உறவுகளுக்கும்
ஊர் நண்பர்களுக்கும்
வெளிநாட்டுப் பயணத்தின் நினைவாகப்
பரிசுப் பொருள்கள் வாங்கி வர
நானும் என் சக பயணிகளும்
ஆளுக்கொன்றாக
பெரிய பெரிய பைகளை
எடுத்துச் சென்றோம்

தெருவெங்கும் கடைகள்
கடை முழுக்கப் பொருள்கள்
ஏராளம் 
கொட்டிக்கிடந்தன

வாங்கும் சக்திக்கு உட்பட்டதா என 
சோதித்தபடி
வரிசை பார்த்து 
வலம் வந்தேன்

எடுத்தும் தொட்டும் 
முகர்ந்தும் இயக்கியும்
மாடிகளில் ஏறிப் பார்த்தும்
மலைத்துப் போனேன்

என் சக பயணிகள் கண்கள் விரிய 
ரூபாய்களைக் கணக்கிட்டு 
ஜப்பானிய யென்களில் 
எதை எதையோ வாங்கி வந்து 
சொல்லிச் சொல்லி
மாய்ந்து போனார்கள்
  
நானோ 
ஓய்வுக்காக 
ஒரு தேநீர் அருந்துவது என
உட்கார்ந்தேன்

அங்கிருந்த ஜப்பானிய புத்தர் 
அமைதியாய்ப் புன்னகைத்தார்
அருந்தாத தேநீரும் சுவைத்தது

அந்தக் கணம் 
எடுத்துச் சென்ற பெரிய பை
கனத்தது

திறந்து பார்த்தேன்
அதில் நிரம்பி வழியும் 
வெற்றிடத்தைக்
காலி செய்ய மனமில்லாமல்

நினைவில் 
புத்தனின் புன்முறுவலைச் 
சுமந்தபடி

டாலர்கள் விலைபோகாத 
வீதிகளைக் கடந்து

அறைக்குத் திரும்பினேன்.


@ டோக்கியோ
# 07.11.23 பிறந்தாலும்
$ 06.11.23 மறையாத
இரவு மணி 1.32 

No comments:

Post a Comment

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்