மந்தணம்


நினைவூட்டு மிகவும் அவசரம் தனிக்கவனம்

வரைவுத் தணிக்கைத் தடை நிவர்த்திக்கான விரைவுச் செயல்முறைகள்
ஓ.மு.எண்: 311213/மு.ஆ.1/2014  நாள்: 01.01.2015
மார்கழி 17 திருவள்ளுவர் ஆண்டு 2045
*****

               பொருள்: ஆண்டுகளின் சந்திப்பு - அலுவல்களின் அடைவு எல்லை -                                            மந்தணம் பகிர்தல் – தார்மீகப் பரிமாறுதல் – சார்பு.

               பார்வை:    ஒருங்கிணைப்புக் கூட்டம் இதே எண், நாள்: 31.12.2013
                                   2. தொடர்புடைய ஆவணங்கள் இதே எண், நாள்:  31.12.2014
!!!!!

             ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டின் போதும் சார்நிலை அலுவலர்கள் தம் உயர் அலுவலர்களைச் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது மரபு. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய இந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இதற்கு மறுதிசையில் வாழ்த்துக்களைப் பரிமாறிய காலமுறைப் பதிவு மறுகவனிப்புக்காக இங்கு முன்வைக்கப்படுகிறது.
         ஒரு மலர் அழகுடன் பூத்திருப்பது வண்ணமயமான அதன் இதழால் மட்டும் அல்ல. இலைகளுடன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிற பசுமை தோய்ந்த அதன் தாவரப்பகுதியாலும் தான். அதுபோல் அலுவலர் ஒருவர் வெற்றி பெறுவது என்பது அவரது அலுவலகத்தாலும் தான்.
    அலுவலகம் என்பது அங்கிருக்கும் மேசை நாற்காலிகளோ பீரோ அலமாரிகளோ அல்ல; அலுவலகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வுமே ஆகும். அலுவலரின் இருப்பு என்பது தற்காலிகமானது. ஆனால், அலுவலகம் எப்போதும் நிரந்தரமானது. ஒருசிலர் தமது பணிக்காலம் முழுவதையும் ஒரே அலுவலகத்தில் கழிக்கிறார்கள்தான். ஆனால், எல்லார்க்கும் அது நேர்வதில்லை. எனவே, தனிப்பட்ட நபர் சார்ந்து அலுவலகம் இயங்க முடியாது. அலுவலகம் என்பது அனைவரின் கூட்டு வழிபாடு. அதன் இறையாண்மை அனைவரின் செயல்பாட்டிலும் பிரதிபலிக்க வேண்டும்.
    அலுவலகங்கள் உயிரற்றவை என்றே பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம்  கையாள்வது வெறும் காகிதங்கள் என்று எண்ணி விட வேண்டாம். அவை பலரது தற்காப்பு ஆயுதங்கள். நம் முன் கிடப்பவை கோப்புகள் மட்டும் அல்ல. அவை பலரது கண்ணீர் மல்கிய வேண்டுதல்கள். நம் மேசையை நிறைக்கும் பேசாத உயிர்களின் முனகலைக் கட்டிக் கட்டி வைத்துவிடக் கூடாது.
            நமக்கு ஓய்வு என்பது இரண்டு கோப்புகளுக்கு இடையேயானது. ஆனால், வேலைக்காகவே தன்னை நேர்ந்து விட்டவர்கள்தான் அநேகம். இருப்பினும், அலுவலகப் பணியில் நேரம் என்பது எவ்வளவு மதிப்பு மிக்கது எனப் பிறர் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. வெயில் நேரத்தில் ஆற்றின் நடுவே நின்றிருந்தாலும் கடந்துவிட்ட நிழலைக் கையில் பிடிக்க முடியாது. உங்கள் அனுபவங்கள் மற்றவர்க்குப் பாடங்கள்.
         உங்களின்  மனந்திறந்து  யோசித்துப் பாருங்கள். கீழ்த்தரமான தங்கள் ஈகோவுக்குத் தீனி போடும் ஒரு சிலரைத் தவிர கோரிக்கைகளை யாரிடம் வைப்பது, எந்த அலுவலகத்தை அணுகுவது என்றுகூடத் தெரியாத மனுதாரார்களே அதிகம். இதில் மெத்தப் படித்தவர், சுத்தமாகப் படிக்காதவர் என்னும் வித்தியாசம் ஏதும் இல்லை. கோரிக்கையோடு வந்திருப்பவர்களை முதலில் உட்கார வையுங்கள். கோபமாக வருபவர்க்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாகக் கேட்டால் பொறுமையாக விதிமுறைகளை எடுத்துக் காட்டுங்கள். விதிகளை நிறைவு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்கள். ஆறுதலாக நான்கு வார்த்தை பேசி வழியனுப்பி வையுங்கள். அலுவலரே கேட்டாலும் உங்கள் தரப்பு நியாயத்தை இயல்பாக எடுத்துச் சொல்லுங்கள்; சாதக பாதக அம்சங்களை  வலியுறுத்திச் சொல்லுங்கள்.
