2014 புத்தாண்டும் 24 மணி நேரமும்
இப்போதெல்லாம் கொண்டாட்டங்கள் என்றால் அத்துமீறுபவையாகவும் அருவருக்கத்தக்கவையாகவும் ஆகிப்போகிற நிகழ்வைப் பார்க்கிறோம். அதுவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி ஆகிவிடுகிறது. மோட்டார் வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாகச் செல்வது, விநோத ஒலி எழுப்புவது, வயது வித்தியாசமின்றி விடுதி நடனங்களில் பங்கேற்பது, பெண்களைக் கேலி செய்வது என்னும்படியாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பரிமாணம் கொள்ளும்போது அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இவற்றுக்கு மாற்றாக சாத்வீகமான கொண்டாட்டங்கள் சாத்தியப்பட வேண்டும்.


இந்தப் புத்தாண்டுக்கு எனது தந்தையையும் ஆசிரியரையும் சந்திக்கத் திட்டமிட்டேன்.  2014 புத்தாண்டு ஜனவரி 1 அன்று கூடு ஆய்வுச் சந்திப்பு அமைப்பின் 50வது கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் அய்யா பெருமாள் முருகன். நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் அவ்வப்போது கூடிச் செயல்பட்ட நினைவுகள் மலர அதில் கலந்துகொள்ளவும் தீர்மானித்தேன். உடன் தமிழாசிரியர்கள் மகா சுந்தர், கவிஞர் முத்து நிலவன் ஆகியோரும் வருவதாகத் தெரிவித்தனர். மகா சுந்தரின் தம்பி முத்துக்குமார் எங்கள் புத்தாண்டுப் பயணத்திற்கு சாரதியாய் வந்தார்.

விராலிமலை தாண்டிச் சென்றபோது நண்பர் எட்வின் எனது நேர்காணல் வந்திருக்கும் காக்கைச் சிறகினிலே இதழ் நாளை கடைகளில் கிடைக்கும் என்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறிய எட்வின் அவர் இறப்பதற்கு(30.12.2013) முந்தைய நாள்தான் அவருடன் பேசியதாகக் கூறினார். இதழின் நேர்காணலுக்காகச் சந்திக்கப் புத்தாண்டு முதல் வாரத்தில் நாள் ஒதுக்கியதாகவும்  இப்போது இப்படியாகச் சந்திக்கக் கடவூருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் என்றும் வருந்தினார்.

நம்மாழ்வாரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டபோது நம்ப முடியாததாக இருந்தது. நவம்பரில் குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி விழாவில் அவரோடு கலந்து கொண்ட நினைவு மீதூரப் பெருமூச்செறிந்தேன். மணப்பாறை வந்தது.  மணப்பாறையில் தமிழாசிரியர் பாண்டியனும் எங்களோடு இணைய அவரோடு ஐவரானோம். நேசம் மிக்க தமிழாசிரியர் அண்ணா ரவியின் அன்புக் கட்டளைக்கு இணங்க அவரது இல்லத்தில் இரவுச் சிற்றுண்டி உண்டோம். அவரது புத்தாண்டு வாழ்த்துகளோடு கூடிய கடலை மிட்டாய் இனிக்க இரவு 8.30க்கு விடைபெற்றோம்.

போகும் வழியில் எனது ஆசிரியரைச் சந்திக்கப் போகிறோம் என்று கூறியவுடன் பாண்டியன் தனது ஆசிரியர் ஒருவர் பற்றி சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டு வந்தார். லந்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் எனது இரண்டாவது பெற்றோராக விளங்கிய ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களின் வீடு வந்தது. லந்தக்கோட்டைக்குத் தெற்கில் பெருமாள் கோவில் பட்டியில் அவரது துணைவியார் திருமதி மார்கரெட் சரோஜினி ஆசிரியை மறைவுக்குப் பின் இப்போது எனது ஆசிரியர் மட்டும் தனியராய் வாழ்ந்துவருகிறார்.

