இழிவு சிறப்பு உம்மை


          பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க ஆலோசனை சொல்லவும் வழிகாட்டவும் இன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆலோசனை சொல்வதையும் வழிகாட்டுதலையும் கூட வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாகச் செய்கிறார்கள். சில கல்லூரிகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்து விரட்டியடிக்கும் அதே வேளையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குப் பிள்ளைகளைப் பிடித்து வந்து சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாகவும் விகிதாச்சார அடிப்படையில் கட்டண விலக்கு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.  
       இத்தனைக்கும் உயர்கல்வி வழங்கும் பல நிறுவனங்களின் தரமோ பள்ளிகளுக்கு மூத்தானாய் உள்ளது; நுழைவுத் தேர்வு, மைனஸ் மார்க், அது இது என்று அவர்கள் மதிப்பீடு செய்வதெல்லாம் ஒருவரின் திறனை மதிப்பீடு செய்வதாய் இல்லை. இதற்கு மாற்றைத் தேடும் முயற்சியும் வேலைக்கேற்ற படிப்பைத் தேடும் முயற்சியும் கடைசியில் படிப்புக்கு ஏற்ற வேலை தேடும் முயற்சியின் தோல்வியில் கொண்டுபோய் விடுகின்றன.
    +2 முடித்ததும் பொறியியலுக்கு விண்ணப்பித்துவிட்டு வேளாண் கல்லூரிக்கும் விண்ணப்பம் வரவழைத்திருந்தேன். விவசாயிகளின் பிள்ளைகளுக்கான முன்னுரிமை பெற கரூர் துணை ஆட்சியரிடம் சான்று பெற வேண்டும். கிராம நிர்வாக அலுவலருக்கு அடுத்து வருவாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற வெள்ளியணைக்கு சைக்கிள் ஓட்டி ஓட்டி டயர் தேய்ந்ததுதான் மிச்சம். ஆளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர் இருக்கும்போது நான் போகவில்லையா அல்லது நான் போகும்போது அவர் இருப்பதில்லையா என்பது என் அலைக்கழிப்புக்கே வெளிச்சம். 
         விண்ணப்பம் அனுப்ப ஒரே ஒரு நாள்தான் இருந்தது. ஆய்வாளரை வீட்டில் போய்ச் சந்தித்து விடலாம் எனக் காலை ஆறேழு மணிக்கெல்லாம் பசுபதிபாளையத்தில் இருந்த வீட்டிற்குச் சென்றேன். அவர் வெள்ளியணை சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். பசுபதிபாளையத்திலிருந்து வெள்ளியணைக்கு அப்போதெல்லாம் நேரடி பஸ் வசதி கிடையாது. கரூர் போய் பஸ் ஏறி வெள்ளியணை வந்தேன். இப்போதுதான் வீட்டிற்குச் செல்வதாகச் சொன்னார்கள். திரும்பவும் வீட்டிற்குப் போனேன். இன்னும் வரவில்லை என்றார்கள். ஒரு டீயும் பன்னும் தான் காலை உணவு. காத்திருந்து காத்திருந்து கண்கள் எரிந்தன. மீண்டும் வெள்ளியணை போய்ப் பார்க்கலாம் என நினைத்தேன். அப்பா கொடுத்திருந்த காசு குறைவாக இருந்தது. பசுபதிபாளையத்திலிருந்து கரூருக்கு ஐந்து கிமீ நடந்தே சென்று வெள்ளியணைக்குப் போனேன். அங்கு அவர் வரவே இல்லை. 
       கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு வந்தாலும் வருவார்; பார்க்கலாம் என ஒருவர் சொன்னார். காசு வேறு குறைந்து கொண்டே வந்தது. கரூர் அலுவலகம் வந்தேன். நண்பகல் ஆகியிருந்தது. மிகவும் சோர்வாக இருந்தது. சாப்பாடு சாப்பிட்டால் திரும்ப ஊர் போகக் காசு பத்தாது. கிள்ளிய பசிவயிற்றுத் தீயணைக்க அங்கிருந்த பைப்பில் தண்ணீர் பிடித்துக் குடித்தேன்.  மறுபடியும் டீயும் பன்னும். மணி நான்கைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஆய்வாளரைக் காணவே இல்லை. 
