வல்லிக்கண்ணன் கடிதங்கள் 8

வல்லிக்கண்ணன் சென்னை 1-9-2001

      ...... வணக்கம். உங்கள் 24-8-2001 கடிதம் 27ல் வந்தது. மகிழ்ச்சி. 25 அன்று புக் போஸ்டில் ‘கவிக்கோ’ இரண்டாவது இதழ் அனுப்பினேன். நீங்கள் இங்கு வந்த போது, அதை நான் முழுமையாகப் படித்திருக்கவில்லை. ராபர்ட் ஃபிராஸ்ட் பற்றி ஆக்டேவியா பாஸ் எழுதியதை படிக்க வேண்டியிருந்தது. 
        

பிறகு 28ஆம் தேதி ‘கதைசொல்லி’ (9) அனுப்பினேன். ‘கதை சொல்லி’ பற்றி நாம் பேசிக்கொண்டோம். இதழ் எனக்கு வருவதில்லை என்று சொன்னேன். இப்படியே பெங்களூர் நண்பர் ஒருவருக்கும் ஒரு சமயம் எழுதியிருந்தேன். அதனால், சமீபத்தில் வந்த ‘கதை சொல்லி’ 9ஐ அவர் எனக்கு அனுப்பும்படி செய்திருந்தார். ( புதுச்சேரிக்கு பணம் அனுப்பி, இதழை எனக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தார்.) இதழ் வந்தது. படித்தேன். நன்றாக, தரமாகத் தான் இருக்கிறது. இதழை உங்களுக்கு அனுப்பினேன். பெங்களூர் A.K. பாலு என்பவருக்கு ‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ அனுப்பினேன். கிடைத்தது, நன்றி என்று எழுதினார். கருத்து தெரிவிக்கவில்லை.
      தி.க.சி.யும் அப்படித் தான். ரொம்ப சந்தோஷம். கவிஞருக்கு என் வாழ்த்துகள் என்று மட்டும் எழுதினார். சேலம் மாவட்டம் சந்தியூர் கோவிந்தன், கவிதை நூல் பற்றி விமர்சனம் எழுதி சகாராவுக்கு அனுப்பிவிட்டேன் என்று தெரிவிக்கிறார். நூல் பற்றி எனக்கு எதுவும் எழுதவில்லை. திண்டுக்கல் மா. கமலவேலன் பாராட்டி எழுதியிருக்கிறார். ஒன்றிரண்டு கவிதைகள் தான் படித்தேன்; பிறவற்றையும் படித்த பிறகு விரிவாக எழுதுவேன் என்று கூறியிருக்கிறார். இராமேஸ்வரம் முகவை முனீஸ், புத்தகம் தபாலில் வந்து சேரவில்லை என்று அறிவித்துள்ளார். மற்றவர்கள், கிடைத்தது என்றுகூட எழுதவில்லை. உலகம் பலவிதம். மனிதர் இயல்புகள் ரகம் ரகம். நண்பர்கள் வாழ்க.
           புலியூர் முருகேசன் திருமணக் கடிதம் நேற்று வந்தது. சந்தோஷம். 

       ‘சிறியன சிந்தியாதான்’ படித்துவிட்டு, உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதுக்காக நன்றி. மகிழ்ச்சி. அந்தப் புத்தகம் அனைத்துப் பத்திரிகைகளிலும் சிறந்த பாராட்டுதலைப்  பெற்றுள்ளது. முக்கியமாக ‘நான் நடந்த பாதை’. படித்தவர்கள் வியப்புடன் பாராட்டி மகிழ்கிறார்கள். எனக்கும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. யார் யாரோ எப்படி எப்படி எல்லாமோ வாழ்கிற- வாழ ஆசைப்படுகிற சமூகத்தில், வசதிகள் இல்லாத சூழலிலும் என் மனசுக்குப் பிடித்த காரியங்களை செய்து கொண்டு என் இஷ்டம்போல் சந்தோஷமாக இத்தனை வருடங்கள் வாழ முடிந்திருப்பதே பெரிய விஷயம் தான். அதற்காக ‘Life Force’க்கு நான் நன்றி கூறுகிறேன்.
       அப்புறமென்ன! நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் சுகம். சென்னை நிலைமைகள் எப்பவும் போல் தான்.  வெயிலும் புழுக்கமும் அதிகம். சரியான மழை இல்லை. எப்பவாவது லேசாகத் தூறுகிறது. அது வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. தெருக்கள் சுற்றுப் புறங்களை அசிங்கப்படுத்துகிறது. கொசு உற்பத்திக்குத் துணைபுரிகிறது. 
     நீங்களும் குடும்பத்தினரும் நண்பர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘எரிமலை’ பிரான்ஸ்- பாரிசில் அச்சாகி வருகிறது. சந்தாப்பணம் அனுப்புவதெனில், ஃபாரின் எக்ஸ்சேஞ் விவகாரங்கள் இருக்கும். ‘எரிமலை’ பற்றிய உங்கள் எண்ணங்களை ‘ஏரோகிராம்’ (ரூ.8.50) தாளில் எழுதி அவர்களுக்கு அனுப்புக. ‘பயணம் புதிது’ ஒன்றிரு இதழ்களையும் அனுப்பலாம். ‘எரிமலை’ இதழை தொடர்ந்து அனுப்பும்படி கேட்டால், அனுப்புவார்கள்.                 
                                                                                                                           அன்பு - வ.க. 

2 comments:

 1. வணக்கம் அய்யா
  கடித இலக்கியம் சிறு வயது நினைவுகளை மீட்டெடுக்கின்றது...தபால்காரருக்காக காத்திருந்து மணியடிக்கும் ஒலியில் கடிதம் எழுதியவர்களையே பார்ப்பது போல் ஓடி...பிரிப்பதற்குள்மனதில் ஓடும் பல வரிகள்...கையெழுத்து மனதை மட்டுமல்ல முகமும் காட்டும் கண்ணாடியாய்..எத்தனை எளிமையான நடையில் வியக்கதான் செய்கின்றது மனம்..நன்றி

  ReplyDelete
 2. வணக்கம் அய்யா,
  கடிதம் பல்வேறு விசயங்களை உணரவைக்கிறது...
  திரு வல்லிக்கண்ணன் குறித்த புரிதலை தருகிறது...
  என்னமாதிரி ஒரு ஆளுமை அவர் என்று வியப்பை அவர் கடிதங்களே தருகின்றான...
  நன்றிகள்
  அறிமுகத்திற்கு

  ReplyDelete

வீதியில் கண்டெடுத்த வைரங்கள்

         இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...