    அதே வேளையில் விதிகளுக்குட்பட்டதை விரைவாகச் செய்துகொடுப்போம். வகிக்கும் பதவியில் நம்முடைய பயணம் உச்சபட்ச அதிகாரம் அடைவதை நோக்கியது அல்ல. கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் வழி தொடர்புடையவர்களுக்குப் பணிசெய்வதாகும். நாம் போடுகிற ஒவ்வொரு டானா தையலும் பலரின் கண்ணீரைத் தைப்பதாகும். நாம் செய்வது கடமை மட்டுமல்ல; மகத்தான சேவையும் கூட. நாம் செய்கிற பணியால் பார்ப்பவர் கரங்கள் தாமே கைகூப்ப வேண்டும்.
             பணி நிறைவு பெறுவோர்க்குப் பாராட்டு விழா நடத்திவிட்டுப் பின்னர் அவர்களை மறந்து விடுகிறோம். அவர்களால் சும்மா இருக்க முடியாது. ஓய்வு பெற்ற நிலையில் தளர்மனத்துடனோ எதிர்மனத்துடனோ அலுவலகத்தை எதிர்கொள்கின்றனர். நாமும் ஒருநாள் ஓய்வு பெறப்போகிறோம். முறையாக ஓய்வு பெறும் யாருக்கும் பணியில் இருப்போர் உரிய பயன்களைப் பெற்றுத் தருவது கடமையும் ஆகிறது. எனவே, மூத்த குடிமக்களைப் பரிவுடன் அணுகுவோம்.
    அசடு வழிதலோ அதிகாரப் பெருமையில் தன்னை மறப்பதோ அலுவலகத்துக்கு எதிரானது. மலர்ந்த முகம் எல்லோர்க்கும் பிடிக்கும். பணியில் இருக்கும் வரை அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் நல்லுறவு பேணுங்கள். இருக்கைகளுக்கு இடையில் பொறாமை, பூசல், பிணக்குகள், மனக் குமுறல்கள் வேண்டியதில்லை. வார்த்தைகளின் தடிப்பு ஆறாத மனத் தழும்புகளைத் தந்துவிடும். எந்த நிலையிலும் உங்கள் வார்த்தைகளின் மீதான கட்டுப்பாட்டை நீங்கள் இழந்துவிட வேண்டாம்.
          தமது பணியின் கனத்தால் வெறுப்பின் நுனியில் நிறுத்தி மனசு வலிக்கப் பேசுகிறவர்களும்  இருக்கக் கூடும். இருப்பினும் வேலையைச் சொல்லித் தருவதும் திருத்துவதும் திருந்த வாய்ப்பளிப்பதும்கூட நிர்வாகத்தில் உள்ளதுதான். ஆனால், இப்படிச் சொல்பவரே கடிந்துகொள்கிறார் என்றால் அது வழங்கப்பட்ட வாய்ப்பின் உச்சபட்சம் என்பதை நாம் உணர வேண்டும்.
   ஆண்டுக் கணக்கில் ஏதாவதொரு பண்டிகைக்கு / விழாவுக்கு அலுவலகத்தைச் சுத்தப்படுத்துகிறீர்கள். தாராளமாகச் செய்யுங்கள். மேலும், உங்கள் இருக்கைப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்கட்டும். பிசுக்கேறிய மேசைகளும் பிதுங்கி வழியும் அலமாரிகளும் இறைந்து கிடக்கும் கோப்புகளும் அழுது வடியும் விளக்குகளும் சோர்வு தருபவை; நம் இயக்கத்தையே முடக்கிவிடக் கூடியவை. எனவே, நம் பார்வையில் அழுக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதயத்திலிருந்து வரும் புன்முறுவல் நாள்முழுக்க ஒளிரட்டும்.
     அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் அலுவலகங்களிலும் உள்ளது வேதனைக்குரியது. கண்ணியம் மிக்கவனாகச் செயலாற்றுவது மின்வேலிக்கு மத்தியில் நெருப்புச் செருப்புடன் நடப்பதாகும். தோல்பாவைக் கூத்துகள் மலிந்துவிட்ட உலகத்தில் கொள்ளப்படும் அறச்சீற்றம் கோமாளித்தனமாகவே கருதப்படுகிறது. பிழைக்கத் தெரியாதவன் என்னும் முத்திரை உடனே குத்தப்படுகிறது. இருப்பினும் முதுகில் குத்துவதுதான் சகிக்க முடியாதது.  ஏனெனில், கண்ணியம் என்பது  பின்பற்றுபவனைவிட வழுவியவனுக்கே அதிக வலி தருவது. அதனால் ஏற்படும் ஆத்திரத்தில் கூச்ச நாச்சம் இல்லாமல் சேற்றை வாரி இறைப்பதும் எழுத நடுங்கும் வார்த்தைகளால் காகிதத்தின் வெண்மையைக் களங்கப்படுத்துவதும்  வதந்திப்புழுதியை உருக்குலைக்கும் கிருமியாய்ப் பரப்புவதும் நடக்கிறது.
          காலப் போக்கில் தமது சுயநலமும் தம்மை விட்டுப் போய்விடுமோ என்பதுதான் அவர்களின் உள்ளார்ந்த பயம். தூய்மை என்பது தூய்மையின்மைக்கு எதிரான வன்முறையாகப் பாவிக்கப்படுகிறது. நம் உறுதியைக் குலைக்கும் துரோகங்கள் எச்சரிக்கை மணிகளின் நாவுகளை அறுத்தெறியத் துடிக்கின்றன. இதனால், உத்தமனுக்கு ஒவ்வொரு நாளும் சத்திய சோதனைதான். ஆபத்து வளையங்களைத் தாண்டி குறைகள் குறைந்துவரும் அலுவலகமாகப் பரிணமிப்பது அறவோரின் புருவங்களை உயர்த்தக் கூடிய ஆனந்த வேள்வியாகும்.