         அலுவலகம் பரபரப்பானது. சப்கலெக்டர்/டெபுடி கலெக்டர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். என் பொறுமை அலுவலக நடைமுறையை மீறியது. கையில் விண்ணப்பத்துடன் சடாரென்று அவரது அறைக்குள் நுழைந்தேன். விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டேன். அழாமல் சொல்லுமாறு தேற்றினார். விஷயத்தைச் சொன்னேன். விண்ணப்பத்தை வாங்கிக் கையொப்பம் இட்டு அவரது உதவியாளரை அழைத்து சீல் வைத்துக் கொடுக்குமாறு கூறினார். பிடுங்காத குறையாக தலைமை அஞ்சலகத்திற்கு ஓடினேன். ஐந்தரை வாக்கில் விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு வீடு வந்ததும்தான் மூச்சே வந்தது. முகம் கொடுக்காத ஆய்வாளரும் முகம் பார்க்க மறந்துபோன துணை ஆட்சியரின் நடைமுறை எதார்த்தமும் நினைவுக்குள் வந்து வந்து மறைந்தன. அவ்வளவு சிரமப்பட்டு விண்ணப்பித்த வேளாண்மைப் படிப்பில் சேர அழைப்பு வரவில்லை. கடைசி நாளில் அனுப்பியதால் நிராகரிக்கப்பட்டதோ என்னவோ. இருந்தாலும் அந்த சப்கலெக்டர் கிரியா ஊக்கியாய் எனக்குள் வாழ்கிறார்.
      என்னோடு படித்த வேலுசாமி என்ஜினீயரிங் சேர்ந்திருந்தான். எனக்குக் காத்திருப்போர் பட்டியலில்தான் அழைப்பு வந்தது. காளிமுத்து ஆசிரியரிடம் கொண்டுபோய்க் காட்டினோம். கலந்தாய்வுக்குச் சென்னை வரச்சொல்லியிருந்தார்கள். தனியார் சுயநிதிக் கல்லூரிகளின்  காலியிடங்களுக்கு ஏற்பக் கூடுதலாக அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு மதிப்பெண் மற்றும் இனவாரி சுழற்சி அடிப்படையில் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அனைவருக்கும் சீட் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல இயலாது என்றும் தெரிவித்தார். சுயநிதிக் கல்லூரி என்பதால் அரசுக் கல்லூரியை விடப் பல மடங்கு செலவாகும் என்றும் கூறினார். 
     வீட்டிற்கு வரும் வழியில் அப்பா என்னைத் தேற்றுகிற முயற்சியில் இறங்கினார். காகம் இடமிருந்து வலம் போனால் சென்னை போகலாம் என்று சகுனம் பார்த்தார். அப்படியே காகம் போனது. நான் மகிழ்ச்சியுற்றேன். அவர் முகம் காகம் ஆனது. வீட்டிற்கு வந்ததும் அடுத்த சகுனத்திற்குத் தாவினார். நடுவீட்டில் நிறைசொம்புத் தண்ணீரின் நடுவே விளக்கெண்ணெய் விடுவது எனவும் எண்ணெய் அப்படியே மையத்தில் நின்றால் சென்னைக்குப் போகலாம் எனவும் சொன்னார். எண்ணெய்ச் சொட்டு தண்ணீர்மேல் நிற்காமல் உருண்டு வழிந்தது. சகுனம் சரியில்லை என்றும் குடும்பத்திற்கு மூத்த மகன் என்பதால் உடன் பிறந்தவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை இருப்பதாகவும் என்னைக் கரைத்தார். 
        தண்ணீர் மேல் எப்படி எண்ணெய் நிற்கும்? என எனக்குத் தெரிந்த அறிவியல் கோட்பாடுகளையெல்லாம் எடுத்துக் கூறி வாதிட்டும் என்னைப் படித்த முட்டாள் ஆக்குவதிலேயே குறியாக இருந்தார். பாதிப் பித்தனாய்த் தூங்காமல் கொள்ளாமல் தவித்தேன். இதை நம்பி வேறெங்கும் விண்ணப்பிக்கவில்லை. பின்பு காளிமுத்து ஆசிரியர் ஒரு யோசனை கூறினார். மாயனூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் பணி உடனே கிடைக்கும் என்றும் சொன்னார். அப்பாவுக்குப் பெருத்த நிம்மதி. இடம் கிடைத்து விட்டால் புதிய சைக்கிள் வாங்கித் தருவதாகவும் வீட்டிலிருந்தே போய்வரலாம் என்றும் புத்திமதி சொன்னார்.  
         விண்ணப்பத்தை வேண்டா வெறுப்புடன் நிரப்பி அனுப்பினேன். ஒருமாதம் ஆயிற்று. ஒரு முன்னேற்றமும் காணோம். வீட்டில் இருக்கப் பிடிக்கவே இல்லை. ஜெகதாபியில் என்னுடன் படித்த சுரேஷ் (காளிமுத்து ஆசிரியரின் மகன்) தாந்தோனிமலை அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். நானும் அங்கு சேர அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் பெற்றேன். கல்லூரிக்குச் சென்று விண்ணப்பம் கேட்டபோது எல்லாம் முடிந்து விட்டதாகவும் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தனர். 