பை நிறையப் பழங்களை அவரிடம் அளித்தபோது மனம் நிறைய அன்பையும் வாழ்நாள் அனுபவத்தையும் கொண்ட அவர் ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக் கொண்டு போதும்யா என்றார். என் கண்கள் குளமாக எனது ஆசிரியை நிழல்படத்தில் புன்னகைத்தார். எல்லாமே உங்களுக்குத்தான் என்றவாறே  நாட்காட்டி ஒன்றையும் நாட்குறிப்பு ஒன்றையும் கொடுத்தேன். நாட்குறிப்பு எழுதுவீர்களா எனக் கேட்டபோது நீ குடுத்தா எழுதறன்யா என்றார். ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்க அவர்களுக்குக் கணக்கீடுகள் போட்டுத் தந்துகொண்டிருப்பதாகத் தனது வாழ்நாள் நகர்வு குறித்து உள்ளார்ந்த வருத்தத்துடன் கூறினார்.

அவரது பணிகளைப் பாராட்டிய முத்து நிலவன் திருமயம் பாறை ஓவியங்கள் குறித்து எனது கட்டுரை வெளிவந்திருக்கும் தினமணி புத்தாண்டு மலரை அவரிடம் கொடுத்தார். கூடு கூட்டத்தில் எனது கட்டுரையுடன் தொகுக்கப்பட்டுள்ள சாதியும் நானும் என்னும் நூல் அறிமுக விழாவிற்குச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறியதும் உற்சாகமானார்.

ஆனந்த விகடனுக்கு அனுப்பித் திரும்பி வந்த தனது காதல் கதைகள் குறித்தும் தனது ஆசிரியப் பணி குறித்தும் பேசியவாறே தான் எதிர்கொண்ட சாதிய நிகழ்வுகள் சிலவற்றை எடுத்துரைத்தார். தான் பணியாற்றிய பள்ளிக்கு வந்து மூனாவதோ நாலாவதோ படித்த மாணவனை,  என் புருசனக் கொஞ்சம் வெளிய அனுப்புங்க எனக் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருத்தி கூப்பிட்ட அனுபவத்தைச் சொன்னபோது அதிர்ந்துபோனார்கள் என்னோடு வந்தவர்கள்.

கைக்குழந்தைக்குத் தந்தை யார் என மகாசுந்தர் பட்டிமன்றம் நடத்த முற்பட்டார். அந்தப்பெண்ணின் மாமனார் என்ற விடை கிடைத்தபோது மகனின் தந்தை மகனின் மகனுக்கும் தந்தையா என மகாசுந்தர் விக்கித்துப்போனார். என் ஆசிரியர் குடிக்க வெந்நீர் வைத்துக் கொடுத்தார். இரவுக் குளிருக்கு இதமாய் இருந்தது. புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றபோது இரவு 10.30 மணி.

ஜெகதாபியில் என் தந்தை எனக்காக விழித்திருந்தார். நாட்காட்டி ஒன்றைக் கூடத்தில் தொங்க விட்ட நான் நாட்குறிப்பு ஒன்றைக் கொடுத்தேன். தம்பி ஏற்கனவே ஒன்னு குடுத்துட்டான் என்றார். அது இதைவிடப் பெரிசோ என உரிமையுடன் கேட்டவாறே தொலைக்காட்சிப் பெட்டிமீது இருந்ததை எடுத்துக்காட்டி இதுவா என்றேன். ஆமாம் என்றவாறே சொற்களை விழுங்கினார். கேட்டதற்காக வருந்தினேன். பச்சை நிறத்தில் அடக்கமாக இருந்தது. தினமணி புத்தாண்டு மலரையும் கட்டுரைத் தொகுப்பையும் கொடுத்தேன்.

வீடு வெள்ளயடித்து பொங்கலுக்குத் தயாராக வைத்திருந்தார். அவர் கேட்காத போதும் அதற்கான தொகையைக் கொடுத்தேன்.  புத்தாண்டுக்காக வாழ்த்துப் பெற்றேன். எனது தந்தையின் இளமைக் காலம் பற்றி வந்திருந்தவர்களுக்குச் சுருக்கமாக விவரித்தேன். மிகவும் கொடியது இளமையில் வறுமையும் முதுமையில் தனிமையும் என்றார் தந்தை. தான் நடத்தி வைத்த திருமணங்கள் அவற்றுக்கு ஆன செலவினங்கள் ஆகியன குறித்துப் பட்டியலிட்டார். புதுக்கோட்டைக்குக் கூப்பிட்டேன். ஆறாம் தேதிக்குப் பின்பு வருவதாகக் கூறினார். வீரியமும் விவேகமும் மிக்கவராய் எது வந்து என்ன பண்ணிப்புடும் பாத்துருவோம் என்றவாறே விடைகொடுத்தார்.