      முக்கத்துத் தேநீர்க்கடைகளில் வெளியிடப்படும் அரசாணைகளும் முச்சந்தி உணவகங்களில் பரிமாறப்படும் வரைவு அறிக்கைகளும் நமக்கே எதிராக முடியும் என்பதை உணர்வதில்லை. குழுவியம் கைகோக்கும் இடங்களில் ஒற்றுமை மட்டுமல்ல; அலுவலக உறுப்பினரும் காவு கொடுக்கப்படுகிறார். சில மரத்தடிச் சந்திப்புகள் விநோத நியமனங்களையும் பிடிக்காதவர்க்கு இடமாற்றங்களையும் வாய்மொழி ஆணைகளாய்ப் பிறப்பித்து ஆறுதல் பெறுகின்றன. ஆதங்கத்தில் தின்பண்டங்களோடு கொறிக்கப்படும் நம் சகாவின் சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் விஸ்வரூபம் எடுத்து பொது மனத்தின் செவிகளுக்குத் தீனியாகி அசல் திருப்பு முடிவாக உருவாக்கியவருக்கே வந்து சேர்வது வேடிக்கை. பொதுவிடங்களில் விடப்படும் அலுவலகப் பெருமூச்சுக்களின் வெப்பம் சில நேரங்களில் விட்டவரையே சுட்டு விடுவதும் உண்டு.
          எந்தப் பணியிலும் இட மாற்றம்/ இருக்கை மாற்றம் இயல்பாகவோ எதிர்பாராமலோ நடக்கிறது. நிர்வாக நலன் கருதி நம் முகவரியை மாற்றச் சொல்லும் நேர்முகக் கடிதங்களை அதிர்ச்சி தரும் பதிவஞ்சலாகவே உணர்கிறோம். வருந்துவதை விட்டுவிட்டு எங்கு நமக்கான தேவை உள்ளதோ அந்தத் திசைக்கு நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம் என ஏற்க நம் உரிமைமனம் ஒத்துக்கொள்வதில்லை.
      நம் குழந்தைகள் நம்மைவிடப் பக்குவப்பட்டுவிட்டார்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் தம்மை மறந்து கேட்கும் கேள்வி இந்த ஊர் போர் அடிக்கிறது. அடுத்த ஊருக்கு எப்பம்மா போவோம் என்பதுதான். ஜன்னல்கள் சாத்தப்படுவதற்காகத் தென்றல் கவலைப்படுவதில்லை. ஒரு ஜன்னல் மூடப்பட்டால் பல கதவுகள் நமக்காகத் திறக்கப்படும். நமது இன்மையின் வெறுமையில் வருந்துவோர் விழிகளில் பூக்கும் ஈரம்தான் நமது சாதனை.
             தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாதவரின் தேக்கம் பயன்பெறுவோருக்குத் துக்கம். அளிக்கப்படும் பயிற்சிக்கும் பெறப்படும் பயிற்சிக்கும் இடைவெளி இல்லாதபோதுதான் அலுவலகம் மேம்படும். தொழில்நுட்ப வளர்ச்சியால் தட்டச்சு இயந்திரங்கள் பரண்மேல் ஏறிவிட்டன. கணினிகள் வருகை தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பல அலுவலகங்களில் கணினி என்னும் அமுதசுரபி வெறும் தட்டச்சு இயந்திரமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக தொண்டுள்ளம் படைத்த நிறுவனங்களின் உதவியோடு இப்போது இந்த அலுவலகம் முழுக்கவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் அவற்றைப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை முறையில் வரக்கூடிய சுற்றறிக்கைகள் அனைத்தும் பிரிவு எழுத்தர்களின் மின்னஞ்சலுக்கு முன்னனுப்பப்படுகின்றன. இந்த ஓராண்டுப் பணிக் காலத்தில் இவ்வளவு விரைவான பகிர்மானத்திற்கு நீங்கள் உங்களை முன்கொணர்வு செய்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
           அலுவலகத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டபோது சுற்றி இருந்தவர்கள் உங்களை பயமுறுத்தி இருக்கக் கூடும். ஆனால், அது குறித்து நீங்கள் தயக்கமோ  கவலையோ கொள்ளவில்லை என்பது உங்களின் முதிர்ச்சியைக் காட்டுவதாக இருந்தது. இப்போது வெளியாட்கள் யாரும் தேவையில்லாமல் உங்கள் பணிகளில் குறுக்கிடுவதில்லை. பார்வையாளர்கள் யாரும் வேலை நேரத்தில் வந்து தொல்லை கொடுப்பதில்லை. இதனால், உங்கள் வேலையை நீங்கள் விரும்பியவாறு திட்டமிட வழி ஏற்பட்டுள்ளது. தொழில் நுட்பம் செயல்படும் இடத்தில் வெளிப்படையான நிர்வாகம் சாத்தியமாகிறது.
          அலுவலகங்களைத் தூங்கும் இடங்களாகச் சித்திரிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்த்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது. பரிதாபத்திற்குரிய அந்தத் துணுக்கு எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாக றெக்கை கட்டிப் பறக்கும் நம் அலுவலகத்தை ஒருமுறையேனும் வந்து பார்க்க வேண்டும்.