      அடைத்த கதவுகளை உடைத்துத் திறக்க நியாயம் இழந்த நான் நிர்க்கதியாய் நின்றேன். அப்போது உப்பிடமங்கலத்திலிருந்து வந்திருந்த ஒருவர் நான் அவ்வூரில் படித்ததைக் கேள்விப்பட்டு நேரடியாகக் கல்லூரி முதல்வர் குணசேகரனிடம் கூட்டிச் சென்று சீட் கேட்டார். முதலில் மறுத்த அவர் பின்பு இறங்கி வந்து நான் கேட்ட கணிதம் ஆங்கில வழிப் பிரிவில் இடமில்லை; தமிழ் வழியில் வேண்டுமானால் சேர்ந்து கொள்ளலாம் என்றார். வேறு வழியின்றிக் கணிதம் தமிழ்வழி முதலாமாண்டு மாணவனாய்ச் சேர்ந்தேன். வகுப்பிற்குச் சென்றபோது என்னைவிடச் சொற்ப மதிப்பெண்கள் பெற்ற ஏழுபேர் இருந்தார்கள். என்னை விடக் குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் ஆங்கில வழியில் சேர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கவனிப்பே தனி. நாங்கள் தமிழ்வழி மாணவர்கள் என்பதால் இளக்காரம். ஓரிரு பேராசிரியர்கள் நோட்சை மட்டும் டிக்டேட் செய்துவிட்டுப் போய்விடுவார்கள். துறைத் தலைவரைத் தவிர வேறெந்தக் கணிதப் பேராசிரியப் புலியும் அங்கில்லை. எதெற்கெடுத்தாலும் மாணவர் போராட்டம் கல்லுரி ஸ்ட்ரைக் என்று பல நாட்கள் கல்லூரிக்குப் போய்விட்டு சும்மா திரும்பினோம். கல்லூரிச் சூழல் அறிவைக் கடத்தும் இடமாக இல்லை; வயதைக் கடத்தும் இடமாகவே தெரிந்தது.
             ஒரே மாதம்தான் ஆகியிருக்கும். அக்டோபரில் மாயனூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர அழைப்பு வந்தது. பட்டப்படிப்பின் ஆழ நீளங்களைப் பார்ப்பதற்குள்ளாகவே பட்டயப் படிப்பில் சேர மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். புது சைக்கிள் வாங்கித்தரப்பட்டது. பொம்மனத்துப் பட்டியிலிருந்து பொரணி – கருப்பூர் – சங்கர மலை வழியாக மாயனூர் செல்லப் பதினைந்து கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் மிதிக்க வேண்டும். நாளும் நாளும் யுத்த காண்டம்தான். மாயனூரில் பெற்ற பயிற்சி குறித்துத் தனியாக எழுதினால்தான் தீரும். 
         
   இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சிப் படிப்பு முடிந்து அம்மாவுக்குத் துணையாக விவசாய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உன்னாட்டம் ஆம்பிளைங்களப் போய்ப் பாரு… என்று தொடங்கும் அப்பாவின் வசவுகள் என் வயதில் வருமானம் ஈட்டும் பலரையும் சுட்டிக் காட்டி தண்டச்சோற்றுப் புராணத்தில் முடியும். அவர் வீட்டை விட்டு ஓடிப்போய் என் வயதில் பட்ட கஷ்ட நஷ்ட வனவாச சுய மகாபாரதங்களைச் சொல்மாறாமல் ஒப்பிப்பார். மேலும் அவரது அண்ணன் தம்பிகள் பண்ணையாட்களாக சொந்த பந்தங்களின் காடு தோட்டங்களிலேயே வேலை செய்து அவரது ஒரு வேலைக்கும் போகாத அப்பாவிற்கும் எதிர்பேச முடியாத அம்மாவிற்கும் சம்பாதித்துக் கொடுத்த ஊரடி ராமாயணங்களையும் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றிப் பொன்னெழுத்துக்களால் அடிக்கடி பொறித்துக் கொண்டிருப்பார். 