வெள்ளியணையில் கோபிநாத்தைச் சந்தித்தபோது இரவு 11.25. அவர் நான் படித்த லந்தக் கோட்டையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். சிங்கப்பூரில் புத்தாண்டு பிறந்துவிட்டதாகத் தொலைபேசியில் மகாசுந்தருக்கு யாரோ வாழ்த்துச் சொன்னார்கள். கோபியின் ஆய்வுப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தோம். திடீரென மின்சாரம் போனது.

புத்தாண்டு பிறந்தால் வெளிச்சம் வரும் என்றிருந்தோம். இப்போது போன ஆண்டு வெளிச்சமாகவும் புதிய ஆண்டு இருட்டாகவும் ஆகிவிட்டதே என்று கலாய்த்தனர். இருளுக்குப் பின்னர்தான் ஒளி, பொறுத்திருங்கள் என்றேன். வெளிச்சம் வந்தபோது  தேநீர் வந்தது. ஆய்வையும் படிப்பையும் புத்தாண்டில் ஒழுங்குபடுத்துமாறும் உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதத் திட்டமிடுமாறும் வாழ்த்திப் புறப்பட்டோம். இரவு 12.15 தாண்டியிருந்தது.

கரூருக்கு முன்னால் இருவழிச் சாலையில் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. புத்தாண்டு கொண்டாடும் இளைஞர்கள் சிலர் தள்ளாடியவாறே இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களுக்கு சாலையின் நடுவே விபத்து நேராமல் இருக்க வேண்டிக்கொண்டோம்.

  நேரம் கடந்துகொண்டிருந்தது. விரைவில் தூங்கினால் நல்லது எனத் தோன்றியது. அப்போதுதான் கூடு கூட்டத்தில் விழித்திருக்க முடியும். நண்பன் செல்வன் நினைவு வந்தது. கரூருக்கு வடக்கே வேலாயுதம்பாளையத்தில் உள்ளது அவன் வீடு. அங்கு தங்கிப்போக முடிவுசெய்தேன்.

இரவு ஒரு மணிக்குமேல் எழுப்பிய எங்கள் நட்பின் ஆழம் உடன் வந்தவர்களுக்குப் பிரமிப்பாய் இருந்தது. இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பட்டதாரித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று அனைத்துப் பட்டங்களையும் தொலைதூரக் கல்வியிலேயே பயின்றவன் அவன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று தற்போது திருச்சியில் துணை ஆட்சியராகப் பயிற்சி பெற்றுவரும் செல்வனது உழைப்பும் எளிமையுமே எங்களுக்கு முதல் புத்தாண்டுச் செய்தியாக இருந்தது. விடிகாலை 6 மணிக்கு அலாரம் வைத்து அதிகாலை 3 மணிக்குத் தூங்கப்போனோம்.

திருமயம் பாறை ஓவியங்கள் குறித்து 31.12.2013 இரவு நாமக்கல்லில் கூடு நண்பர்களுக்குக் காட்சி விளக்கம் அளிப்பதாகத் திட்டம். வேலை காரணமாகத் திட்டமிட்ட நேரத்திற்குப் புறப்பட முடியாததால் வேறு என்ன செய்யலாம் என யோசித்தபோது தினமணி புத்தாண்டு மலர் கிடைத்தால் கூட்டத்தில் ஆளுக்கு ஒன்றாகத் தரலாமே என எண்ணினோம். வேலாயுதம்பாளையம் நால்ரோட்டில் ஒரு தேநீர்க் கடையில் விசாரித்தபோது 40 பிரதிகள் கிடைத்தன. புத்தாண்டில் நினைத்ததெல்லாம் நடக்கிறதே என்னும் பெருமகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.

மகிழ்ச்சி ஒரு நிமிடம்கூட நீடித்திருக்காது. வேலூர் பாலத்திற்கு முன்பகுதியில் லேசான வாகன நெரிசல். அப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது ஒரு விபத்து. பக்கத்தில் கடந்தபோது மனசு பதறியது. புத்தாண்டை ஒட்டி தாய் கோகிலா, மகள் திவ்யா, மகன் கோகுல் மூவரும் வேலூர் நவலடியான் கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி கோகிலா ஓட்டிச் சென்ற மொபெட்டின் பின்புறம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே முகங்கள் இழுபட ரத்த வெள்ளத்தில் மூவரும் உயிரிழந்து கிடந்தனர். அப்படியே உறைந்து போனது மனசு. விரைந்து வந்த காவல்துறை தன் பணியைத் தொடங்கிவிட்டிருந்தது.