      வரக்கூடிய ஓராண்டுக் காலத்தில் உங்கள் ஒத்துழைப்புடன் ஒருசில செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. மாதம் தவறாமல் அலுவலகப் பணியாளர்கள் கூட்டம் நடத்துவது, நிலுவைக் கோப்புகள், முடிக்க வேண்டிய கோப்புகள் பற்றி விவாதிப்பது, மனித வள மேம்பாடு சார்ந்த பயிற்சி பெறுவது, அனைவரும் அடையாள அட்டை அணிவது, வாரம் ஒருநாள் சீருடையில் வருவது, அனைத்து சார்நிலை அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வது, அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படாத வகையில் சார்நிலை அலுவலகங்களை மேம்படுத்துவது, அலுவலகத்தின் முன்புறம் அழகான தோட்டம் அமைப்பது, ஒவ்வொருவரின் பிறந்த நாள் அன்றும் சம்பந்தப்பட்டவருக்கு வாழ்த்துச் சொல்வது, அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வது எனச் சொல்லிக்கொண்டு போகலாம்.
           ஒவ்வொரு கோப்பினையும் பதிவு எழுத்தர் தொடங்கி பிரிவு உதவியாளர் வழியாகக் கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர் வரை வந்து கடைசியாகக் கையெழுத்துப் போட்டு முடிப்பவர் அலுவலர்தான். எனவே, நம் அலுவலகத்தின் கடைசி ஊழியன் என்றே என்னைக் கருதுகிறேன். அதனால், கைகளை உயர்த்தியும் கூப்பியும் நீங்கள் செலுத்தும் மரியாதையைவிட உங்கள் கடமையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் உழைப்புமே எனக்கான வணக்கங்கள்.
    எங்கு விரைவாக வேலை நடக்கிறதோ அங்கு பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும். எட்டு மணி நேர வேலை என்பது உடலுக்கும் அலுவலகத்திற்கும் மட்டும் தான். நம் உள்ளத்திற்கு இல்லை. இப்படிச் சொல்வதில்  உங்களுக்கு உடன்பாடில்லாமல் போகலாம். வீட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு நிமிடமேனும் ஏதாவதொரு வகையில் அலுவலகத்தை நினைக்கும்படி ஆகிவிடுகிறது. சில கோப்புகளின் கொடிவைத்த பக்கங்கள் நம் நினைவைக் குடைந்து கொண்டே இருக்கின்றன. யாராவது ஓரிருவர் நம் பதவியைச் சொல்லி உசுப்பேற்றி விடுகிறார்கள். சிலர் நம் கனவிலும் வந்து ஆணை பிறப்பிக்கிறார்கள். வெகுசிலர் ஆதரவாய்ப் பேசுகிறார்கள். காற்றைப் போல, கடல் அலையைப் போல ஆகிவிட்டது நம் இருப்பு.
           பணிந்து சமர்ப்பிக்கப்படும் அலுவலகக் குறிப்புகளில் மினுக்கும் பாவனை நட்சத்திரங்களை உங்கள் மீதான அன்பு காட்டிக்கொடுத்துவிடும். இயல்பாக இருப்பதும் ஒருவருக்கொருவர் விசுவாசத்துடன் விவாதம் செய்வதும் மனிதத் தவறுகளைத் திருத்திக் கொள்வதும் நம் அலுவலக நடைமுறை ஆகவேண்டும். அனைத்துப் பிரிவுகளின் அனுப்புகையும் சுத்த நகலாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் பக்குவம் நம்மிடம் உள்ளது. நாளை முதல் நமக்கு மரியாதையும் கௌரவமும் நமது நடவடிக்கையால் வந்துசேரட்டும். இதுவே நமது பணிப்பண்பாடு ஆகட்டும்.
            எரிந்து விழும் வார்த்தைகளையும் சிரிக்க மறந்த உதடுகளையும் இரக்கம் பிறக்காத கண்களையும் கேட்க மறுக்கும் காதுகளையும் வெறுப்பை உமிழும் நாவுகளையும் கொண்டவை அலுவலக முகங்கள் என்னும் பொத்தாம்பொதுவான கருத்து நிராகரிக்கத் தக்கது. அந்த வழக்கமான முகங்கள் இப்போது இருப்புக் கோப்பிலும் இல்லை. ஆவணக் காப்பறையில் மறைந்திருக்குமாயின் நிரந்தரமாக அவற்றைக் கழிவு செய்துவிடலாம்.  கடமையைச் செய்வதில் கருணையுடன் கூடிய மென்மையும் மறுப்பதில் நளினத்துடன் கூடிய உறுதியும் பிறக்கட்டும். இதுவே நடப்புக் கோப்பின் குறிப்பாகட்டும்.
      உங்களின் சுருக்கொப்பம் பலரின் மனப் பிதுக்கங்களுக்கு மருந்து போடட்டும். மலரும் இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் புதிய சிந்தனைகளையும் புத்துணர்வையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
                                                                                                                                ஒப்பம்
                                                                                                                              அன்னார்
                                                                                                                     …அன்னாருக்காக