             திருமலைநாதன்பட்டி தி.க. முருகனைத் தவிர எந்த மேதையையும் அவர் சந்தித்ததில்லை; தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் காளிமுத்து வாத்தியாரைத் தாண்டி எந்தப் படிப்பாளியோடும் பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டதில்லை; அவருக்குத் தெரிந்த ஏட்டு அண்ணாத்துரைக்கு அப்பால் எந்த அதிகாரியோடும் பழகியதில்லை. அதனால், அவனப் பாரு…, இவனப் பாரு… என அவர் காட்டிய முன்மாதிரிகள் எல்லாம் பெரும் செல்வத்துக்கு அதிபதிகளாகவும் திடீர்ப் பணக்காரர்களாகவுமே இருந்தார்கள். யார் யார் எவ்வளவு அசையும் சொத்து, அசையாச் சொத்து சேர்த்துள்ளனர் என ஆதாரங்களோடு முன்வைக்கும் அவர் முன்னால் எழுந்து போக முடியாமல் எனக்குள் முட்டும். 
          என்னோடு ஆசிரியப்பயிற்சி முடித்தவர்கள் பலர் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்தனர். மேல்படிப்புப் படிக்க வேண்டும் என்பது எனக்குத் தீராத ஆசை. அப்பாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்ப்பதையே தவிர்த்து வந்த நான் ஒருநாள் அவர் நல்ல சுபாவத்தில் இருந்த சமயத்தில் மெதுவாகக் கெஞ்ச ஆரம்பித்தேன். இணக்கமான பதில் வரவில்லை. மூத்த மகன், குடும்பக் கடமை என்று வழக்கம்போல எதேதோ பேசினார். கடைசியில் இனி படிப்பு அவ்வளவுதான்; மேற்கொண்டு படிப்பதாக இருந்தால் நீயே சம்பாரிச்சுப் படிச்சுக்கோ என்று கைவிரித்துவிட்டார். என் தம்பி பத்தாம் வகுப்புப் படிக்க வேண்டும். பெரிய கழிவிரக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. 
     இடையில் மாயனூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சென்றிருந்தேன். விரிவுரையாளர் நடராஜன் சாரைப் பார்த்தேன். அவர் அஞ்சல்வழிக் கல்வி மூலம் படிக்கலாம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்தும் படிப்பு மையங்கள் மூலம் சேரலாம் என்று வழிகாட்டினார். இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்துள்ளதால் தமிழ் பி.லிட். படித்தால் பதவி உயர்வுக்குப் பயன்படும் என்றும் சொன்னார்.  
           என் இளைய மைத்துனர் தண்டபாணி கோவிலூருக்கு மேற்கில் உள்ள சாமாநாயக்கனூரில் பால் அரைக்கும் தொழில் செய்துவந்தார். அவ்வூர் விஜயகுமார் தன் தம்பியோடு சென்னையில் வட்டிக்கடையும் தவணை முறை எண்டர்பிரைசஸ் வியாபாரமும் செய்து வந்தார். அவர் தன் பங்குதாரர் ஜெயராமனிடம் இருந்து கடையைப் பிரித்துத் தனியாக நடத்தத் தொடங்கினார். அவருக்கு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. 
           சொந்தக் காலில் நிற்கக் காலம் கனியாத வாலிப அபலைகளுக்குத் தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது? விஜயகுமார் நடத்திய ஃபைனான்ஸ் மற்றும் எண்டர்பிரைஸசில் சேர முடிவெடுத்தேன். என் மேல்படிப்புக்குத் தடை போடக்கூடாது; தேர்வு நாட்களில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்; இடையில் ஆசிரியப் பணி வந்துவிட்டால் விடுவிக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சாப்பாடு போட்டு மாதம் 250 ரூபாய் சம்பளம் என முடிவாயிற்று. 1991இல் எனது ஒருநாள் சம்பளம் என் வயிறு கழுவியது போக ஏறத்தாழ எட்டு ரூபாய் முப்பது பைசா.
            திருவான்மியூர் சென்றேன். அங்கு இருவரோடு மூவர் ஆனேன். தவணை முறை வியாபாரத்தைத் தம்பியும் தண்டலை அண்ணனும் பார்த்துக் கொண்டனர். நான் இரண்டு பேரோடும் முறைவைத்துச் செல்ல வேண்டும். மழையானாலும் வெயிலானாலும் வசூலுக்குப் போவது நிற்காது. அம்பத்தூர், அடையாறு, ஆழ்வார்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், பெசண்ட்நகர், வேளச்சேரி  ஆகிய பகுதிகளில் தண்டல் மற்றும் தவணை வசூல் இரண்டும் நடைபெற்று வந்தன. தண்டலுக்காக வாரம் ஒரு நாள் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பல்லாவரம் மற்றும் தண்டையார் பேட்டை வீதிகளிலும் ஊருக்குள்ளும் மதியம் வரை வசூல் செய்வோம். சிலருக்குப் பணம் அடைப்போம். 
