுவும் முக்கியமான பகுதிகளை மட்டும்தான் நடத்துவார். 

     நான் போனதால் என் தம்பியையும் சேர்த்துவிட்டார் அப்பா. தம்பிக்கு ஜெகதாபியில் இருந்து உப்பிடமங்கலம் சேர்ந்தது பிடிக்கவே இல்லை. பின்பு தம்பியை லந்தக்கோட்டையில் சேர்த்தோம். முழுசாகப் பிடித்தது என்று சொல்ல முடியாது. அவன் எதிர்பார்ப்புக்கு இல்லாவிட்டாலும் ஏதோ பரவாயில்லை என்று பத்தாம் வகுப்பை முடித்தான். 

    தம்பியைப் பதினொன்றாம் வகுப்பிற்குப் பசுபதிபாளையம் உதவிபெறும் பள்ளியில் சேர்த்தார் அப்பா. சுத்தமாகப் பிடிக்கவில்லை அவனுக்கு. மாணவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளுக்குக் கூட அந்தப் பள்ளியில் அப்போது காலில் தண்டக்கட்டை மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படி நடந்ததோ இல்லையோ. நடந்துவிட்டால்… என்ற பயம். அந்த அவமானத்தை யார் தாங்க முடியும்? நான் பணியாற்றிய பள்ளியில் கொண்டுவந்து சேர்த்தேன். திருப்தி என்று சொல்ல முடியாது. எப்படியோ படிப்பு முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 

      தங்கையின் மூத்த மகள் இப்போது படிப்பது தமிழ்நாட்டில் நான்காவது பள்ளி. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அதே பள்ளியில் பதினொன்று படிக்க முடியாது என்று சொல்ல, பக்கத்தில் இருந்த இன்னொரு பள்ளியில் சேர்த்துவிட்டார் தங்கை. இப்போது அந்தப்பள்ளியும் பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அங்கேயே படித்துவருகிறாள்.

     மகனை எருமப்பட்டியில் ஒரு பள்ளியில் சேர்த்தோம். எல்.கே.ஜி.யில் இரண்டு வகுப்புகள் இருந்தன. இவன் பெயர் எழுதப்பட்டிருந்த வகுப்பில் ஒரு மாதம் மட்டுமே உட்கார்ந்திருந்தான். பின்பு அவன் பெயர் மட்டுமே அந்த வகுப்பில் இருந்தது. அந்த வகுப்பு பிடிக்கவில்லை என்று பக்கத்து வகுப்பில் போய் உட்கார்ந்துகொண்டான். பக்கத்து வகுப்பு டீச்சரைத் தன் வகுப்பிற்கு அனுப்பினால் அங்கேயே இருப்பதாகச் சொன்னான். டீச்சரை மாற்ற முடியாது. வேறு வழியில்லாமல் அவனது பெயரைப் பக்கத்து வகுப்பு வருகைப் பதிவேட்டிற்கு மாற்ற வேண்டியதாயிற்று. 

      ஈரோட்டில் ஒரு பள்ளியிலும் இப்படித்தான் வேண்டாவெறுப்பாகப் படித்தான். அடுத்தமுறை ஈரோட்டுக்கு மாறுதலில் வந்தபோது அந்தப் பள்ளியில் மீண்டும் சேர்க்கவில்லை. வேறு பள்ளியையே தேர்வு செய்தோம்.

           நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் மூன்று பள்ளிகள் பார்த்தேன். என் தம்பி ஐந்து பள்ளிகள் மாறினான். தங்கை மகள் நான்காவது பள்ளியில். இத்தனைக்கும் நாங்கள் ஏனோதானோவென்று படித்தவர்கள் இல்லை. ஒரு கணக்குக்காக வைத்துக் கொண்டால்கூட மூவருமே பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள். 

    மகனோ ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ஏழு பள்ளிகள். இப்போது சேர்ந்திருப்பது எட்டாவது பள்ளி. அவன் அடிக்கடி பள்ளி மாறியதற்கு ஒன்று என் பணிமாறுதல் முதல் காரணம். இரண்டாவது சில பள்ளிகளின் சூழ்நிலை காரணம்.