நாமக்கல் செல்லும் வரை கோர விபத்தை மறக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தோம்.ஜன்னலைத் திறந்து எல்லாக் காற்றையும் உள்வாங்கியும் தீரவில்லை புழுக்கம். புத்தாண்டில் நினைத்ததும் நடக்கும், நினைக்காததும் நடக்கும் என்ற புரிதல் வந்தது.

நாமக்கல் கொங்கு நகரில் அய்யா பெருமாள் முருகன் அவர்களது இல்லத்தில் கூடு 50வது கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூடு உறுப்பினர்கள் 32 பேர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு சாதியும் நானும். காலச்சுவடு வெளியீடு. இன்னும் துரத்தும் குரல் என்னும் தலைப்பில் நானும் எழுதியுள்ளேன். முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.

இந்த நூலின் வெளியிடல், அறிமுகம், விமர்சனம் என்றவாறு கூடு அமைப்பின் புத்தாண்டுக் கொண்டாட்டம் புத்தகக் கொண்டாட்டமாக அமைந்தது. இந்த நூலின் உருவம், உள்ளடக்கம், யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அதன் வெளிப்படைத் தன்மை, குறைநிறைகள் இன்னும்பல குறித்து சிறப்புப் பேச்சாளர்களும் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் கருத்துரைத்தனர்.

தமிழறிஞர் எழுத்தாளர் விமர்சகர் பொ.வேல்சாமி, அமெரிக்கா சியன்னா கல்லூரி சமயவியல் துறை பேராசிரியர் பெருந்தேவி, தில்லி டாக்டர் அம்பேத்கார் பல்கலைக் கழகத்தின் திரைப்பட ஆய்வுகள் துறைப் பேராசிரியர் ராஜன்குறை, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக் கழகம் ஊடகப் புலப் பேராசிரியர்  மோனிகா, சென்னை மாநிலக் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் க.காமராசன் ஆகிய சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கூடு அமைப்பின் அச்சாணியும் எங்கள் வழிகாட்டியும் நண்பருமான பெருமாள்முருகனுக்கு நினைவுப்பரிசு வழங்க என்னை அழைத்தபோது கூடு நண்பர்களது அன்பின் ஆழம் கண்டு மிகவும் நெகிழ்ந்துபோனேன். அய்யாவின் துணைவியார் அக்கா எழிலரசி அவர்களது நன்றியுரை பதிவுசெய்ய வேண்டிய ஒன்று. விருந்தினர் பேச்சையெல்லாம் ஒலிப்பதிவு செய்த நான் கடைசியில் அவரது நன்றியுரையைப் பதிவு செய்யாமல் மெய்மறந்து போனது வருத்தத்திற்குரியதானது. அவரிடம் உடனே எழுதி வைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த சுரேஷ் மான்யாவோடு அறுவராகி ஆங்கரை பைரவியோடு எழுவராய் மதிய உணவு முடிந்து விடைபெற்றோம்.

வேல்சாமி அய்யா தன் இல்லத்திற்கு வந்துபோகச் சொன்னார். கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா என்ன? எழுவரும் சென்றோம். சோரகவி மரபு பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகம் பதிப்பித்திருக்கும் நாலடியார், தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகியவற்றின் விடுபாடுகள், பிழைகள் குறித்து எடுத்துக் காட்டினார். முக நூலில் அவர் இடும் பதிவுகள் கவனிக்கத் தக்கதாய் உள்ளன. திருக்குறள் குறித்துப் பேச ஓர் உரைக்குறிப்பு தயாரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டையில் அவரை ஒருநாள் பேசவைப்பது எனத் தீர்மானித்தோம். தான் பதிப்பித்துள்ள பரத கண்ட புராதனம் நூலைக் கருப்பட்டி கலந்த சுக்குக் காப்பியுடன் அளித்தார். நன்றி சொல்லிப் புறப்பட்டோம். எங்களோடு வருவதாகச் சொன்ன  சுரேஷ் மான்யாவும் ஆங்கரை பைரவியும் சந்தியூர் கோவிந்தனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிப் பிரிந்தனர். மறுபடியும் ஐவரானோம்.