      நாங்கள் போகும்போது சிலர் வீட்டில் இருக்க மாட்டார்கள். சிலர் இன்ன நேரம் வாருங்கள் என்பார்கள். சிலர் அடுத்த வாரம் தான் இந்த வாரம் இயலாது என்பார்கள்.  இரண்டாம் முறை போவது பெரும்பாலும் நான்தான். சென்னையில் எல்லா வீதிகளும் ஒன்று போலவே இருக்கும். எனது விதிக் குழப்பமும் வீதிக் குழப்பமும் தலை தூக்க பல நேரங்களில் வீடு மாறிப்போய் கதவைத் தட்டி அசடு வழிந்ததும் உண்டு. ஒருசிலர் தந்துவிடுவார்கள். ஒருசிலர் சொல்கிற கதையைக் கேட்டு மனம் கசியும். மிரட்டிப் பணம் கேட்க வாய் வராமல் வந்துவிடுவேன். விஜயகுமார் கடிந்துகொள்வார். வசூல் முடிந்து மதிய உணவிற்கு இரண்டுமணி வாக்கில் வீடு வந்து சேர்வோம். 
       ஒருசில நாட்கள் விஜயகுமாரின் தம்பி சமைக்கத் தொடங்கி இருப்பார். சிலநாட்கள் நாங்கள் வந்த பிறகுதான் காய்கறியே வாங்கப் போவார். நாங்கள் கழிப்பறை சுத்தம் செய்வது, காய்கறி நறுக்குவது, வெங்காயம் வெட்டுவது போன்ற சின்னச் சின்ன ஒத்தாசைகள் செய்வோம். ஒரே ஒரு சைக்கிள் இருந்தது. அதைத் துடைத்து வைப்போம். அதற்குள் தம்பி சமையலை முடித்திருப்பார். பசி ருசி அறியாது. உண்ட மயக்கம் தெளிந்து எழுந்தபின் மாலை உள்ளூர் வசூலுக்குக் கிளம்புவோம். உள்ளூரில் தின வசூலும் உண்டு, வார வசூலும் உண்டு. 
            அங்கு இருந்த பத்து மாதங்களில் இரண்டு முறை மட்டுமே ஊருக்கு வந்து சென்றதாக ஞாபகம். அதற்கான தொகை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்பட்டது. முதலாம் ஆண்டு படிப்புச் செலவுக்காக தேர்வுக்கட்டணமாக இரண்டுமாத சம்பளத்திற்கு மேல் கட்ட வேண்டி இருந்தது. கவிதாசரண், முகம், தெளிதமிழ் போன்ற ஒருசில சிற்றிதழ்களுக்கு சந்தாக் கட்டத் தொகை தேவைப்பட்டது. அப்பாவுக்கும் பேசியபடி ஓரளவு பணம் கொடுத்தாக வேண்டும். வசூல் பணத்தில் கை வைக்க முடியாது. நானோ வாத்தியாருக்குப் படித்தவன். ஒழுக்கத்தைச் சொல்லித் தர வேண்டியவன். நம்பிக்கையான ஆள் வேண்டும் என்றுதான் என்னைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சமாதானம் பேசும் நாட்டாமை வேறு.
          வட்டிக் கடை, தவணைக் கடைகளில் நிப்புக் கணக்கு என்று ஒன்று உண்டு. இனிமேல் இந்தப் பணம் வராது எனக் கைவிடப்பட்ட காந்தி கணக்குகள் அவை. இடமாற்றம், ஆள் காணாமல் போதல், ஓடி ஒளிதல், நொடித்துப் போதல், மீச்சிறு தொகை என்பதால் நடையாய் நடந்து அலுத்துப்போய் கைவிடப்பட்டது… என்ற வகையில் அவை அமையும். இவற்றில் ஏதாவது ஒருவர் எப்பவாவது கண்ணில் தட்டுப்பட்டால் சும்மா கேட்டுவைப்போம் எனக் கேட்பது உண்டு. பெரும்பாலும் தரமாட்டார்கள். முன்பு சொன்ன கதையை விட இன்னொரு பெரிய கதையை ஆரம்பிப்பார்கள். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். அதிசயமாய் என் மேல் இரக்கப்பட்டு இப்போதைக்கு இவ்வளவுதான் இருக்கிறது எனப் பத்துப் பதினைந்து ரூபாய் சில்லறைகளாய்க் கொடுப்பதும் உண்டு. 
