வல்லிக்கண்ணன் கடிதங்கள் 14

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 15-1-2002

அன்பு மிக்க ...., வணக்கம். 
               உங்கள் 27-12-2001 கடிதம் கிடைத்தது. 

         28ல், வள்ளலார் குடியிருப்பு நலச் சங்கம் தயாரித்த 2002 வாழ்த்து வெளியீடு ஒன்று அனுப்பினேன். பலவிதமான தகவல்கள் கொண்ட சிறு பிரசுரம். ஜனவரி 8 அன்று ‘சின்னப் புறாக்களும் துப்பாக்கிக் குண்டுகளும்’ என்கிற ஏ.எச்.ரசூல் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்கான ஆதரவுக் கட்டுரைகளின் தொகுப்பு அனுப்பினேன். கிடைத்திருக்கும்.

               டிசம்பர் 29 அன்று நான் சேலம் போனேன். 30ல் அங்கு எனது சுயசரிதை ‘வாழ்க்கைச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. 31 அன்று ஏற்காடு மலை மேல் சென்று, நண்பர்களோடு இயற்கைக் காட்சிகள் கண்டு களித்தேன். ஜனவரி 1, 2 தேதிகளிலும் சேலத்தில். 3-ம் நாள் சென்னை வந்து சேர்ந்தேன். நலமாக இருக்கிறேன். 
   
        ஞானியுடன் ஏற்பட்ட சந்திப்புகள் பற்றி எழுதியிருந்தீர்கள். அவர் நல்ல அறிவாளி. தேர்ந்த படிப்பாளி. ஆழ்ந்த சிந்தனையாளர். கண் பார்வை இல்லாத போதிலும், விஷயங்களை காதுகளால் கிரகித்து, உடனுக்குடன் நல்ல முறையில் விமர்சனமும் கனமான கருதுக்களும் வெளியிடக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார். அவரது ‘தமிழ் நேயம்’ எனக்கு வருவதில்லை.

           சாகித்ய அகாதமி இந்த ஆண்டு சி.சு. செல்லப்பாவுக்கு ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காக வழங்கப்பட்டிருப்பது காலம் கடந்த பாராட்டு தான். அவர் உயிரோடு இருந்திருப்பின், இதை ஏற்றுக் கொள்ளமாட்டார். தேடி வந்த பரிசுகளையும் விருதுகளையும் ஏற்க மறுத்தவர் அவர். இந்த ஆண்டு சா. அகடமிப் பரிசு வாழ்கிற எழுத்தாளர் எவருக்காவது வழங்கப்பட்டிருந்தால் பயனுள்ளதாக  அமைந்திருக்கும்.

    தொ.மு.சி. ரகுநாதன் டிசம்பர் 31 அன்று திடீர் மரணம் அடைந்தார். முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு நற்பணி ஆற்றியவர். 78 வயது நிறைவு செய்திருந்தார்.

             சென்னையில் பனி, குளிர் அதிகம் தான்.

    புக்ஃபேர் நடகிறது. நல்ல கூட்டம் என்று சொல்லப்படுகிறது. நான் போகவில்லை.

     ‘குமுதம்’ ஜங்ஷன் என்றொரு பத்திரிகை ஆரம்பித்திருக்கிறது. நான் பார்க்கவில்லை.

           ‘நந்தவனம்’ சிற்றிதழ் என் நேர்காணல் வெளியிட்டிருக்கிறது. கேள்விகள் அனுப்பினார்கள். பதில் எழுதி அனுப்பினேன். தென்கச்சி சாமிநாதன் பதில்களும் வந்துள்ளன.

     கல்யாண்ஜி   கவிதை ஒன்றுக்கு ‘ஆனந்த விகடன்’ 2000 ரூபாய் கொடுத்திருக்கிறது இந்த வாரம்.

              வாழ்த்துக்கள்.
                                                                                                                                          அன்பு 
                                                                                                                                            வ.க. 

3 comments:

 1. வணக்கம் அய்யா...
  ...திறமையுள்ள எழுத்தாளர்களை பாராட்டும் பெருந்தன்மையான குணம் பலருக்கு அரிதாகவே உள்ளது..வல்லிக்கண்ணன் அவர்களின் கடிதங்கள் அவரின் எண்ணங்களைக்காட்சிப்படுத்துகின்றது..வாழ்கின்ற எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பதில்லை என்ற கொள்கைகளோடு இருப்பவர்கள் தானே மிகுந்துள்ளனர்...நன்றி..

  ReplyDelete
 2. வணக்கம் அங்கிள்...கோயம்புத்தூர் நல்லா இருக்கா? ( என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்..கவிஞர் சுவாதியின் மகள்...) உங்களுக்கு நான் கருத்திட முடியாது..என் வலை தளம் பாருங்க...நீங்கள் வாழ்த்தினால் இன்னும் வள்ர்வேன்http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

  ReplyDelete
 3. அய்யா வணக்கம்
  முகநூலில் நண்பர் டி.வி.எஸ். சோமு இன்றைய தினத்தை வல்லிக்கண்ணன் பிறந்தநாள் என்று சொல்லி ஒரு கட்டுரையைப் பகிர்ந்திருந்தார்...
  இங்கே வந்து பார்த்தால் இன்னொரு பதிவு ...

  சுதந்திரத்திற்கு முன்னர் சில படைப்புகளுக்கு ஐநூறு ரூபாய் வழங்கப் பட்டு இருப்பதை வீதியில் ஒருவர் பகிர்ந்தார்.

  அந்த அளவுகோலில் பார்த்தல் இரண்டாயிரம் ரூபாய் பொருத்தமான சன்மானமே ..
  அதுவும் கல்யாண்ஜிக்கு ..(கொஞ்சம் கம்மியோ என்கிற சந்தேகமும் வருகிறது)
  பதிவுகள் தொடர்வது மகிழ்வு ...

  ReplyDelete

வீதியில் கண்டெடுத்த வைரங்கள்

         இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...