அடுத்து நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் பணியாற்றும் நூலகர் தங்கவேல் வீட்டிற்குச் சென்றோம். கூடு கூட்டத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே வந்துவிட்டார். எனக்காகக் காத்திருந்தார் என்றாலும் அவரைக் காக்க வைத்தது எனக்கு வருத்தம் தந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நான் பணியாற்றிய வரைக்கும் அவர்தான் எனக்கு மக்கள் தொடர்பு அலுவலர். எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் செய்யக்கூடியவர். குடும்ப நண்பர். கேட்ட நூலை மாவட்டத்தின் எந்த நூலகத்தில் இருந்தாலும் தருவித்துக் கொடுப்பார். நேரம் கடந்ததால் அவ்ருடன் பேச நீண்ட நேரம் ஒதுக்க முடியவில்லை. அவரும் அவரது துணைவியாரும் அன்பு வழியனுப்ப நாமக்கல்லில் இருந்து கிளம்பினோம்.
  
திருச்சி செல்லும் வழியில் சற்றே கண் அயர்ந்தோம். திருச்சியில் ஜோசப் விஜுவுடன் தேநீர் குடிக்கத் தீர்மானித்தோம். அவருடன் தொடர்பு கொண்டபோது பா. மதிவாணன் அய்யாவும் அவர் குடியிருக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பதாகத் தெரிவித்தார். ரெட்டை மகிழ்ச்சி எங்களுக்கு. பாலக்கரை அருகே வந்த்திருந்து எங்களைக் கூட்டிப்போனார் விஜு.

ஜோசப் விஜு கடந்த மாதம் தான் அறிமுகம் ஆகியிருந்தார். எனது நேமிநாதம் முனைவர் பட்ட ஆய்வேட்டை மதிவாணன் அய்யாவிடமிருந்து பெற்று வாசித்த அவர் முதிர்ச்சியோடும் தேர்ந்த சொற்களோடும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போதே அவருடன் நேரில் உரையாடத் தோன்றிற்று. இப்போதுதான் வாய்த்தது. நேரில் சந்தித்தபோது மிகவும் மகிழ்ந்தேன். தேர்ந்தெடுத்த சிறந்த நூல்கள், ஆய்வுப் பார்வை வாய்ந்தவராய் இருந்த அவரது தன்னடக்கம் வியக்கத்தக்கதாய் இருந்தது.

கற்றடங்கியவர்க்கே உரித்தான அவரது அமைதி, அறிவார்வம் எங்களுக்குள்ளே ஏதோ செய்தன. கடைசியில் அவரும் நானும் ஒருசாலை மாணாக்கர் என்பது தெரியவந்தது. என்னைப்போல மாயனூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றதைக் கேள்விப்பட்டபோது மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டோம்.

விடைபெற மனசில்லாமல் மதிவாணன் அய்யாவைச் சந்தித்தோம். முத்து நிலவனுக்கு நன்கு அறிமுகமானவர்; தஞ்சத் தமிழறிஞர் பாவலர் பாலசுந்தரத்தின் மகன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் என்றாலும் எந்த பந்தாவும் இல்லாத எளிய மனிதர். எனது நேமிநாதத்தின் இலக்கண உருவாக்கம் என்னும் முனைவர் பட்ட ஆய்வேட்டின் வாய்மொழித் தேர்வு மதிப்பீட்டுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். அதற்கு முன்பே பெருமாள் முருகன் அய்யா நடத்திய உரைநடைப் பயிலரங்கம் முதலானவற்றில் அறிமுகம் ஆகியிருந்தார். குழுக்களாக இயங்கும் தமிழறிஞர்கள் எழுத்தாளர்களின் போக்கு குறித்து மிகவும் கவலை தோய்ந்த அக்கறை அவரது பேச்சில் வெளிப்பட்டது.

புத்தாண்டு முதல்நாளின் இறுதிச் சந்திப்பு முடிய விஜு பாண்டியனை திருச்சியிலிருந்து மணப்பாறைக்குப் பேருந்து ஏற்றிவிட்டார். நாங்கள் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். வழிநெடுக நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு வந்தோம். சுந்தரை வீட்டில் இறக்கிவிட்டபோது இரவு 8.30 மணி.