            அண்ணன் தம்பிகளோடு செல்லும் போது கடைக்கணக்கில் ஒப்படைத்து விடுவேன். தனியாக நான் மட்டும் செல்லும் நிகழ்வுகளில் அவற்றை நொறுக்குத் தீனிக்காகச் செலவிட்டு விடுவேன். பின்புதான் இப்படிக் கிடைக்கும் சில்லறைப் பணத்தைச் சிற்றிதழ்களுக்காகச் செலவிடுவது என முடிவு செய்தேன். ஊருக்குச் செல்லும்போது மணியார்டர் செய்துவிட்டு வந்துவிடுவேன். விஸ்டம், இந்தியா டுடே போன்றவற்றை எப்போதாவது கடைகளில் வாங்குவேன். மாடியில் தங்கியிருக்கும் கணேசன் கொடுத்ததாகப் பொய் சொல்லி விடுவேன். பொய்ம்மையும் வாய்மை இடத்த என வள்ளுவர் சொன்னதும் பிச்சை புகினும் கற்கை நன்றே என அவ்வை சொன்னதும் எனக்கும் பொருந்துமோ என்னவோ. 
           இப்படிச் செய்வது மிகப் பெரும் தவறு என என் தன்னெஞ்சு அவ்வப்போது சுடும். வெளியே தெரிந்தால் அவமானமாகப் போய்விடுமே என மனம் கொல்லும். அவர்களுக்குச் சமமாக முதலாளி ஆவதற்கோ வேறு வருமானம் ஈட்டிப் பணக்காரன் ஆவதற்கோ இப்படிச் செய்யவில்லை. எல்லாம் படிப்பின் மீதான தீராத மோகத்தால் நடந்தது எனச் சமாதானம் செய்து கொள்வேன். மனத்துக்கண் மாசிலன் ஆதலினால் அனைத்தறனும் என்னைக் காத்தன என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு நினைத்தால் மனம் கூசுகிறது. என் சம்பளத்திலேயே செலவு செய்துவிட்டு இவ்வளவுதான் மீதம் என்று கொடுத்திருந்தால் என் அப்பா வேண்டாம் என்றா சொல்லியிருப்பார்? ஆம். சம்பாதிச்சு மிச்சம் வைக்கத் துப்பில்லாத பய என்று சொல்லினால் சுட்டிருப்பார். ஒருவகையில் அப்பாவின் பணத்தேவை என்னைக் களவாணி ஆக்கிற்று. கடைக்கண் வைத்த கலைவாணி என்னை மன்னித்துவிட்டாள்.
       பி.லிட். முதலாம் ஆண்டுத் தேர்வை சென்னை பச்சையப்பன் கல்லூரித் தேர்வு மையத்தில் எழுதினேன். தேர்வுக்கு இடைப்பட்ட நாட்களில் வேலை இருந்தாலும் சொன்னபடியே விஜயகுமார் தேர்வு நாட்களில் வேலை கொடுக்கவில்லை. நான் அங்கு இருந்தவரை என்னைத் தன் தம்பியை விடவும் மேலாக கவனித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 
          சற்றேறக் குறைய பத்தாவது மாதத்தில் எனக்கு இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேர்காணல் வந்தது. உதவிபெறும் பள்ளியில் வேலை. ஊதியம் அரசாங்கம் கொடுக்கும். அழைக்கப்பட்ட ஐந்தாறு பேரில் மூன்று பேர் நேர்காணலில் கலந்துகொண்டதாக நினைவு. எங்கே என் படிப்புக்காகச் செய்த செலவு வீணாகப் போய்விடுமோ என பயந்துகொண்டிருந்தார் அப்பா. ஒருவாரத்தில் முடிவு தெரிந்தது. பணியில் வந்து சேரும்படி ஆணை வந்தது. ஆசிரியப்பணி கிடைத்ததற்காக என்னைவிடச் சந்தோசப்பட்ட ஒரே ஜீவன் என் அப்பா. காரணம், தொகுப்பூதியம்தான் என்றாலும் அவரது மகனுக்குச் சம்பளம் 800 ரூபாய். 250ஐ விட எண்ணூறு அதிகம் தானே. ஒவ்வொரு மாதமும் அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். 1992இல் என் வயிற்றுக்கும் சேர்த்து ஈயப்பட்டது ஒரு நாளைக்கு 25ரூபாய் 65 பைசா. பணத்தை என்னமோ செய்துகொள்; என் படிப்பை மட்டும் நிறுத்தக் கூடாது என்று நேருக்கு நேர் நின்று துணிந்து சொன்னேன் அப்போது. தெற்றெனத் தூற்றலும் பழியே; அப்பனுக்கு அற்பனாய் வாழ்தலும் பழியே. 