     நானும் ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். பல்வேறு நிலைகளில் பல்வகைப் பள்ளிகளில் என்னால் முடிந்த அளவு மாணவர்க்காக என்னை அர்ப்பணித்திருக்கிறேன். எனக்கு ஒரு சிரமம் என்றால் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளிப்புடன் செயலாற்றும் அளவிற்கு மாணவர்கள் என் பின்னால் நின்றார்கள். என் பணிக்காலத்தில் அவர்களது மனசில் உள்ளார்ந்த ஆசிரிய – மாணவ நேசத்துடன் மானசீக குருவாக இடம்பிடித்திருந்தது பெருமையே. இருந்தாலும் கூட ஏதாவதொரு மாணவருக்கு என் ஆசிரிய நடத்தை எனக்குத் தெரியாமலேயேகூட விலகலை உண்டாக்கியிருக்கக் கூடும் என்றால் அது வருத்தத்திற்கு உரியதுதான். 

       நாம் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பதை ஒருபோதும் மறந்துவிட முடியாது. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் இல்லை. ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஓரிரு ஆசிரியர்கள் நடந்துகொள்ளும் விதம் ஒட்டுமொத்த ஆசிரியச் சமூகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகிறது. ஏதோ ஒருசில பள்ளிகளில் நடக்கிற மோசமான சம்பவம் எல்லாப் பள்ளிகளையும் பாதிக்கிறது. இதற்கு அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற வித்யாசம் எதுவும் கிடையாது. 

     குழந்தைகள் தான் படித்துவந்த பள்ளிக்கு இனிச் செல்லமாட்டேன் எனத் திடீரெனச் சொல்லும்போது பெற்றோர்களுக்கு மிகுந்த நெருக்கடி உண்டாகிறது. உடனடியாகப் பள்ளியை மாற்றிவிட யாரும் முன்வருவதில்லை. எத்தனையோ பிள்ளைகள் அதே பள்ளியில் மகிழ்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருசில குழந்தைகள் மட்டும் தொடர்ந்து அதே பள்ளிக்குப் போக விரும்புவதில்லை. பள்ளி மாற விரும்புகிறார்கள். சிலர் அடம்பிடிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பள்ளி சரியில்லை என்பதைவிட அந்தப் பள்ளியின் ஏதோவொரு காரணி இவர்களின் பிஞ்சுமனசுக்கு ஒத்துவரக்கூடியதாக இல்லை. 

   தொடர்ந்து அதே பள்ளியில் படிக்குமாறு கட்டாயப்படுத்தலாம். அது பள்ளியைத் தாண்டி குறிப்பிட்ட ஆசிரியர் மீதான வெறுப்பாகவோ அவர் போதிக்கும் பாடத்தின் மீதான வெறுப்பாகவோ நிலைபேறு அடையும். குழந்தைகள் பள்ளியைப் புறக்கணிக்க அனுமதிக்க வேண்டும். வேறு பள்ளியில் சேரவும் வகைசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து படிக்கவேண்டிய வயதில் அவர்கள் படிப்பைப் புறக்கணிக்கும் முடிவிற்கு வந்துவிடுவார்கள். பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திவிடவும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

       எல்லாப் பள்ளிகளும் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்தவையாக இருக்கும் அல்லது எல்லாக் குழந்தைகளும் எல்லாப் பள்ளிகளையும் ஏற்றுக்கொள்ளும் என நாம் தட்டையாகச் சிந்திப்பது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். பள்ளிகள் கூடுதலாக மாணவர்களைச் சேர்ப்பதில் எவ்வளவோ ஆர்வம் காட்டினாலும் சேர்க்கப்பட்ட மாணவர்கள் ஒருசிலர் வெளியேறுவதிலும் மறைமுகமாகப் பங்குவகிக்கின்றன. மாணவர்களுக்குப் பள்ளி இல்லாமல் ஆக்குவதில் சமூக, பொருளாதார, உளவியல் காரணங்கள் நுட்பமாகச் செயலாற்றுகின்றன. அவை தொடர்ந்து குழந்தைகளைப் பள்ளியைவிட்டு வெளியேற்ற முனைகின்றன. நாம் இதை விட்டுவிடுவதற்கில்லை. 

       பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வி ஆர்வலர்களும் பள்ளி நிர்வாகிகளும் நம்மை நாமே மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது. மாணவர்கள் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தாலும் அதைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. அதற்குக் குறைந்த பட்சம் இரண்டு காரணங்களைக் கூறலாம். 

