மரமண்டை



இந்த வழியாப் போம்போதெல்லாம்
எதையோ பறிகுடுத்தாப்ல இருக்கு.

ஆயிர ரூவா பிச்சக் காசுக்கு
இங்கிருந்த ரெண்டு புளியமரத்தையும்
வெட்டிட்டானுங்க போன வருசம்.


குட்லான், மொண்டி, சின்னக்காள, ராசு
கேனரங்கன், நான்
எல்லாரும்
ஆடுமாடு ஓட்டியாந்து
நெழலுக்கு ஒதுங்கினது

மரத்துக்கு மரம் தாவி சந்தோசமா
கொரங்கு வெளாட்டு வெளாண்டது

புளியந்தாவப் புடுச்சு ஊஞ்சல் ஆடுனது

பூ பறிக்க உச்சி போய்
புடி நழுவி உழுந்தும்
ஒன்னும் ஆகாதது

புளியங்கா சுட்டுத் தின்னது
பழுத்த புளிய உலுக்கிப் போனது

பேய் புடுச்சவுங்களக் கொண்டாந்து
பச்ச மரத்துல ஆணி அடுச்சு
பேய எறக்குனது

எல்லாம் இங்கதான்

அத்தன பேயும் பாவம்
இருக்க எடமில்லாம
எங்க தவிக்குதுங்களோ

இந்த வழியாப் போம்போதெல்லாம்
இதையே சுத்திச் சுத்தி வருது

எம்
பேய் மனசு.


11 comments:

  1. அய்யாவிற்கு வணக்கம்.
    இயற்கையை அழித்து விட்டு செயற்கைக்கு மனதையும் அழைத்துச் செல்லும் காலமிது.
    இளமை கால சிந்தனையோடு மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கவிவரிகள் இது.
    //பூ பறிக்க உச்சி போய்
    புடி நழுவி உழுந்தும்
    ஒன்னும் ஆகாதது// கவிவரிகளிலும் மென்மைத் தெரிகிறது அய்யா.
    தீபாவளி திருநாளில் தங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என்று தெரியவில்லை இருப்பினும் தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள்.. நன்றீங்க அய்யா..

    ReplyDelete
  2. அய்யாவிற்கு வணக்கம்

    மொழிநடை ரொம்ப இயல்பான ஒரு கிராமத்து இதயத்தில் இருந்து பீறிட்டு கிளம்பியிருப்பது கவிதைக்கு ஒரு அற்புதமான சுவையை தந்திருகிறது ...

    அருமை

    ReplyDelete
  3. ஐயா வணக்கம். முதன் முறையாகத் தங்களின் தளத்திற்கு வருகின்றேன்.இனி தொடர்வேன்.
    இயல்பான கிராமிய நடையில்
    இளமைக் கால நினைவுகள்..
    அருமை ஐயா.
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
    இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அய்யா வணக்கம்,பால்ய காலச் சுவடுகள் அழிவதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை.இக்காலத் தலைமுறைக்கு கணினியும் ,தொலைக்காட்சியும் மட்டுமே நினைவுகளாய் ஆகிவிடுமோ என்ற கவலையும் வருகிறது.கவிதை நன்று.

    ReplyDelete
  5. இனிமையான நினைவுகள்...

    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கிராமத்து இளமைக் குறும்புகளோடு... அத்தனை பேய்களும் எடமில்லாம எங்கே தவிக்குதுங்களோ? என்ற எள்ளலில் மூட நம்பிக்கைச் சாடலையும் குழைத்து வடித்த மண்மணக்கும் கவிதை.
    “ஆயிரம் ரூவா பிச்சக் காசுக்காக ரெண்டு புளிய மரத்தையும் வெட்டிட்டானுவ“ எனும் இளமனசு ஏங்கலில், இந்தியப் பொருளாதாரம் இயற்கையை எப்படி அழிக்கிறது என்ற படிமத்தைப் பக்குவமாகப் பொதித்துள்ள கவிஞரின் கவி நுட்பத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அருமை.. அருமை

    ReplyDelete
  7. மரம், மண்டைக்குள் மட்டுமல்ல நம் அன்றாட வாழ்விலும் கலந்துகிடக்கும் இயற்கையும், அதை மீறிப் பணத்திற்காக விலைபோகும் இன்றைய உலகின் செயற்கையும் அழகான கவிதையாகி இருக்கின்றன. “நஸ்தால்ஜியா“ தவிர்க்க முடியாதுதான்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா. கிராமிய நடையில் இளமை நினைவுகள். பேய்களைச் சாடும் கவி வரிகள். மரம், மண்டை இவற்றை அழகாக ஒப்பிட்டுள்ளீர்கள். மூட நம்பிக்கையில் மூழ்கிய மண்டை மரமண்டையே என்பது தங்களின் பதிவில் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா. கிராமிய நடையில் இளமை நினைவுகள். பேய்களைச் சாடும் கவி வரிகள். மரம், மண்டை இவற்றை அழகாக ஒப்பிட்டுள்ளீர்கள். மூட நம்பிக்கையில் மூழ்கிய மண்டை மரமண்டையே என்பது தங்களின் பதிவில் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  10. ஆதங்கம் அருமையாக வெளிப்பட்டுள்ளது, நல்லவேளை! என் கிராமத்தின் நட்டாத்தியம்மன் கோவிலின் புளியமரங்களும் சின்ன வாய்க்காலும் இன்னும் இளமை மாறாமல் பால்யத்தின் நினைவுகளை நினைவூட்டிக் கொண்டுள்ளன.புளிய்ம்பிஞ்சுகளை சிவப்புமிளகாய் உப்புக்கல்லுடன் கோவில்கருங்கல்லில் அரைத்து எச்சில் ஊற சப்புக்கொட்டி சாப்பிட்டது மறக்கக்கூடியதா என்ன?

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்