உயிர் குணம் நிறம்

mahaveera

          ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியில் கூறப்படும் சமயதத்துவ நெறிகளுள் வைதிகம், ஆசீவகம், சமணம் ஆகியனவும் அடங்கும். உயிர், குணம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று சமயதத்துவ நெறிகளும்  ஒன்றோடொன்று ஒப்புநோக்குதற்கு உரியனவாக உள்ளன. அவ்வகையில் இவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரை. இதற்கென வைதிகத்தின் முக்குணக் கோட்பாடு, ஆசீவகத்தின் அபிசாதிக் கோட்பாடு, சமணத்தின் லேசியைக் கோட்பாடு ஆகியன இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.முக்குணக் கோட்பாடு

      ஆத்ம குணங்கள் பற்றிய வைதிகத்தின் கோட்பாடு இதுவாகும். ஆத்மாவின் குணங்கள் மூன்று. அவை சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம். இவற்றை சத்துவம், ராஜசம், தாமசம் எனவும் வழங்குவர். சத்துவ குணத்தவர்கள் தேவத்தன்மை உடையவர்கள். ரஜோ குணத்தவர்கள் வீரத் தன்மையும் தமோ குணத்தவர்கள் விலங்குத் தன்மையும் உடையவர்கள். அதாவது அந்தணரும் தேவர்களும் சத்துவ குணம் உடையவர்கள் (மனு 12:48). சத்திரியரும் போர் வீரர்களும் ரஜோ குணம் உடையவர்கள் (மனு 12:45,46). மற்றவர்கள் தமோ குணம் உடையவர்கள்.

    இவ்வகையில் குணங்களால் பிறவிகள் ஏற்படுவதாக மனுதர்மம் கூறுகிறது. இக்குணங்களின் பயனாகவே ஆன்மாவுக்கு அசையும் மற்றும் அசையா (ஸ்தாவர ஜங்கம) வடிவங்கள் உண்டாகின்றன என்கிறது மனு தர்மம் (மனு 12:24).

    வேதம் ஓதுதல், தவம் செய்தல், ஞானம், புலனடக்கம் முதலானவை சத்துவ குணத்தின் செயல்கள் (அதாவது அந்தணர்க்கு உரியவை). வேள்வி செய்தல், அற்ப விசயத்திற்கும் மனம் தளர்தல், தகாத செயல் புரிதல், புலன் இன்பங்களை நாடுதல் முதலானவை ரஜோ குணச் செயல்கள் (சத்திரியர்க்கு உரியவை). பேராசை, சோம்பேறித்தனம், பகைமை பாராட்டல், கோள் சொல்லுதல், தெய்வ அவநம்பிக்கை, ஒழுக்கமின்மை முதலானவை தமோ குணச் செயல்கள் (சூத்திரர்க்கு உரியவை).

  வைதிகத்தின் குணக் கோட்பாடு வருணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதையே குலத்தளவே ஆகுமாம் குணம் என்கிறது மூதுரை.

அபிசாதிக் கோட்பாடு

    உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப நிறத்தின் அடிப்படையில் அவற்றின் பிறப்பை வகைப்படுத்தும் ஆசீவகக் கொள்கைக்கு அபிசாதிக் கோட்பாடு என்று பெயர். ஆசீவகம் போதித்தவர்களுள் ஒருவரான பூரண காசியபர் என்பாரது கோட்பாடு இது.

மணிமேகலையில் இது

                        கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்

                        பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்

                        பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்…(மணி 27:150-153)

என்று கூறப்பட்டுள்ளது. பாலி நூல்களில் இவை பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

கரும்ம் பிறப்பு - கொலைஞர், வேட்டுவர், வலைஞர், கள்வர், சூதர் முதலானோர்

கருநீலப் பிறப்பு -     தீயொழுக்கம் கொண்ட துறவியர்

பசும்ம் பிறப்பு - ஆசீவகத்தின் இல்வாழ்வினர்

செம்ம் பிறப்பு - சமணத் துறவியர்

வெண் பிறப்பு - ஆசீவகத் துறவியர்

கழிவெண் பிறப்பு -    நந்தவச்சர், இச சங்கிச்சர், மற்கலி கோசாலர்

செய்கை அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் கோட்பாடாக இது உள்ளது.

இலேசியைக் கோட்பாடு

    ஆசீவகரின் அபிசாதிக் கோட்பாட்டுடன் ஒப்புமை உடைய சமணக் கோட்பாடு இதுவாகும். உயிருக்கு வண்ணம் கூறும் சமணக் கொள்கை லேசியை ஆகும். லேசியை ஆறு வகைப்படும். கிருட்டிண லேசியை, நீல லேசியை, கபோத லேசியை, பீத லேசியை, பதும லேசியை, சுக்கில லேசியை ஆகியனவே அவை. இவற்றுள் முதல் மூன்றும் தீய குணத்தால் ஆவன. பிந்தைய மூன்றும் நற்குணத்தால் ஆவன. பழங்கள் நிறைந்த ஒரு மரத்தை எடுத்துக்காட்டி இவற்றை விளக்குகிறார் முனைவர் சு. சுனந்தாதேவி (சமணக் காப்பியங்கள் ப.4) .