     முதலாவதாக, மதிப்பெண் ஒன்றையே குறியீடாகக் கொண்டு போட்டி போட்டு சீட்டு வாங்கிப் பள்ளியில் சேர்க்கிறார்கள். மாணவர்களின் மனசை யாரும் கண்டுகொள்வதில்லை. இரண்டாவதாக, இடையில் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வரும் மாணவர்களை எந்தப் பள்ளியாக இருந்தாலும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறது. பள்ளியின் கட்டுப்பாடு தளர்ந்து விடுமோ பள்ளியின் கட்டுக்கோப்பு குலைந்துவிடுமோ என அஞ்சுகிறது; என்ன குற்றம் செய்தானோ எனக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாத குறையாக விசாரிக்கிறது. பெற்றோரால், சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட - பாதுகாப்பு உணர்வை இழந்துவிட்ட - மனச் சிதைவு கொண்ட ஒருசில குழந்தைகளின் அதீத நடத்தையால் ஏற்படும் விளைவு இது.

      மாணவர் இடைநிற்றலைத் தவிர்க்க அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 4, ஆறு முதல் 14 வயது வரம்பிற்குள் உள்ள குழந்தைகள்  தமது வயதுக்கேற்ற வகுப்பில் சேர வகைசெய்கிறது.  பிரிவு 5 பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கென ஆவணங்கள், மாற்றுச் சான்றிதழ்கள் கேட்டு மாணவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது எனவும்  வலியுறுத்துகிறது. இதைப் பள்ளிகள் நேர்முகச் சிந்தனையுடன் அணுக வேண்டும்.

    மாணவர்கள் பள்ளியை மட்டுமல்ல; ஆசிரியரையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை எதிர்நோக்கி நிற்கிறார்கள். ‘அ’ பாடத்திற்கு ‘க’ பள்ளியில் பணியாற்றும் ‘த’ ஆசிரியர்தான் வேண்டும்; ‘ஆ’ பாடத்திற்கு ‘ச’ பள்ளியில் பணியாற்றும் ‘ப’ ஆசிரியர்தான் வேண்டும் என மாணவர்கள் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் தேர்ந்தெடுக்கத் தொடங்கினால் நிலைமை என்ன ஆகும் என்பதைப் பள்ளிகளும் ஆசிரியர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 

          ஆசிரியரும் பள்ளிகளும் பெற்றோருக்கு அடுத்த நிலை வகிப்பதான சமூகப் பொறுப்புணர்வுதான் நம்மீது கூடுதல் கவனம்கொள்ள வைக்கிறது. பெற்றோரின் கொடுமை தாங்காத பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போய் எப்படியோ பிழைத்துக் கொள்ளக் கூடும். ஆனால், பள்ளியை விட்டு இடையில் வெளியேறும் மாணவர்கள் மேற்கொண்டு தாமே படித்து முன்னேறும் சாத்தியம் குறைவு. பிழைப்பு மட்டுமே வாழ்க்கை அல்லவே.

        ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை ஆகியிருக்கிறது. இதைத் தெரிந்தும் தெரியாதவர் போல இருப்பது இன்னும் எத்தனை நாளைக்குச் சாத்தியமாகும் என்று சொல்வதற்கில்லை. நாமே முன்வந்துவிட்டால் நல்லது. படித்தவர்கள் என்றால் விசாலமான மனமுடையவர்கள் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை பொய்த்துப்போக நாம் காரணமாகிவிடக் கூடாது என்னும் உள்ளுணர்வு ஒவ்வொருவருக்கும் வேண்டும். 

       மாணவர்கள் விரும்பித் தேடிவரும் இடமாகப் பள்ளிகள் திகழ வேண்டும். விடுமுறை விட்டாலும் அவர்களது மனசு பள்ளியையே சுற்றி வரவேண்டும். அவர்களது பாதங்கள் பள்ளிக்குச் செல்ல ஏங்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த விரிவான செயல்திட்டமும் விவாதித்து முடிவெடுக்கும் பரந்த அணுகுமுறையும் தேவை. இன்று உங்களுக்கும் எனக்கும் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் இதுதான்.