இந்தப் புத்தாண்டில் எனது ஆசிரியர்களைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்ட  பயணத்தில் திட்டமிட்டபடி திருமயம் ஓவியங்களைக் காட்சிப்படுத்த முடியவில்லை. நம்மாழ்வாரின் மறைவும் வேலூர் அருகில் பார்க்க நேர்ந்த விபத்தும் எதிர்பாராதவை. ஆனால், திட்டமிடப்படாமலேயே நண்பர்கள் அண்ணா ரவி, கோபிநாத், செல்வன், எழுத்தாளர் பொ.வேல்சாமி, நூலகர் தங்கவேல், ஜோசப் விஜு, மதிவாணன் அய்யா ஆகியோரைச் சந்தித்த தருணங்கள் இன்னும் ஓர் ஆண்டுக்கு வரும். இந்தப் புத்தாண்டு நிகழ்வுகளின் மகிழ்வும் நெகிழ்வுமான புத்துணர்ச்சியில் பயணங்கள் தொடரும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

9 comments:

 1. இனிய சந்திப்புகள், முக்கியமாக தந்தையையும் ஆசிரியரையும் சந்தித்தது மனம் நெகிழ வைத்தது...

  விபத்து மிகவும் வருத்தப்படும் சம்பவம்...

  நம்மாழ்வாரின் மறைவு ஈடு இணை இல்லாதது...

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அனைவருக்கும் இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 2. அரிதான பயணத்தின் அழகான நிகழ்வுகளை அப்படியே பதிவுசெய்துவிட்டீர்கள் அய்யா. பெரிய சில நிகழ்வுகள் கூட மறந்து போகலாம், சின்னஞ்சிறிதாயினும் சில நிகழ்வுகள் தந்த உணர்வுகள் உலரப் பல்லாண்டுகள் ஆகலாம். இந்த 24மணிநேர நிகழ்வுகள் தந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும், (இடையில் பார்த்து உறைந்த விபத்தும்) பலப்பல ஆண்டுகளாயினும் மறக்காது. அண்ணாரவியாரின் குடும்ப அன்பு, அந்த அகால நேரத்தில் தங்கள் ஆசிரியரைப் பார்த்த போது, அந்த (78?) வயதிலும், தண்ணீர் குடிக்கப் போனவர்களைத் தடுத்துப் பாசமிகுதியில் வெந்நீர் வைத்துத் தந்ததும், அவர்கள் தன் துணைவியாரைப் பற்றிச் சொல்லி வருந்திய போது உங்கள் கண்களில் துளிர்த்த கண்ணீரும்... எங்களுக்குப் பேச நா எழவில்லை. அவரது நெகிழ்வில் உங்கள் உள்ளத்தை உணர்ந்தோம். தந்தையார் சொன்ன “இளமையில் வறுமையும் முதுமையில் தனிமையும் பெருங்கொடுமை” எனும் வரிகளில் உங்களது இன்றைய எழுத்துப் புலமையைக் கண்டோம். கோபிநாத்தின் வீட்டில் புத்தாண்டு பிறந்தபோது உங்கள் எளிமையைக் கண்டோம். உங்கள் நண்பர் திரு செல்வம் அவர்களுடன் நீங்கள் டா போட்டுப் பேசியது எங்களுக்கு மகிழ்ச்சியுடன் வேடிக்கையாகவும் இருந்தது! அவரது பண்பை அவரது துணைவியார் மற்றும் குழந்தைகளிடமும் மட்டுமல்ல உங்களிடமும் கண்டு மகிழ்ந்தோம். அடுத்த நாள் கூட்டம் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்... பெருமாள் முருகன் அய்யாவின் கூர்மையில் உங்களையே கண்டோம். மொத்தத்தில் புத்தாண்டு அன்று கிடைத்த உணர்வுகள் ஓராண்டு தாண்டியும் இந்த Charge இறங்காது அய்யா... பதிவு மிக அருமை நன்றி.