           
அப்பாவின் அனுபவம் இளமையில் வறுமை. இது அவரது மகனுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பொருளியலை நோக்கி அவர்  என்னைத் துரத்தித் துரத்திப் பார்த்தார். நானோ என் மேற்படிப்பைத் தோற்கடிக்கச் செய்த முயற்சியாகவே அதைக் கருதினேன். அவர் சொத்துச் சேர்ப்பது குறித்துப் பேசப் பேச அது படிப்பின் மீதான என் பிடிவாதத்தை உக்கிரம் கொள்ள வைத்தது. பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியவாறே அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தொலைதூரக் கல்விப் புலத்தில் இளங்கலை முடித்து முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். பணியாற்றிய பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியர் பணியிடம் காலியானது. பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற நன்மதிப்பில் நடராஜன் சார் சொன்னது போலவே பதவி உயர்வு என்னைத் தேடி வந்தது. 
           உப்பிடமங்கலத்தில் எனக்குப் பின்னால் படித்த குப்புசாமி எங்கள் பக்கத்து ஊரான சேங்கல்காரர். அவர் கரூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இல்லத்தில்(தற்போதைய R.K. GUEST HOUSE) தங்கி பல கடைகளுக்குக் கணக்கு எழுதிக் கொண்டே முதுகலை படித்து வந்தார். மிகச் சிறிய அறை. கோடை வெய்யிலுக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். ஒரே ஒரு மின்விசிறிதான். அது இல்லாமல் முடியாதுதேர்வுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளும் அவரோடு தங்கி முதுகலைத் தேர்வு எழுத உதவினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பி.எட். படிக்க விண்ணப்பித்தேன். என்னுடைய நேரம் எனக்கு முன்னால் நின்றது. ஓர் ஆண்டுக் கல்வியாக இருந்த பி.எட். படிப்பு இரண்டு ஆண்டுகள் ஆனது. அதிக பட்சம் ஐநூறு இடங்கள் தான். நுழைவுத் தேர்வு வைத்தார்கள். அதில் தேர்வாகி பி.எட். படித்து முடித்தேன். 
           நண்பர் மாரியப்ப பிள்ளை மேல்நிலை வகுப்புகளுக்கு ஆங்கிலம் போதிக்க வந்து சேர்ந்தார். இருவரும் கல்லூரி/ பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் ஆவதற்கான தேசியத் தகுதித் தேர்வை எழுதினோம். ஒரே அமர்வில் தேர்ச்சி பெற்றோம். தொலை தூரக் கல்வியில் எம். எட். படிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு சென்னைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் இரண்டாண்டுப் படிப்பாகப் படிக்க விண்ணப்பம் கோரப்பட்டது. மகிழ்ச்சியோடு விண்ணப்பித்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் சேர்க்கை நடைபெறவில்லை என அனுப்பிய விண்ணப்பம் கட்டிய பணத்திற்கான காசோலையுடன் திரும்பி வந்தது.
              தொழில்கல்வி / கல்லூரிப் படிப்புக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட, மனதளவில் நலிவடைந்த, கிராமப்புற மாணவனாகவே வலம் வந்தேன். அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிக்கு வந்த பின்பு நாமக்கல்லில் பெருமாள் முருகன் அய்யாவை வழிகாட்டி ஆசிரியராகக் கொண்டு தொலைநிலை/ பகுதிநேரப் படிப்பில் சேர்ந்து எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி. படித்து முடித்தேன். பொறியியல் படித்து எஞ்ஜினீயர் ஆக முடியாத நான் ஏதோவொரு வகையில் டாக்டர் ஆகிவிட்டேன். தற்போது பலருக்கும் வழிகாட்டும் இடத்தில் நிறுத்தியிருக்கிறது என் உளத்திட்பம். தொழில்கல்வி படிக்காததற்காக வருத்தப்பட்ட என் மனக் குறளி இப்போது கிடைத்ததைப் பற்றிக் கொண்டு உச்சிபோய்த் தன்வால் பார்த்து பிரமிப்புக் கொள்கிறது.
                  உயர்கல்வி பெற அரசு உதவித்தொகை, கல்விக்கடன் என வாய்ப்புகள் இருப்பினும் சமூக பொருளாதார நெருக்கடிகள், பெற்றோரின் அறியாமை இன்னும் உயர்கல்வியைக் கட்டாய உடைமை ஆக்க முடியாமல் தடுக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களின் எண்ணிக்கைக்கும் உயர்கல்வி பயில வரும் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கும்  நெடிய துயரார்ந்த இடைவெளிகள் இருக்கவே செய்கின்றன. இவர்களுக்கான ஒரே ஞானமார்க்கம் தொலைதூர/அஞ்சல்வழிக் கல்விதான். பேருக்குப் படிப்பவர்களும் ஊக்க ஊதிய உயர்வுக்காக மட்டுமே படிக்கிறவர்களும் இதன் தரத்தை பலவீனப்படுத்துகிறார்கள். பசியோடும் தாகத்தோடும் மறுக்கப்பட்ட வாய்ப்பை மீட்டெடுக்கும் பதற்றத்தோடும் படிக்கிறவர்கள் கல்லூரியில் நேரடியாகக் கற்றவரை விடவும் மேம்பட்ட திறனாளர்களாக இருக்கிறார்கள். 