பெறுநர்
தங்கள் பணித்திறனால் வியாபித்து அலுவலகத்திற்கு ஒளியேற்றும் அனைத்துப் பொறுப்பாளர்கள்
நகல்
1. சவால்களை நளினமாய்ப் புறந்தள்ளி தமது இருப்பின் ஏகாந்தத்தில் கரையும் முன்னோடிகளுக்குத் தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.
2. விதிகளையும் சட்டங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மனப் பதிவேடுகளுக்கு உள்ளம் கனிய அனுப்பப்படுகிறது.
3. கோப்பின் முகத்தில் பேனா வருடும் ஒவ்வோர் எழுத்திலும் கடைசி மனிதனைக் காணும் கரங்களுக்குத் தொடர் நடவடிக்கைக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.
4. அலுவலக இருப்புக்கு.
&&&&&
நன்றி: காக்கைச் சிறகினிலே ஜனவரி 2015



11 comments:

  1. அய்யா வணக்கம். வெகுசிறப்பான “அலுவல் இலக்கியம்“ எனும் ஒரு புதுவகை இலக்கியம் படைத்திருக்கிறீர்கள்.. எதார்த்தமான வரிகள் கவித்துவமாக நெஞ்சைக் கவ்விக்கொள்கின்றன. இதுபோலும் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடவேண்டும் என்னும் வேண்டுகோளுடன் இதழுக்கான ஐந்தாண்டுக் கட்டணத்தையும் கட்டிவிட்டேன் தாங்களும் மாதம் ஒரு படைப்பையாவது தரவேண்டும் என்று உங்களையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. (பெரியவுங்க பெரியவுங்கதான்)