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா
  இந்த புத்தாண்டுப் பயணம் எனக்கு நினைவு இருக்கும் வரை என் நினைவில் இருக்கும் ஐயா. இந்த சிறியோனையும் ஒரு பொருட்டாக எண்ணி அழைத்து சென்றதை எண்ணி அது உண்மையா என்று இன்னும் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஐயா. முதலில் தங்களுக்கும் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பயணங்களைக் குறிப்பெடுத்து தான் பதிவிட்டிருப்பார் என படிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரலாம் ஆனால் எந்தவித குறிப்பும் எடுக்காமல் நடந்ததை மனதில் தேக்கி வைத்து பதிவாகத் தந்து எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். தாங்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பெடுத்து வாழ்க்கையில் திருப்பத்தைத் தந்த ஆசிரியரை நீங்கள் பார்க்கச் செல்வதாக கூறியதும் நெகிழ்ந்து போனேன். ஆசிரியரைப் பார்த்து நீங்கள் கண்கலங்கி நின்ற போது எங்களது கண்களும் குளமாகியதைத் தவிர்க்க முடியவில்லை. பின்னர் வீட்டிற்கு சென்று அப்பாவைப் பார்த்த போது அவரது முறுக்கி விடப்பட்ட மீசையும் கயிற்று கட்டிலும் ஆயிரம் கவி சொன்னது. அழகான திட்டமிடல் அவரது பேச்சில் பிரதிபலித்தது. ”இளமையில் வறுமை முதுமையில் தனிமை” எனும் அவரது பேச்சில் உங்களைத் தான் கண்டோம் எனும் முத்துநிலவன் ஐயாவின் வரிகளே எனதும். கோபிநாத் ஐயாவின் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டே புத்தாண்டை வரவேற்றதும், கோபி அவர்களுக்கு நீங்கள் வழிகாட்டுதலுடன் வாழ்த்து கூறியதும் எனக்கே சொன்னது போல் உளம் மகிழ்ந்தேன். தங்கள் நண்பர் திரு. செல்வன் அவர்களது எளிமையும் நெடுநாள் பழகியது போன்று எங்களிடம் பேசிய இயல்பான பேச்சும் வியப்பாகத் தோன்றியது பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். நீங்கள் தேர்ந்தெடுத்து பழகிய நண்பர் இப்படி தான் இருப்பார் என்று. அண்ணாரவி ஐயா அவர்களின் விருந்தோம்பலையும் இணைத்தே அசை போட்டேன். கூடு நிகழ்வு என்னுள் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதை மறுக்க முடியாது. அந்த 24 மணி நேரமும் நடமாடும் புத்தகமாகிய தங்களோடும் அச்சிட்ட புத்தகங்களோடும் பழகிய உணர்வை என்றும் மறவேன். தங்கள் நண்பர் திரு. செல்வன், திரு.வேல்சாமி ஐயா, திரு.ஜோசப் விஜு ஆகியோர்களின் இல்லங்களை அலங்கரித்தப் புத்தகத்தைப் பார்த்து என் உள்ளத்தில் ஒரு வெறி பிறந்திருக்கிறது அது எனது பயணத்தைப் புத்தகத்தை நோக்கித் திருப்பியுள்ளது. தங்களுக்கே நன்றிகள். அழகான உணர்வுகளைத் தாங்கிய பதிவு என்பதால் எனது கருத்துரை நீண்டு விட்டது மன்னிக்கவும் ஐயா. தங்களுக்கும், முத்துநிலவன் ஐயா, மகாசுந்தர் ஐயா, மகா சுந்தரின் தம்பி முத்துக்குமார் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 4. நிகழ்வை நேரில் அனுபவித்த உணர்வு . தடைபடாத நடை .நன்றி