                                                                                                                                  30.05.2014

14 comments:

  1. வணக்கம் ஐயா
    பள்ளி நேரம் முடிந்து மணியடித்தவுடன் மாணவர்கள் மானைப் போல துள்ளிக் குதித்து ஓடுகிறார்கள். ஆனால் காலை நேரம் பள்ளிக்கு ஆமையைப் போல நடை, தொங்கிய முகம் இப்படி தானே காலகாலமாய் நடந்தேறுகிறது. இதற்கான காரணங்களைப் பாதி உணர்ந்திருந்தாலே இன்று மாணவர்களாக விரும்பும் இடமாக பள்ளி இருந்திருக்கும் என்பது உண்மை தான் ஐயா. ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தீவிரமாக சிந்துத்து மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்க சரியான தருணம் இது தான். அவர்களும் மட்டுமல்ல அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    தமிழ்மணத்தில் தங்கள் வலைத்தளத்தை இணைத்து விட்டார்கள். மேலே ஓட்டளிக்கும் பட்டை இயங்குகிறது. மூன்று தளங்களிலும் பதிவை இணைத்தது நான் தான் ஐயா. இணைப்பு எப்படி கிடைத்தது எனும் ஐயம் வேண்டாம் என்பதற்காக பதிவிட்டேன். நன்றீங்க ஐயா..

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    அருமையான சிந்தனைத் துளிகளை பதிவில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    த.ம 2வது வக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அய்யா,
    வணக்கம். முதல்முறையாகத் தங்கள் தளத்தில் கருத்திடுகிறேன்.
    மாணவராக, ஆசிரியராக, அலுவலராக மூன்று குரல்கள் இக்கட்டுரையில் கேட்கின்றன.
    தலைவாரிப் பூச்கூடி உன்னைக்
    கல்விச் சாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை!
    சிலைபோல ஏனிங்கு நின்றாய் -நீயும்
    சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? எனப் பாரதிதாசன் காலத்திலும் பிள்ளைகள் பள்ளி செல்லப் பயந்து தான் கிடந்திருக்கிறார்கள்! உ.வே. சா. என் சரித்திரத்திலும் “தண்ட நாயகர்களையும்“ சட்டாம் பிள்ளைகளையும் தன் பள்ளி அனுபவத்தில் கடந்து வந்ததைக் கூறுவார். கட்டுரையோடு என்னைத் தொடர்ந்து படிக்க விடாமல் செய்து, ஒட்டித் துரத்தியபோதும் மூச்சிளைக்கப் பின்தொடருகின்றன....என் பள்ளி நினைவுகள்!
    நன்றி!






