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா அரசு அலுவலகங்கள் என்பது சாமான்யர்களுக்கு எளிதாகப் பலன் அளிக்காத ஒன்றாகவே உள்ளன...போகி அன்று இடத்தை மட்டுமல்ல உள்ளங்களையும் சுத்தம் செய்வதாக அமைந்துள்ளது பதிவு...நன்றி .

    ReplyDelete
  3. நிருபர் திரு வேலுச்சாமி அவர்களின் காக்கையை இரவல் பெற்று இதை மட்டும் படித்தேன்..
    நெகிழ்வூட்டும் வாழ்த்து..

    ReplyDelete
  4. மிகச் சிறப்பான வாழ்த்து ஐயா...

    ReplyDelete
  5. எரிந்து விழும் வார்த்தைகளையும் சிரிக்க மறந்த உதடுகளையும் இரக்கம் பிறக்காத கண்களையும் கேட்க மறுக்கும் காதுகளையும் வெறுப்பை உமிழும் நாவுகளையும் கொண்டவை அலுவலக முகங்கள் என்னும் பொத்தாம்பொதுவான கருத்து இவ்வாண்டாவது நிராகரிக்கப் படட்டும்
    முத்து நிலவன் ஐயா அவர்கள் கூறியிருப்பதுபோல்
    அருமையான அலுவல் இலக்கியம் படைத்துள்ளீர்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  6. கடமையைச் செய்வதில் கருணையுடன் கூடிய மென்மையும் மறுப்பதில் நளினத்துடன் கூடிய உறுதியும் பிறக்கட்டும். இதுவே நடப்புக் கோப்பின் குறிப்பாகட்டும்.//

    அருமையான வாழ்த்து.
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா! சகோதரர் முத்துநிலவன்அவர்கள் மூலமே தங்கள் தளத்தை காண வந்தேன். தங்கள் தளத்தை அறிமுகம் செய்த அவருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அகலக் கண் விரிய தங்கள் ஆக்கத்தை நுகர்ந்தேன் எத்தனை அருமையான விடயங்களை அறிய தந்துள்ளீர்கள் அனைத்தும் உண்மையானதும் நியாய மானவையுமே.அத்தனையும் சத்திய வார்த்தைகளே. ஆபீஸ் என்று ஒரு drama வில் விஸ்வநாதன் என்று ஒரு காரக்டர் பார்த்து வியப்பதுண்டு ஆனால் இன்று நிஜமாக அப்படியொரு காரக்டர் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மேலும் பல பதிவுகள் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். தொடர வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
  8. சிறப்பு ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா!

    முத்துநிலவன் ஐயாவின் பதிவில் உங்களைப் பற்றி அறிந்து இங்குவந்தேன்! மிக அருமை ஐயா!
    சுத்தம் என்பது அகம் புறம் இரண்டையும் சுத்தப்படுத்துதல் என அழகாகக் கூறினீர்கள்! மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.+

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா..
    அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்...இப்படி ஒரு தலைமை அலுவலர் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது..
    //ஆற்றின் நடுவே நின்றிருந்தாலும் கடந்துவிட்ட நிழலைக் கையில் பிடிக்க முடியாது.//
    //ஒரு ஜன்னல் மூடப்பட்டால் பல கதவுகள் நமக்காகத் திறக்கப்படும்.// -
    //தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாதவரின் தேக்கம் பயன்பெறுவோருக்குத் துக்கம். அளிக்கப்படும் பயிற்சிக்கும் பெறப்படும் பயிற்சிக்கும் இடைவெளி இல்லாதபோதுதான் அலுவலகம் மேம்படும். //
    இவை என்னை மிகவும் கவர்ந்த வரிகள்!
    நன்றி ஐயா!

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்