  ReplyDelete
 5. எல்லோரும் எளிமையாக படிக்கும் நடையில் ஒரு பயணக் கட்டுரை...
  கூடு தேடிப் பறந்த அனுபவங்கள் ...
  உங்களின் "நண்பர்கள்" பட்டியல் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது...
  பதிவுலகிற்கு இக்கட்டுரை உங்களை புதிதாக அறிமுகம் செய்துள்ளதாக தோன்றுகிறது ... மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 6. இதனை படிக்கும் போது பயணத்தின் போது உடன் பயணித்த அனுபவம் கிடைத்தது. தற்காலத்தில் வகுப்பு மாறி சென்றாலே ஆசிரியரை மறக்கும் நிலையில்,தங்களது ஆசிரியரை காண சென்றது மனதிற்கு நிறைவை தருகின்றது. ”நாட்காட்டி ஒன்றைக் கூடத்தில் தொங்க விட்ட நான் நாட்குறிப்பு ஒன்றைக் கொடுத்தேன். தம்பி ஏற்கனவே ஒன்னு குடுத்துட்டான் என்றார். அது இதைவிடப் பெரிசோ என உரிமையுடன் கேட்டவாறே தொலைக்காட்சிப் பெட்டிமீது இருந்ததை எடுத்துக்காட்டி இதுவா என்றேன். ” யதார்த்தத்தை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 7. சார் பயணத்தை செலவு என்றும் சொல்வோம் இல்லையா?தங்கள் புத்தாண்டை என்ன அருமையாய் செலவு செய்திருகிறீர்கள் !
  அவ்வையின் 'நல்ல மரம்' என்ற பெயரை பெற்றுவிடக்கூடாதே எனும் அச்சத்தில் நான் இதுவரை தங்களுக்கு கருத்திட தயங்குவேன்.
  என்றென்றும் என் குரு என நான் சொல்லவிரும்பும் அண்ணா ரவி சார் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.அவர் பெயரை கண்ட உற்சாகம் அச்சம் பின்வாங்கியிருக்கிறது .தங்கள் புத்தாண்டு நிகழ்வு என் ஊரில் (மனப்பாறை )தொடங்கி இருக்கிறது .இரண்டும் மகிழ்ச்சி அளித்தன .நான் முன்பே அண்ணா ரவி சார் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருகிறேன் . தங்கள் கட்டுரைக்கு பின்னூட்டமாய் ஒரு பதிவே போடலாம் .ஒரு நண்பனின் வகுப்பறையை சாளரத்தின் வழியே எட்டி பார்க்கும் ஆவல் தங்களுக்கு இருந்தால் என் blog க்கு உங்களை வரவேற்கிறேன் .ஆம் என் அடுத்த பதிவு அண்ணா ரவி சார் வகுப்பில் என் அனுபவங்கள் பற்றிதான் .ஏதேனும் தவறாய் (protocol)கூறியிருந்தால் தங்கள் நண்பரின் மாணவியை பொறுத்தருள்க

  பி.கு
  word verification கருதிட்ட சிரமமாக இருக்கிறது என்பது தங்கள் மேல கவனத்திற்கு

  ReplyDelete
 8. ஐயா அவர்களுக்கு வணக்கம் உண்மையில் இந்தப் புத்தாண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்க உள்ளது. இவ்வாண்டின் முதல் நாள் முதல் மனித்துளியே உங்களை எனது இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது புல்லரித்துப் போனது. எனது நினைவில் நீங்காது இருக்கும் காரணத்தால் தானோ என்னவோ கனவில் பல முறை வருவீர்கள். நான் பள்ளிக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்ட பின் அவசியம் உங்கள் பெயரைப் பள்ளியின் சாதனை மாணவர்கள் பட்டியலில் பார்த்து மகிழ்ச்சி அடைவேன். நான் பயின்ற பள்ளிகள் மற்றும் கலைக் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் கூட என் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவற்றைக் கண்டதை விட பல மடங்கு உங்களின் பெயர் மற்றும் சாதனைகள் எனக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துகின்றன இன்னமும் கூட. இந்த ஏழையின் வெற்றிக்கு இறைவனாக வந்து எங்களை வாழ்த்திவிட்டுச் சென்ற நிகழ்வு எனக்கும் என் மனைவிக்கும் மிக்க நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு அன்று நான் தூங்க மணி ஐந்து ஆகி விட்டது. காரணம் அவ்வளவு மகிழ்ச்சி. இந்தக்கட்டுரை மிக அருமையாக வடிவம் பெற்றுள்ளது. ஒரே வருத்தம் தன் ஐயா எனக்கு இப்போது. புதுக்கோட்டையை விட்டு நாம் வந்துவிட்டோமே என்று தான்...அது கூட நீங்கள் பயின்ற பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. நன்றி ஐயா. உங்களின் அடுத்தக் கட்டுரையை நோக்கியுள்ளேன்.

  ReplyDelete
 9. இனிய சந்திப்புகள், முக்கியமாக தந்தையையும் ஆசிரியரையும் சந்தித்தது மனம் நெகிழ வைத்தது...

  ReplyDelete

வீதியில் கண்டெடுத்த வைரங்கள்

         இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...