         
பரந்து கெடும் உலகியற்றியானைத் தூற்றிப் பயனில்லை. கல்வியின் நன்மை கடலிற் பெரிது. யார் எங்கே எந்தப் படிப்பில் சேர்ந்திருந்தாலும் சரி. அதற்கான முழுத்திறனுடன் வெளிவர உற்சாகப்படுத்துங்கள். பாழும் வயிற்றுப் பசியடக்க கூலிக்கு உழைக்கும் நிலைமையா? வருத்தப்பட்டு பாரம் சுமப்பதை விட்டுவிட்டு அஞ்சல்வழிக் கல்வியிலாவது சேருங்கள். பிடி கிடைக்காத பாசக் கயிற்றுக்காக ஏங்காதீர்கள். அறியாமை மலைப் பாம்பின் வால் என்றாலும் ஆல விழுதின் கரமென்று பற்றி மேலேறி அதன் கோரப் பல்பிடுங்க வாருங்கள். இழந்த மான அவமானம் கல்வியால் ஈடேறும். ஞாலத்தின் மாணப் பெரிது கற்றதனால் அறிவூறும் ஆற்றல். மலையினும் மாணப் பெரிது மனத்திண்மை விரிவெய்தும் தோற்றம்.
                                                                     நன்றி: காக்கைச் சிறகினிலே ஆகஸ்டு 2016.

7 comments:

 1. “காகம் இடமிருந்து வலம் போனால் சென்னை போகலாம் என்று சகுனம் பார்த்தார். அப்படியே காகம் போனது. நான் மகிழ்ச்சியுற்றேன். அவர் முகம் காகம் ஆனது“
  “எனது விதிக் குழப்பமும் வீதிக் குழப்பமும் தலை தூக்க பல நேரங்களில் வீடு மாறிப்போய் கதவைத் தட்டி அசடு வழிந்ததும் உண்டு”
  “‘ஒருவகையில் அப்பாவின் பணத்தேவை என்னைக் களவாணி ஆக்கிற்று. கடைக்கண் வைத்த கலைவாணி என்னை மன்னித்துவிட்டாள்.”
  – கடந்துவந்த சோகத் தடங்களை, எவ்வளவு சுவையாகச் சொல்கிறீர்கள்! ஒரு குறுநாவல் படித்த சோக சுகம்!
  என்றாலும், அய்யா, இங்கே நிற்கிறீர்கள் -
  ‘அறியாமை மலைப் பாம்பின் வால் என்றாலும் ஆல விழுதின் கரமென்று பற்றி மேலேறி அதன் கோரப் பல்பிடுங்க வாருங்கள்.’
  வருகிறோம், வருகிறார்கள்…வருவார்கள் அய்யா!
  அடுத்த நூலுக்கான காத்திரமான கட்டுரை. விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 2. உங்கள் அனுபவங்கள் பலருக்கும் பாடம். நல்லதோர் கட்டுரை. படிக்கத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. ஐயா வணக்கம்.
  "உன்னாட்டம் ஆம்பிளைங்களப் போய்ப் பாரு… என்று தொடங்கும் அப்பாவின் வசவுகள் என் வயதில் வருமானம் ஈட்டும் பலரையும் சுட்டிக் காட்டி தண்டச்சோற்றுப் புராணத்தில் முடியும்".
  அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் என் அப்பாவின் வாயிலிருந்து எனக்காக வெளிப்பட்ட வார்த்தைகள். இந்தக் கட்டுரை வாசிக்கும் போது எனது கடந்தகால நினைவுகள் கண்ணீராய் வெளிப்படுகின்றன. உணர்வு மிக்க அருமையான கட்டுரை ஐயா. நன்றி

  ReplyDelete
 4. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete
 5. நீண்டதோர் பெருமூச்சு..
  என்னவோர் பயணம்..
  அதிசாகசப் பயணங்களில் ஒன்று..

  முகநூலுக்கு கடத்துகிறேன் ..

  ReplyDelete
 6. sir,nadarajan sir ippothu enku ullaar,thankaludan paditha ramesh enku ullar entru theriuma

  ReplyDelete
 7. sir,nadarajan sir ippothu enku ullaar,thankaludan paditha ramesh enku ullar entru theriuma

  ReplyDelete

வீதியில் கண்டெடுத்த வைரங்கள்

         இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...