கிருட்டிண லேசியை (கறுப்பு) -   மரத்தையே வெட்டி பழங்களை உண்ண நினைப்பது

நீல லேசியை (நீலம்) -     பெரிய கிளையை வெட்டி பழங்களை உண்ண நினைப்பது

கபோத லேசியை (பச்சை) - சிறிய கிளையை வெட்டி பழங்களை உண்ண நினைப்பது

பீத லேசியை (மஞ்சள் அல்லது பொன்) – நான்கைந்து பழக் கொத்துக்களை உடைய கொம்பினைப் பறித்து பழங்களை உண்ண நினைப்பது

பதும லேசியை (சிவப்பு) - ஒரேயொரு பழக் கொத்தை மட்டும் எடுத்து பழங்களை உண்ண நினைப்பது  

சுக்கில லேசியை (வெள்ளை) - கீழே உதிர்ந்து கிடக்கும் பழங்களை மட்டும் உண்ண நினைப்பது

      இவற்றிலிருந்து லேசியை என்பது மனத்தில் உருவாகும் எண்ணங்களை வகைப்படுத்தும் நிறக் கோட்பாடு என்பது தெளிவாகிறது. ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியின் நான்காவது செய்யுளுக்கு விளக்கம் தரும் நீலகேசி உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர் லேசியை பற்றித் தனது அஷ்ட பதார்த்த சாரம் பகுதியில் (பக். 413,414) விளக்குகிறார்.

மேற்கண்டவற்றிலிருந்து நாம் சில முடிவுகளைத் தொகுத்துக் கூறலாம்.

        வைதிகத்தின் முக்குணக் கோட்பாட்டில் ஒரு குணத்தவர் அதே பிறவியில் இன்னொரு குணத்தவராகத் தம்மைத் தாமே மாற்றிக்கொள்ள முடியாது. அடுத்த பிறவிதான் அவர்களின் குணத்தை அதாவது வருணத்தை மாற்ற முடியும். எனவே, ஒரு பிறவியில் பிறந்துவிட்டவர்கள் அவரவர்க்குரிய குணத்தை அனுசரித்தே தீர வேண்டும். குணங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில்களிலிருந்து விலகிச் செல்ல முடியாது என மனிதர்களைக் கட்டாயப்படுத்தும் இறுக்கமான கோட்பாடு இது.

     ஆசீவகத்தின் அபிசாதிக் கோட்பாட்டிலும் உயிர்கள் அந்தந்தப் பிறப்பில் அதனதற்குரிய தொழிலைச் செய்தாக வேண்டும்; அதற்கான பிறவியை அனுபவித்தே தீர வேண்டும். இதையே மணிமேகலை

                                  என்றிவ் ஆறு பிறப்பினு மேவி

                                 பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர்

                                 கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர்         

                                                                                                        (மணி 27: 153-155)

என விதிக்கிறது. ஆறு பிறவிகளைத் தாண்டி ஏழாவது பிறவியாகிய கழிவெண் பிறப்பில்தான் வீடுபேறு கிட்டும் என்கிறது அபிசாதிக் கோட்பாடு.

   சமணரின் லேசியைக் கோட்பாடு மனிதப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன்படி உயிர்கள் ஒரு லேசியையிலிருந்து இன்னொரு லேசியைக்கு மாற முடியும். உயிர்கள் தம்மைத் திருத்திக் கொண்டு தம் குணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்குச் சான்றாக நீலகேசியையே கூறலாம். கிருட்டிண லேசியை(கறுப்பு) என்னும் துர்க்குணம் உடையவளாக இருந்த நீலகேசி முனிச்சந்திரரின் அறம் கேட்ட பின்னர் தன் தீநீல உள்ளம் திரிந்து அஞ்ஞானம் நீங்கி நல்வினைச் சேர்க்கை உடையவளாக மாறுகிறாள்  (நீல. 4)

   வைதிகம் மற்றும் ஆசீவகத்தின் கோட்பாடுகள் பிறவியை அடிப்படையாகக் கொண்டவை; செயலை அடிப்படையாகக் கொண்டுள்ளவை போன்ற தோற்றம் உடையவை; ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாற நினைத்தாலும் மாற அனுமதிக்காதவை. இவ்வகையில் அவை விதிப்புக் கோட்பாடுகளாக உள்ளவை; செயற்கைத் தன்மை உடையவை.