    ReplyDelete
  6. பெரும்பாலும் நல்ல ஆசிரியர்களைப் பற்றியே நமக்கு சொல்லிப் பழக்கம். நீங்கள் உண்மையை உரைத்திருக்கிறீர்கள்.படிப்பையே வெறுப்பதற்கு ஆசிரியர் எந்த அளவுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ஆசிரியர்கள் இதை உணரவேண்டும்.
    காலம் இப்போது மாறிவிட்டது. மாணவர்களை தொட முடியாது.
    ஒரு மாணவியின் மீது கல்லெறிந்து விளையாடிய மாணவனைக் கண்டித்த ஆசிரியர் மீது ஆபாசப் படம் எடுத்தார் என்று பொய் புகார் கூறப்பட்ட செய்தியை இன்று பத்திரிகையில் படித்தேன்.
    நல்ல பதிவு . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஒரு நல்ல தந்தையாக என் கண்ணுக்குத் தெரிகிறீர்கள். ஆனால் உங்கள் வேதனை எல்லாம் தனியார் பள்ளியைச் சார்ந்தது. அரசுப் பள்ளிக்கு இது முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் அலுவலகத்திலிருந்து தான் எங்களுக்கு சி.இ.ஒ.,ஏ.இ.ஓ வர வேண்டும் என்பதில்லை. உள்லூரிலேயே கொட்டிக் கிடக்கிறார்கள். அரசுப் பள்ளியில் பணிபுரிவதே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. மாணவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள்,பொதுமக்கள், பெற்றோர்கள், போன்ற பல்லோரிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் பாடாய் பவவேண்டியிருக்கிறது. அதுவும் பிற துறையைச் சார்ந்தவர்களுக்கு நாங்கள் வெட்டியாய் காலை 9 முதல் 5 மணி வரை இருந்து சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்வதாக எண்ணம் இருக்கிறது. எனவே ஒரு சமுதாயக் கண்ணோட்டத்துடன் நாம் தனியார் பள்ளிகளின் பயிற்சி பெறாத ஆசிரியர்களைப் பற்றித் தான் நாம் கவலை கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. கும்பகோணம் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் நான் படித்த நினைவைத் தந்துவிட்டது இப்பதிவு. மாணவர்களை அடிக்க மாணவர்களே காசு சேர்த்து ஆசிரியருக்கு பிரம்பு வாங்கித் தருவோம். நம்பள் கிளாசில் நான் வாங்கிய அடிக்கு அளவேயில்லை. பள்ளியைக் கண்டாலே ஏதோ நரகம் போல் அந்தக் காலம் இருந்தது. எவ்வளவுதான் தண்டனை பெற்றாலும், ஆசிரியருக்கு தரும் மரியாதை கொஞ்சம்கூட குறையாது. படித்து முடிந்து வேலைக்குப் போனபின்னர் கூட அந்த ஆசிரியர்களைப் பார்க்கும்போது வணக்கம் சொல்லி கையை மரியாதையாகக் கட்டிக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் அனைத்தும் நல்லதுக்குத் தான் என்பது இப்போது புரிகிறது. அப்போது நாம் பெற்றதை தண்டனை என நினைக்கக்கூடாது. நமக்கு அது ஒரு பாடம் எனக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  9. அய்யா, பாசமிகுந்த தந்தையாக, சமூகப் பொறுப்புள்ள கல்வியாளராக உங்கள் படைப்பு நல்ல சிந்தனைகளைத் தூண்டுகிறது. மாணவரின் ஆளுமையில் பள்ளியைவிடவும் ஊடகங்களின் பங்கு அதிகமிருப்பதை இன்றைய பாடத்திட்டங்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று என் அனுபவம் சொல்கிறது. திரைப்படம், குறும்படம், தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றைக் கையாளுவது பற்றிப் பள்ளியிலேயே பயிற்சிதர வேண்டும் என்றும் யோசிக்கலாம். மதிப்பெண் தவிரவும் ஆடல், பாடல், ஓவியம், தலைமைப் பண்பு இன்னபிற திறன்களுக்கும் மதிப்பெண் உண்டு எனும் புதிய மதிப்பீட்டு முறையில் இவற்றுக்கு இடமளிக்கலாம். குழுச்செயல்பாடுகள் ஒப்புரவுப் பண்பை வளர்க்க உதவும். நண்பர்களை விரும்புமளவுக்கு ஆசிரியர்களை விரும்பும் மாணவர்களை உருவாக்கப் பள்ளிச்சூழல் இடம்தரவேண்டும். நல்ல சிந்தனைகளை விதைக்க நல்ல மாற்றங்களுக்கு இடமளிக்கும் விசாலமான திட்டம் பள்ளியில் கிடைத்தால் ஆசிரிய-மாணவர் உறவும் மேம்படலாம். தேர்வு முறையில் மாற்றமும் அவசியம். தங்கள் கட்டுரையின் கடைசிப்பத்தி நிகழ நாம் இன்னும் பயணிக்க வேண்டும், பயணிப்போம் அ்யயா. இன்றைய நம் குழந்தைகள்தானே நாளைய நாட்டுத் தலைவர்கள்! தங்கள் முயற்சிகள் வெல்லும். நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம் அய்யா
    சிறுவயது நினைவுகள் காலத்தால் அழியாமல் மனதில் வடுவாய் .என்னை நான் படித்த அடக்குமுறை காலத்திற்கு அழைத்துச் சென்றது உங்கள் பதிவு.
    சின்ன மறுதலிப்பு போது குழந்தை ஆசிரியரை விட்டு விலக.கையில் கிடைத்த பூக்களை ரசிக்காமல் கடமைக்காக பணியாற்றும் ஆசிரியர்களின் மனநிலை மாற வேண்டும்.
    குழந்தையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் .அவர்கள் விரும்பும் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள்.
    நல்லவேளை என் மாணவர்கள் என்னை நோக்கி விரும்பி ஓடி வரும்படியாக பணி செய்கிறேன் என்பதில் மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  11. ஐயா! 'என் ஆசிரிய நடத்தை ஏதாவதொரு மாணவனுக்கு எனக்குத் தெரியாமலேயே விலகலை ஏற்படுத்தியிருக்கும்'..ரொம்பவும் நுட்பமான இடம் இது ஐயா!. ஒவ்வொரு ஆசிரியரையும் தன கடந்த காலத்தை நோக்கிக் கட்டாயம் இழுத்துச் செல்லும். படிக்கப் படிக்க மாணவப் பருவ நிகழ்வுகள் வந்து போகின்றன. நம் ஆசிரிய நடத்தை எதாவது ஒரு இளம் உள்ளத்தில் சிறிய காயத்தை உண்டாக்கி இருக்குமோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.இனி வரும் காலங்களில் இந்தத் தவறுகள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் உண்டாக்கியிருக்கிறது.பள்ளிமாற்றம் என்ற பிரச்சனையை மிக நுட்பமாகவும்,தெளிவாகவும் தங்களின் பதிவு பேசுகிறது.."பள்ளியை விட்டுச் செல்லும்போது மாணவர்கள் விரைவாகச் செல்வது போல, என்றைக்குப் பள்ளிக்கு ஆர்வமாக வருகிறார்களோ, அன்றுதான் கற்றல் முழுமை அடைந்திருக்கிறது என்று பொருள்" என்று சொன்ன மூதறிஞர் இராஜாஜிஅவர்களின் கரு த்து நினைவுக்கு வருகிறது. மாற்றங்களை நோக்கிய தங்களின் பயணம் நிச்சயம் வெல்லும்!
    www.mahaasundar.blogspot.in

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா. ஆசிரியர்களால் நாம் செதுக்கவும்படுகிறோம் உடைபட்டும் போகிறோம் என்பதைத் தங்களின் பதிவு காட்டுகிறது. சுரேந்திரன் எனும் தமிழாசிரியர். நல்ல புலமையாளர். அவரைக் கண்டாலே எண்கள் (ஒன்று, இரண்டு) தன்னாலேயே வந்துவிடும். அவர் முன் நான் கை கால் நடுங்கி நின்ற போது காறி உமிழப் பட்டேன். எந்த வாய் என்னை உமிழ்ந்ததோ அந்த வாயால் பாராட்டுப் பெற வேண்டும் எனும் உந்துதல் லட்சியமாகவே மாறி அவர் போல ஆசிரியராகத் தூண்டியது. அதே சமயம் முடத் தெங்கு போல இருந்த ஆசிரியர் ஒருவர் என்னை வீம்புக்கென்றே விலாசியதால் கணிதம் எனக்குக் கசந்து போனது. அதற்கு இன்னமும் நான் வருந்துகிறேன். கல்லூரிகளில் இப்போதெல்லாம் CBCS எனும் முறையில் மாணவர்கள் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கின்றனர். நீங்கள் கூறியது போல ஆசிரியர்களை மாணவர்களே தேர்வு செய்து கற்கும் முறை வந்தால்... ஆகா அருமையான திட்டம். கல்வித் துறை தூர்வாரப் பட்டுவிடும் ஐயா... கிராக்கி இல்லாத ஆசிரியர்கள் கூட தன் கற்பிக்கும் உத்தியை மாற்றிக் கொள்வார்களே...தொடர்ந்து கற்பிக்கும் ஆசிரியர்களை விடக் கற்கும் ஆசிரியர்களாக நம் ஆசிரியச் சமுதாயம் மாறி விடுமே... அந்தக் காலம் எப்போது வருமோ... ஆசிரியர்களுக்குத் தேர்வு என்பதை விட ஆசிரியர்களை மாணவர் தேர்ந்தெடுக்கும் திட்டம் விரைந்து வர உங்களைப் போன்ற கல்விப் பிரம்மாக்களால் சாத்தியம் ஐயா... கல்விக் கூடங்களைப் பூச்சாண்டியாகப் பார்க்கும் பாலகர்கள் பூக்களில் தேன் பருகும் பட்டாம் பூச்சிகளாய்ப் பறந்து வரப் புதிய திட்டம் பூபாளம் இசைக்கட்டும். நன்றி ஐயா. கொ.சுப. கோபிநாத், இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம்

    ReplyDelete
  13. வணக்கம்
    ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான கையேடு..
    அதற்கு எனது நன்றிகள்..
    த.ம. ஐந்து.
    ஒரு ஆசிரியர் பின்னால் மாணவர்கள் நின்றால் அவர் சக ஆசிரியர்களால் எப்படி நடத்தப்படுவார் என்பதற்கான பதிவினையும் எதிர்பார்கிறேன்.

    உங்கள் மிரட்டுகிற மதிப்பெண் வரலாறு, தேர்ச்சி வரலாறு, பணிச் சாதனைகள் இவை தருகின்ற ஒரு மரியாதை எல்லாம் இந்தப் பதிவினை படிக்கும் பொழுது ஒரு அலை மாதிரி வந்தது..
    நன்றி ஐயா

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்