   சமணத்தின் லேசியைக் கோட்பாடு பண்பை அடிப்படையாகக் கொண்டது. எண்ணத்தையும் செயலையும் சார்ந்திருந்தாலும் துர்க் குணத்திலிருந்து நற்குணத்திற்கு மாற வாய்ப்பளிக்கக் கூடியது; இயல்பானது எனப் புலனாகிறது. இருப்பினும் இவை மூன்றும் ஒரு புள்ளியில் ஒன்றுசேர்கின்றன என்பது கவனித்தற்கு உரியது.

   வைதிகத்தில் வெள்ளை நிறத்தவர், ஆசீவகத்தில் கழிவெண் பிறப்பினர், சமணத்தில் சுக்கில லேசியை (வெள்ளை மனம்) உடையவர் ஆகிய மூவரும் மேன்மக்களாகக் கருதப்படுகின்றனர். இதிலிருந்து வெண்மை நிறம் உயர்ந்தது அல்லாதது தாழ்ந்தது என்னும் நிறக் கொள்கை மூன்று மதத்தினருக்கும் உடன்பாடானதே என்பது தெளிவாகிறது.

-----

துணை நூல்கள்

1.   நீலகேசி  1984,  தமிழ்ப் பல்கலைக் கழகம்  தஞ்சாவூர்.

2.   சமணக் காப்பியங்கள்  1988, சு. சுனந்தாதேவி, பயோனியர் புக் சர்வீஸ்

3.   நீலகேசியில் சமயக் கோட்பாடுகள்  2002, பீ.மூ. மன்சூர், தி பார்க்கர்

4. தமிழ்க் களத்தில் முற்காலச் சமயதத்துவ நெறிகள் மே 2006, நா. அருள்முருகன், பயணம் புதிது

5.  மணிமேகலை  1998, உ.வே.சா. நூல் நிலையம்

6. மனுதர்ம சாஸ்திரம்  2003, திருலோக சீதாராம் (மொ.பெ.), அலைகள் வெளியீட்டகம்

03.02.2013 தூய வளனார் கல்லூரி திருச்சிராப்பள்ளி

5 comments:

 1. அருமையான விளக்கத்துடன் பகிர்வு மிகவும் சிறப்பு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மிக கனமான ஒரு கருத்துக்கோர்ப்பு..

  இவ்வளவு செய்திகளும் எனக்கு நிறைய புரியவைத்தன...
  வண்ணங்களை உலகளவில் தேட ஒரு நல்ல ஆரம்பமாக இக்கட்டுரை இருக்கிறது...
  நன்றி

  உங்கள் கட்டுரைகள் எல்லாமே ஒரு உசாத்துணை நூலைப் போல அவ்வப்போது வந்து படித்துக்கொள்ள வேண்டியவை என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 3. வண்ணங்களில் இத்துணை செய்திகளா..!புதிய தகவல்கள்,ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.நிற வேறுபாடுகள் பற்றிய கருத்துக்கள் ஆரிய வருகைக்கு முன்பா அல்லது பின்பா என்ற வினாவையும் தோற்றுவிக்கின்றது என்னுள்ளத்தில்.விரிவான தகவல்கள் தந்தமைக்கு நன்றி .

  ReplyDelete
 4. மிகவும் அருமையான பதிவு. வைதிகம் எனப்படும் இந்து மதமும், ஆசீவிக மதமும் பிறப்பால் ஏற்பட்ட சாதிய வெறியை நிறுவுகின்றது. அதிலும் இந்து மதத்தில் வெள்ளை தோல் நிறமுடைய பார்ப்பனர்கள் தான் உயர்வு என்ற நால்வருணக் கோட்பாடே இன்றளவும் இந்திய சமூகச் சிக்கல்களின் வேராக உள்ளது. ஆனால் மறுநிலையில் சமணம் பிறப்பால் அல்ல ஒருவரின் சிந்தனை மற்றும் குணத்தாலே உயர்வு தாழ்வு நிர்ணயிக்கப்படுவதாக எடுத்துரைப்பது நியாயமானதாகவும், எதார்த்தமானதாகவும் இருப்பது மிகச் சிறப்பு. தமிழர்களாகிய நாம் நமது பண்டைய சமண மதத்தை கைவிட்டு ஏற்றதாழ்வுகள், சாதி வெறிகள் கற்பிக்கும் பார்ப்பன பேராதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்து வைதிக மதத்தை ஏற்றது நமக்கு இழப்பும் இழுக்குமாகும்.

  தங்களின் பதிவுகள் அருமை. தொடர்கின்றேன்.

  --- விவரணம். ---

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete

வீதியில் கண்டெடுத்த வைரங்கள்

         இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...